ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼
🔥அத்தியாயம்::எட்டு(8) 🔥
🔥முதலில் புனித வேத நூலான சாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
சீரடி சாயீன் புனித வேத நூல் என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சாய்பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சத் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்..
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொண்டால், சீரடி பகவானின் ஆசியையும், அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥
🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்... வேதப்பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும் இந்த சத்சரித வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்....அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥
🔥அத்தியாயம்..எட்டு(8)🔥
🙏முன்னுரை...🙏
மானிடப் பிறவியின் சிறப்பியல்புகளைப் பற்றியும், எடுத்த இந்த.மானிடப் பிறவியின் மூலமாக எவ்வாறு உயரிய நிலையை அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரை....
சீரடிபகவான் எவ்வாறு உணவை மதுகரீ பிக்ஷை எடுத்ததன் சூட்சமம் என்ன என்பதன் விளக்கம்...
பாயஜாபாய் என்ற அம்மையார் மிகுந்த தாய்மையுணர்வோடு பகவானுக்கு நிவேதனம் அளித்த உன்னத சேவையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்....
சீரடி பகவானோடு தாத்யா கோதே பாடீல் மற்றும் மகல்சாபதி ஆகிய உயரியப் பக்தர்கள் எவ்வாறு ஆத்ம பிணைப்பினால் பேரானந்தம் அடைந்தனர் என்பதைப் பற்றி விளக்கவுரை....
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்...
🔥மானிடப் பிறவியின் சிறப்பியல்புகளைப் பற்றியும், எடுத்த இந்த.மானிடப் பிறவியின் மூலமாக எவ்வாறு உயரிய நிலையை அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥
இவ்வியத்தகு பிரபஞ்சத்தில் கடவுள் பல கோடிக்கணக்கான (இந்து சாஸ்திர கணக்குப்படி எண்பத்து நான்கு இலட்சம் விதமான) மோட்சம், நரகம், நிலம், கடல், வானம், இடைப்பகுதிகள் ஆகியவைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜீவராசிகளை அதாவது மனிதர்கள், மிருகங்கள், பூச்சிகள், தேவர்கள், உபதேவதைகள் உட்பட சிருஷ்டி செய்திருக்கிறார்... எவருடைய புண்ணியங்கள் மேம்படுகிறதோ அவர்கள், தங்களின் செய்கைகளின் பலன்களை மகிழ்ந்து அனுபவிக்கும்தோறும் மோட்சத்திற்கு சென்று வாழ்கிறார்கள்...அது முடிந்தபிறகு அவர்கள் கீழேயிறங்கி வருகிறார்கள்....தீமைகள், பாவங்கள் அதிகமுள்ள ஆத்மாக்களோ நரகத்திற்குச் சென்று, தாங்கள் துகுதியுள்ளதோறும், தங்கள் தீவினைகளின் பலன்களை அனுபவித்து அவதியுறுகிறார்கள்.... நல்வினை, தீவினை இரண்டும் சம அளவாய் இருப்பின், அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்...தங்களது சுயமான முக்திக்கும், உழைக்கும் முயற்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படுகிறார்கள்... முடிவாகத் தமது நல்வினை, தீவினை இரண்டுமே முழுமையாக அகற்றப்படும்போது, அவர்கள் சுதந்திரமடைந்து விடுவிக்கப்பட்டவர்களாகின்றார்கள்..இரத்தினச் சுருக்கமாக உரைத்தால், அவரவர்களின் செய்கைககளுக்கும், நுண்ணறிவு, மனப் பண்பாட்டிற்கேற்பப் பிறவிகளைப் பெறுகிறார்கள்.....
நாம்.அனைவரும் அறிந்தபடியாக சர்வ ஜீவராசிகளுக்கும், நான்கு விஷயங்கள் பொதுவானதாகும்...அதாவது உணவு, உடை, பயம், புணர்ச்சி முதலியவை ஆகும்... மனிதனுடைய விஷயத்தில் அவன் ஒரு சிறப்பான சாமர்த்தியத்துடன் இயற்கையாகவே ஆக்கப்பட்டிருக்கிறான்..அதாவது மற்ற எல்லாப் பிறப்பாலும் அடையப்பட இயலாத ஞானத்தின் மூலம் அவன் கடவுளின் காட்சியைப் பெறலாம்.. .இக்காரணத்திற்காகவே தேவர்கள், மனிதனது உரிமையை (நிலைமையை) குறித்துப் பொறாமைப்படுகிறார்கள்... தாங்கள் முடிவான விடுதலையைப் பெறுவதற்காக, மானுடர்களாய்ப் பிறப்பதற்கு ஆவல் கொள்கிறார்கள்...கேவலமான அழுக்கு, சளி, கோழை, அசுத்தம், இவைகளால் நிரம்பியதும், தீராத நோய் மற்றும் மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாய் உள்ளதுமான இம்மனித உடம்பைவிடக் கேவலமானது எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்..இது ஓரளவிற்கு உண்மை என்பதில் ஐயமில்லை. இவ்வாறான குற்றம், குறைகள் இருப்பினும், இம்மனித உடம்பின் சிறப்பான மதிப்பு யாதெனில், ஞானத்தை அடைய மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதே சத்தியமான உண்மை...
மனித உடம்பினால் மட்டுமே அல்லது அதன் பொருட்டே அழியக்கூடிய நிலையில்லாத உடம்பின் தன்மையைப்பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியும், புலன் இன்பங்களின்மீது வெறுப்பையும், நித்ய-அநித்ய வஸ்துக்களைப் பகுத்தறியும் விவேகத்தையும், இங்ஙனமாக அதன் மூலம் கடவுள் காட்சியையும் ஒருவன் எய்த இயலுகிறது...அதன் அசுத்தத் தன்மைக்காக நாம் உடம்பைப் புறக்கணித்தோமானால், கடவுள் காட்சியைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம். அதையே சீராட்டி புலன் இன்பங்களின் பின்னால் ஓடுவோமானால் அது விலை மதிப்பற்றதுமான நரகத் தன்மையில் வீழ்வோம்....எனவே, நாம் பின்பற்றவேண்டிய ஒழுங்கான நெறிமுறையானது பின்வருமாறு..
உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ கூடாது..ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும்..குதிரையில் சவாரி செய்யும் ஓர் வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கின்றானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்க வேண்டும்.... இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள்-காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்தப்பட வேண்டும்".....
பல்வேறு ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார். எனினும், அவைகளில் எதுவும் அவர்தம் வேலையை அறிந்து பாராட்ட இயலாததனால் ஆதி ஆற்றல் திருப்தி அடையவில்லை...எனவே அவர் ஒரு சிறப்பான சாமர்த்தியமுள்ள மனிதனைப் படைக்க வேண்டியதாயிற்று... ஞானம்' என்னும் சிறந்த வரத்தையும் அளித்தார். கடவுளின் லீலையையும், அற்புதமான வேலையையும், சாதுர்யத்தையும் மனிதன் பாராட்ட இயன்றபோது அவர் பெரிதும் மகிழ்ந்து திருப்தியடைந்தார். (ஸ்ரீமத் பாகவதம் 11:9:28) இம்மானிட தேகம் எடுத்தது உண்மையிலேயே நல்ல அதிஷ்டமாகும்...அந்தணர் குலத்தில் தோன்றுவது அதைக் காட்டிலும் நற்பேறுடையது....அதைக் காட்டிலும் மிகச்சிறப்பான அதிஷ்டமானது, சாயீபாபாவின் பாதங்களில் தஞ்சமடைந்து சரணாகதி அடையும் வாய்ப்பைப் பெற்றதேயாகும்....
மனித வாழ்க்கை எவ்வளவு உயர்ந்து என்று உணர்ந்து, மரணம் உறுதி என்றறிந்து, அது எத்தருணத்திலும் நம்மைப் பற்றும் என்று உணர்ந்து , நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்படவேண்டும்...அதாவது மனைவியை இழந்தவன் மறுமணம் புரிந்துகொள்ளக் கொண்டுள்ள மிகுதியான அக்கறை போன்றும், காணாமற்போன தன் மகனை, அரசன் சல்லடை போட்டுத் தேடுவது போன்றும் இருக்கவேண்டும். எனவே நமது இலக்கை எய்த நம்மிடத்திலுள்ள முழு ஊக்கத்துடனும், வேகத்துடனும் நாம் பாடுபட வேண்டும்..அதாவது 'தன்னை உணர்தல்' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.. நமது சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு தூக்கத்தைக் களைந்து அல்லும், பகலும் ஆத்மஞானம் செய்தல் வேண்டும்..இதைச் செய்ய நாம் தவறுவோமேயானால், நம்மை நாமே மிருக நிலைக்குத் தாழ்த்திக் கொண்டவர்களாவோம்....
கடவுள்-காட்சியைத் தாமே எய்திய தகைமையுள்ள ஞானிகள் , முனிவர்கள் அல்லது சத்குரு ஆகிய இவர்களை அணுகுவதே, நமது குறிக்கோளை அடைய மிகச்சிறந்த பயன் அளிக்கக்கூடியதும், துரிதமுமான வழியாகும்...மதப் பிரசங்கங்களைக் கேட்டும், மத நூல்களைக் கற்றும் அடைய முடியாதவைகளை அம்மதிப்புமிக்க ஆன்மாக்களின் கூட்டுறவால் பெறலாம்...சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை, மற்றெல்லா நட்சந்திரங்கள் சேர்ந்தாலும் கொடுக்க இயலாததைப் போன்றே, புனித நூல்கள் மற்றும் மதப்பிரசங்கங்கள் அனைத்தும் சேர்ந்து கொடுக்க இயலாத ஆத்மா விவேகத்தை சத்குரு நமக்கு அளிக்கிறார்...
பகவானின் அசைவுகளும் சாதாரணப் பேச்சும் நமக்கு உயரிய சத்தியப் பாதையையும், மௌன உபதேசத்தையும் நல்குகின்றது...மன்னித்தல், அடக்கம், உடைமை,, அவாவின்மை, தர்மம், உதாரணகுணம், மனம் - மெய் இவற்றின் கட்டுப்பாடு, அகங்காரமற்ற தன்மை முதலிய நற்பண்புகளெல்லாம் அத்தகைய தூய சாய்பகவானின் புனிதமான கூட்டுறவால் பயிற்சிக்கப்பட்டு அடியவர்களால் அனுசரிக்கப்படுகின்றன. இந்த புனித கூட்டுறவானது மனதை ஒளிப்படுத்தி, ஞானத்தை நல்கி, தன்னை உணரச்செய்கிறது...
சாயீபாபா அத்தகைய முன்னேற்றத்தை அருளும் 'ஞானி' அல்லது 'சத்குரு' ஆவார்... பக்கிரியைப் (இரவலர்) போன்று பகவான் தன்னைப் பாவித்துக் கொண்டாலும் , எப்போதும் ஆத்மாவிலேயே முற்றிலும் தன்வயப்பட்டிருந்தார்...கடவுள் அல்லது தெய்வீகத்தன்மையை சர்வஜீவராசிகளிலும் கண்டு, அனைத்துயிர்களிலும் பகவான் எப்போதும் அன்பு செய்தார்...இன்பங்களால் அவர் உயரவுமில்லை.. துரதிஷ்டங்களால் தாழ்ச்சியுறவுமில்லை...அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே...
🔥சீரடி பகவான் மதுகரீ பிக்ஷை எடுத்ததில் இருக்கின்ற, மறைஞான சூட்சம விளக்கம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்..🔥
எவருடைய கடைக்கண் பார்வை, பிச்சைக்காரனையும் அரசனாக்க வல்லதோ, அவர் சீரடியில் வீட்டுக்கு வீடு சென்று உணவை யாசிப்பது வழக்கம்... அதை அவர் எப்படிச் செய்தார் என்று இப்போது கவனிப்போம்.... சீரடி மக்களின் வீடுகள் முன்னர் ஒரு பிச்சைக்காரனைப் போல் நின்று, "ஓ! லாசி(அம்மா), ஒரு ரொட்டித்துண்டு கொடு" என்று கூவி அப்பிச்சையை ஏற்கத் தம் திருக்கரங்களை நீட்டி அருளினாரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...அவர் ஒரு கையில் தகரக் குவளையும், மற்றொன்றில் ஸோலி என்ற சதுரத் துண்டும் வைத்திருந்தார்...தினந்தோறும் சில குறிப்பிட்ட வீடுகளுக்கும், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும் பிச்சையெடுக்கச் சென்றார்... திரவ ஆகாரமான சூப், காய்கறிகள், பால், மோர் முதலியவற்றை தகரக் குவளையிலும், சோறு, ரொட்டி முதலிய திடப் பொருட்களை துண்டிலும் வாங்கிக்கொண்டார்... பாபாவுக்கு தம் நாவுமேல் கட்டுப்பாடு உண்டாதலால் அதன் சுவையறிவதில்லை. எனவே பல்வேறு பொருட்களை ஒன்றுகூட்டிய ருசியை எவ்வாறு அவர் பொருட்படுத்த முடியும்....துண்டிலும், தகரக் குவளையிலும் கொண்டுவரப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும் ஒன்று கலக்கப்பட்டு பாபாவால் அவர் மனம் நிறைவெய்தும் வண்ணம் பகிர்ந்து உட்கொள்ளப்பட்டது...
சில குறிப்பிட்ட பதார்த்தங்கள் சுவையானவையாகவோ, மாறாகவோ இருப்பினும், பகவான் தமது நாக்கு முழுதும் சுவை உணர்வையே இழந்துவிட்டதைப் போலக் கவனிப்பதே இல்லை...பகவான் மதியம்வரை பிச்சையெடுத்தார்...ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதி இல்லாதிருந்தது...சில நாட்களில் சில சுற்றுக்களே சென்றார்...சில நாட்களில் பகல் பன்னிரண்டு மணிவரையும் எடுத்தார்... இவ்வாறு சேர்க்கப்பட்ட உணவு, ஒரு சட்டியில் கொட்டப்பட்டது... நாய்களும், காக்கைகளும், பூனைகளும் அதிலிருந்து தாராளமாக சாப்பிட்டன....பாபா அவைகளை விரட்டியதே இல்லை....மசூதியைப் பெருக்கிய பெண்மணி பத்து அல்லது பன்னிரண்டு ரொட்டித் துண்டுகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்...அவள் அங்ஙனம் செய்வதை யாரும் தடை செய்யவில்லை... கனவில் கூடப் பூனைகளையும், நாய்களையும் கடுஞ்சொற்களாலோ, ஜாடைகளாலோ விரட்டியறியாத அவர், எவ்வாறு ஏழ்மையான திக்கற்ற மக்களுக்கு உணவை மறுக்க இயலும்...? அத்தகைய உயர் குணமுடையவரின் வாழ்க்கை உண்மையிலேயே ஆசிகள் நிரம்பப்பெற்றதாகும்.....
சீரடி மக்கள் பகவானை ஆரம்ப காலத்தில் மனநிலை பாதித்துள்ள பக்கிரியாகக் கருதினர். இப்பெயராலேயே அவர் அறியப்பட்டார்... இரந்த பிக்ஷை எடுத்த சில ரொட்டித்துண்டுகளை உண்டு வாழ்ந்த அவர் எவ்வாறு மதிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட முடியும்.... ஆனால் இந்தப் பக்கிரியோ உள்ளத்திலும், கையிலும் மிகவும் தாராளமானவராகவும், அவாவற்றவராகவும், தர்ம சிந்தையுடையவராகவும் இருந்தார்.... மேலும் ஸ்திரமில்லாதவராயும், இருப்புக் கொள்ளாதவராயும் புறத்தில் தோன்றினாலும் அகத்தில் உறுதியுள்ளவராயும், நிதானம் உள்ளவராயும் இருந்தார்...அவருடைய வழியோ அறிவுக்கெட்டாதது... எனினும் அச்சிறு கிராமத்தில்கூட அன்பும், ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர்....அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.....
🔥பாயஜாபாய் என்ற அம்மையார் மிகுந்த தாய்மையுணர்வோடு பகவானுக்கு நிவேதனம் அளித்த உன்னத சேவையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்....🔥
தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாய் ஆவார்... அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக்கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம். புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையார் அலைந்து பகவானைக் கண்டுபிடித்து, பகவான் பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும், தியானத்தில் அமர்ந்திருக்கும் பகவானின் முன்னர் இலையை விரித்து ரொட்டி, காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்கள் முதலியவற்றை அதன்மேல் வைத்து அவரை பலவந்தமாக உண்ண வைத்தார்....பாயஜாபாயின் நம்பிக்கையும், சேவையும் வியக்கத்தக்கதாகும்... ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளைகளில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும்படி பாபாவை வற்புறுத்தினார்.....
அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும், இறுதி மூச்சு வரையிலும் பகவான் அதனை மறக்கவில்லை. அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில்கொண்ட பகவான்,, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு உதவிசெய்தார். தாய்க்கும், மகனுக்கும் அவர்களது கடவுளான பகவானின் மீது பெருமளவிற்கு நம்பிக்கை இருந்தது.... பாபா அவர்களிடம் அடிக்கடி, "ஆண்டித்தனமே உண்மையான பிரபுத் தன்மையாகும்.. ஏனெனில், அது எப்போதும் நிலைத்திருக்கிறது.... புகழ்பெற்ற பிரபுத்தனமெல்லாம் (செல்வமெல்லாம்) நிலையற்றவை" என்று கூறுவார்....சில ஆண்டுகளுக்குப் பின்னால் பகவான் காட்டுக்குப் போவதை விட்டுவிட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். தமது உணவை மசூதியிலேயே உட்கொள்ளத் தொடங்கினார்.... அதிலிருந்து பாயஜாபாயி காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுப்பெற்றன......
🔥சீரடி பகவானோடு தாத்யா கோதே பாடீல் மற்றும் மகல்சாபதி ஆகிய உயரியப் பக்தர்கள் எவ்வாறு ஆத்ம பிணைப்பினால் பேரானந்தம் அடைந்தனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம்...🔥
எவர்களின் உள்ளத்தில் வாசுதேவர் உறைகிறாரோ, அந்த ஞானிகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அத்தகைய ஞானிகளின் கூட்டுறவைப் பெறும் அதிஷ்டமுடைய பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தாத்யா கோதே பாடீல், பகத் மகல்சாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயீபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார்....இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினார்கள்.. தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களைப்பற்றி அரட்டையடித்துக் கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் நள்ளிரவு நெடுநேரம்வரை படுத்திருப்பார்கள்...
அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பிவிடவேண்டும். உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மகல்சாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார்... இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் தனது வீட்டிலுள்ள பெற்றோரை விட்டுவிட்டுத் தாத்யா மசூதியில் தூங்கினார். எத்துணை மகிழ்ச்சியும், மறக்க இயலாததுமான அத்தகைய நாட்கள்..! அவ்வன்பை எவ்வாறு அளவீடு செய்வது.....? பாபாவின் ஆசியை எங்ஙனம் மதிப்பிடுவது...? தனது தந்தை காலமானதும் தாத்யா குடும்பப் பொறுப்பை ஏற்றார். பின்பு தமது வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்...
🔥ராஹதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்பவருக்கும், பகவானுக்கும் இடையேயான ஆத்மத் தொடர்பினால், பாபா எவ்வாறு குஷால்சந்தை ஆசிர்வதித்தார் என்பது பற்றிய விளக்கவுரை...🔥
சீரடியைச் சேர்ந்த கண்பத் கோதே பாடீலை பாபா விரும்பினார்..அதற்குச் சமமாக ராஹதாவைச் சேர்ந்த சந்த்ரபன்சேட் மார்வாடியையும் விரும்பினார்... இந்த சேட் காலமான பின்பு அவர் சகோதரர் புத்திரரான குஷால்சந்த்தை அதற்குச் சமமாக அல்லது அதற்கு அதிகமாகவே கூட அன்பு செலுத்தி, அல்லும்-பகலும் அவர் நலத்தில் கண்ணாய் இருந்தார்....சில சமயங்களில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ நண்பர்களுடன் பாபா ராஹாதாவிற்குச் செல்வார்...அக்கிராமத்து மக்கள் பேண்ட் வாத்திய இசையுடன் வந்து, கிராமத்தின் நுழைவாயிலில் பாபாவை வரவேற்று, அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவார்கள்.. பெரும் அலங்காரத்துடனும், விழாக்கோலத்துடனும் அவர் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்...குஷால்சந்த் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று வசதியாக ஆசனத்தில் அமர்த்தி நல்ல உணவை நிவேதனமாக அளிப்பார்...பின்னர் அவர்கள் சரளமாகவும், மகிழ்ச்சியுடனும் சிறிது நேரம் உரையாடியபின் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும், ஆசியையும் நல்கிவிட்டு பாபா சீரடிக்குத் திரும்புவார்.....
தெற்கே ராஹாதாவுக்கும், வடக்கே நீம்காவனுக்கும் இடையே சரியான மையப்பகுதியில் சீரடி அமைந்துள்ளது. இந்த இடங்களுக்கு அப்பால், பாபா தமது வாழ்நாளில் சென்றதில்லை. அவர் எவ்வித ரயில் வண்டியையும் பார்த்ததோ, பிரயாணம் செய்ததோ கிடையாது.... எனினும் எல்லா வண்டிகள் வரும், புறப்படும் நேரங்கள் எல்லாம் மிகச் சரியாகவே பாபாவுக்குத் தெரியும். தாங்கள் பாபாவிடம் விடைபெற்றுக் கொண்டபோது, அவரின் அறிவுரைகளின்படி நடந்தவர்கள் நன்மையடைந்தனர். அதை மதிக்காதவர்கள் பலவித துர்ச்சம்பவங்களுக்கும், விபத்திற்கும் உள்ளானார்கள்.... இதைப்பற்றியும் இன்னும் பல நிகழ்ச்சிகள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
குறிப்பு : இவ்வத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி குஷால்சந்த் மீது பாபா செலுத்திய அன்பையும், அவர் ஒருநாள் மாலை காகா சாஹேப் தீஷித்தை ரஹாதாவுக்குச் சென்று குஷால்சந்தை அழைத்து வரும்படி கூறியதும், அத்தருணத்திலேயே குஷால்சந்தின் மதியத் தூக்கத்தில் கனவில் தோன்றி சீரடிக்கு வரும்படி கூறியதும், இங்கு விவரிக்கப்படவில்லை. காரணம் பின்வரும் 30ஆம் அத்தியாயத்தில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஶ்ரீசாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼
ஓம் ஸ்ரீசாய் நாதாய நமஹ
பதிலளிநீக்கு