ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏
ஞானம் முழுமையற்றது. பிறர் சொல்வதைக் கேட்டு ரசிக்கின்ற வரை அது வெறும் அறிவாக மட்டும் இருக்கும். நம்மை அந்தப் பரம்பொருளிடம் முழுமையாகச் சமர்ப்பிக்கின்றபோதே அது முழுமையானதாக மாறும். ஞானத்துடன் கூடிய பக்தியான விஞ்ஞானமே முழுமையானது. விஞ்ஞானம் தான் உண்மையைக் கண்டறியக் கூடியது. ஞானம் என்பது அறிவு. விஞ்ஞானம் என்பது அந்த அறிவை உண்மையெனக் கண்டுக் கொள்வது. அதுதான் நம்மை இறைவனாக்கும்.
ஞானம் பெற்றுத் தெளிந்த அறிவுடன் தொடர்ந்து தியானத்தின் மூலம் தன்னை அவனுடன் இணைத்துக் கொள்பவரே ஞானியாகின்றனர். அத்தகைய ஞானியிடம் தான், தான் என்றோ, பிறர் என்றோ, இறைவன் என்றோ பேதம் இருக்காது. அப்படிப்பட்டவரே கிருஷ்ணருக்குப் பிரியமானவர். மாயையின் தலையீட்டால் மதி மயங்கிய மனிதர்கள், மதிமயங்கிய கணங்களில், புலனின்ப வழிகளைச் சேர்ந்து வீணாக சக்தியை இழந்து அழிகிறார்கள். அறிவு தெளிந்த நிலையில் இருந்தாலும் மனதால் தடைப்பட்டு, பழகிய பழக்கங்களால் ஏற்படுகின்ற புத்தி மயக்கத்தால் அறிவை இழந்து, ஞானம் மறந்து, பழைய பழக்க வழக்கங்களையே தொடர்கின்றபோது, ஞானத்தையே அது தடுக்கின்றது. ஞானம் பெற்றும் இப்படிப் பழைய நிலையிலேயே நடந்து கொண்டால், பிறகு பெற்ற ஞானத்தால் பயனில்லை.
யார் ஞானத்தால் தெளிவு பெற்றுத் தன்னில் தானே அன்பைச் செலுத்தித் தன்னையே பரம் பொருளின் ஒரு துளி என்று நினைத்துத் தொடர்ந்து தன்னில் அன்பும் பக்தியும் கொண்டிருக்கிறாரோ, அவரிடம் அந்தப் பரம்பொருள் வசப்படும். அதோடு மட்டுமின்றி எல்லாப் பொருள்களுமே அவரை நோக்கிக் கவரப்படும். இது ஒரு ரகசியமான உண்மை. ‘‘என்னைத் தேடு...! உன்னைத் தேடி எல்லாமே வரும்...!” என்றார் இயேசுநாதர். தியானத்தை நீங்கள் முறையாக முழுமையாக செய்தால், உங்களுக்குத் தேவைப்படுகின்றவை எல்லாம் தாமாகவே உங்களைத் தேடி வரும், மனமும் புத்தியும் தான் இதைத் தடுக்கின்றன என்று எங்கள் குரு எம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்...
எதை நாம் பெற விரும்பினாலும் ஒன்றை இழந்தால் தான் அதைப் பெற முடியும். எதுவென்றாலும் கூட..! உலக விவகாரங்களை அல்லது பழைய பழக்க வழக்கங்களை விட்டால் தான் ஞானம் நிலைத்து நிற்கும். அதையும் பிடித்துக்கொண்டு இதற்கும் முயற்சி செய்தால் முன்னேற்றமில்லை...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏
ஓம் நமசிவாய..🙏🙏
தில்லையம்பலம்...திருச்சிற்றம்பலம்..🙏🙏