ஞாயிறு, மே 23, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினொன்று..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

அத்தியாயம்::பதினொன்று(11)

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே..

சீரடி பகவானின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் ஆகும்..சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது..

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்..

இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர  வேதப் பாராயணத்தை மேற்க் கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்... ஆகவே சத்சரித்திர வேதபாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்..🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....இந்த  வேதப்பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்....மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.. அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.. சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..

🙏🏼அத்தியாயம்:: - பதினொன்று (11)🙏🏼

🙏🏻முன்னுரை..🙏🏻

சீரடி பகவானை, பக்தர்கள் எவ்வாறு  ஆத்மார்த்தமாக பாவித்து வழிப்பட்டனர் என்பதன் விளக்கம் மற்றும்  பரப்பிரம்ம  மூர்த்தியின்  அவதாரமான (சகுணப் பிரம்மமான). சாயீ பகவான்  எவ்வாறு  தன்னுடைய  பேராற்றலைப்  பக்தர்களிடம்  வெளிப்படுத்திக் கொண்டார் என்பதைப் பற்றிய  விளக்கவுரை....

சீரடி பகவான் மீது கொண்ட பேரன்பால்  டாக்டர் பண்டிட், எவ்வாறு திரிபுரம் இட்டு ஆத்ம வழிபாடு செய்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை...

பகவான் எவ்வாறு தன்னுடைய  பக்தர்களின் ஆத்மார்த்த வழிப்பாட்டை ஏற்றுக்கொண்டார் என்பதன் விளக்கவுரை... 

சீரடி பகவானுக்கும்,  ஹாஜிசிதிக்ஃபால்கே ஆகிய இருவருக்கும் இடையேயான உரையாடலைப் பற்றிய குறிப்புரை.. 

சீரடி பகவான் தன்னுடைய  எங்கும்  நிறைந்த பேராற்றலினால், பஞ்சபூத சக்தியை  எவ்வாறு கட்டுப்படுத்தி தனது பக்தர்களைக் காப்பாற்றினார் என்பதைப் பற்றிய விளக்கவுரை....

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே  காண்போம்....

🔥முதலில் இந்த அத்தியாயத்தில் சீரடி பகவானை, பக்தர்கள் எவ்வாறு  ஆத்மார்த்தமாக பாவித்து வழிப்பட்டனர் என்பதன் விளக்கம் மற்றும்  பரப்பிரம்ம  மூர்த்தியின்  அவதாரமான (சகுணப் பிரம்மமான). சாயீ பகவான்  எவ்வாறு   தன்னுடைய  பேராற்றலைப்  பக்தர்களிடம்  வெளிப்படுத்திக் கொண்டார் என்பதன் விளக்கத்தை இங்கே  காண்போம்..🔥.

சகுணப் பிரம்மமாக சாயீ  பகவானை  மனித உயிர்கள்,இரண்டு விதமான வழிபாடுகளை மேற்க்கொண்டனர்..

1.அவதரிக்காத நிர்குண வழிபாடு..

2.அவதரித்த 'சகுண வழிபாடு'.....

இவை .இரண்டும் ஒரே பிரம்மத்தைக் குறித்தாலும் நிர்குணம் உருவமற்றது.  சகுணம் உருவமுள்ளது.சிலர் முன்னதையும், சிலர் பின்னதையும் வழிபடுவதை விரும்புகிறார்கள்.  கீதையில் (அத். 12) கூறியதைப்போன்று சகுணப் பிரம்மவழிபாடு எளிதானதானதும், ஆரம்பகாலத்திற்கு உகந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது..மனிதனுக்கு உருவம் இருப்பதைப்போன்று (உடம்பு, உணர்வுகள் முதலியன) உருவத்துடன் கூடிய கடவுளை வழிபடுவது அவனுக்கு இயற்கையானதும், எளிய வழியாகிறது....  சகுணப்பிரம்மத்தை சில குறிப்பிட்ட காலங்கள் வரை  வணங்கினாலொழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியுறாது... நாம் முன்னேறும்போது அது நம்மை நிர்குணப் பிரம்மத்தை வழிபட (தியானிக்க) இட்டுச்செல்கிறது...

எனவே, நாம் சகுண வழிபாட்டுடன் ஆரம்பிப்போமாக!  உருவம், யாககுண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்குரியவை...எனினும், சத்குருவே இவை எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவர்...எதிலும் பற்றின்மையும், முழு மனதுடன் ஆத்மார்த்தமாக அன்புடன் தன்னை வழிபடும்  தமது அடியவர்களின் உறைவிடமுமான சாயீயை இத்தருணத்தில்  வழிபடுவோமாக..

பகவானின்  உபதேச  மொழிகளில் நமக்குள்ள நம்பிக்கையே அடித்தள ஆசனமாகும்...நமது சங்கல்பமாவது  (பூஜையை ஆரம்பிக்கும்போது சொல்லும் தெளிந்த தீர்மானம்) நமது ஆசைகள் அனைத்தையும் உதறித் தள்ளுதலாகும்... சிலர், சாயீ ஒரு பாகவதபக்தர் (கடவுளின் அடியவர்)என்று கூறுகின்றனர்..மற்றும் சிலர், மகாபாகவத் (பெரும் அடியவர்) என்றும் வழிபடுகின்றனர்.. ஆனால்  உண்மையில் பகவான் கடவுளின் அவதாரமே...அவர் எல்லையற்ற அளவு மன்னிப்பவராகவும், கோபமற்றவராகவும், நேர்மையுள்ளவராகவும், மென்மையாளராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும்,தாய்மையுணர்வு கொண்டவராகவும் நடந்துக்கொண்டார்....  அவர் உருவமுள்ளவராகத் தோன்றினாலும், உண்மையில் உருவம் அற்றவராகவும், உணர்ச்சி வேகமற்றவராகவும், பற்றற்றவராகவும், அந்தரங்கமாய் சுதந்திரமாகவும் இருந்தார்.... 

கங்கை நதி, தான் கடலுக்குச் செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்குக் குளிர்ச்சியளித்து, புதுக்கிளர்ச்சியூட்டி, பயிர்களுக்கும், மரங்களுக்கும் உயிரையளித்து, பலரின் தாகத்தையும் தணிக்கிறது.  இதைப்போன்றே சாயீ போன்ற புண்ணிய புருஷர்கள் (ஆத்மாக்கள்) வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே,  தன்னை நாடி வருபவர்கள்  அனைவருடைய  துன்பத்துயரங்களை நீக்கி ,ஆறுதல் நல்கின்றார்கள்...  கிருஷ்ண பரமாத்மா ஞானிகள் மற்றும்  மகான்களைப் பற்றி  கூறுகின்றார்... ஞானிகளும்,.மகான்களும் எனது ஆத்மா என்றும் ,எனது வாழும் உருவம் அவர்களே  என்றும், நானே ஞானிகள் மற்றும் மகான்களுக்குள் சூட்சம ஆற்றலாக இருக்கின்றேன்...அவர்கள் எனது தூய வடிவம்" என்று கூறியிருக்கிறார்.  சத்து - சித்து - ஆனந்தம் என அறியப்படும் இந்த விவரிக்க இயலாத ஆற்றல் அல்லது கடவுளின் சக்தியே சீரடியில் சாயீ என்னும் ரூபத்தில் அவதரித்தது....

ஸ்ருதி (தைத்திரீய உபநிஷதம்) பிரம்மத்தை ஆனந்தம் என விவரித்திருக்கிறது.இதை நாம் தினந்தோறும் நூல்களில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம்...ஆனால் இப்பிரம்மத்தை அல்லது பேரானந்தத்தை சீரடியில் பக்த மஹாஜனங்கள் அனுபவிக்கின்றார்கள். அனைவருக்கும் ஆதாரமான அவருக்கு எவரிடமிருந்தும் எந்த ஆதார பொருட்களும்  தேவையிருக்கவில்லை.. .ஒரு சாக்குத் துண்டையே எப்போதும் தமது ஆசனமாகக் கொண்டிருந்தார்...பக்தர்களால் அது ஒரு மெல்லிய  மெத்தைக் கொண்டு மூடப்பட்டிருந்தது... அவர் சாய்ந்துகொள்ள முதுகிற்கு ஒரு திண்டும் அவர்களாலேயே வைக்கப்பட்டது...ஆனால் அதில் பகவான் சாயாமல் சற்று முன் தள்ளி அமர்ந்திருந்தார். ..எதிலும் சாட்சியாக இருந்து  உடன்படாமல் பற்றற்று தனித்துவமாக  வாழ்ந்தார் பகவான்...

பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார்.  அவர்கள் விருப்பப்படியே தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார்... அவர் முன்னிலையில் சிலர் சாமரம் அல்லது விசிறி வீசினர். சிலர் இசைக் கருவிகள் வாசித்தனர். சிலர் அவரின் கைகளையும், கால்களையும் கழுவினர்.  இன்னும் சிலர் வெற்றிலை, பாக்கு மற்றும் பல பொருட்களையும் நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர்.  சீரடியில் அவர் வாழ்ந்ததுபோல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார். அவரின் எங்குநிறை தன்மையை அவருடைய பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள்.  இவ்வாறாக அண்ட சராசரத்திலும் நீக்கமற  வியாபித்திருக்கின்ற (சர்வாந்தர்யாமி) சத்குருவுக்கு நமது பணிவான சாஷ்டாங்க நமஸ்காரங்கள்...

🔥சீரடி பகவான் மீது கொண்ட பேரன்பால்  டாக்டர் பண்டிட்,  எவ்வாறு பாபா  நெற்றியில் திரிபுரம் இட்டு ஆத்ம வழிபாடு செய்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥.

ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் என்பவர் சீரடிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார்...பாபாவை வணங்கியபின் மசூதியில் அவர் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார்.. பாபா, அவரைத் தாதாபட் கேல்கரிடம் செல்லுமாறு பணித்தார்... தாதாபட்டிடம் அவர் சென்றார்..தாதாபட் அவரை நன்கு வரவேற்றார்... தாதாபட் பூஜைக்காக தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டார்... அவருடன் டாக்டர் பண்டிட்டும் சென்றார்...  தாதாபட் பாபாவை வழிபாடு செய்தார்.. இதுகாறும் எவரும் பாபாவின் நெற்றிக்குச் சந்தனம் பூசத் துணிந்ததில்லை...

மகல்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம்.  ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட்,  பூஜைப் பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்து  அதிலிருந்து சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார்.  பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.

அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக் கொண்டிருந்தாலும், இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்..?" என்று கேட்டார்.  இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மை (பாபாவை) அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் என்று நம்பியிருந்ததாகவும், அவர் குருவுக்கு செய்துக் கொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார்...எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை.டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவைத் தனது குரு காகாபுராணிக் என்று கருதியதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார்...எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திருநீற்றுப் பட்டையை  பாபாவின் நெற்றியிலும் இட்டார் என்பது குறிப்பிடத்தக்கது....

🔥பக்தர்களின் ஆத்மார்த்த வழிப்பாட்டை  பகவான் ஏற்றுக் கொண்ட விதத்தை இங்கே பார்ப்போம்..🔥

பக்தர்கள் விரும்பியவாறே தம்மை வழிபட பாபா அவர்களை அனுமதித்தார்.  எனினும் சில சமயங்களில் அவர் விநோதமான முறையில் நடந்துக் கொண்டார்.. சில சமயங்களில் பூஜைத் தட்டைத் தூக்கியெறிந்து சீற்றமே அவதரித்ததுபோல் நின்றிருப்பார்...அப்போது அவரை எவரும்  அணுக முடியாது...  சில சமயங்களில் அவர் பக்தர்களைக் கடிந்தார். சில சமயங்களில் மெழுகைக்காட்டிலும் மென்மையாய் இருந்தார். சாந்தத்துக்கும், மன்னிப்புக்குமான ஓர் உருவமாய் இருந்தார்.கோபத்தின் உச்சத்தில் இருப்பவர் போன்று  தோன்றினாலும், அவரது சிவந்த கண்கள் சுற்றிச்சுற்றி உருண்டாலும் அவர் அந்தரங்கமாக, பாசத்தில்  தாயன்பு உடையவராக இருந்தார்.

உடனே தமது அடியவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் தாம் ஒருபோதும் கோபமாக இருந்ததே இல்லை எனக்கூறி, தாயார் தங்களது குழந்தைகளை உதைத்தார்களேயானால், கடலானது ஆறுகளைப் புறக்கணித்ததென்றால் தாமும் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் என்று கூறினார்...தமது பக்தர்களின் அடிமையான அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதையும், அவர்கள் தம்மை அழைக்கும் போதெல்லாம் மறுமொழி கூறி அவர்களின் அன்பைப் பெறுவதற்குமே எப்போதும் அவர் பெரிதும் விரும்பினார்...

🔥 சீரடி பகவானுக்கும்,  ஹாஜி சிதிக்ஃபால்கே என்ற  பக்தருக்கும்  இடையேயான ஆத்ம உரையாடல் பற்றிய குறிப்புரை....🔥

சீரடி பகவான்  எப்போது ஓர் அடியவரை ஏற்றுக் கொள்வார் என்பதை யாராலும் அறியமுடியாது...அது தனிப்பட்ட பக்தர்களின்  இனிய சங்கல்பத்தையும், பிணைப்பின்  ஆழத்தைப் பொருத்தே அமைகின்றது...  இந்த கூற்றுக்கு சிதிக்ஃபால்கேயின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.  கல்யாணைச் சேர்ந்த சிதிக்ஃபால்கே என்ற ஒரு முகம்மதியர்  மெக்கா, மெதீனாவுக்குப் புனித யாத்திரை செய்துவிட்டு சீரடிக்கு வந்தார்...வடக்கு நோக்கிய சாவடியில் அவர் வாழ்ந்தார்...  மசூதியின் திறந்த வெளியில் அவர் அமர்ந்தார்... ஒன்பது மாதங்கள் பகவான்  அவரைப் பொருட்படுத்தவில்லை...  அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை.... பால்கே மிகவும் வருத்தத்துடன் பகவானை தான்  தரிசனம் செய்ய முடியவில்லை என்கின்ற  தேற்றவியலாத நிலையை எய்தினார்..என்ன செய்வதென்று புரியாமலிருந்தார்...  யாரோ பக்தர்  ஒருவர் அவரை ஏமாற்றமடைய வேண்டாமென்றும், பாபாவின் மிக நெருங்கிய, அதாவது அருகில் உள்ள அடியவரான ஷாமா (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) மூலம் பாபாவை அணுக முயற்சிக்கும்படியும் ஆலோசனை கூறினார்... சிவபெருமான், அவரது சேவகரும், பக்தருமான நந்தியின் மூலம் அணுகப்படுதலைப்போல, சாமாவின் மூலம் பாபா அணுகப்படுதல் வேண்டும் என்றும் கூறினார்.  ஃபால்கே இந்த யோசனையை விரும்பி, சாமாவைத் தனக்காக மன்றாடிக் கெஞ்சிக் கேட்குமாறு வேண்டினார்.

பொருத்தமான ஒரு சந்தர்ப்ப நேரத்தில் ஷாமா  பாபாவிடம் கேட்கின்றார்..., "பாபா, பலர் இம்மசூதிக்குள் தாராளமாய் வந்து தங்கள் தரிசனத்தைப் பெற்றுப் போகும்போது, தாங்கள் ஏன் அந்த முதிர்ந்த ஹாஜியை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது...?  அவரை ஒருமுறை ஆசீர்வதித்து அருளக் கூடாதா...?" என்று அவரைப்பற்றிப் பேசினார்.அதற்கு பாபா, "சாமா, நீ விஷயங்களையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவு முதிர்சியற்றவனாய் இருக்கிறாய்.  ஃபக்கீர் (அல்லா) அனுமதிக்கவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்...? அவரது அருளின்றி யார்  மசூதியில் ஏற வல்லவர்..? நன்று, அவரிடம் சென்று நாளை பார்வி கிணற்றுக் கருகிலுள்ள குறுகிய ஒற்றையடிப் பாதைக்கு வருவாரா எனக்கேட்டுவா" என்றார். சாமா சென்று உடன்பாட்டு விடையுடன் திரும்பிவந்தார்...

மீண்டும் அவரிடம் பாபா, "எனக்கு நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் கொடுக்கச் சம்மதிப்பாரா எனக் கேள்" என்றார்.  சாமா சென்று, நாற்பது இலட்சம் ரூபாய்கள் கூடத் தர அவர் சம்மதிப்பதான பதிலுடன் திரும்பிவந்தார்...மீண்டும் பாபா, "நாங்கள் ஒரு ஆட்டை மசூதியில் வெட்டப்போகிறோம், அவரை அதன் மாமிசம், தொடை, விதை இவைகளில் எது வேண்டுமெனக்கேள்" என்று கூறினார்...  ஹாஜி, பாபாவின் கோலாம்பாவிலிருந்து (மட்பாண்டத்திலிருந்து) ஏதாவது ஒரு சிறுதுணுக்கை பெற்றுக்கொள்வதிலேயே மகிழ்வதாகவும் சாமா பதில் கொண்டுவந்தார்.

இதைக்கேட்டு பாபா உணர்ச்சிவசப்பட்டு, தமது கையால் மட்கூஜாக்களையும், கோலாம்பாவையும் விட்டெறிந்துவிட்டு, நேராக ஹாஜிடம் சென்று தமது கஃப்னியை கைகளால் பிடித்துக்கொண்டு "ஏன் உன்னை நீயே தற்பெருமைப்படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப்போல் பாவனை செய்துக் கொண்டிருக்கிறாய். குர்ஆனை நீ இவ்விதமாகத்தான் கற்றுணர்ந்தாயா..?  நீ உனது மெக்கா தலயாத்திரை குறித்துப் பெருமை கொள்கிறாய்.  ஆனால் நீ என்னை அறியவில்லை" என்றார்.  இவ்வாறு கடிந்துகொள்ளப்பட்டதும் ஹாஜி குழப்பமடைந்தார். பாபா பின்னர் மசூதிக்குச் சென்று ஒரு கூடை மாம்பழங்களை வாங்கி ஹாஜிக்குக் கொடுத்தனுப்பினார். பின்னர் மீண்டும் ஹாஜியிடத்துச் சென்று தம் பையிலிருந்து ரூ.55 ஹாஜியின் கைகளில் வழங்கினார்..  அதிலிருந்து பாபா ஹாஜியை விரும்பினார். விருந்துன்பதற்கு  ஹாஜியை  அழைத்தார். பாபா ஹாஜியை விரும்பியபோதெல்லாம் மசூதியினுள் அழைத்தார். பாபா சில சமயங்களில் அவருக்கு சில ரூபாய்கள் அளித்தார்...  இவ்வாறாக பாபாவின் தர்பாரில் ஹாஜியும் சேர்க்கப்பட்டார்.

🔥சீரடி பகவான் தன்னுடைய  எங்கும்  நிறைந்த பேராற்றலினால், பஞ்சபூத சக்தியை  எவ்வாறு கட்டுப்படுத்தி தனது பக்தர்களைக் காப்பாற்றினார் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

பஞ்சபூதங்களும்  பாபாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டதன் நிகழ்விற்கு , உதாரணமாக இரண்டு நிகழ்சிகளைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிப்போம்...

(1) ஒருநாள் மாலைநேரத்தில் சீரடியில் பயங்கரமான புயல் வீசியது.  கருமேகங்களால் வானம் திரையிடப்படிருந்தது...காற்று பலமாக வீசத்தொடங்கியது... மேகங்கள் கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது.மழை வெள்ளமாய்ப் பொழியத் தொடங்கியது.  சிறிதுநேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளக்காடாகியது.  சீரடியிலிருந்த சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதியடைந்து திரளாக மசூதியில் தஞ்சமடைந்தனர்.  சீரடியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன... ஆனால் அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை... எனவே அவர்கள் எல்லோரும் தங்களது பக்தியின்பால் பற்றுடன்,  தங்களது உயரிய  கடவுளான பாபாவிடம் , நீங்கள்  குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்....பகவான்  மிகவும் மனது உருகினார்...பாபா மசூதியிலிருந்து  வெளிசசென்று, அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடிமுழக்கம் போன்ற குரலில் புயலை நோக்கி, "நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு" எனக் கூறினார்... சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது...பின்னர் சந்திரன் வானத்தில் உதயமாகி, மக்கள் நன்றாக மகிழ்ச்சியுடன்  இல்லத்திற்கு  திரும்பினர்....

(2) மற்றொரு சந்தர்ப்பத்தில் மத்தியான நேரத்தில் மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது... அதனுடைய சுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது...  மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை....தண்ணீரை அதன்மீது ஊற்றும்படியோ,அல்லது சுவாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்யும்படியாகவோ பாபாவைக் கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை...ஆனால் சிறிதுநேரத்தில் பகவான், என்ன நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணரத் தொடங்கினார்...தமது சட்காவை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின்மீது ஓங்கியடித்து, "கீழிறங்கு, அமைதியாய் இரு" என்றார். ஒவ்வொரு அடிக்கும் சுவாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும், சாதாரணமாகவும் ஆகியது...இவ்வாறாக சக்தி படைத்த ஆதி மூல பேராற்றலே  சாயீ என்பதை உணர்ந்தனர்..சாயீ பகவான் கடவுளின் அவதாரமேயாவார்.. தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்.  தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்....இதுமட்டுமன்று, எப்போதும் சாயீயின் மேல் பக்தி உடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகுவிரைவில் கடவுள்காட்சியைப் பெறுவார்...  எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்....ஆகவே சாய் சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்து பகவானுடைய அனுக்கிரகத்தைப் பெறுவோம் ...

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

https://eprofile.brandspot365.com/business409542

https://youtube.com/channel/UC_StOEm4cGxRNjlt1vSjs8A

https://www.facebook.com/groups/1257804604570307/permalink/1432941847056581/


https://youtu.be/oLXhrxQIn20




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக