ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻
🙏 அத்தியாயம்:: முப்பத்திரெண்டு (32)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....
ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம்:: முப்பத்திரெண்டு(32)🙏
🙏முன்னுரை..🙏
சத்குருவின் சிறப்பியல்புகள் என்ன?.சீரடிபாபா தன்னுடைய முதன்மை குருவை எவ்வாறு கண்டுணர்ந்து ஏற்றுக்கொண்டார் என்பதன் பற்றி விளக்கவுரைகளும், மற்றும் சீரடி பாபாவிற்கும் அவருடைய குருவிற்கும் இடையேயான பிணைப்பைப் பற்றியும், மேலும் பாபா தன்னுடைய குரு, எவ்வாறு தமக்கு சத்திய உயரிய ஞான மார்க்கத்தை அடைய வழி காண்பித்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..
சீரடி பாபாவிடம், விரதம் இருக்க அனுமதிக் கேட்ட பக்தை கோகலேயை விரதமிருக்க அனுமதிக்காததன் காரணம் என்ன என்பதைப் பற்றிய விளக்கவுரை...
சீரடி பாபா இளம் பிராயத்தினராக இருந்தபோது எவ்வாறு இயல் வாழ்க்கையை மேற்க் கொண்டார் என்பதைப் பற்றியும், பாபா உபதேசித்த செய்த உபதேச மொழிகளைப் பற்றிய உரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்..
முதலில் கண்ணுக்குத்தெரியும் இச்சம்சார வாழ்க்கையை ஹேமாட்பந்த் ஆலமரத்துடன் ஒப்பிடுகின்றார்...கீதையின் சொற்களில் வேர் மேலும், கிளைகள் கீழும் என்பதாக குணங்களால் போஷிக்கப்படுகின்றன...அதன் துளிர்கள் புலன்களாகின்றன...அம்மரத்தின் வேர்கள் செயல்களாக மனிதர்களின் இவ்வுலகம் வரை நீண்டிருக்கின்றன... இவ்வுலகத்தில் அதன் ரூபமோ, முடிவோ, ஆரம்பமோ அல்லது அதன் பற்றுக்கேடோ தெரியாது...வலிமையான வேர்களுள்ள இந்த ஆலமரத்தைப் பற்றின்மை என்னும் கூரிய ஆயுதத்தால் வெட்டுவதன் மூலம் அதற்கப்பாலுள்ள பாதையை ஒருவன் தேடவேண்டும்...அதில் செல்பவன் திரும்பி வருதல் கிடையாது...இப்பாதையில் செல்வதற்கு நல்ல வழிகாட்டியாகிய சத்குருவின் உதவி இன்றியமையாதது... ஒருவன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாய் இருப்பினும், வேத வேதாந்தங்களில் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுடையவனாக இருப்பினும், தனது உயரிய இலக்கை நோக்கி ஒவ்வொருவரும் பத்திரமாகச் சென்றடைய முடியாது...சத்குருவின்றி ஒருவரால் விரைவில் மேன்மைப் பெறுவது கடினமான ஒன்றேயாகும். வழிகாட்டி ஒருவர் உதவிட அங்கிருந்தால் சரியான வழியைக் காண்பித்துப் பயணத்தின் போதுள்ள இடர்கள், குழிகள், கொடிய மிருகங்கள் இவற்றை ஒதுக்கிச் செல்லமுடியும்... பயணமும் எளிதாகிவிடும்...இவ்விஷயத்தில் நம் சத்குருநாதர் பாபாவிற்கு ஏற்பட்ட உயரிய அனுபவங்களும், உபதேங்களும் ஆழமானது.. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது...கேட்டுப் பின்பற்றுபவர்கள் பாக்கியசாலிகளே....மேலும் பகவான் உணர்த்துகின்ற அனைத்து ஞான உரைகள், அற்புத அனுபவங்கள் , ஞானப் பாதைக்குரிய வழிக் காட்டுதல்கள் போன்றவற்றை பின்பற்றுபவர்களுக்கும், பாரயணம் செய்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் நம்பிக்கை, பக்தி, பொறுமை, சத்தியம், வைராக்கியம், நேர்மை, நல்வொழுக்கம் ஆகியவற்றை அளிக்கிறது.....
ஒருமுறை எங்களில் நால்வர் மத சாஸ்திரங்களையும், மற்ற புத்தகங்களையும் படித்துக் கொண்டிருந்தோம்...இவ்வாறாக உற்சாகம் பெற்றுப் பிரம்மத்தின் குணத்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். எங்களுள் ஒருவர்.. "அவரவர் ஆன்மாவைத் தத்தம் ஆன்மாவாலேயே உயர்த்தவேண்டும் என்றும் பிறரை நாடக்கூடாது என்றும் கூறினார்"....
இதற்கு இரண்டாமவர்.. "யார் மனத்தைக் கட்டுப்படுத்துகின்றானோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்....எண்ணங்கள், யோசனைகள் இவற்றிலிருந்து நாம் விடுபட்டவர்களாக இருக்கவேண்டும்... நாமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் கிடையாது" என்றார்...
மூன்றாமவர் உலகத்தின் தோற்றம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது...ஆகவே அருவமே நிலைத்தது (முடிவற்றது)..எனவே நாம் எது நிலையானது, மற்றும் எது நிலையற்றது என்பதனைப் பகுத்துணர வேண்டும் என்றார்..
நான்காம் நபராகிய பாபா கூறுகின்றார்... தீவிரமான ஏட்டறிவு பயனற்றது...நமக்கிடப்பட்ட கடைமைகளைச் செய்து, குருவின் பாதத்தில் உடல், மனம், ஐந்து பிராணன்கள் இவற்றைச் சமர்ப்பித்துவிட வேண்டும்.குருவே கடவுள், சர்வ வியாபி என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். இவ்வுறுதியான மனநிலை பெறுவதற்கு எல்லையற்ற திடநம்பிக்கை அவசியமாகும்...
இவ்வாறாக விவாதித்துக்கொண்டு கற்றறிந்த நாங்கள் நால்வரும் காடுகளில் கடவுளைத் தேடி அலையத் தொடங்கினோம்...அம்மூவரும் அறிவின் துணைகொண்டே சுதந்திரமாக எவர் உதவியுமின்றி தேட முயன்றனர்...வழியில் ஒரு வனஜாரி எதிர்பட்டார்..அதாவது வனஜாரி என்றால், எருமையின் மீது தானியத்தைக் கொண்டுசென்று விற்பவன் என்று அர்த்தம்...இப்போது வனஜாரி இந்த நால்வரிடம் உரையாடுகின்றார் இதோ..
வனஜாரி : இப்போது உஷ்ணமாயிருக்கிறது...எங்கே இவ்வளவு தூரம் போகிறீர்கள்? என்று கேட்கின்றார்...
நால்வர் : நாங்கள் காட்டில் தேடுகின்றோம்...
வனஜாரி : எதைத் தேடிச் செல்கின்றீர்கள்.
நால்வர் : நாங்கள் அனைவரும் வனஜாரி நம்பமுடியாத மழுப்பும் விதத்தில் ஒரு பதில் கொடுத்தோம்...
வனஜாரி கூறுகின்றார்...திக்குதிசை தெரியாமல் காட்டில் நீங்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.., "காடுகளை முழுவதும் அறியாமல், திடீரென்று நீங்கள் இப்படி திசை தெரியாமல் அலையக்கூடாது... காடுகளிடையே நீங்கள் செல்ல விரும்பினால் ஒரு நல்ல வழிகாட்டியை அழைத்துச் செல்லவேண்டும்..இந்த கடுமையான உச்சிவேளையில் அனாவசியமாக ஏன் அலைந்துக் கொண்டிருக்கின்றீர்கள். தேடும் உங்களது இரகசியத்தை நீங்கள் எனக்கு வெளியிட வேண்டாம்..ஆயினும் நீங்கள் அமர்ந்து, சாப்பிட்டு, நீர் குடித்து இளைப்பாறிய பின் செல்லலாம்...உள்ளத்தில் எப்போதும் பொறுமையாய் இருங்கள்" என்று கூறினார்.... அவ்வளவு இனிமையாகப் பேசியபோதும் அவரது வேண்டுதலை நிராகரித்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கினோம்.
நாங்கள் தன்னறிவு நிரம்பியவர்கள் என்றும், ஒருவரின் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைத்தோம்...காடு பரந்ததாகவும், பாதையற்றதாகவும் இருந்தது... சூரியஒளி கூட உட்புகாத அளவுக்கு மரங்கள் அவ்வளவு நெருக்கமாகவும், உயரமாகவும் வளர்ந்து இருந்தன...எனவே நாங்கள் வழிதவறி இங்குமங்கும் நெடுநேரம் அலைந்துக் கொண்டிருந்தோம்...முடிவாக நல் அதிர்ஷ்டம் ஒன்றினால் மட்டுமே எங்குவிட்டோமோ அங்கேயே வந்துசேர்ந்தோம்...வனஜாரி திரும்பவும் எங்களைச் சந்தித்தார்...
வனஜாரி : உங்கள் சொந்த புத்திசாதுர்யத்தை மட்டுமே நம்பி வழியை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள்.. சிறிய அல்லது பெரிய விஷயங்களில் வழிகாட்ட, ஒரு வழிகாட்டி நமக்கு எப்போதும் தேவை. வெறும் வயிற்றுடன் எந்த இலட்சியத்திலும் வெற்றியடைய இயலாது... கடவுள் நினைத்தாலன்றி ஒருவரும் நம்மை வழியில் சந்திப்பதில்லை... உணவளிக்கப்படுவதை மறுக்காதீர்கள்... பரிமாறப்பட்ட உணவை நிராகரிக்கக்கூடாது.. ரொட்டி, உணவு ஆகியவை கிடைப்பது வெற்றியின் அடையாளமாகும் என்றார் வனஜாரி...இதைக் கூறிக்கொண்டே, அவர் மீண்டும் எங்களுக்கு உணவை வைத்து அமைதியுடனும், பொறுமையுடனும் இருக்கும்படி கூறினார்.. மீண்டும் என்னுடன் இருந்தவர்களுக்கு இந்த நல்ல விருந்தோம்பல் பிடிக்கவில்லை..வனஜாரி கூறுவதை நிராகரித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.. தாகத்தையும், பசியையும் தீர்த்துக் கொள்ளாமலேயே மூவரும் செல்லும் அளவுக்குப் பிடிவாதமாக இருந்தனர்...எனக்குப் பசியாகவும், தாகமாகவும் இருந்ததால் வனஜாரியின் அசாதாரண அன்பில் உருகினேன்..மிகவும் கற்றறிந்தவர்கள் என்று எங்களை எண்ணிக்கொண்டோம்..அன்புக்கும், இரக்க குணத்திற்கும் நாங்கள் புதியவர்களாகவே இருந்தோம்...வனஜாரி கல்வியறிவற்றவர், தகுதியற்றவர், கீழ்குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் உள்ளத்தில் அன்பு நிலைக்கொண்டு இருந்தது.. அவர் எங்களை உண்ணக் கூறினார்... மற்றவர்களை நிஷ்காமியாக நேசிப்பவர் உண்மையிலேயே உயர்த்தப்படுகின்றார்... வனஜாரியினுடைய விருந்தோம்புதலை ஏற்றுக்கொள்ளுதலே ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கான சிறந்த ஆரம்பமாகுமென நான் நினைத்தேன்....எனவே அளிக்கப்பட்ட ரொட்டித்துண்டை மிக்க மரியாதையுடன் நான் ஏற்றுக் கொண்டேன்.தண்ணீரையும் பருகினேன்...
அப்போது ஆ...! குருவே எங்கள்முன் வந்து நின்றார்.. "எதைப்பற்றி சர்ச்சை...?" என்று அவர் கேட்டார்...நடந்த எல்லாவற்றையும் நான் கூறினேன்..அப்போது அவர், "நீ என்னுடன் வர விரும்புகின்றாயா..? உனக்குத் தேவையானதை நான் காண்பிப்பேன்.ஆனால் நான் கூறுவதில் " "நம்பிக்கையுடையவனே வெற்றியடைவான்" என்றார்...மற்றவர்கள் அவர் கூறியதை ஒப்புக்கொள்ளாமல் அவரை விட்டுச் சென்றனர். ஆனால் நான் அவரை வணங்கி அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டேன். பின்னர் அவர் என்னை ஒரு கிணற்றின் அருகில் அழைத்துச் சென்றார்...என் கால்களைக் கையிற்றால் கட்டினார்...என்னைத் தலைகீழாக பக்கத்தில் இருந்த மரத்தில் தொங்கவிட்டார்... கிணற்று நீர் மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே தொங்க விடப்பட்டிருந்த எனக்குத் தண்ணீர் கைகளுக்கோ வாய்க்கோ எட்டவில்லை..நாலைந்து மணிநேரம் தலைகீழாகக் கிணற்றில் தொங்க விடப்பட்டேன்...இவ்வாறு தலைக்கீழாக தொங்கவிடப்படுதல் என்பது ஒரு சமாதி நிலையைக் குறிக்கும் உயரிய நிகழ்வாகும்... உணர்வுகளில் இரண்டு வகைகள் உண்டு...
(1 ) புலன் வழி உணர்வுகள்.
(2 ) ஆன்ம வழி உணர்வுகள்
தங்கள் இலட்சியத்தை அடைய புலன்களும், மனதும் வெளியேறி தங்கள் ஆசையை அடையும்படி படைக்கப்பட்டிருக்கின்றன.நமக்கு அப்போது இன்பமோ அல்லது துன்பமோ, தனியோ அல்லது கலப்போ ஆகிய புலன்வழி உணர்வுகள் ஏற்படுகின்றன...ஆனால் பேரின்ப நிலையோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை... புலன்களும், மனதும் தங்கள் ஆசையிலிருந்து திருப்பிவிடப்பட்டு தலைகீழான நிலை அவைகளுக்குக் கொடுக்கப்படும்போது, அதாவது உள்நோக்கி ஆன்மாவில் சங்கமிக்கும்போது, மற்றொன்றான ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்...அது சொற்களால் விவரிக்க முடியாத அளவு பேரின்பத்தையும், கலப்பற்ற மகிழ்ச்சியையும் நமக்கு அளிக்கிறது.. "நான் பேரானந்தத்தின் உச்ச நிலையில் இருந்தேன்..நான் அனுபவித்த மகிழ்ச்சியை எங்ஙனம் கூறுவேன்" என்கின்றார் பாபா..இந்த வார்த்தையின் அர்த்தம் என்பது, குரு அவரை சமாதிநிலையில் வைத்தாரென்றும், தண்ணீர் மேலெ தொங்கவிடப்பட்டதன் காரணம் அமைதியற்ற புலன், மனம் இவைகளுக்கு அப்பால் என்பதாம்...
இவ்வாறாக என்னைத் தொங்கவிட்டு அவர் போய்விட்டார்.. எங்கு போனாரென்பது ஒருவருக்கும் தெரியாது...நாலைந்து மணிநேரம் கழித்து அவர் திரும்பி வந்தார்...என்னைத் துரிதமாக வெளியில் எடுத்து, எப்படி இருந்தது என்று கேட்டார்..."நான் பேரானந்தத்தின் உச்சநிலையில் இருந்தேன்...என்னைப் போன்ற முட்டாள் அந்தப் பேரானந்தத்தை எங்ஙனம் விவரிக்க முடியும்..?" என்று பதில் கூறினேன்... இவ்விடையைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.எம்மை அவர்பால் இழுத்துத் தட்டிக் கொடுத்து, தாய்மையுணர்வுடன் அவரிடம் வைத்துக் கொண்டார்...தாய்ப்பறவை தன் குஞ்சைப் பேணுதல் போன்று என்னை அன்புடன் கவனித்தார்...அவருடைய குருகுலத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டார்.. எத்தகைய அழகுடையது அது! அங்கே என் பெற்றோர்களை மறந்தேன்....பாசத்தைத் துறந்தேன்..அனைத்து பற்றுக்களிலிருந்தும் எளிதாக விடுவிக்க ப்பட்டேன்...அவரது கழுத்தைக் கட்டியணைத்து எப்போதும் அவரையே உற்றுநோக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தேன்..அவரது ரூபம் எனது கண்மணியில் பதிக்கப்படாவிட்டால் நான் குருடாயிருப்பதே நலம் என்று தோன்றியது.. குருகுலம் அத்தகையது..அதனுள் ஒருமுறை நுழைந்த யாரும் வெறுங்கையுடன் திரும்ப இயலாது...எனது வீடு, சொத்து, தாய், தந்தை அனைத்தும் முழுக்க முழுக்க குருவேயானார். எனது அங்க உணர்வுகள் எல்லாம் தங்கள் இடத்தை விட்டுவிட்டு எனது கண்களிலேயே ஒருமை அடைந்தன..எனது பார்வை அவரை மையமாகக் கொண்டிருந்தது...எனது தியானத்தின் ஒரே இலட்சியமாக அவர் மட்டுமே இருந்தார்...எனது குருவைத் தவிரப் பிறரைப்பற்றி நான் உணரவில்லை.. எண்ணவில்லை...இவரே எனது குரு..அவரைத் தியானம் செய்யும்போது எனது மனமும், புத்தியும் அசையாமல் நின்றுவிட்டன... இவ்வாறாக நான் அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று...அமைதியுடன் அவரை வணங்க வேண்டியதாயிற்று...
இங்கே நீங்கள் முழுவதும் வேறான காட்சிகளைக் காணும் மற்ற குருகுலங்கள் உள்ளன...ஞானத்தைப் பயில்வதற்காக சீடர்கள் அங்கு செல்கிறார்கள்...பணம், காலம், உழைப்பு இவைகளைச் செலவழிக்கிறார்கள்... ஆனால் முடிவாக அவர்கள் வருத்தப்பட நேரிடும்... அங்கேயுள்ள குரு தனது இரகசிய ஞானத்தைப் பற்றியும், தனது நேர்மையைப் பற்றியும் பெருமைப் யடித்துக்கொள்கின்றார். தனது புனிதத் தன்மையையும், தூய்மையையும் அவர் ஒரு காட்சியாக்கிக் கொள்கிறார்...ஆனால் அவருடைய உள்ளமானது உயரியத் தன்மையில் இல்லை...தனது புகழைப் பற்றியே அவர் புகழ்ந்து பாடிக்கொள்கிறார். ஆனால் அவரது சுய உபதேச மொழிகளின் மூலமாக அடியவர்களை உருவாக்குவதில்லை.. அவர்களும் தெளிவடைவதில்லை.... தன்னையறிதலைப் பொறுத்தவரை அவரிடம் ஒன்றுமில்லை...சீடர்களுக்கு அத்தகைய குருகுலப் பள்ளிகள் என்ன விதத்தில் பயன்படும்...?அதனால் அவர்கள் என்ன நன்மை அடைவார்கள்..?
இதற்கு முன்னர் யான் குறிப்பிட்ட எமது குருவானவர் வேறுவிதமானவர்..அவரது அருளால் எவ்வித முயற்சி, படிப்புமின்றியே ஞானம் தானாகவே எனக்குப் பளிச்சிட்டது... நான் எதையும் தேடவில்லை...ஆனால் எனக்கு அனைத்து மறை ஞான மூல உரைகளும் புரிய ஆரம்பித்தது..குரு மட்டுமே 'தலைகீழ் தொங்கவிடுதல்' எவ்வாறு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை அறிவார்...அந்நான்கு பேர்களில் ஒருவன் கர்மகர்த்தா...அவனுக்கு எவ்வாறு சில சடங்குமுறைகளை செய்வது அல்லது செய்யாமல் இருப்பது என்று மட்டுமே தெரியும்... இரண்டாமவன் ஞானி... தனது ஞானப் பெருகையில் ஊறியவன்... மூன்றாவது ஆள் கடவுள் ஒருவரே ஆட்டுவிப்பவர் என்று நம்பி அவரிடம் தம்மை முழுமையாக சரணாகதியாகி ஆகிவிட்ட பக்தன்.. மூவரும் விவாதித்து வாதம் பண்ணிக் கொண்டிருக்கையில் கடவுளைப் பற்றிய கேள்வி எழுந்தது...முறையான வழிகாட்டுதல் இல்லாத அறிவுடன் அவரைத் தேடிக்கொண்டு போனார்கள்..விவேகம், பற்றின்மை இவைகளின் அவதாரமான சீரடி சாயீ அந்த நால்வருள் ஒருவர்..சீரடி பாபா பிரம்ம அவதாரமாயிருந்தும், ஏன் மற்ற மூவர்களுடன் சேர்ந்து முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார் என்று சிலர் கேட்கலாம்... மக்கள் நன்மையடைவதற்கும், அவர்கள் தம்மைப் பின்பற்றும்படி தாம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவுமே அவர் இதைச் செய்தார்...தாமே ஒரு அவதாரமாயிருந்தும் கீழான வனஜாரியை மதித்து, 'உணவே கடவுள்' அதாவது அன்னம் என்பதே பிரம்மம் என்று உறுதியான நம்பிக்கையுடன் அதை ஏற்றுக்கொண்டார்...
வனஜாரியின் விருந்தோம்பலை ஏற்காதவர்கள் எங்ஙனம் கஷ்டப்பட்டார்கள் என்றும், குருவின்றி ஞானம் அடைவது இயலாதென்பதையும் அவர் காண்பித்தார்...ஸ்ருதி என்பது (தைத்ரீய உபநிஷதம்) நமக்கு மாதா, பிதா என்பது குருவின் வழிபாட்டையும், புனித கிரந்தங்களைக் கற்பதையும், கற்பிக்க வேண்டுவதையும் வற்புறுத்துகின்றது... இவைகளே நமது மனதைத் தூய்மைப்படுத்தும். இத்தூய்மை செய்யப்பட்டாலொழிய தன்னையறிதல் இயலாததாகும்... உணர்ச்சிகளோ, மனதோ, புத்தியோ ஆன்மாவை எட்டுவதில்லை.. காணுதல், அறிந்துகொள்ளுதல் என்பதும் இவ்விஷயத்தில் நமக்கு உதவாது...குருவின் அருள் ஒன்றே அனைத்தையும் கடக்க வழியாகின்றது.. நமது வாழ்க்கையின் இலட்சியங்களான சகல ஐஸ்வர்யப்பலம், மேன்மை, தானதர்மம், ஆகியவை நமது முயற்சியாலேயே அடையப்படுகிறது. ஆனால் மோட்ஷம் (விடுதலை) குருவின் உதவியாலேயே அடையப்படுகிறது.
சாயீயின் தர்பாரில் பல மனிதர்கள் தோன்றி தங்கள் பாத்திரத்தை நடித்தார்கள்.ஜோசியர்கள் வந்து தங்கள் ஜோசியங்களைக் கூறினார்கள். இளவரசர்கள், கனவான்கள், ஏழைகள், பணக்காரர்கள், சந்நியாசிகள், யோகிகள், பாடகர்கள் மற்றும் பலரும் தரிசனத்திற்காக வந்தனர். மஹார் என்ற கீழ்ஜாதியினர் கூட வந்து தனது ஜோஹாரைத் அதாவது வந்தனத்தைத் தெரிவித்துவிட்டு சாயீபாபாவே தனது உண்மையான பெற்றோர் என்று பாவித்து ஏற்று சரணாகதி அடைந்தனர்... ஜாலவித்தைக்காரன், கோந்தலிகள் என்றழைக்கப்படுகின்ற வில்லுப் பாட்டுக்காரர்கள், குருடு, நொண்டி, நாத்பன்திகள் (பாடகர்கள்), நாட்டியக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வாறாக மற்றும் பலரும் வந்தனர். உரிய வரவேற்பு அளிக்கப்பட்டனர்...வனஜாரியும் தனது தருணத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்தார்..நாம் இப்போது அடுத்த விளக்கவுரைக்கு செல்வோம்...
🔥சீரடி பாபாவிடம், விரதம் இருக்க அனுமதிக் கேட்ட பக்தை கோகலேயை விரதமிருக்க அனுமதிக்காததன் காரணம் என்ன என்பதைப் பற்றிய விளக்கவுரை இங்கே....🔥
பாபா ஒருபோதும் உணவை உட்க்கொள்ளாமல் இருந்ததில்லை...மற்றவர்களையும் அவ்வாறு விரதமோ அல்லது உணவு உண்ணாமல் இருக்க அனுமதிக்கவில்லை...விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதே இல்லை... பின்னர் அவன் எங்ஙனம் பரமார்த்திகத்தை அடையமுடியும்..? வெறும் வயிற்றுடன் கடவுள் அறியப்படமாட்டார். முதலில் ஆன்மா சாந்தப்படவேண்டும்... வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்க முடியும்...? கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்...? அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்..?சுருக்கமாக, நமது எல்லா உறுப்புக்களும் அவைகளுக்குரிய ஊட்டத்தைப் பெற்று நன்றாக இருக்கும்போது மட்டுமே , கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நாம் பெற முடியும்... எனவே பசியோடிருத்தல் நல்லதல்ல...மேலும் அதிகமாக உணவு உண்பதும் கூட சரியான முறையாகாது..ஆகவே உடலுக்கும், மனதுக்கும் மிதமான போக்கே உண்மையில் நல்லது...
திருமதி.கோகலே என்ற பெண்மணி, பாபாவின் பக்தையான திருமதி காஷிபாய் கனிட்கர் என்பவளிடமிருந்து தாதா கேல்கருக்கு ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிவந்தாள். அதற்கு முந்தின தினம் பாபா, தாதா கேல்கரிடம் தமது குழந்தைகளை ஷிம்கா என்கின்ற அதாவது புனித நாட்களின் போது உணவு உட்கொள்ளாமல் இருப்பதை தாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்..?.
அடுத்த நாள் அப்பெண்மணி தாதா கேல்கருடன் சென்று பாபாவின்முன் அமர்ந்தபோது பாபா, உடனே அவளை நோக்கி, " உணவு உட்கொள்ளாமல் விரதமிருக்க இப்போது தேவையென்ன..? என்று கேட்டார். தாதாபட்டின் வீட்டுக்குப் போய் பூரணப் போளியைச் (கடலை மாவு, வெல்லம் சேர்ந்த கோதுமை ரொட்டி) செய்து அவர் குழந்தைகளுக்குக் கொடுத்து நீயும் உண்பாய் என்று கூறினார். பண்டிகை நன்னாட்களாக இருந்தன...திருமதி கேல்கர் அப்போது வீட்டு விலக்கம் ஆகியிருந்தாள்...
தாதாபட்டின் வீட்டில் சமையல் செய்ய ஒருவரும் இல்லை..எனவே பாபாவின் அறிவுரை 'காலத்திநாற்' செய்ததாயிற்று... திருமதி கோகலே தாதாபட்டின் வீட்டிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. பாபா அறிவுருத்தியபடி அப்பண்டத்தைச் செய்ய வேண்டியதாயிற்று. அன்றைக்கு அவள் உணவை சமைத்து மற்றவர்களுக்கும் அளித்து தானும் உண்டாள்...என்ன அருமையான கதை. எத்தகைய ஆழமான படிப்பினை..!
🔥சீரடி பாபா, தான் இளம் பிராயத்தினராக இருந்தபோது எவ்வாறு இயல் வாழ்க்கையை மேற்க்கொண்டார் என்பதைப் பற்றியும், மேலும் பாபா உபதேசித்த உபதேச மொழிகளைப் பற்றிய அனுபவவுரை இங்கே ..🔥
பாபா தமது பால்யப் பருவத்தின் கதை ஒன்றைப் பின்வருமாறு கூறினார்."நான் சிறு வயதினனாக இருந்தபோது உணவுக்காக வேலை தேடிக் கொண்டிருந்தேன்... பீட்காவனுக்கு சென்றேன்..அங்கு எனக்கு எம்ப்ராய்டரி வேலை கிடைத்து.. ஒரு துன்பத்தையும் பாராது கடுமையாக உழைத்தேன்..முதலாளி என்மீது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்..எனக்கு முன் மற்ற மூன்று நபர்கள் வேலை செய்தனர்..முதல்வனுக்கு ஐம்பது ரூபாய் ஊதியமும், இரண்டாமவன் நூறு ரூபாய் ஊதியமும், மூன்றாமவன் நூற்றைம்பது ரூபாய் ஊதியமும் பெற்றனர்..இவர்களின் மொத்தத் தொகையைப் போல் இரண்டு மடங்கு நான் ஊதியம் பெற்றேன்...அதாவது அறநூறு ரூபாயை ஊதியமாக பெற்றேன்.. எனது புத்தி சாதுர்யத்தைக் கண்ட முதலாளி என்னை நேசித்தார், துதித்தார்.. முழுஆடை, தலைக்கு டர்பன், உடம்புக்கு ஷேலா(சால்வை) முதலியவற்றைத் தந்து என்னைக் கௌரவித்தார்...இவற்றை உபயோகிக்காமல் நான் பத்திரமாக வைத்திருந்தேன்...எந்த ஒரு மனிதன் அளிப்பதும் நெடுநாள் இருப்பதில்லை...அது முழுமையுடையது அல்ல...ஆனால் எனது எஜமானராகிய கடவுள் அளிப்பதோ காலமுடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறது....கடவுள் ஆசிர்வதித்த வெகுமதியை வேறெந்த வெகுமதியுடனும் ஒப்பிடமுடியாது...எனது எஜமானரோ, 'எடுத்துக்கொள், எடுத்துகொள்' என்கிறார்... ஆனால் எல்லோரும் என்னிடம் வந்து 'கொடு, கொடு' என்கிறார்கள்...நான் கூறுவதன் பொருளை ஒருவரும் கவனத்துடன் பார்ப்பதில்லை...எனது எஜமானரின் கஜானா நிரம்பியிருக்கிறது..நிரம்பி வழிகிறது...நான் கூறுவதாவது., வண்டிகளிலா இச்செல்வத்தை எடுத்துச் செல்லுங்கள்...சத்தியவதியான தாயாரால் ஆசீர்வதிக்கப்பட்ட மகன் இச்செல்வத்தால் தன்னை நிரப்பிக் கொள்ளட்டும்...எனது பக்கீரின் திறமை, எனது பகவானின் லீலை, எனது எஜமானரின் இயகையான செயல்வன்மை இவை மிகவும் நூதனமானவை.என்னைப்பற்றி என்ன..? உடம்பு (மண்) மண்ணுடன் கலந்துவிடும். இந்நேரம் இனிமேல் மீண்டும் வராது. நான் எங்கோ செல்கிறேன். எங்கோ அமர்கிறேன். மாயை என்னைக் கடுமையாகத் தொல்லைப்படுத்துகிறது. இருப்பினும் எனது மாந்தர்களுக்காக எப்போது நான், ஆசைபூண்டு கவலைப்படுகிறேன். ஆன்மிக முயற்சி செய்யும் ஒருவன் அதன் பழத்தை அறுவடை செய்கிறான்... எனது இம்மொழிகளைக் கேட்பவன் விலைமதிப்பற்ற சந்தோஷத்தைப் பெறுகிறான்"...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக.....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக