வெள்ளி, ஏப்ரல் 12, 2024

அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??

அக்ஷரம் என்றால் அழியாதது. மாறாததும் அழிவற்றதுமான பிரம்மத்தைப் பற்றிய ஞானமே அக்ஷர பிரம்ம யோகம். இறைவனும் நானும் ஒன்று என்பதை அறிந்து வாழும் ஞானிக்கு அடுத்த பிறவி இல்லை என்ற கிருஷ்ணரின் உறுதிமொழியே இவ்வத்தியாயமாக மலர்ந்திருக்கின்றது.

இந்த உடல், மனம், புத்தியே நான் என நினைக்கின்ற வரை நான் ஷரப் பிரம்மம். அழியக்கூடிய, வரையறைகளுக்கு உட்பட்டவன். இது அறியாமைக்குரிய நிலை. ஆனால் உண்மையில் நான் அழிவற்றதும் மாறாததுமான அக்ஷரப் பிரம்மமே. இந்த உண்மையை நான் அறியவேண்டுமென்றால், நானல்லாதவற்றை, அழியக்கூடிய தன்மை கொண்ட உடல், மனம், புத்தியை விலக்கி நிறுத்தி, அந்த பிரம்மம் தான் இங்கு நானாக இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அக மாற்றத்தை என்னுள் ஏற்படுத்துவது தான் ஒரே வழி. இறைவனாகிய நான் படைக்கப்பட்ட பாத்திரமாக நடிக்கிறேன். அந்த இறைவனே படைப்பவனாக நடிக்கிறான். ஆனால் இரண்டுமே ஒன்றுதான்...

இந்த உண்மையை அறிவது தான் ஆன்மீகம்... ஆன்மாவை நான் என அறிகின்ற பயிற்சி இது. இந்த ஆன்மீகத்தை அறிந்த ஞானிகள் அதனால் தான் இந்த உலகம் ஒரு நாடகமேடை – நாமெல்லாம் நடிகர்கள்...! என்றார்கள். “இந்த ஞானத்தால் என்னை அறிபவன் என்னைச் சேர்ந்தவனாகின்றான்...!” என்கிறார் கிருஷ்ணர். யார் ‘நான் செய்பவனில்லை, நான் அனுபவிப்பவனுமில்லை,ஆகையால் எனக்குச் செயல்களின் பலனில் அக்கறையில்லை’ என்பதை உண்மையாகக் கருத்தில் கொண்டு வாழ்க்கையைச் செலுத்துகிறானோ அவனுக்கு எந்தவித கர்ம பாதிப்பும் இல்லை. ஏனெனில் கர்மாவால் தான் பிறவி ஏற்படுகிறது. இந்தத் தெளிவு ஞானத்தால் ஏற்பட வேண்டும். வெறும் விதண்டாவாதப் போக்கு கூடாது. “எவன் ஞான உபதேசம் பெற்று ஞானத்தை அடைகிறானோ அவன் சம்சார சுழற்சிச் சக்கரத்திலிருந்து விடுபடுகின்றான்” என்று கீதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றது. கர்ம பாதிப்பு இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன் பிரம்மத்தில் கலந்து, வாழ்கின்றபோதே ஜீவன் முக்தன் ஆகிவிடுகின்றான்...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஒரு மனிதனின் வளர்ச்சி அவன் தனக்கு வருபவற்றை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்து அமைகின்றது. சாதாரண வாழ்க்கை முறையில், வருகின்ற பலனை ஏற்றுக்கொள்வதில் ஒருவரது விருப்பும் வெறுப்பும் கலக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாவிடில் நமக்கு வருவதை அப்படியே ஏற்றுச் செயல்படும்போது சமநிலை கெடுவதில்லை. ஏனெனில், மனச்சமநிலை இருந்தால் தான் பக்தி செலுத்த முடியும். அறியாமையால் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இறைவனை வணங்குவது உண்மையான பக்தியல்ல. எனக்குத் தரப்பட்டவையெல்லாம் என்னுடையவை என நாம் நினைக்கிறோம். இது என்னுடையது என்ற எண்ணம் நமக்குள் இருக்கின்றவரை அகங்காரம் அகல்வதில்லை. இது இறைவன் தந்தது என்று பிரசாதமாக ஏற்பதும், எல்லாம் இறைவனுடையது என்று நினைத்து வாழ்வதும் சிறந்தது. அந்த நிலையில் நம்மில் பெருகுகின்ற அன்பும், கருணையும் தான் உண்மையான பக்தியாகும்.

பக்தி என்பது கனிந்த அன்பு. அகங்காரம், மமகாரம் (நான் – என்னுடையது) என்ற இரண்டும் இருக்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது. இவை இரண்டும் இருக்கும் வரை வீண் கோப தாபங்கள், மனக்கசப்பு, பிரச்னை என எல்லாமே இருக்கும். உறவின் இரண்டு பக்கங்களிலுமே இவை இருப்பதால் மனச்சமநிலை கெட்டுப்போகிறது. வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், மன முரண்பாடுகள் ஆகியவை மனச் சமநிலையைக் குலைத்து விடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பக்தி செய்ய இயலாது. எதிர்பார்ப்பும், ஏக்கமும், ஆசையும் இருந்தால் பக்தி செய்ய முடியாது. பசி இருந்தாலும் பக்தி பண்ணமுடியாது...

அர்த்தமற்ற சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் உண்மையான பக்தி என்று சொல்ல முடியாது இறைவா..! என்று நினைக்கும்போதே இந்த உள்ளம் கரைந்து உருக வேண்டும். அவன் கருணையை உணர்ந்து கண்கள் பெருக்கெடுக்க வேண்டும். ஒருவர் எந்த தெய்வத்தை வழிபடுகிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பக்தியுடனும் உள்ளன்புடனும் பகவானிடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொள்கிறார் என்பதுதான் முக்கியம்.....

நானும் இறைவனும் ஒன்று என்பதை அறிந்து அவனையே தியானிப்பதே சிறந்த பக்தி. “தைல தாரைபோல் உனது உணர்வு முழுவதையும் ஊடுருவி, உனது ஆத்மாவில் சென்று கலப்பதே முழுமையான பக்தி” என்கிறார் ஆதி சங்கரர். காதலாகிக் கசிந்து உருகி இறைவனுடன் ஒன்று சேர்ந்து கலக்கின்றபோது உலகத்திற்கே உன்னத நன்மை ஏற்படும். பக்தியின் சிறப்பு இது.....

பக்தியில் அன்பு கலக்க வேண்டும். அன்புதான் உலக மகா சக்தி என்றார் புத்தர். எல்லாம் இருந்தும் நம்மீது ஒருவர் அன்பு செலுத்தவில்லை என்றால் நமக்கு வாழ்க்கையே வெறுக்கும். இறைவன் நம்மீது அன்பு செலுத்துவதனால் தான் நாம் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லாமே அன்பு என்னும் பசையினால்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. இயற்கைச் சக்திகள் அன்பாலேயே இயங்குகின்றன...

ஓம் நமசிவாய..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

புதன், ஏப்ரல் 10, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!???

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

சனாதன தர்மம் இதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திய விதம் தான் இந்துக்கள் யாரை சந்தித்தாலும் கரம் குவித்து அவர்களை வணங்குவது. எல்லாம் தெய்வம் என்று பார்க்கின்ற பக்குவ வெளிப்பாடு இது. யாதும் ஊரே...! யாவரும் கேளிர்...! என்று உலகத்தையே அணைக்கச் செய்தது இந்த உயர்ந்த ஞானத்தால் தான்.

இந்தப் பக்குவம் நமக்குள் வந்துவிட்டால் பிறகு கீதையை ஒவ்வொரு சொல்லாக நுணுக்கி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் ஒன்று. அவ்வளவுதான். பிரச்னையே இருக்காது. எதிரில் இருப்பவரும் நானும் ஒன்று என்று அணைக்கத் தெரிந்தால் தீர்ந்தது. இதைவிட சுலபமான வழி ஏதாவது இருக்கிறதா...? எது தடுக்கிறது என்று பார்த்தால் நமக்கு நாமே தான் தடை. புரிகிறதா...?

கீதையில் கிருஷ்ண உபதேசம் மேலும் இப்படித் தொடர்கிறது. ‘‘என்னிடமிருந்துதான் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்கள் உருவாகின்றன. நான் அவைகளைக் கடந்து அவைகளுடன் ஒட்டாமல் இருக்கிறேன். ஆனால் உலக மக்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள். அதனால் தான் முக்குணங்களைக் கடந்தவனும், அழிவற்றவனுமாகிய என்னை அறிய முடியாமல் போகிறது.”

“என்னுடைய முக்குணங்களாகிய மாயையைக் கடப்பது மிகவும் கடினம். எந்த சாதகர்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்களோ, அவர்கள் என் அருளால் இந்த மாயையைக் கடக்கிறார்கள். மாயையிலிருந்து விடுபட்ட பிறகு என்னை அறிந்துகொள்கிறார்கள்.”

“அசுர குணம் கொண்டவர்களும், மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தைக் கொண்டவர்களும், மிகக் கேவலமானதும் பாவமுமான செயல்களைச் செய்பவர்களும் என்னைச் சரணடைவதில்லை.”..

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!!???

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

இறைக்கருணை எவ்வளவு அற்புதமாக நம்மைப்போன்ற அற்பப் பிறவிகளுக்கு, நீ கொஞ்சமாவது என்னை நம்பி என்னிடம் பக்தி கொண்டு, என்மீது அன்பு செலுத்தியிருந்தாயானால் அதன் தொடர்ச்சியான பயன் உனக்கு அடுத்த பிறவியிலும் கிடைக்கும் என்ற சலுகையை வழங்கியுள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்..!வாழ்நாளில் பக்தி செலுத்தி வழிபடத் தவறினாலும், உடலை விட்டு உயிர் பிரிகின்றபோது எத்தகைய எண்ணம் மனிதனின் மனதில் இருக்கின்றதோ, அதற்கேற்ற வாழ்க்கையையே மறுபிறவியில் பெறுகின்றானாதலால், மரணிக்கும் தருணத்தில் கடவுளை தியானித்திருப்பது அவசியம். (மீண்டும் வாசிக்கவும்).

ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கின்ற காரியமா..? உலகத்திலுள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களாக அப்போது தானே மனதில் முண்டியடிக்கின்றன...! அவனுக்குக் கல்யாணம் நடக்கவில்லையே, இவளுக்குக் குழந்தை பிறக்கவில்லையே, இன்னும் சொத்து சேர்க்க வழியில்லாமல் நான் இப்படி சாகக் கிடக்கிறேனே என்றெல்லாம் கன்னா பின்னாவென்று ஏதேதோ விதத்தில் மனம் அலை பாய்ந்து அல்லல்படுமே அல்லாமல் கிருஷ்ணா! ராமா..! என்று ஜெபிக்க முற்படுமா...? ஓம் நமசிவாய என்று தான் சொல்லுமா...?

கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். அவரது அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மருமகள் அறைக்குள் வந்து அந்த விளக்கைத் தூண்டி விட்டு சிறிது எண்ணெயை விளக்கில் ஊற்றுகிறாள். கிழவர் சத்தம் போடுகிறார். போதும்! போதும்! ரொம்ப ஊற்றாதே...! எண்ணெய் சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறது! என்று. எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கவலை...?

இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் இப்படிப் பாடுகிறார்.

“குழந்தைக்கோ நாட்டம் பல விளையாட்டம்,

யுவனுக்கோ நாட்டம் யுவதியின் தேட்டம்

கிழவனுக்கோ பல மனக்கவலோட்டம்

பரம்பொருள் (மீது) இனி யார்க்குமில்லை நாட்டம்” என்று...

நாம் வாழ்ந்திருக்கும்போதே, மனதைக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால் தான், நமது மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலை பெறும். இந்த வாழ்க்கையைப் பற்றின்றி வாழ்ந்துகொண்டு, பக்தியால் தன்னுடனேயே ஒன்றிய நிலையில் வாழப் பழகினால் தான், மனதால் கடவுளைத் தியானம் செய்து கொண்டே தமது கர்மங்களைச் செய்தால்தான் அந்தப் பழக்கத்தின் காரணமாகவாவது இறக்கும் தருவாயில் இறைநாமம் நம்மில் ஒலிக்கும்...

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻

திருச்சிற்றம்பலம்...தில்லையம்பலம்..🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻