செவ்வாய், ஜூன் 15, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தாறு (36)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு..🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம் ::முப்பத்தாறு (36)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் புனித வேதநூல்  என்பது சாய்  சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால், சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும்  இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக  புற வாழ்வியலின்  இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...

சகல சௌபாக்கியங்கள் பெற்று  மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்🙏

🙏அத்தியாயம்::முப்பத்தாறு(36)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பகவான், தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன் தக்ஷிணையப் பெற்றார் என்பதன் விளக்கமும், சிலர் தாமாக  தக்ஷிணை  அளிக்க  விரும்பினாலும் பாபா அதனைப் பெற மறுத்ததன் மூல சூட்சமம் என்பதன் அனுபவ உரை...

சீரடி பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், அனைத்தையும் அறிந்தவர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தன்னை தரிசிக்க வந்த பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வையும்  பொதுவாக சுட்டிகாண்பித்து, தான் அவர்களுக்கு  செய்த ஆசியையும் அற்புதத்தையும் மறைமுகமாக உணர்த்தி, பக்தர்களின் தேவைகளை எவ்வாறு  பூர்த்திச் செய்தார்  என்பதன் அனுபவ விளக்கவுரை....

ஔரங்கபாத்கர் என்ற பெயர்க்கொண்ட  பக்தரின்  மனைவிக்கு,  எவ்வாறு பாபா  குழந்தையின்மை குறையை நீக்க ஆசிர்வதித்தார் என்பதன் விளக்கமும், மற்றும் உயரிய பக்தர் ஷாமா எவ்வாறு பகவானிடம் விவாதித்து குழந்தைப் பிறக்கும் வரத்தை அப்பெண்ணிற்குப்   பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥முதலில் சீரடி பகவான், தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன் தக்ஷிணையப் பெற்றார் என்பதன் விளக்கமும், சிலர் தாமாக  தக்ஷிணை  அளிக்க  விரும்பினாலும் பாபா அதனைப் பெற மறுத்ததன் மூல சூட்சமம் என்பதன் அனுபவ உரையை இங்கு காண்போம்...🔥

ஒருமுறை சாயீபாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக கோவாவிலிருந்து இருவர் வந்து, அவர்முன் வீழ்ந்து பணிந்தனர்.இருவரும்  ஒன்றாக வந்தபோதும் அவர்களில் ஒருவரிடம் மட்டுமே, பாபா தக்ஷிணையாக ரூ.15 கேட்டார்.. அதுவும் விருப்பமுடன் கொடுக்கப்பட்டது... மற்றொருவர் தாமாகவே முன்வந்து ரூ.35 அளித்தார்..மற்ற அனைவரும்  ஆச்சரியப்படும் படியாக பாபா அத்தக்ஷிணையைப்  பெற்றுக் கொள்ளவில்லை.. அங்கிருந்த ஷாமா பாபாவிடம், "என்ன பாபா...! இருவரும் ஒன்றாக வந்தனர்...ஒருவரின் தக்ஷிணையை நீங்கள் கேட்டுப் பெறுகிறீர்கள்...மற்றொருவர்  தாமாகவே அளித்தபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஏன் இந்த வேறுபாடு...?" என்றார்...

அதற்கு பாபா கூறுகின்றார்.. "ஷாமா உனக்கு ஒன்றுமே தெரியாது...நான் ஒருவரிடமிருந்தும் ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை..  இம்மசூதியின் ஆளும் தெய்வமான மசூதிமாயீ குறிக்கப்பட்ட கடன் தொகையைக் கேட்கின்றாள் அதனை வருகின்ற பக்தர்கள் எனக்கு தக்ஷிணையாக  அளித்து, அவர்கள்  கடனிலிருந்து விடுபடுகின்றார்கள்...  கவனிக்கும்படியாக எனக்கு எவ்வித வீடோ, சொத்தோ, குடும்பமோ இருக்கிறதா...?  எனக்கு எதுவுமே தேவையில்லை அல்லவா..எப்போதும் சுதந்திரமாகவே யான்இருக்கிறேன்.. கடன், பகைமை, கொலை ஆகியவைகளுக்குப் பரிகாரம் தேடப்பட்டே ஆகவேண்டும்...தப்ப வழியே இல்லை"  என்று கூறிவிட்டுப் பின் தமக்கே உரித்தான பாணியில் பின்வருமாறு கூறத்தொடங்கினார்...

முதலில் தன்னை தரிசிக்க வந்த பக்தர்  வறுமையில் இருந்ததாகவும்,  அவருக்கு ஒரு வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளத்தை காணிக்கையாகச் செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டார்.  மாதம் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது.. பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்ந்து ரூ.700ஐ அடைந்தது...ஆனால் பணியின் காரணமாக பக்தர் எம்மிடம்  வைத்த  பிரார்த்தனை சங்கல்பத்தை  முழுமையுமாக மறந்துவிட்டார்.. ஆனால் மீண்டும் எம்மின்  ஆசியால்  இவ்விடம் வரவழைக்கப்பட்டார்..அதனால் அத்தொகையை நான் அவரிடமிருந்து தஷிணையாகப் பெற்றேன் என்று கூறினார் பாபா...

🔥சீரடி பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், அனைத்தையும் அறிந்தவர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தன்னை தரிசிக்க வந்த பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வையும்  பொதுவாக சுட்டிகாண்பித்து, தான் அவர்களுக்கு  செய்த ஆசியையும் அற்புதத்தையும் மறைமுகமாக உணர்த்தி, பக்தர்களின் தேவைகளை எவ்வாறு  பூர்த்திச் செய்தார்  என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

தன்னை தரிசிக்க வந்த பக்தர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை சூட்சமமாக உணர்த்துகின்றார் பாபா ஷாமாவிடம். யான்  கடற்கரை ஓரமாக நான் உலவித் திரிந்துக் கொண்டிருந்தபோது ஒரு பிரமாண்டமான மாளிகையை வந்தடைந்தேன்...அதன் தாழ்வாரத்தில் அமர்ந்தேன்.  வீட்டுக்காரர் எனக்கு நல்ல வரவேற்ப்பளித்து, வயிறார உணவளித்தார்.  உறங்குவதற்காக அலமாரிக்கு அருகிலுள்ள தூய சுத்தமான இடத்தை எனக்குக் காண்பித்தார்.  அங்கு உறங்கினேன்...  நான் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும்போது அம்மனிதன் சுவற்றை இடித்து  உள்நுழைந்து என் பையிலிருந்த பணத்தையெல்லாம் கத்தரித்து எடுத்துக்கொண்டார்...  கண்விழித்தபோது எனது ரூ.30,000மும் திருடப்பட்டுவிட்டதை அறிந்தேன்.. பெரிதும் கவலையுற்று புலம்பிக் கொண்டிருந்தேன்.. ஆகவே உணவிலும், பானத்திலும் எனது விருப்பத்தையெல்லாம் இழந்து அந்தத் தாழ்வாரத்திலேயே பதினைந்து நாட்கள் புலம்பி அழுதுக்கொண்டு அமர்ந்திருந்தேன்...

 பதினைந்து நாட்கள் கழிந்ததும், வழிப்போக்கரான ஒரு பக்கிரி நான் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்து  எனது துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தார்.. நான் அவரிடம் எல்லாவற்றையும் ஒளிவுமறைவின்றிக்  கூறினேன்..அதற்கு அவர் "நான் கூறியப்படி  செய்தீரேயானால், நீ இழந்த ஐஸ்வர்யம்  திரும்பக் கிடைக்கும் என்றார்... .மேலும் கூறுகின்றார் ..ஒரு பக்கிரியிடம் செல்லும்...நான் அவரைப் பற்றிய ஒரு விபரம் தருகிறேன்...அவரிடம் உம்மை முழுவதும் சமர்ப்பித்து விடும்..அவர் உமது இழந்தப்  பணத்தை மீட்டுத் தருவார்...இந்த  இடைப்பட்ட வேளையில் பணம் திரும்பக் கிடைக்கும்வரை உமக்குப் பிடித்தமான உணவை விட்டுவிடவும்" என்றார்.. அப்பக்கிரியின் அறிவுரையைப் பின்பற்றி நடந்து  எனது பணத்தைத் திரும்பப்பெற்றேன்.. பின்னர் வாதாவி விட்டு நீங்கி கடற்கரையை அடைந்தேன்..அங்கு ஒரு நீராவிக் கப்பல் நின்றுக் கொண்டிருந்தது... அதில் கூட்டமாக இருந்ததால் ஏற முடியவில்லை..ஆனால் அங்கிருந்த நல்ல குணமுடைய பியூன் ஒருவன் எனக்காகக் குறுக்கிட்டதால் அதிர்ஷ்டவசமாக உள்ளே ஏறினேன்.  கப்பல் என்னை அக்கரை கொண்டுச் சேர்த்தது..அங்கிருந்து ரயில் ஏறி மசூதிமாயிடம் (துவாரகாமாயீடம்) வந்தேன் என்று கூறி முடித்தார் பாபா.

மேலும்  பாபா, ஷாமாவிடம் அவ்விருந்தாளிகளை அழைத்துச்சென்று அவர்களின் உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.  பின்னர் ஷாமா அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்தார்...  உணவின்போது ஷாமா அவர்களிடம் பாபாவின் கதை விளங்காத புதிராக இருப்பதாகவும், ஏனெனில் அவர் கடற்கரைப் பக்கமே சென்றது கிடையாதென்றும், ரூ.30,000 போன்ற எவ்வித பணத்தையும் பாபா  வைத்திருக்கவில்லையே என்றும்,  மேலும் பயணம் செய்ததேயில்லை, பணத்தைத் தொலைத்ததேயில்லை,  மீண்டும் அதைத் திரும்பப் பெற்றதேயில்லை என்றும் கூறி, அதை நீங்கள்  புரிந்துக்கொண்டு, அதன் குறிப்பு நுட்பத்தை அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார் ஷாமா...விருந்தினர் ஆழ்ந்து மனமுருகி கண்ணீர் சிந்தினார்...தொண்டை அடைக்கும் குரலில் அவர்கள், "பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், தன்நிகர் இல்லாத முழுமுதற்பொருள் (பரப்பிரம்மம்) என்று  உணர்ந்தனர்...பாபா  உரைத்த நிகழ்வானது  சரிநுட்பமாக எங்களது வாழ்க்கையில் நடந்த அனுபவ நிகழ்வாகும்... பாபா  பேசியது அனைத்தும்  எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே நடந்துவிட்டன.  இதையெல்லாம் அவர் எங்ஙனம் அறிந்தாரென்பது ஆச்சரியத்துள் எல்லாம் ஆச்சரியம்...!

 எல்லாத் தகவல்களையும் நாங்கள் உணவுக்குப்பின் உரைக்கின்றோம் என்று கூறினார்கள்...உணவுக்குப்பின் அவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது  விருந்தினர் தங்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர்....அவர்களுள் ஒருவர் கூறுகிறார்.. மலைத் தொடரின் மீதுள்ள ஒரு கோடைவாசஸ்தலமே எனது சொந்த ஊர்...ஒரு வேலைதேடிப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு கோவாவுக்குச் சென்றேன்.  தத்தர் தெய்வத்திடம் எனக்கு வேலை கிடைத்தால் முதல் மாத ஊதியத்தைச் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன்...அவரது அருளால் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை கிடைத்தது.. பாபா குறிப்பிட்டபடியே எனக்கு உத்தியோக உயர்வும் கிடைத்தது....எனது வேண்டுதலைப் பற்றியெல்லாம் அதன்பிறகு நிச்சயமாக மறந்தேவிட்டேன்.  இவ்வகையாக பாபா அதை நினைவுபடுத்தி ரூ.15 என்னிடமிருந்து மீட்டுப் பெற்றுக்கொண்டார்...மற்றவர்கள் நினைக்கும் விதமான அது தஷிணையன்று, பழைய கடன் ஒன்று  அடைத்தலும், நீண்ட நாள் மறந்துபோன வேண்டுதலை நிறைவேற்றுதலும் ஆகும்.

உண்மையில் ஒருபோதும் பாபா எந்தப் பணத்தையும் யாரிடமும் யாசிக்கவில்லை   தமது அடியவர்களையும் யாசிக்க அனுமதிக்கவில்லை..ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பணத்தை ஒரு அபாயமாக, தடையாக அவர் கருதினார்...தமது பக்தர்களை அதன் பிடியில் விழ அனுமதிப்பதேயில்லை... இது விஷயத்தில் பகத் மகல்ஸாபதி ஓர் உதாரணம் ஆவார்...அவர் பரம ஏழை...  வரவையும் செலவையும் ஒன்றாக்க அவரால் இயலவில்லை..பாபா அவரை ஒருபோதும் எந்தப் ஐஸ்வர்யத்தையும்  சம்பாதிக்க அனுமதிக்கவில்லை.. தமது தக்ஷிணைப் பணத்தினின்றும் ஏதும் கொடுக்கவுமில்லை மகல்சாபதிக்கு...  ஒருமுறை ஹம்ஸ்ராஜ் என்ற  தாராள குணத்தைக் கொண்ட   ஒரு வியாபாரி பாபாவின் முன்னால் மகல்சாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார்..ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை.

பின்னர் மற்றொருப் பக்தர் தனது வாழ்வில் நடந்த நிகழ்வைக்  கூறுகின்றார்...எனது பிராமண சமையல்காரன் எனக்கு முப்பத்தைந்து  ஆண்டுகள் விசுவாசத்துடன் பணிவிடை செய்துவந்தான்.துரதிர்ஷ்டவசமாக தீய வழிகளில் இறங்கினான்.அவன் மனம் மாறி என்னுடைய செல்வத்தையே கொள்ளையடித்தான்...நாங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது உள்ளே வந்து எனது அலமாரி வைக்கப்பட்டுள்ள அறையின் சுவற்றைத் துளைத்து  கரன்சி நோட்டுக்களாக நான் சேகரித்திருந்த ரூ.30,000 முழுவதையும் எடுத்துச் சென்று விட்டான்.. பாபா அதே தொகையை எங்ஙனம் குறிப்பிட்டார் என்பது எப்படி என்று எனக்குத் தெரியாது.  இரவும், பகலும் நான் அழுதுக் கொண்டிருந்தேன்.

எனது விசாரணைகளின் பலன் ஒன்றுமில்லை.  ஆழ்ந்த கவலையில் அரைமாதத்தைக் கழித்தேன்...தாழ்வாரத்தில் நான் அமர்ந்திருந்தபோது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பக்கிரி, வருத்தப்பட்டு மனம் வருந்திய  எனது  நிலையைக் கவனித்து விட்டு அதன் காரணத்தை விசாரித்தார்.அனைத்தைப் பற்றியும் அவரிடம் கூறினேன். கோபர்காவன் தாலூக்கா, சீரடியில் சாயீ என்ற பெயருடைய ஞானி  ஒருவர் இருப்பதாக அவர் கூறினார்...அவரிடம் ஒரு வேண்டுதல் செய்துகொள், உனக்கு மிகவும் பிடித்த  உணவு ஒன்றை மனதில் நினைத்து உமது தரிசனம் பெறும்வரை அவ்வுணவு உண்பதை நிறுத்திவிட்டேன்  என்று சங்கல்பமாக  கூறிக்கொள் என்றார்..பின்னர் அவ்வாறே நான் பிரார்த்தனை செய்துக் கொண்டேன்.  அரிசிச்சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன் என்று பிரார்த்தனையை மேற்க்கொண்டேன்.. இழந்தது  கிடைக்கும் வரை இதனை பின்பற்றுவேன் என்று உறுதியோடு இருந்தேன் என்றார்"....

இதன்பின் பதினைந்து நாட்கள் கழிந்தன.  அந்தப் பிராமணன் தானாகவே என்னிடம் திரும்பிவந்து எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் தன் செயலுக்காக வருந்தி, "எனக்குப் பைத்தியம் பிடித்து இவ்வாறு நடந்துகொண்டேன்...இப்போது உமது காலடிகளில் என் தலையை வைக்கிறேன்... தயவு செய்து மன்னித்தருளும்" என்றார்.. இவ்வாறு எல்லாமே நலமாகவே முடிவடைந்தன.. என்னைச் சந்தித்து எனக்கு உதவிய பக்கிரி மீண்டும் காணப்படவில்லை...அப்பக்கிரி எனக்கு அறிவுருத்திய  பாபாவை காணவேண்டும் என்று  ஒரு தீவிர ஆர்வம் என்னுள் எழுந்தது...எனது வீடுவரை வந்த அப்பக்கிரி சாயிபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் நினைத்தேன்.  என்னைக் காணவந்து எனது தொலைந்துப் போன பணத்தை மீண்டும் பெற்றுத் தருவதற்காக எனக்கு உதவி புரிந்த அவரா முப்பத்தைந்து ரூபாய் பெறுவதற்காக ஆர்வமாயிருப்பார்...? மாறாக எங்களிடமிருந்து எதையும் எதிபார்த்துக் கொண்டிராமல்,  நம்மை  ஆன்மிக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் பாபா  தம்மாலான முழு முயற்சியை எப்போதுமே செய்கிறார்.

திருடப்பட்ட எனது பணம்  மீண்டும் கிடைத்தவுடன் நான் பெருமகிழ்வுற்றேன்.  அந்த ஆர்வத்தில் எனது வேண்டுதல் அனைத்தையும்  மறந்துவிட்டேன்.  பின்னர் நான் கொலாபாவில் இருந்தபோது ஒருநாள் இரவு கனவில் சாயிபாபாவைக் கண்டேன்....இது நான் சீரடிக்கு வருகிறேன் என்று எடுத்திருந்த பிரார்த்தனையை எனக்கு நினைவூட்டியது.  அதனால் கோவாவுக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் பம்பாய் வழியாக சீரடிக்குச் செல்ல விரும்பினேன்.  ஆனால் துறைமுகத்துக்கு வந்தபோது அக்கப்பல் ஏற்கனவே கூட்டமாயிருப்பதையும், இடமில்லாததையும் அறிந்தேன்...கப்பல் தளபதி என்னை அனுமதிக்கவில்லை.. நல்ல குணமுடைய எனக்கு பழக்கமில்லாத ஒரு பியூன் குறுக்கிட்டதால் எனக்கு கப்பலில் இடம் அனுமதிக்கப்பட்டு பம்பாய் வந்து சேர்ந்தேன்..பின்னர் ரயில் மூலமாக சீரடி  வந்தேன்...பாபா அண்டசராசரத்திலும்  வியாபித்து இருப்பவர் என்றும், எல்லாமறிந்தவர்  என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்..நாங்கள் யார்..?  எங்கள் வீடு எங்கே இருக்கிறது..?  பாபா எங்களது பணத்தை மீட்டுக்கொடுத்து, தாமே எங்களை ஈர்த்து இங்கு  வரவழைத்தது  எங்களது நல்ல அதிர்ஷ்டம் தான்.. எவ்வளவு பெரியது...?  சீரடியைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் நிச்சயமாக எங்களைக் காட்டிலும் எல்லையற்ற அளவு மேலானவர்களாகவும், மிகுந்த அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்...பாபா விளையாடி, சிரித்து, உரையாடி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்துக் கொண்டிருப்பதும் உங்களுடனேயே அல்லவா...?  உங்களுடைய பூர்வபுண்ணிய பலன் அளவிடற்கரியதாக இருக்கவேண்டும்.  ஏனெனில் அதுவே பாபாவை சீரடிக்கு இழுத்துவிட்டிருக்கிறது.  சாயியே எங்களது தத்தர்.  அவரே வேண்டுதலுக்குக் கட்டளையிட்டார்.  கப்பலில் ஓர் இடமும் அளித்து என்னை இவ்விடம் சேர்ப்பித்தார்.  இவ்விதமாக பகவான்,  எங்கும் நிறைந்து அண்ட சராசரத்தில் உள்ள அனைத்துயிர்களிலும்   வியாப்பித்து  ஆட்சி புரிகின்றேன் என்கிற சாட்சி  நிரூபணத்தை நமக்கு  அளித்திருக்கின்றார்..

🔥ஔரங்கபாத்கர் என்ற பெயர்க்கொண்ட  பக்தரின்  மனைவிக்கு, எவ்வாறு பாபா  குழந்தையின்மை குறையை நீக்கி ஆசிர்வதித்தார் என்பதன் விளக்கமும், மற்றும் உயரிய பக்தர் ஷாமா எவ்வாறு பகவானிடம் விவாதித்து குழந்தைப் பிறக்கும் வரத்தை அப்பெண்ணிற்குப்  பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

சோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு இருபத்தேழு  ஆண்டு காலமாகக் குழந்தையில்லை... கணக்கற்ற பிரார்த்தனைகளை, அவர்கள் அனைத்து தெய்வத்திடமும், மகான்களிடமும், தேவதா சக்திகளிடமும் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்..ஆனால் வெற்றிபெறவில்லை.  பின்னர் அவள் பெருமளவு நம்பிக்கை இழந்தவளாக ஆனாள்..இவ்விஷயத்தில் இறுதியான முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன்  சீரடி  வந்து பாபாவுக்குச் சேவை செய்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள்.. மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்...அவள் அவரைத் தனியாகக்கண்டு வீழ்ந்து வணங்கித் தனது இதயத்தைத் திறந்து பிள்ளை வரம் வேண்ட விரும்பினாள்.. ஆனால் உரிய சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை..  முடிவாக அவள், பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி ஷாமாவிடம் கேட்டுக் கொண்டாள்.  ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காக தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் ஷாமா  கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு சைகையால்  காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்...ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபா அப்போது அவர் கன்னத்தைக் கிள்ளிவிட்டார்.

ஷாமா : (பொய்க்கோபத்துடன்) தேவா இந்த மாதிரி என்னைக் கிள்ளுவது சரியா...?  இந்த மாதிரி கிள்ளிக் குறும்பு செய்யும் கடவுள் எங்களுக்குத் தேவையில்லை.  நாங்கள் உங்களையே சார்ந்து இருப்போரல்லவா...?  இதுதான் எங்களது நெருக்கமான உறவின் பலனா...?

பாபா : ஓ...! ஷாமா, கடந்த 72 தலைமுறைகளாக நீ என்னுடன் இருக்கிறாய். இதுவரை உன்னை நான் கிள்ளியதில்லை.இப்போது நான் உன்னைத் தொட்டதைக் குற்றமாகக்கொண்டு கோபித்துக் கொள்கிறாயே...?

ஷாமா : எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும்,  உண்பதற்கு இனிப்புக்களையும் கொடுக்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகின்றோம்..  தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை. .தங்கள் பாதாம்புயத்தின் பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும்.. அதற்கு ஆசீர்வதியுங்கள்.  

பாபா :  ஆம் உண்மையில் அதற்காகவேதான் நான் வந்திருக்கிறேன்.  நான் உங்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்த்து வருகின்றேன்..  உங்கள் மீது அன்பும், பாசமும் பூண்டிருக்கின்றேன்.

இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார்...ஷாமா அப்பெண்மணிக்கு சைகை  செய்தார்...அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம் அளித்தாள்.....பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்....அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

பாபா : ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறதென்பதைக் கவனி...

ஷாமா::இப்பெண்மணி, அம்மதிரியாகவே ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்பெற வேண்டுமென்று வேண்டுகிறாள்... எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள்.... 

பாபா : இத்தேங்காய் அவளுக்கு குழந்தைப் பாக்கியத்தை அருளுமா..?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் இவ்வளவு முட்டாள் தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கின்றார்கள்....

ஷாமா :  தங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நானறிவேன்..தங்களது சொல் அவளுக்கு குழந்தைகளின் தொடரையே அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை...

விவாதம் கொஞ்சநேரம் நடந்துக் கொண்டு இருந்தது...பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக் கொண்டிருந்தார்... முடிவாக பாபா சம்மதித்தார். 

பாபா : அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்...

ஷாமா :  எப்போது...?

பாபா :  இன்னும் பன்னிரெண்டு  மாதங்களில்...

இதன் பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும் உண்டனர்.. மறுபடி அப்பெண்ணிற்கு வழங்கப்பட்டது...

பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி "அன்புள்ள அம்மையே...! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி....பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை ஏதும் பிறக்காவிட்டால் ஒரு தேங்காயை இந்த தெய்வத்தின் (சாயிபாபாவின்) தலையின்மீது அடித்து அவரை மசூதியிலிருந்து வெளியே விரட்டிவிடுவேன்.இதை நான் செய்யத் தவறுவேனாயின் என்னை மாதவ் என்று நானே அழைத்துக்கொள்ள மாட்டேன்... நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்" என்று சூளுரைத்தார் ..

அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்...புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்து வந்தாள். கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள்.  நன்றியுள்ள அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்...ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஸ்ரீ சாயீயைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🏻🙏🏻

https://youtu.be/Kv2wV48w0Lo


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக