புதன், ஜூன் 16, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தேழு(37)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய வெளியீடு...🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய்  சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் :: முப்பத்தேழு(37)🙏

  🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் ::முப்பத்தேழு(37)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தன்  இயல்  நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சாட்சியாக வாழ்ந்தார் என்பதைப் பற்றிய மூல சூட்சம விளக்கவுரை..

சாவடி ஊர்வலத்தின் போது  நடைபெறுகின்ற  முக்கிய நிகழ்வுகளைப்  பற்றிய விளக்கமும்,  சாவடி ஊர்வலத்தின் போது பக்தர்கள்,  எவ்வாறு பாபாவை  அலங்கரித்து, ஆராதனை செய்து  ஆசிப்பெற்று  மகிழ்ந்தனர் என்பதுப் பற்றி அனுபவ விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின்  விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்..

🔥முதலில் சத்குருநாதர் ஶ்ரீசீரடி பாபா, தன்  இயல்  நடைமுறை வாழ்க்கையில்  எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சாட்சியாக வாழ்ந்தார் என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

சாயீயின் வாழ்க்கை முறை புனிதமானது... அவரது அன்றாட. நடைமுறையில் அவர் தனக்குள்ளே ஒரு  கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு, எளிமையும், சுய ஒழுக்கத்தையும்  கடைப்பிடித்தார்...பாபாவின்  வழிமுறைகளும், செயல்களும் விவரிக்க இயலாதவை...  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை...சில நேரங்களில் அவர் பேரானந்தப் பெருநிலையில் (தெய்வீக ஆனந்தம்) இருந்தார். மற்றும் சில சமயங்களில் ஆத்ம ஞானத்துடன் அடக்கமாய் இருந்தார். ஏராளமான பல உயரியச்  செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவைகளில் தொடர்பேதுமின்றித் தனித்து இருந்தார்.  முற்றிலும் செயலே அற்றவராகச் சில சமயம் தோன்றியபோதும் , அவர் தனக்குள் உலகத்தைக் கண்டு, மனித உயிர்களைக் கடைத்தேற்றம் அடைய வைக்கக்கூடிய  உன்னதக் காரியங்களை செய்தார்..

தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்...அமைதியான, நிசப்தமான, அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும் அவர் அளவிட முடியாத ஆழமானவர்...அவரின் செயல்முறைகள் அதீத வியாபகமுள்ளது...எவர் நம் சத்குரு பாபாவின்  சொல்லில் அடங்காப் பெருங்குணத்தையும், மூல சூட்சமத்தையும்  விவரிக்க இயலும்...? அவர் ஆண்களை சகோதரர்கள் என்றும், பெண்களை சகோதரியாகவும், தாயார் ஆகவும் கருதினார்... பேதம் பாராது அனைவரையும் சமமாக நடத்தினார்.. மிகுந்த தாய்மையுணர்வுடனும், சகிப்பத்தன்மையோடும், கருணையோடும், பேரன்போடும் அனைவரையும்  தன் குழந்தைகளாக  அரவணைத்து  ஏற்றுக்கொண்டார்.. எல்லோரும் அறிந்துள்ளபடி அவர் பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார்.  அவர்தம் கூட்டுறவால்  பெரும் ஞானமானது நிரந்தரமாக நம் அனைவரிடமும்  திகழட்டும்...அவர்தம் பாதங்களுக்கு எப்போதும் முழுமையான பக்தியுடன் சேவை செய்வோம்... அவரை அனைத்து ஜீவராசிகளிடமும் காண்போம்.. பாபாவின்  நாமத்தை எப்போதும் ஜெபிப்போம்.. ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த, தூய்மையான அன்புடன் பாபாவை பூஜித்து,  சரணாகதி அடைவோம்..இறை அவதாரப் புருஷராக இருப்பினும், எளிமையாகத் தன்னை காண்பித்துக் கொண்டு, நம்மிடையே இரண்டறக் கலந்து சேவகனாக  தன்னை உருவேற்றிக்கொண்டு, நம்மைக் கடைத்தேற்றினார் நம் சத்குருநாதர் பாபா... அடுத்ததாக சாவடி ஊர்வலத்தைப் பற்றிப் பார்ப்போம்.. 

🔥சாவடி ஊர்வலத்தின் போது  நடைபெறுகின்ற  முக்கிய நிகழ்வுகளைப்  பற்றிய விளக்கமும், சாவடி ஊர்வலத்தின் போது பக்தர்கள், எவ்வாறு பாபாவை  அலங்கரித்து, ஆராதனை செய்து  ஆசிப்பெற்று  மகிழ்ந்தனர் என்பதுப் பற்றி அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

பாபா துயில் கொள்கின்ற நிலையானது மிக அழகானது.. ஒருநாள் அவர் மசூதியில் உறங்கினார்... மறுநாள் சாவடியில் (மசூதிக்கு அருகில் ஓரிரண்டு அறைகள் உள்ள கட்டிடம்)  துயில் கொண்டார்.. இவ்வாறு இடம்பெயர்ந்து  தூங்குவது பாபா மஹாசமாதி அடையும்வரை நடைபெற்றது...1909-ஆம் ஆண்டு மார்கழி 10ம் தேதி முதல், அடியார்கள் பாபாவிற்கு சாவடியிலேயே முறையான வழிபாடு நடத்தத்  தொடங்கினர்...சாவடிக்குப் போகும்முறை வந்ததும் மக்கள் மசூதியைச் சூழ்ந்து கொள்வர்...மண்டபத்தில் சில மணிநேரம் பஜனை செய்வர்...அவர்களுக்குப் பின்னால் துளசி பிருந்தாவனத்தின் வடதிசையில்,  பாபாவின் முன்புள்ள இடைப்பட்ட இடத்தில் ஒரு அழகிய ரதம் இருந்தது...பஜனையில் விருப்பமுள்ள மக்கள் இருந்தனர்.. பஜனையில் விருப்பமுள்ள ஆண்களும், பெண்களும் உரிய நேரத்தில் வந்தனர்... தங்கள் கைகளில் தால் (ஜால்ரா), சப்ளா கட்டை, கர்தால் (கஞ்சிரா), மிருதங்கம், கோல் (டோலக்கு) முதலிய இன்னிசைக் கருவிகளை வைத்துக்கொண்டு பஜனை நடத்தினர்.  அங்குள்ள அடியவர்கள் அனைவரையும்  ஈர்த்து இழுத்த காந்தம் சாயிபாபா ஆவார்...புறத்தேயுள்ள திண்ணையில் சிலர் தங்கள் தீவட்டிகளை ஒழுங்குபடுத்தினர்...சிலர் பல்லக்கை அலங்கரித்தனர். 

சிலர் தங்கள் கைகளில் பிரம்புக்குச்சியை வைத்துக்கொண்டு பாபாவுக்கு ஜெயகோஷம் முழங்கிக்  கொண்டிருந்தனர்..மசூதியின் மூலையானது ஜோடனைத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டது...மசூதியைச் சுற்றிலும் எரியும் விளக்குகளின் பேரொளியால் அந்த பகுதியே தெய்வீகத் தன்மையோடு இருந்தது.. ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரை முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டு வெளியே நின்றுக் கொண்டிருந்தது...பின்னர் தாத்யா பாடீல் சில ஆட்களுடன் பாபா அருகில் வந்து, அவரைத்  தயாராகும்படி  கேட்டுக் கொள்கின்றார்...

தாத்யா, தனது கைகளை பாபாவின் கரத்தின் அடியில்  கொடுத்து அவருக்கு உதவி செய்யும் வரை பாபா அமைதியாக அமர்ந்திருப்பார்... தாத்யா பாபாவை மாமா என்றழைத்தார்... உண்மையில் அவர்களது உறவு மிகமிக நெருக்கமானது...தமது உடம்பில் பாபா வழக்கமான கஃப்னியை அணிந்து சட்காவைத் (சிறு கைத்தடி) தமது கரத்தின் அடியில்  வைத்துக்கொண்டு, தம் சில்லிம் (புகைபிடிக்கும் மண்குழாய்), புகையிலை இவற்றோடு ஒரு துணியைத் தன் கரங்களில்  போட்டுக்கொண்டு புறப்படுவதற்கு  ஆயத்தமாகின்றார்...பின்னர் தாத்யா பொன்னாலான  வேலைப்பாடு  செய்யப்பட்ட ஓர் அழகிய சால்வையை பாபா மீது அணிவித்தார்.. இதன்பின் பாபா,  பின்னால் இருக்கும் விறகுக் கட்டைகளைத் தமது வலதுகால் கட்டை விரலால் சிறிது இழுத்து, வலது கையால் எரிந்துக் கொண்டிருக்கும் விளக்கை அணைத்துவிட்டுச் சாவடிக்குப் புறப்படுகின்றார்.. டாஷே (முரசு), பேண்டு, சங்குகள், மிருதங்கம் முதலிய எல்லாவிதமான இசைக்கருவிகளும் தங்கள் விதவிதமான ஒலிகளை எழுப்புகின்றன...வாண வேடிக்கைகள் மாறுபாடான வெவ்வேறு வகையான வர்ணஜாலக் காட்சிகளைக் காட்டுகின்றன... 

வீணை, மிருதங்கத்துடன் இணைந்து ஆண்களும், பெண்களும் பஜனை செய்துக் கொண்டு, பாபாவின் பெயரைப் பாடிக்கொண்டு நடக்கத் துவங்குகின்றார்கள்... சிலர் மகிழ்ச்சியால் நடனமாடினர்..சிலர் பலவகையான கொடிகளையும், கம்புகளையும் எடுத்துச் செல்கின்றனர்..மசூதியின் படிகளுக்கு பாபா வந்ததும் பல்தார்கள் பாபாவுக்குக் கட்டியம் கூறினர்...  பாபாவின் இரண்டு பக்கங்களிலும் சாமரம் பிடித்துக் கொண்டிருப்பவர்களும், விசிறுபவர்களும் நின்றுக் கொண்டிருந்தனர்...அடியவர்களின்  கைகளால் தாங்கப்பட்டவாறே  பாபா நடந்துவரும் வழியில் துணியால் கம்பளம்  விரிக்கப்பட்டிருந்தன... தாத்யா பாடீல் அவரது இடது கையையும், பாபு சாஹேப் ஜோக்  அவர்கள் பாபாவின்  தலைமீது குடையைப்  பிடித்திருந்தார்...

இவ்விதமாக பாபா சாவடிக்கு நடந்து செல்கின்றார்...முழுமையும் அலங்கரிக்கபட்ட ஷ்யாம் கர்ணா என்ற சிவப்புக் குதிரை வழிவகுத்துக் கொண்டு சென்றது.  அதன்பின் பல்லக்குத் தூக்கிகள், ஏவலாட்கள், இசைப்பாடுவோர் மற்றும் அடியவர் கும்பலும் வந்தனர்...ஹரி நாமமும், சாயீ நாமமும் இசையுடன்  இணைந்த  குரலின் ஒலியோசை  வானைப்பிளந்தது...இவ்விதமாகவே ஊர்வலம் வீதி முனையை அடைந்தது...இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட யாவரும் மிக்க மகிழ்ச்சியடைந்து களிப்புடனும் பரவசத்துடன்  காணப்பட்டனர்... 

வீதியின் இந்த முனைக்கு வந்ததும் பாபா சாவடியை நோக்கி நின்றுக் கொண்டார்.. ஒரு தெய்வீக ஒளியுடன் அவர் பிரகாசித்தார்... அதிகாலையைப் போன்றோ, உதயசூரியனின் பிரபையைப் போன்றும், வானில் தெரியும் நட்சத்திரத்தைப் போன்றும், பாபாவின்  முகம் சுடரொளியால்  பிரகாசித்தது.. ஒருமுகப்பட்ட மனதுடன் பாபா அங்கு யாரையோ கூப்பிடுவோர் போல் வடக்குத் திசையை  நோக்கி நிற்கின்றார்.. எல்லா  இசைக் கருவிகளும் ஒலித்துக் கொண்டிருக்கும்போது,  பாபா தமது வலது கையை  மேலும்கீழும் சிறிதுநேரம் அசைக்கிறார்.. இதற்கிடையில்  காகா சாஹேப் தீஷித் குலால் என்பவர்,  சிவப்புப் பொடியுடன் கலந்த மலர்களைக் கொண்ட வெள்ளித்தட்டுடன் முன்னேவந்து, அவைகளை பாபாவின் திருமேனியில் அடிக்கடி மலர்களைத்  தூவினார்.  இத்தருணத்தில் இன்னிசைக் கருவிகள் மிகச்சிறப்பாக ஒலித்தன..பாபாவின் முகம் நிலையுறுதியான அதீத  சாந்தியுடனும், அழகுடனும்  மிளிர்ந்தது....அனைத்து  மக்களும் இந்த சுயம்பு  ஜோதியான பாபாவின் திருமுகத்தை  தங்கள் மனநிறைவு கொள்ளும்வரை பருகுகிறார்கள்..

இந்நிகழ்ச்சியின் காட்சியையும், உயர்வான கீர்த்தியையும் விவரிக்க வார்த்தைகள் தவறி விடுகின்றன.. சாவடி ஊர்வலத்தைப்  பற்றிய நிகழ்வினை  சொற்களால்  விவரிக்க முடியாத வகையில் ஆழமான காட்சிகளையும் தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.. சில சமயங்களில் மகல்சாபதி ஏதோவொரு ஆவேசம் பிடித்தவர் போல் ஆடுகிறார்..அதனைக் கண்டும்  பாபாவின் ஏகாந்திரச் சித்தம் (கவனம்) சிறிதளவும் கலைக்கப்படாதது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.  தமது கையில் விளக்குடன் தாத்யாபாடீல் பாபாவின் இடப்புறத்திலும், பகத் மகல்சாபதி வலப்புறத்திலும் பாபாவின் ஆடையின் நுனியைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்.. எத்தகைய  சுந்தர ஊர்வலம்..! எத்தகைய பக்தியின் உயரிய  பாங்குகள்...! இதைக்காண ஆண்களும் , பெண்களும், ஏழைகளும், பணக்காரர்களும் அங்கு ஒன்றாகத் திரண்டுள்ளனர்.  பாபா மிக மெதுவாகவே நடக்கிறார்...

பக்தர்கள் இருமருங்கிலும் அன்புடனும், பக்தியுடனும் தொடர்கின்றார்கள்.  அவ்விடத்தில் வான் மண்டலம் முழுவதும் பேரானந்தமும், பேர் மகிழ்ச்சியும்  ஊடுருவிப் பரந்து ஊர்வலம் சாவடியை அடைகிறது.. அக்காட்சியும் அந்நாட்களும் சென்றுவிட்டன... ஒருவரும் அவைகளை இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ பார்க்கமுடியாது.  எனினும் அக்காட்சியின் தோற்றத்தை நினைவுகூர்ந்தும், மனக்கண்முன் கொணர்ந்தும் நமது உள்ளங்களுக்கு அமைதியையும், திருப்தியையும் வழங்கலாம்...

சாவடியும் நல்ல வெண்மையான கூரை, கண்ணாடிகள், பல்வேறுவித விளக்குகள் இவைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது... அதை அடைந்ததும் தாத்யா முன்னால் சென்று ஒரு ஆசனத்தை விரித்து ஒரு திண்டை வைத்துவிட்டு பாபாவை அங்கு அமரச்செய்து நல்ல கோட்டையும் அணிவிக்கிறார்.. பின்னர் அடியவர்கள் அவரைப் பல்வேறு விதங்களில் வழிபடுகின்றனர்... இறகுகளுடன் கூடிய கிரீடத்தை அவருக்குச் சூட்டுகின்றார்கள்...அவர் கழுத்தைச் சுற்றி பூமாலைகளையும், சந்தன  மாலைகளையும்  அணிவித்து,, நறுமணம் கமழும் நேர்கோடுகளையும், ஒரு புள்ளியையும் (வைணவ அடியார்களைப் போன்று) இட்டு பக்தர்கள்  பாபாவை  உள்ளம் நிறைவடையும் வண்ணம் நீண்டநேரம் கூர்ந்து பார்க்கின்றார்கள்.தலைப்பாகையை அடிக்கடி மாற்றுகின்றனர்... தூக்கியெறிந்து விடுவாரென்று பயந்து அவர் தலையிலிருந்து எடுத்து மேலே சிறிது தூக்கிப் பிடிக்கிறார்கள்... பக்தர்களின் உள்ளத்தில் இருக்கின்ற ஆவல்கள் அனைத்தும் பாபா அறிகின்றார்.

அடக்கமாகவும்,அமைதியாகவும் தடைச் செய்யாமலும் அவர்கள் விருப்பங்கள் அனைத்தையும்  நிறைவேற்றிக் கொள்ள  பாபா சாதுவாகக் கீழ்ப்படிகின்றார்.  இவ்வலங்காரங்களுடன் அவர் வியக்கத்தக்க அழகுடன் திகழ்கிறார். நானா சாஹேப் நிமோண்கர் கம்பைச் சுற்றிச் செய்யப்பட்டுள்ள அழகான குஞ்சரங்களுடன் கூடிய குடையை மேலே பிடிக்கிறார்... பாபு சாஹேப் ஜோக் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் பாபாவின் பாதங்களைக் கழுவுகிறார்..  அர்க்கியமும், பூஜையும் உரிய சம்பிரதாயங்களுடன் செய்துவிட்டு அவர் கைகளில் சந்தனம் பூசி, தாம்பூலம் அளிக்கிறார்... பாபா தமது ஆசனத்தில் அமரும்போது தாத்யாவும், மற்றவர்களும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்... அவர் பாதங்களில் வீழ்ந்து பணிகின்றார்கள்... பாபா வசதியாக திண்டின்மேல் சாய்ந்து அமர்ந்துக் கொண்டிருக்கும்போது இருமருங்கும் உள்ள அடியவர்கள் சாமரமும், விசிறியும் வீசுகின்றார்கள்..

பின்னர் ஷாமா சில்லிம் (புகைபிடிக்கும் மண்குழாய்)  தயார்செய்து, அதை தாத்யா பாடீலின் கையில் கொடுக்க, அவர் அதைத் தமது சுவாசத்தால் ஒருமுறை உறிஞ்சிய பின்னர் பாபாவிடம் கொடுக்கிறார்..பாபா புகைத்த பின்னர் அது பகத் மகல்சாபதியிடம் கொடுக்கப்பட்டு பின்னர் சுற்றி எல்லோரிடமும் வழங்கப்படும்.. ஜடமான சில்லிம் புனிதமாக்கப்பட்டது..அது பலவித தண்டனைகளுக்கும், துயரங்களுக்கும் ஆட்படவேண்டியிருக்கிறது... குயவர்களால் மிதியுண்டும், வெயிலில் காய வைக்கப்பட்டும், நெருப்பில் சுடப்பட்டும் இருப்பினும், பாபாவின் கைகளில் படுவதற்கும், அவரின் முத்தத்தைப் பெறுவதற்கும் அது நல்லதிர்ஷ்டம் பெற்றிருக்கிறது சில்லிம் ..இதன் பின்னர் விழா முடிவடைந்து பூமாலையை பாபாவின் கழுத்தில் அடியவர்கள் அணிவிக்கின்றார்கள்... பூச்செண்டும் அளிக்கின்றார்கள்....

எதிலும் சாட்சியாக பற்றில்லாமல் இருக்கும் சாய்நாதர்,  எந்த வஸ்துவின் மீதும்  அவாவின்மையும், பற்றின்மையின்  அவதாரமாகிய சாயீநாதர்,  அட்டிகை, அணிமணிகள், பூமாலைகள் மற்றும்பல அலங்காரங்கள் இவைகளைப் பற்றியெல்லாம்  சிறிதளவும் கவலைப்படுவதில்லை.. சாட்சியாக அமர்ந்து அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்... ஆனால் தம் அடியவர்களிடம் உள்ள உண்மையான அன்பின் காரணமாக, அவரவர்கள் தாங்கள் விரும்பிய  வழிகளைக் கையாண்டு மகிழ்வடைய அனுமதித்தார்... முடிவாக இன்னிசைக் கருவிகள் தங்கள் புனித ராகங்களை ஒலித்துக் கொண்டிருக்க பாபா சாஹேப் ஜோக் எல்லா சம்பிரதாயங்களுடனும் ஆரத்திக்  காண்பிக்கிறார்.  இந்த ஆரத்தி முடிவுற்றதும் அடியவர்கள் ஒவ்வொருவராக வணங்கி விடைபெற்றுக் கொண்டு வீடுகளுக்குத் திரும்புகின்றார்கள்.

தாத்யா பாடீல் பாபாவிற்குச்  சில்லிம், பன்னீர், அத்தர்,  சென்ட் இவைகளை அளித்துவிட்டுப் புறப்படுவதற்காக எழும்போது,  பாபா அவரிடம் அன்புத் ததும்ப "என்னைப் பார்த்துக்கொள்...  வேண்டுமானால் போ...  இரவில் சில சமயங்கள் வந்து என்னை விசாரித்துக்கொள்".. என்று கூறுகிறார்...சரியென விடையளித்துக் கொண்டு தாத்யாபாடீல் சாவடியை விட்டு வீட்டுக்குச் செல்கிறார்...பின்னர் பாபா தாமே படுக்கையைத் தயாரித்துக் கொள்கிறார்... ஒன்றின்மேல் ஒன்றாக ஐம்பது, அறுபது வெள்ளைத் துண்டுகளை விரித்துப் படுக்கையைத் தயார் செய்துக் கொண்டு இளைப்பாறச் செல்கிறார்.  பக்தர்கள் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன் சாயீபாபாவின் உபதேச மொழிகளையும், அவரது சாவடி ஊர்வலத்தையும்  நினைவு கூரும்படியான வேண்டுகோளுடன் இந்த அத்தியாயத்தை முடித்து அனைவரும் இளைப்பாறுவோமாக..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக.. அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக