ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
இதயவெளி தோன்றி இருளையழி ஞான
உதயரவி ஆன்மா ஒளிரும் – நிதமுமே
எல்லாவற்றும் பரவி எல்லாமும் தாங்கி நின்(று)
றெல்லாம் ஒளிர்விக்கும் எண்..!
அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்.
நமது ஊனக்கண்ணைப் பொருத்தவரை நாம் காண்பனவற்றுள் சூரியன் ஒன்றே தானே ஒளிர்வதாகவும், அதிலும் மிகப் பிரகாசமானதாகவும் இருப்பதால் தான் ஆன்மாவிற்கு அதை ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நமது உண்மை நிலையைப் பற்றி குரு மூலமோ, வேறு வழிகளிலோ அறிந்த ஒருவன் அதை உணர்ந்துக் கொள்ள, சாதாரணமாக வெளியுலகை நோக்கியுள்ள தனது பார்வையை உள்முகமாகத் திருப்பி, தியானம் செய்து அதனால் இடைவிடாது இருக்கும் உள்ளொளியை அனுபவத்தில் உணர்வதே ஆன்ம போதம் எனப்படுகிறது.
சூரியன் உதித்ததும் வேறு எந்த முயற்சியும் இல்லாது இருள் தானே அகலுவது போல ஆன்மாவைப் பற்றிய ஞானம் பிறந்ததும் நம் உண்மை நிலை பற்றி நமக்கு முன்பு இருந்த அறியாமையும் தானே விலகுகிறது. ஆனால் சூரியனோ காலத்திற்குக் கட்டுப்பட்டு காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதுமாக இருக்க, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஆன்மாவைப் பற்றிய போதமோ எப்போது உதிக்கிறதோ அதன்பின் அதற்கு அழிவோ, மறைவோ இல்லாது எப்போதும் நின்று நிலைத்து நிற்கிறது. எப்படி சூரியனின் ஒளியில் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோமோ, அதே போல ஆன்மா தரும் ஒளியினாலேயே நமது அனுபவங்கள் எல்லாமே நிகழ்கின்றன. ஆன்மாவின் தன்மைகளே உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன...ஆனால் அதை அறியாத போது நாம் அவைகள் எல்லாம் அந்தந்தப் பொருட்களின் தன்மைகள் என்று தவறாக எண்ணுகிறோம். அந்த அறியாமையைப் போக்குவதே ஆன்ம போதம்.
அதனால் ஆன்மாவே தனது ஒளியால் அனைத்துப் பொருட்களையும் காட்டுவதோடு அல்லாமல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் அமைகிறது. அது இல்லாமல் அனுபவிப்பவன் இல்லை என்பதாலும், அனுபவிப்பவன் இல்லாமல் அனுபவிக்கப்படும் எதுவும் இல்லை என்பதாலும் அதுவே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக