ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
"என்பாலே சித்தம் இருத்தி எப்போதும் உள்
அன்பாலே பத்தி செயும் அன்பருக்கு என்னை அவர்...
சார்வார் எதனால் அச் சற்புத்தி யோகத்தை
ஈவேன் நான் என்னருளால் எண்"......
பொருள்... வெளி விஷயங்களை விட்டு, என்னிடத்திலேயே மனதை திடமாக நிறுத்தி, சதா சர்வ காலமும் மனப்பூர்வமாக என்னிடம் உள்ளமுருகிய பக்தியுடன் ஈடுபடும் பக்தர்களுக்கு, எந்த யோகத்தினாலே என்னை அவர்கள் அடையக் கூடுமோ, அந்த நல்ல மேன்மையான புத்தி யோகத்தை நான் என்னருளினால் அவர்களுக்குக் கொடுத்திடுவேன் என்று அறிந்து கொள்....
“எல்லோரும் ஆத்மா என்றால், அனைவருக்குமே பகவானின் தரிசனம் கிட்டி அனைவருமே மோக்ஷம் அடைய வேண்டும் அல்லவா?” என்று எவருக்குமே கேட்கத் தோன்றும். உண்மை அதுதான் என்றாலும் அந்த உறுதியான இறுதி நிலையை அடைய ஒவ்வொருவரும் அதற்கு வேண்டியபடி தங்களை தயார் செய்துகொண்டு அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எப்போதும் உள்ள ஆன்மா ஏதோ காரணத்தால் தன்னை அளவில் குறுக்கிக்கொண்டு பரமாத்மாவாக இல்லாது ஒரு உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் ஜீவாத்மாவாக ஆகி, தான் செய்யும் செயல்களால் மேலும் பேதங்களைக் கற்பித்துக் கொண்டதால், அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதும் அதனுடைய பொறுப்பு என்றே ஆகிறது.
தனது உண்மை நிலை பற்றி தனக்கு வெளியில் இருந்து ஒருவன் அறிய வந்தாலும், அந்த ஞானமானது அறிவார்த்தமாக இருந்து மேலும் அதைப் பற்றி யோசிக்க வைக்குமே அல்லாது தனது அனுபவமாக மாறுவதற்கு அந்த அகங்கார நிலை உடனே இடம் கொடுக்காது. அதற்குத்தான் பகவான் கிருஷ்ணர் சொல்கிறபடி அவரிடம் சித்தம் வைப்பது மட்டும் அல்லாது, அவரிடம் உள்ளன்பும் வேண்டும். அப்படி இல்லையேல் அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது. அந்த அகங்காரம் ஒருவனைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கும் ஆண்டவன் அருள் வேண்டும். முதலில் அது பற்றி வெளியில் இருந்து தெரிய வரும், அப்புறம் சாதகன் மென்மேலும் இடைவிடாது முயற்சி செய்யும் போது, இறைவனுடன் கலக்கும் வழிகள் அவரவர்களுக்கு ஏற்றபடி அவ்வப்போது தெரியவரும். அதுதான் யோகத்தின் பல படிகள்
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக