புதன், அக்டோபர் 11, 2023

சரணாகதி தத்துவம் என்பது என்ன..



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

இறையாற்றலை நம்மினுள் உருவேற்றிக் கொள்ள  எவ்வாறு இறைவனுடன் பிணைந்துக் கொள்வது என்பதைப் பற்றியும், சரணாகதி தத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் விளக்கம் இங்கே...🙏

இறைவனை ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, நண்பனாகவோ நினைக்க முயல வேண்டாம். உங்களை ஒரு குழந்தையாகவே கருதுங்கள். குழந்தை ஏதும் செய்யாமல், தன்னைத் தூக்கிக் கொள்பவரின் பாதுகாப்பில் தன்னை விட்டுவிடுவதைப் போல, நீங்களும் கடவுளின் வசம் முழுச் சரணாகதியடைந்து விடுங்கள்...

ஒருதாயிடம் எவ்வாறு ஆத்மார்த்தமாக அன்புடன் இணைந்து கலந்து இருப்பீர்களோ அவ்வாறாக எந்த எதிர்ப்பார்ப்பின்றி இறைவனை உருவேற்றுங்கள் உங்களுள்...இறைவனும் உங்களுக்கு ஏற்றாற்ப்போல்  உங்களுள் பிணைந்துக் கொள்வான்....தீராக்காதலுடன் காத்திருந்து நெடுநாள் பிறகு சந்திக்கின்ற காதலன் காதலி போல் இறைவன் மீது ஏக்கம் மற்றும்  தாகத்துடன்  இறையன்பிற்காக காத்திருக்க வேண்டும்....கணவனுக்காக காத்திருக்கும புதுமணத்தம்பதிகளின் மனைவி போல் நெருக்கம் இருக்க வேண்டும்... உள்ளத்தில் அமர வைக்க கனிவுடன் ஏக்கத்துடன் தேட வேண்டும்...ஏதோ ஒன்றை எதிர்பார்த்து சரணாகதி, நம்பிக்கை வைக்காமல் ஏதும் எதிர்பாராது சரணாகதி அடைய வேண்டும்....இதுவே சம்பூரண சரணாகதி....

இறையுடன் கலந்து, கரைந்து, பிணைந்து, உருகி, திளைந்து, உணர்ந்து, தெளிந்து, அனுபூதி அடைய வேண்டும்.....எதற்கும் நம்பிக்கை பொறுமை, நேர்மை, சகிப்புத்தன்மை இவை நான்கும் இருந்தால் வைராக்கியம் தானாக உட்புகும் உங்களினுள்...இறைவனை அவனின் ஸ்பரிசத்தை உணர நீங்கள் ஏதும் பிரயத்தனம் படத்தேவையில்லை...இயல்பு மாறாது வெள்ளேந்தியான மனதுடன் இணக்கமாக, மனதை வெறுமையாக, பஞ்சு பொதியாக, இளகுவாக, இயற்கையை ரசிப்பது போன்றும், ஒரு பூவை முகர்வது போல் உங்களை வைத்திருங்கள்....இது போதும்....இணக்கம், இயல்பு, எதார்த்தம், இயற்கை, கருணை,கனிவு, குழந்தைத்தனம,  பாமரத்தன்மையுடன் கூடிய வெகுளிகளாக அதே சமயத்தில் உயர்ந்த எண்ணங்களுடன் வாழக்கூடியவர்களாக , இறைவனை ஆராயாமல், அவனின் ஆற்றலை உணர முற்பட வேண்டும்...கோரிக்கைகளை வைத்துக்கொண்டு நீங்கள் இறைவனை வணங்க முற்படும் போது அங்கே இறைவனின் இயல் பேராற்றலிலுள்ள தன்மையையும், ஸ்பரிசத்தையும்  உணர முடியாது....

ஆகவே இறைவனின் முழுமையை உணர வேண்டுமெனில், முதலில் நீங்கள் நீங்களாக இயல்பில், இணக்கத்தில், இயற்கையுடன் சேர்ந்து வாழ்பவராக இருத்தல் அவசியம்...மனதை வெறுமையாக வைத்து அவன் அன்பிற்காக ஏங்குங்கள்....கலக்க முயற்சி செய்யுங்கள்...மனம் திறந்து தந்தை தாயிடம், தோழனிடம், காதலியிடம் பேசுவது போன்று எதனையும்  மறைக்காது பேசுங்கள்....மன்னிப்பைக் கேளுங்கள்....இதுவரை இறையாளன் வழங்கிய அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்...இறைவனை வாழ்த்துங்கள்...இறையாளனை வாழ்த்தும் போது அது  அனைத்து உயிர்களையும் சேர்த்து வாழ்த்துவது போலாகின்றது...ஏனென்றால் ஏகமாகி... அநேகமாகி..ஏகமாக படர்ந்து அண்டசராசரத்தில்  அனைத்துயிரிலும் அனைத்துமாக அவனின் ஆற்றலே இயக்கியும் இயங்கியும் அருவமாகவும் உருவமாகவும் அனைத்துமாகவும் இருக்கின்றான்...ஆகவே இறைவனை அவனின் உயர்த்தன்மையை உருகி உணர்ந்து வாழ்த்துங்கள்... இறைவனுக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பையும் அன்பையும் உரிமையும் அளித்து விட்டு பிறகு சண்டையிடலாம்... கேட்கலாம்...உங்களுக்கு வேண்டியதை கேட்கலாம்...ஆனால் முதலில் அஸ்திவாரமாகிய  ஆத்மார்த்தமான அன்புடன் கூடிய சத்திய பிணைப்பு அவசியம்.... இப்பிணைப்பு இருந்தால் இறையிடம் மல்லுக்கட்டலாம்...ஆனால் எதிர்பார்ப்பில்லா ஆத்மார்த்தமான அன்பை வழங்கிய பிறகு நீங்கள் அவனிடம் வாதாடலாம்...இங்கே சரணாகதியும் நம்பிக்கையும் அன்பும் காதலும் அவசியம்...இதனை உணர்ந்துக்கொண்டால் ஆ...வான இறையும் வசப்படுவான உங்களுக்குள்...முயற்சித்துப் பாருங்கள்...இது ஒவ்வொரு உயிர்களுக்கான தனிவழி....அது இறைவழி..இவ்வழியில் பொதுவான இறைப்  பாதையைக்  காண்பிக்கலாம்..ஆனால் அவ்வழிமுறைகளைக் கடைப்பிடித்து உணர்ந்து அதில் கிடைக்கும் பலாபலன் அவரவர்களுக்குரியது...ஆகவே இறைவழிப் பயணத்தில் ஒப்பீடு தேவையில்லை....

இங்கே ஒவ்வொருவரும் உங்களுக்குள் இறையாற்றலை  எவ்வாறு  உணர்கின்றீர்களோ அதுவே உங்களுக்கானது...நூறுவருடம்  இறைவனை வழிப்பட்டவர்களுக்கு கிடைக்காத பலன் ஒரு நாள் இறைநாமத்தை உச்சரித்தவனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது..அவரவர்களின் சுயதர்மத்தின் படி வாழ்கின்ற வாழ்க்கையில்,  அவரவர்கள் வழிபட்டதால் அவரவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளும் அவரவர்களின் ஏற்புத்திறனைச் சார்ந்தது...ஆக உண்மை,  சத்தியம், நேர்மை, ஒழுக்கம், அன்பு, கருணை, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது அறவழியில் நடந்தால்  இறைவனை அடைவது சுலபம்....ஆகவே முடிந்தளவு இறைக் கோட்பாடுகளை உட்புகுத்திக் கொண்டு அதனை செயலாக்கத்திற்கு கொண்டு வருவது அவசியம்...இதனை உணர்ந்து சிந்தித்து வாழ்வில் கடைப்பிடித்தால்  சந்திக்கலாம் மெய்ஞானத்தை....

திருச்சிற்றம்பலம்...தில்லையம்பலம்...🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

இருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறேங்கோ தேடினால் எப்படி கிடைக்கும் ...?!!!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

இருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறேங்கோ தேடினால் எப்படி கிடைக்கும் ...?!!!

சீட்டுக் கம்பெனி நடத்தும் ஒருவன் ஒர் ஊருக்கு சென்று அங்கிருப்பவர்களிடம் அந்த மாதத்திற்குரிய சீட்டுத் தொகையை வசூலித்துவிட்டு திருப்பும் வழியில் இருட்டிவிட அங்கிருந்த சத்திரம் ஒன்றில் தங்கினான். அச்சத்திரத்தில் ஒர் திருடன் இவனிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்டு இவன் உறங்கியதும் அபகரிக்க திட்டமிட்டான், சீட்டு பணம் வசூலித்தவனுக்கு அந்த நபரைப் பார்த்து சந்தேகம் வர என்ன செய்வது. எப்படி பணத்தை பாதுகாப்பது என நினைத்தான்..சிறிது நேரத்தில் அசதியில் அயர்ந்தான். காலையில் கண் விழித்தபோது திருடன் இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். என்ன பார்க்கிறாய்..? என கேட்க அதற்கு, 'நீ பணம் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நீ அசந்து தூங்கும்போது உன் சட்டைப்பையில், வேஷ்டியில், நீ கொண்டுவந்த பையில் எங்கும் காணவில்லை. பணம் கைக்கு கிடைக்க வில்லை. அதை நீ எப்படி எங்கு ஒளித்து வைத்தாய்' என்ற நினைவில் நான் அதிசயத்துக் கொண்டிருக்கின்றேன் என்றான்...பணம் வசூலித்து வந்தவன் அது பத்திரமாக உன் தலையனைக்கு கீழ் இருக்கிறது என்றும் இரவு எனக்கு பாதுகாப்பாக இருந்ததிற்கு நன்றி எனக் கூறிப் பணத்தை எடுத்துச் சென்றான்.

நீ தேடுவது உன்னிடமே இருக்கின்றது, அறியாமல், புரியாமல் தேடிக் கொண்டிருக்கின்றாய் மனமே..! இதனை சற்று சிந்தியுஙகள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

தேனுக்குள் இன்பம் கறுப்போ..! சிவப்போ..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

இறைவன் எங்கே இருக்கின்றான்..யாரும் பார்த்ததுண்டா என்ற கேள்விக்கான விழிப்புணர்வு விளக்கம்...🙏🙏

சிவமில்லாது உடல் சவமே...அடியவர் ஒருவர் அரசமரத்தடியில் தியானத்தில் இருந்தார். அப்பக்கம் வந்த ஒரு படித்த இளைஞன் பெரியவரே ஏன் உட்கார்ந்து கொண்டு தூங்குகின்றீர். அரசமரத்து காற்று தான் நன்கு வீசுகின்றதே நன்றாக நீட்டி படுத்து உறங்கலாம் அல்லவா என்றான். தம்பி நான் உறங்கவில்லை. கடவுளை தியானித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். கடவுளை நீர் பார்த்திருக்கின்றீரா, கையால் தீண்டியிருக்கின்றீரா, அவர் குரலைக் காதால் கேட்டுள்ளீரா இப்படி எதற்கும் இல்லை என்று சொல்லும் அறிவற்ற மூட நம்பிக்கை உள்ளவரே...! இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துக் கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே என்றான்..கறுப்பா..! சிவப்பா...

அப்போது அவன் கையில் ஒரு பாட்டில் இருக்கக் கண்டவர் தம்பி உன் கையில் இருப்பது என்ன என்றார்..! தேன் என்றான். அது இனிக்குமா..! கசக்குமா என்றார். கோபங்கொண்ட அவன் உமக்கு தேன் தித்திக்கும் என்பது கூட தெரியாதா என்றான்....தம்பி அது இருக்கட்டும் நீ தித்திக்கும் எனக் கூறியது கறுப்பா சிவப்பா என்றார்..அவன் திகைத்தான்...தித்திப்பு என்பதை என்ன நிறமென்று சொல்வது. குழம்பினான்...தேனின் இனிமையை கண்டவனுக்குத் தெரியாது...அதை உண்டவனுக்குத் தான் தெரியும் என்றான்...

பௌதிகப் பொருளான தேனின் இனிமையை உண்டவனுக்குத்தான் தெரியும் என்று புரிந்த நீ ஞானப் பொருளை அனுபவத்தால் தான் உணரமுடியும் என்பதை நீ புரிந்துக் கொள்ள வில்லையே என்று அன்புடன் கூறினார். 

இதையே திருமூலர்,..

தேனுக்குள் இன்பம் கறுப்போ..! சிவப்போ..!

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்..!

தேனுக்குள் இன்பம் செறிந்திருத்தாற்போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே..! என்றார்...

இதைக் கேட்ட இளைஞன் எனக்கு பசிக்கின்றது சாப்பிட்டுவிட்டு வந்து உங்களுடன் பேசுகின்றேன் என்றான்...பெரியவர் தம்பி பசி என்று சொன்னாயே அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா..! காதால் கேட்டிருக்கின்றாயா..! அல்லது அதைத் தொட்டுத்தான் உணர்ந்திருக்கின்றாயா..! இப்படி ஏதுமில்லை என்றபோது நீ பசி பசி என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய் என்று ஏன் சொல்லக் கூடாது. இப்போது புரிகின்றதா தம்பி. பசி என்பது ஓர் அனுபவப் பொருள் அதை உணரத்தான் முடியும். அதுபோன்றே இறையையும் அவரது செயலையும் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றார். அடியேன் தவம் செய்து அதை அந்த அநுபவப் பொருளை உணர முயல்கின்றேன் என்றார்.

சிவம் இல்லையேல் சவம்..!

இளைஞனுக்கு பெரியவர் கூறுவதில் ஏதோ இருப்பதாக நினைத்தான் ஆனால் அதன் உண்மை புரியவில்லை. ஐயா, என்னைப் பொருத்தவரையில் நீங்கள் சொல்லும் கடவுளைக் கண்ணால் கண்டால்தான் ஒப்புக் கொள்வேன் என்றான். அப்போது அடியவர் தம்பி, 64 அடி நீளமுள்ள இரு பக்க சுவரில் பக்கத்திற்கு நான்கு ஜன்னல்கள். அதன் மேல் கூரை வேய்ந்தால் அதனைக் கூடமென்றோ அல்லது உபயோகத்திற்கு ஏற்றவாறு பெயர் பெரும். அப்படி மேற்கூரை இல்லாமலிருந்தால் அது குட்டிச் சுவர் எனப்படும். 64 அடி நீளமுள்ள ஓர் இடம் சிறுமை பெற்று குட்டிச் சுவர் என பழியடைந்தது. இதனால் அந்த இடத்திற்கு சுவர்களால் பெறுமை இல்லை. மேலே வேயப்பட்ட கூரையினால்தான் பெறுமை என்பது புரிகின்றதா என்றார்,

சிவம் என்றால் பெருமை அடையும் சொல்.. இச்சொல் சிவத்திலுள்ள சி-ன் கொம்பு எழுத்தை அழித்துவிட்டுப் பார்த்தால் சவம் என்றாகும். ஒரு கோடே இங்கே பெருமையாகின்றது... அக்கோடில்லாமல் அச்சொல் சவமாகி சிறுமை அடைகின்றது. உயிர்களின் உடம்பில் சிவம் இருந்தால் அது உடல் ஆன்மா எல்லாம். அஃதில்லையெனில் அது உயிரற்ற ஆன்மா இல்லாத சவம்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏