செவ்வாய், ஜனவரி 30, 2024

மாயம்மா யார்..?


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

மாயம்மா யார்..? 

அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா எனும் ஆலயத்தில் இருந்து தேவி காமாக்கியா எனும் பராசக்தியாக வெளிவந்தார் என்பதாக பரவலான நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர் மக்களிடையே பிரபலமடைந்து  வெளித் தெரிய ஆரம்பித்தது  கன்யாகுமரி மாவட்டத்தில்தான். மாயம்மா எப்பொழுது அஸ்ஸாமில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார் என்ற விவரமோ,  இல்லை அவர் எப்படி இங்கு வந்தார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. அவருடைய பெற்றோர்கள் குறித்த  தகவலும் எவருக்கும் கிடைக்கவில்லை. இன்னொரு செய்தியின்படி, மாயம்மா அவர்கள் முன் பிறவியில் பெரிய சித்தராக இருந்து திபெத், நேபாளம்  மற்றும் காசி போன்ற இடங்களில் பல காலம் தவம் இருந்தப் பின் 1920 ஆம் ஆண்டு வாக்கில் கடைசி பிறப்பு எடுத்து கன்னியாகுமரிக்கு வந்து தவத்தில் இருந்தார் என்பதாக கூறப்படுகின்றது....

முதலில் அவர் சித்தர் என்பதோ அல்லது தெய்வீக அன்னை என்பதாகவோ யாருக்கும் தெரியாமல்தான் இருந்துள்ளது. பிச்சைக்காரி போல அழுக்கான, கிழிந்து இருந்த ஆடைகளுடன், அருவருப்பான வெளித்  தோற்றத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் கடற்கரையில் அவர் உலவுவதை கவனித்து இருக்கின்றார்கள். அவருடன் எப்போதுமே பல நாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  கடற்கரையில் காலை, மாலை, இரவு என எந்நேரமும் படுத்துக் கிடப்பாராம். தாகம் பசி என எதுவுமே கிடையாதாம். யாராவது உணவு கொடுத்தால் உண்பாராம், இல்லை எனில் நாள்  கணக்கில் பட்டினியாகவே இருப்பாராம்.  தங்க வீடும் இருந்ததில்லை. எங்கு இருப்பாரோ அங்கேயே உறங்குவாராம்.  யாராவது உணவு கொடுத்தால் தேவை எனில் அதை பெற்றுக் கொண்டு உணவு  அருந்துவாராம். அப்படி உணவு அருந்தும்போது அவர் கூடவே என்றும் சுற்றிக் கொண்டு இருக்கும் நாய்களுக்கு  தனது உணவில் இருந்து சிறிது போடுவாராம். உணவு கிடைக்கவில்லை என்றால் சாப்பிடாமலேயே பல நாட்கள் பட்டினியாகவே இருப்பாராம். அதனால் அவர் சோர்வு அடைந்ததும்  இல்லை. எந்த சித்தர்களை சுற்றி நாய்கள் திரிந்து கொண்டே இருக்குமோ அவர்கள் கால பைரவரின் அவதாரங்கள், இல்லை என்றால் கால பைரவரின் சக்திகளை முழுமையாக கொண்டு  இருந்தவர்கள் என்பார்கள்....

பல நேரங்களில் அவர் கடற்கரையின் ஓரத்தில் உள்ள கடல் பாறைகள் மீது அமர்ந்த கொண்டு இருப்பதையும், கடலுக்குள் மூழ்கி கடல் பாசிகளையும், குப்பைகளையும் வெளியில் எடுத்து வந்து அவற்றை கடற்கரையில்  கொட்டி தீ மூட்டி விடுவதையும் மக்கள் பார்த்து உள்ளார்கள். எப்படி அவரால் வெறும் கையினால் தீ மூட்ட முடிந்தது என்பதோ  எதற்காக தீ மூட்டினார் என்பதோ யாருக்கும் புரியாமல் இருந்துள்ளது. ஆனால் சித்தர்கள் தாம் எங்கெங்கு தவத்தில் இருப்பார்களோ அங்கெல்லாம் தீ மூட்டி ஹோமம் வளர்த்து தவத்தில் இருந்துள்ளார்கள், எங்கெங்கு தவம் இருப்பார்களோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது உண்டு என்பதினால் ஒருவேளை அன்னை மாயம்மா கன்யாகுமரி கடற்கரையில் ஹோமம் வளர்த்து பாறைகள் மீது தவத்தில் இருந்திருக்கலாம் என்பதாகவே நினைக்கத்   தோன்றுகின்றது.  அதற்கான உண்மையான காரணம் தெய்வீக அன்னை மாயம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.....

ஒரு தெய்வம் என்பது அருவருப்பான, அகோர தோற்றத்தில் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்க முடியுமா? அதற்கும் ஒரு பின்னணி  கதையைக் கூறுகின்றார்கள். காமாக்யா ஆலயத்தில் இருந்து வெளிவந்த மாயம்மா முதலில் அழகிய தோற்றம் கொண்டவராக இருந்தாராம். ஆனால் கன்னியாகுமரியின் சில இடங்களில் பெண் பித்தர்கள் அனாதைபோல  சுற்றிக் கொண்டு இருந்த அவளிடம் தவறாக நடக்க முனைந்தபோது அவர் தன்னுடைய தோற்றத்தை ஒரே நாளிலேயே அகோரமாக மாற்றிக் கொண்டாராம். அதனால்தான் அவர் பிச்சைக்காரியைப் போன்ற தோற்றத்தில் காட்சி அளித்து வந்தாராம். தனது உருவத்தை இப்படி எல்லாம்  நினைத்தபடி மாற்றிக் கொள்ள முடியுமா என யாரும் நினைக்கலாம்.  அது முற்றிலும் முடியும் என்பதே  பதில் ஆகும். தத்தாத்திரேயர் சரித்திரத்தைப் படிப்பவர்கள் அவர் வேண்டும் என்றே பிச்சைக்காரரைப் போன்ற தோற்றத்தில் உலவி வந்ததையும், மொடாக் குடிகாரனைப் போல உருவை மாற்றிக் கொண்டு இறைச்சிகளை உண்டபடி இருந்து கொண்டு  காட்சி அளித்து வந்ததையும், ஆனாலும் அவரை முழுவதுமாக புரிந்து கொண்டு அதே கோலத்தில் சுற்றித் திரிந்தவரை தொடர்ந்து சென்று வணங்கி வந்த உண்மையான மக்களுக்கு தன்னுடைய தெய்வ அவதாரத்தைக்  காட்டி காட்சி அளித்து உள்ளதையும் அவர் சரித்திரத்தில் படித்து இருக்கலாம். அதே  போலவேதான் உண்மையான பராசக்தி மாயம்மாவும் முற்றிலும் அலங்கோலமான  காட்சியில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அவரிடம் சரணடைந்த, உண்மையான ஆன்மீக பக்தர்களுக்கு அவர் பராசக்தியாகவே தோற்றமும் தந்து உள்ளார் என்பதும் உண்மையே.  இன்னும் சிலர் அவரை கன்யாகுமரி அம்மன் என்றும், மஹாலக்ஷ்மியே அவர் என்றும் கூறி உள்ளார்கள். அந்த இரு தெய்வங்களும் அன்னை பராசக்தியின் தெய்வீகக் கதிர்களில் இருந்து வெளிவந்த அவதாரங்கள் என்பதினால் தேவி பராசக்தியும் அவர்களும் ஒருவரே ஆகும்...

மாயம்மாவின் தெய்வீக சக்தி வெளித் தெரிந்த கதை தனியானது. கன்யாகுமரி  கடற்கரையில் சுற்றிக் கொண்டு இருந்தவரை, அருவருப்பான கோலத்தில், கிழிந்த மற்றும் அழுக்கான துணிமணிகளை அணிந்து கொண்டு சுற்றித் தெரிந்த அவரை முதலில் ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரி என்றே அனைவரும் நினைத்து வந்தார்கள். அவள் யாராவது ஒருவர் அருகில் சென்றாலே அவர்கள் அவளை விட்டு விலகிச் செல்வார்களாம். அவர் ஒரு மாபெரும் சித்த புருஷினி என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் கன்னியாகுமரிக்கு  1920 ஆம் ஆண்டுவாக்கில் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படும் அந்த காலகட்டத்தில்தான் அவரை  முதலில் பெரும்பாலும் மீனவர்கள் பார்த்து இருக்கின்றார்கள், 1925 ஆம் ஆண்டு வாக்கில்தான் அவள் புகழும் கன்யாகுமரியில் பரவலாயிற்று என்று கூறுகின்றார்கள்.

ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஊர்தி ஒன்று தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு நாய் மீது வண்டியை ஏற்றிவிட்டு சென்று விட்டது. நாயின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்து சரிந்து விழுந்திருக்க, அதன் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், சாலையில் விழுந்து கிடந்த அந்த நாயை கண்ட மக்கள் முகம் சுளித்தார்கள். அதற்கு உதவி செய்ய அதன் அருகில் செல்லவே இல்லை. அப்போது அந்த பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்த மாயம்மா எந்த விதமான சலனத்தையும் வெளிக் காட்டாமல்  மெல்ல நடந்து சென்று இறந்து விட்டதை போல கிடந்த அந்த நாயை  எடுத்து தனது மடியிலே  வைத்துக் கொண்டு  அதன் குடலை அதன் வயிற்றுக்குள்  தள்ளிவிட்டு சாலையில் கிடந்த மெல்லிய குச்சிகளை கிழிந்த பகுதியை சேர்த்து தையல் போடுவது போல அதன்  உடலில் செருகி வைத்தாள். கையில் சிறு பிடி மணலை எடுத்து அதை தடவிக் கொடுக்கலானாள்.  அதைக் கண்ட மக்கள் அருவருப்பான நிலையில், குடல் வெளியே வந்து விழுந்திருந்த இறந்த நாயை மடியிலே வைத்துக் கொண்டு  தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறாளே பைத்தியக்காரி என அருவருப்பாக பார்த்துக் கொண்டே சென்றார்கள். எதையும் சட்டை செய்யாமல் மாயம்மா அதே சாலையின் ஓரத்தில் அந்த நாயை வைத்து விட்டுச் சென்றாள். இறந்து போக இருந்த நாயும் அங்கேயே கிடந்தது...

என்ன ஆச்சர்யம் மறு நாள் காலையில் இறந்து கிடந்த அந்த நாய் கண்களை திறந்து பார்த்தது,  காதுகளை அசைத்தது.  அதன் பின் அது எழுந்து ஓடலாயிற்று. அதைக் கண்ட மக்கள் அதிர்ந்து நின்றார்கள். குடல் வெளியில் வந்து சிதைந்து கிடந்த உடலில் காயம் பட்ட வடு கூட காணவில்லை. இதென்ன மாயம் ? குடல் சரிந்து  இறந்து கிடந்த அதே நாய் உயிர் பெற்று  ஓடுகின்றதே என்பதைக் கண்ட  மக்கள் அவள் எதோ தெய்வ சக்தி கொண்ட பெண்மணி என்பதாக புரிந்து கொண்டு  அவளை கனிவோடு  பார்த்தார்கள். மெல்ல மெல்ல அவள் யார் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்தார்கள், கன்யாகுமரி கடற்கரையிலே உலவி வந்திருந்த மாயம்மா  கடல் மீது நடந்து செல்வதைக் கண்டார்கள்.  தரை மீது நடப்பது போல கடல் மீதும் நடந்து  சென்று விட்டு கடல் நடுவே சற்று நேரம் இருந்துவிட்டு  திரும்புவதைக்  கண்ட மக்கள் நிச்சயம் அவள் தெய்வீக பெண்மணியே என்பதை உணரலானார்கள்.  அது முதல் கன்யாகுமரி மக்கள் மாயம்மாவை மரியாதையோடு நடத்தி நல்ல உணவும்   தந்தார்கள். தங்கி கொள்ள ஒரு இடமும் தந்தார்கள் என்றாலும் அவர் எங்கும் நிரந்தரமாக தங்கவில்லை.  கன்யாகுமரி கடற்கரை அருகில் உள்ள கடைவீதியில்  இருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் வெளி தாவாரத்தில்தான் அவர் இரவில் தங்கி இருப்பாராம். ஒரு விதத்தில் பார்த்தால் அந்த அன்னை கடல் நீரின் மீதே வாழ்ந்திருக்கின்றாள் என்பதாகவே கருதுகின்றார்கள்...

வீதியிலே நடந்துக் கொண்டே இருப்பவர் திடீர் என ஏதாவது உணவகத்திலோ அல்லது கடையிலோ சென்று உணவு கேட்டு எடுத்துக் கொள்வாராம். தன்னை கூப்பிட்டால் அந்த கடைக்கு அவர் செல்ல மாட்டாராம்.  தான் எந்த கடையை விரும்புவாரோ அந்தக் கடையில்தான் நுழைவாராம்....அன்று முதல் அவருக்கு உணவு தந்தவர்கள் கடையில்  அமோகமாக விற்பனை ஆகும். ஆகவே கடைக்காரர்கள்  தமது கடையில் அன்னை நுழைய மாட்டாரா என வேண்டிக் கொண்டு தவம் இருப்பார்களாம். தனக்கு கிடைக்கும் உணவில்  சிறிது கையில் எடுத்துக் கொண்டு திடீர் நாய்களுக்கு ஊட்டி விட்ட பின், அதே கையுடன் சுற்றி உள்ளாவார்களுக்கும் வாயில் ஊட்டி விடுவாராம். அதை அறுவறுப்பாக பார்த்த சிலர் விலகிச் சென்றார்கள் என்றாலும், அதை பெற்றுக் கொள்வதை பாக்கியமாகவே பல மக்கள் கருதினார்கள். ஆனால் தினமும் அதை மாயம்மா செய்தது  இல்லை. அவருக்கு என்று தோன்றுமோ அன்றைய தினத்தில் மட்டுமே அதை செய்வாராம்.....  

அது மட்டுமா? மீனவர்கள் அதிகம் வாழ்ந்த அந்த ஊர் மக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வார்கள். திடீர் திடீர் என கடலில் சீற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் கடலில் விழுந்து தத்தளிக்கும் அவர்களை வெளியே இழுத்து வந்து கரையில் சேர்ப்பாளாம்  மாயம்மா. பல மீனவர்ளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட அவையும் வெளியிலே தெரியத்  துவங்கியது.  கடலுக்குள் சுமார் 35 அல்லது 40கிலோமீட்டர் வரை உள்ளே சென்று மீன் பிடிக்க வந்திருக்கும் படகுகளின் நடுவே நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பாராம். அந்த நிலையில்  கொந்தளிக்கும் கடலில் நீந்திக் கொண்டு இருக்கும் அவளை பார்த்து பரிதவிக்கும் மீனவர்கள் தங்கள் படகில் ஏறிக்கொண்டு கரைக்கு வருமாறு அழைத்தாலும் மாயம்மா அதில் ஏறிக்  கொள்ள மாட்டாராம்.  மீன் பிடித்த பின் படகுகள் கரைக்கு திரும்பும்போது அவர்களுடன் நீந்தியபடியே கரைக்கு திரும்பும் மாயம்மா திடீர் என  நீருக்குள் சென்று மறைந்து விடுவாராம். அவளைக் காணாமல் மூழ்கி விட்டாரோ என பயந்தபடி, பரிதவித்துக் கொண்டு கரைக்கு திரும்பினால் மாயம்மா அங்கு கரையில் சிரித்தபடி அமர்ந்து இருப்பாராம்....

மெல்ல மெல்ல உள்ளூர் ஜனங்கள் அவளை பக்தியுடன் வணங்கினார்கள். ஆனால் அவளோ அவர்களுடன் ஒரு தோழமையோடுதான் பழகி இருந்திருக்கின்றார். பலரது தீராத வியாதிகளும் துயரங்களும் மாயம்மாவினால் விலகி உள்ளன. இத்தனைக்கும் மாயம்மா பேசியது இல்லை. ஒலி ஓசை போன்றவற்றை வாயினால் எழுப்பி அதன் மூலமே மாயம்மா தமது மாயங்களை வெளிக்காட்டி உள்ளார். மெல்ல மெல்ல மாயம்மா தெய்வமே என்பதை உணர்த்திய பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.  தமக்கு துன்பங்களும் துயரங்களும் ஏற்பட்டபோதெல்லாம் அவளிடம் சென்று அதைக் கூற அவர்களை வெறும் கையாலேயே ஆசீர்வதிப்பார் மாயம்மா. பலரது நியாயமான துன்பங்களும் துயரங்களும்  தீரலாயின...

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக