வெள்ளி, பிப்ரவரி 02, 2024

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்...!?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்

அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்

அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு

அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்....!!??

கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் ஜுவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்...

முதலில் சாதகனுக்குத் தன் உடலின் மேல் ஒரு அபிமானம் இருக்கும். அப்போது அவனுக்கு ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை அறிவு பூர்வமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பான். அதனால் அவன் தன் உடலுக்கு வரும் நன்மை, தீமைகள் எல்லாம் ஆன்மாவுக்கும் வருகிறது என்று தவறாக நினைக்கிறான். ஆன்மா எதுவும் செய்வதும் இல்லை, அந்தச் செயலால் வரும் விளைவுகளை அனுபவிப்பதும் இல்லை என்று அவனுக்குத் தெரியாததால் உடலையும் ஆன்மாவையும் பிணைத்து ஒன்றாகக் கருதுகின்றான். அதுதான் இங்கு கலங்கிய நீர் என்று கூறப்படுகிறது. இது அறியாமையால் வந்த விளைவு.

அறியாமையால் விளைந்தது என்றாலும், அறியாமை போகும் வரை அதைப் போக்க முயற்சிகள் தேவை. முயற்சிகள் சிரவண, மனன, நிதித்யாசன முறைகளில் செய்யப்படும். அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் என்பதாகும். குருவிடம் ஆன்மாவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிதல் முதல் படி என்றால், மற்ற இரண்டு படிகளையும் ஒருவன் தன் முயற்சியால் விடாப்பிடியாகத் தாண்டவேண்டும். எப்போதும் குருவின் அருள் சாதகனுக்கு உண்டு என்பதால், அவனுடைய தனிப்பட்ட முயற்சிகளின் போதும் அவரது அருள் இருக்கும். முன்னது தூல வடிவில் இருந்தால், பின்னவை இரண்டும் நுண்ணிய வடிவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமணர் சொல்கிறபடி புலியின் வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்ப முடியாதோ, அப்படியே குருவின் அருட்பார்வையில் வந்த சீடனும் முக்தி நிலையை அடையாது மீள முடியாது...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக