ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தியின் மகிமையை புரிந்து கொள்ள முடிகிறதா...?
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!
அங்கே சூரியன் ஒளிர்வதில்லை... சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை.. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்..? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன...ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை ரசித்தோம், பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம், வீடு திரும்பினோம் என்று நமது தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர நடக்கும் கிரியைகளின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால், “ஐயா, நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. நீ பார்ப்பதனால் அது அங்கு அப்படி இருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா..? உடல் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே இருந்தது உலகம்? அதனால் உன் உடல் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு உடல் உணர்வு வரும்போது, நீ வெறும் தூலமாகிய உடல்தானா..? அப்போது சூட்சமமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிசூட்சமமான நான் எனும் எண்ணமாகிய அகங்காரம் இவைகள் இல்லையா..? ஆக அவை இல்லாமல் உடல் எங்கே இருக்கிறது..? அப்போது அந்த நான் என்னும் அதிசூட்சமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா...? அந்த உணர்வே பிரம்மம், ‘அதுவே நீ’. நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது” என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்...? இந்த சத்-சித்-ஆனந்த மய உண்மையை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம-ரூபத்தில் அல்லவா மயங்கி நிற்கின்றோம்....
ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக