ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏
பிரமம் உலகில் பிறிதாகும் அந்தப்
பிரமத்தணுவில் பிறிதாய்ப் பிரமத்திற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் அது மித்தை
உன்னுக கானல் நீர் ஒத்து...!
அறியும் பிரம்மம் அறியப்படும் உலகத்திற்கு மாறான இயல்பு உடையது. பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு வேறெந்தப் பொருளும் இல்லை. பிரம்மத்திற்கு அன்னியமாக வேறெதுவும் தோன்றினால், அது உண்மையில் இல்லாததாயினும் காட்சிக்குத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்த் தோற்றம் ஆகும்...எங்கும் எப்போதும் இருப்பது பிரம்மம் என்றால், காணப்படும் உலகப் பொருட்களைக் கொண்டே பிரம்மத்தை அறியலாகாதா என்ற சந்தேகக் கேள்விக்குப் பதில் அளிப்பது போல இந்தச் செய்யுள் விளக்கம் கொடுக்கிறது.
அனைத்தும் பிரம்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரம்மத்தின் இயல்பும் வெவ்வேறானது....உலகம் நிலையற்றது; வரும், போகும் இயல்புடையது. அதனால்தான் நமது விழிப்பு நிலையில் காணப்படும் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் அறியப்படுவதில்லை. நமது கனவிலோ நாம் வேறோர் உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறோம். உலகின் நிலை இப்படி இருக்க, பிரம்மமோ எப்போதும் உள்ளது; நிலையானது. உலகம் ஓர் அறிவற்ற ஜடம்; பிரம்மமோ அறிவுமயமானது. உலகம் துன்ப மயமானது. பிரம்மமோ ஆனந்தமயமானது. அதனால் உலகம் பிரம்மம் அல்ல. நாம் முன்பு கண்ட அனலில் இட்ட ஓர் இரும்புக் குண்டு அனலின் தன்மையை எடுத்துக்கொள்வது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் பிரம்மம் வியாபித்து இருப்பதால், அவைகள் பிரம்மத்தின் தன்மைகளை எடுத்துக் கொள்கின்றன....இப்படியாக பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை என்பதால், பிரம்மத்தை விடுத்து உலகத்தின் உண்மையை அறியமுடியாது. அதனால் உலகில் உள்ளவைகளைக் கொண்டு பிரம்மத்தை அறியமுடியாது...
மேலும் பிரம்மத்திற்கு அன்னியமாக உலகம் இருப்பதாகத் தோன்றினால், அது இருப்பது போலத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்க் காட்சியே. உண்மையை அறியாதவனுக்கு இல்லாத கானல் நீர் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மையை அறிய முயற்சிப்பவனுக்கே அது மாயை என விளங்கும்...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻