ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
விதியும் மதியும் யாருக்கு...!?!?
" விதிமதி மூலம் விவேகம் இலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் விதிமதிகட்கு
ஓர் முதலாம் தன்னை உணர்ந்தர் அவை தணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்று..! "
பொருள் :... விதி மதிகள் என்னும் இரண்டுக்கும் ஆதாரமாயுள்ள அகங்காரத்தின் உண்மையை அறியாத அஞ்ஞானிகளுக்கு விதியை மதி வெல்லுமா, மதியை விதி வெல்லுமா என்ற வாத விவாதங்கள் தோன்றும். விதி மதிகளாகிய இரண்டுக்கும் ஒரே அடிப்படையான அகந்தையின் ஆதார உண்மையாகிய தனது ஞான சொரூபத்தை உணர்ந்தவர் அந்த விதி மதியென்ற இரண்டையும் ஒழித்தவராவர். அவர்கள் மீண்டும் விதி மதிகளாகிய அவற்றைச் சார்ந்து பாதிக்கப்படுவார்களோ..சொல்...!?
சாதாரணமாக விதி என்பதை ஈஸ்வர நியதி என்றும், மதி என்பது நமது முயற்சியால் ஆவது என்றும் சொல்வார்கள். சிலர் இரண்டுமே இறைவனின் சித்தப்படி நடக்கிறது என்று கொள்வர். மற்றவர்களோ மதி என்பதை நாம் நினைத்தபடி செய்வதால் அடைவது என்றும் அதற்குக் காரணம் நாமே என்றும் கொள்வர். ஆனால் தாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் சிலர் அது விதியின் சதி என்று அலுத்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் விதி-மதி என்ற இரண்டுமே காரணம்-விளைவு (cause and effect) என்ற நியதிக்குள் கொண்டு வரப்படுவது என்று தெரிகிறது. அதாவது நாம் தற்போது நினைத்துச் செய்வதால் விளைவது என்றும் முன்னர் செய்த வினையால் விளைவது என்றும் இவைகளுக்கு காரண கர்த்தாவாக நாமோ, இறைவனோ இருக்கிறோம் என்றும் கொள்ளப்படுகிறது.
கூர்ந்து கவனித்தால், விதி-மதி என்ற இரண்டுக்குமே மூலமாக நமது தேக-ஆத்ம பாவனையைத்தான் சொல்ல முடியும். ஏனென்றால் நாம் உடம்பு என்று கொள்ளும் போதுதான் நமக்கு ஆன்ம சிந்தனை வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போதுதான் மற்றவர்களை உள்ளடக்கிய உலகம் தெரிகிறது. அந்த நிலையில்தான் நமது முயற்சி, நமது செயல், அதன் விளைவுகள் என்றெல்லாம் தெரிகிறது. அங்குதான் விதியால் வந்தது, மதியால் விளைந்தது, விதி மதியை வெல்லுமா அல்லது மதி விதியை வசப்படுத்துகிறதா என்ற வாதங்களும் கிளைத்து எழுகின்றன.ஆக இவை அனைத்துக்கும் காரணமான “நான்” என்னும் அகந்தை என்ன என்று அதைத் தேடி அதன் மூலமான ஞான சொரூபத்தை உணர்ந்தவர்கள், விதி-மதி என்று ஏதும் தனியாக இல்லை என்றறிந்து அவை இரண்டையும் அழித்தவர்கள் ஆவர்...ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻