ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 16, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு....🙏🏼அத்தியாயம் நான்கு🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு..🙏🏼🙏🏼🙏🏼

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேத நூல் என்பது  ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்   சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித    வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

 மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்.. சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

           🔥அத்தியாயம்::நான்கு🔥

🙏🏼முன்னுரை....🙏🏼

எப்பொழுது சாய்பகவான் முதன் முதலில் சீரடிக்கு வருகைப் புரிந்தார் என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரை...

சீரடி பகவானுடைய வருகையால் சீரடி எவ்வாறு புண்ணியத் திருத்தலமாக மாறியது என்பதைப் பற்றிய விளக்கவுரை...

சீரடி பகவான் எத்தகைய உயர்ந்த  ஏகத்தன்மைகளையும் , குணங்களையும்  பெற்று தாய்மையுணர்வோடு பக்தர்களை  வழிநடத்தினார்  என்பதைப் பற்றிய விளக்கவுரை....

சீரடி பகவானின் தரிசன மகிமையும், பாபாவைத் தரிசனம் செய்வதால் அடையப்போகும் உயரியத் தன்மைகள் என்ன என்பதன் விளக்கம்....

கௌலிபுவாவின் அனுபவ விளக்கவுரை... மற்றும் பண்டரிபுர விட்டல் பிரசன்னமாதல் பற்றிய உரை....

பகவந்த்ராவ் ஹுர்சாகரின் அனுபவ உரை...

தாசகணுவின் பிரயாகைக் குளியல்  பற்றிய அனுபவ விளக்கவுரை.....

சீரடி பகவான் இயல் வாழ்க்கையின் மூல சூட்சமத்தைப் பற்றிய அறிமுக விளக்கவுரை...

வாதா என்ற புனித கட்டிடம் புகழ்பெறுவதற்கு காரணமாக இருந்த சிறப்புக்கள் என்ன என்பதன் விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்...

🔥முதலில் எப்பொழுது சீரடி சாய்பகவான் முதன் முதலில் சீரடிக்கு வருகைப் புரிந்தார் என்பதைப் பற்றி சூட்சம விளக்கவுரை இங்கு காண்போம்🔥

சாய்சரித்திரத்தின் நூலாசிரியர் ஹேமாட்பந்த்  கூறுகின்றார்...முந்தைய   அத்தியாயத்தில், சாய் சத்சரிதத்தை எழுதத் தூண்டிய சூழ்நிலைகளை விவரித்தேன்...இப்போது   சாய்பகவான் முதன் முதலில் எப்பொழுது  சீரடிக்கு  வருகைப் புரிந்தார்... மற்றும் பகவானுடைய வருகையால் சீரடி எவ்வாறு புண்ணியத் திருத்தலமாக மாறியது என்பதைப் பற்றிப் பார்ப்போம்...? கீதையில் கண்ணபிரான் கூறுகின்றார், (அத். 4 : ஸ்லோகம் 7, 8) "தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம்  என்னை நானே அவதரித்துக் கொள்கிறேன்.... நல்லோரைக் காத்துத் தீயோரை அழிக்க யுகந்தோறும் அவதரிக்கிறேன்...இதுவே பகவானின் அவதார நோக்கம்.. பகவானின் சார்பாக ரிஷிகளும், ஞானிகளும், இப்பூவுலகில் தக்கதருணத்தில் தோன்றி, அவதார நோக்கம் நிறைவேறுமுகமாகத் தமக்கே உரித்தான முறையில் உதவி செய்கின்றார்கள்.....

உதாரணமாக, இருமுறை பிறப்பவர், அதாவது பிராமணர்கள், ஷத்திரியர்கள்,  வைசியர்கள் தங்கள் கடமைகளைப் புறக்கணிக்கும்போதும், மேற்குலத்தவரின் உரிமைகளைத் தவறான முறையில் பறிக்கச் சூத்திரர்கள் முயலும் போதும்,  ஆன்மஞான போதகர்கள் மதிக்கப்படாமல் அவமதிக்கப்படும்போதும் தன்னைத் தான் (ஒவ்வொருவனும்) மெத்தப்படித்தவன் என்று எண்ணும்போதும், தடுக்கப்பட்ட ஆகாராதிகளையும், போதை தரும் குடிபொருளையும் மனித உயிர்கள்  உட்கொள்ளும்போதும், மதமென்னும் போர்வையில் தகாத காரியங்களைச் செய்யும்போதும், பல்வேறு இனத்து மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போதும், மறையவர் சந்தியாவந்தனம், மற்றும் தங்கள் மதப் பழக்கவழக்கங்களைச் செய்யத் தவறும்போதும், யோகிகள் தியானத்தைப் புறக்கணிக்கும் போதும், மனைவி மற்றும் மக்கட்செல்வமே தங்கள் கருத்துக்குரிய ஒன்றே ஒன்று என்று மக்கள் கருதத் தலைப்பட்டு முக்தி என்னும் உண்மை நெறியினின்று வழிதவறிப் போகும்போதும் ஞானிகள் தோன்றவே செய்கிறார்கள்....தங்கள் மொழி, செயல்வழிகளால் காரியங்களை நெறிப்படுத்துகிறார்கள்.....  

அவர்கள கலங்கரை விளக்கையொப்ப சேவை செய்து நமக்கு மெய்நெறியைக் காண்பிக்கிறார்கள்.  இவ்வாறாகப் பல ஞானிகள் நிவ்ருத்தி, ஞானதேவ், முக்தாபாய், நாமதேவ், கோரா, கொனாயி, ஏக்நாத், துகாராம், நரஹிரி, நர்சிபாயி, சஜன்கசாயி, சவதா, ராம்தாஸ், மற்றும் பலர் பற்பல காலங்களில் மக்களுக்கு மெய்நெறியைக் காண்பிக்கத் தோன்றவே செய்தனர்.  இவ்வகையில் இறுதியாக சீரடி சாயீபாபாவும்  வருகைப்  புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....

🔥பகவானுடைய வருகையால் சீரடி எவ்வாறு புண்ணியத் திருத்தலமாக மாறியது என்பதைப் பற்றிய விளக்கவுரை ...🔥

அஹமத்நகர் ஜில்லாவில் உள்ள கோதாவரி ஆற்றங்கரை மிகவும் சக்திப்  படைத்ததாகும்... ஏனெனில் அது அனேக ஞானிகளை ஈன்றும், அடைக்கலம் கொடுத்தும் இருக்கிறது... அவர்களுள் முக்கியமானவர் ஞானேஸ்வர்.. சீரடியும் அகமத்நகர் ஜில்லாவில் உள்ள கோபர்காவன் தாலுக்காவில்தான் இருக்கிறது...கோபர்க்காவனில் உள்ள கோதாவரி ஆற்றைக் கடந்தவுடன் நீங்கள் சீரடிக்குப் போகின்ற வழியை  அடைகிறீர்கள்.  ஒன்பது மைல்கள் சென்றதும் நீம்காவனை  அடைகிறீர்கள்....அவ்விடத்திருந்து பார்த்தால் சீரடி  தெரிகிறது....

கிருஷ்ணா ஆற்றங்கரையிலுள்ள கனகாபூர், நரசிம்ஹவாடி, ஓளதும்பர் போன்ற மற்ற புனித ஷேத்திரங்களைப் போன்று  சீரடியும் புண்ணிய  புகழ் பெற்ற புனிதத் தலமாயிற்று... தாமாஜி செழித்து விளங்கியதும், ஆசீர்வதித்ததுமான பண்டரீபுரத்திற்கு அருகில் உள்ள மக்களைப்  போன்றும், சமர்த்த ராம்தாஸ் சஜ்ஜன்கட்டில் விளங்கியதைப் போன்றும், சாயீநாதர்  சீரடியில் புகழ்ப்பெற்று விளங்கி ,அந்த மண்ணைப் புனிதபூமியாக  மாற்றினார்...சாய்பகவான் பாதம் பட்டதுமே சீரடி மண்ணும் புல்லும் கூட பேறுப்பெற்றத் தன்மையை அடைந்தன....சாயீ பாபாவினால் சீரடி முக்கியத்துவம் பெற்றது...

🔥சீரடி பகவான் எத்தகைய உயர்ந்த  ஏகத்தன்மைகளையும் , குணங்களையும்  பெற்று தாய்மையுணர்வோடு பக்தர்களை  வழிநடத்தினார்  என்பதைக்  காண்போம்🔥

கடப்பதற்க்கு மிகவும் கடினமாக இவ்வாழ்வை பகவான்  வென்றார்.  சாந்தியும்  அல்லது மனஅமைதியுமே  அவரின் அணிகலன்... விவேகத்தின் பெட்டகம்...அன்பின் உறைவிடம்.. சத்தியத்தின் பிறப்பிடம்...சகிப்புத் தன்மையின் பிறப்பிடம், பொருமையின் பிறப்பிடமாக திகழ்ந்தார்.. இவ்வாறாக பகவான் அனைத்திற்கு மேலாக உயர்ந்த நிலையில் சாட்சி நாதராக தன்னை உருமாற்றிக் கொண்டு பற்றில்லாமல் வாழ்ந்தார்... அவர் வைணவ அடியார்களின் தாயகமாவார்.... வள்ளல்களுக்கு  எல்லாம் தலைசிறந்த வள்ளலாக விளங்கினார்.. அவர் மனித உயிர்களிடையே இருக்கின்ற  பேதத்தை  நீக்கி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்...அவருக்கு அழியும் பொருட்கள் மீது ஆசை இல்லை... அவருடைய ஒரே ஈடுபாடான ஆன்ம உணர்விலேயே  லயித்து  தனக்குள் அனைத்தையும் கண்டார்.. தனக்குள்ளே அவர் மூழ்கி அண்ட சராசரத்தையும்  ஆட்சி செய்தார்....  இவ்வுலகப் பொருட்களிலோ அல்லது இவ்வுலகத்தைக் கடந்தவற்றிலோ பகவான்  மகிழ்ச்சி அடையவில்லை...அவரின் அந்தரங்கம் (உள்ளம்) ஒரு கண்ணாடி போன்று தூய்மையானது...அவரின்  உபதேச மொழிகள் எப்போதும் அமுதத்தைப் போன்று அகமகிழ்வையும்  பேரானந்தத்தையும் அளித்தது...பணக்காரர், ஏழை  யாவரும் பகவானுக்கு  ஒன்றே...  புகழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை அவர் அறிந்திருக்கவில்லை அல்லது மதிக்கவில்லை....

பகவானின்  பேராற்றல் அனைத்து  உயிர்களிலும்  நீக்கமற வியாப்பித்து இருக்கின்ற  பரமாத்மா ஜோதி..பகவான்  எளிமையாக அனைவரிடமும் பேசி  பழகினார்... நடிப்பையே தொழிலாகக்கொண்ட குமரிகளின் நடிப்பையும், நாட்டியத்தையும் கண்டார்.  கஜல் (தெம்மாங்கு) பாடல்களையும் கேட்டார்.  ஆயினும்  பகவான் தன்னை எதிலும் இணைத்துக் கொள்ளாமல் பற்றற்று தன்மையில் சாட்சியாக  அனைத்து நிகழ்வுகளையும்   இசைவுடன ஏற்றுக் கொண்டார்....அல்லாஹ் மாலிக்  என்ற நாமம்  நாவில் எப்போதும் இருந்தது...இவ்வுலகம் விழித்திருக்கும்போது அவர் தூங்கினார்....  இவ்வுலகம் தூங்கும்போது பகவான் தூங்காமல் தூங்குகின்ற அறிதுயிலில்  சுறுசுறுப்பாய் இருந்தார்...ஆழ்ந்த உற்று நோக்கியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டு , ஒன்றும் அறியாதவராக  பேர் அமைதியாய் பகவான் அமர்ந்திருந்தார்...அவரது இருப்பிடம் தீர்மானிக்க இயலாததாய் இருந்தது...அவர் ஓரிடத்தில் வாழ்ந்தார் எனினும் இவ்வுலகின் நடவடிக்கைகள் அனைத்தையும் பகவான்  அறிவார்..  அவரின் தர்பார் கவர்ச்சிகரமானது...

தினந்தோறும் நூற்றுக்கணக்கான உயரியக்  கதைகளைக் கூற  திருவாய் மலர்ந்தார்.... ஆனாலும் மௌன விரதத்திலிருந்து இம்மியளவும் பிறழவில்லை.. மசூதியில் உள்ள சுவரின்மீது எப்போதும் சாய்ந்துக் கொண்டிருந்தார்...அல்லது காலை, மதியம், மாலை, இவ்வேளைகளில் லெண்டி (பூந்தோட்டம்), சாவடி (சயன அறை) ஆகியவற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தார்.  எப்போதும் ஆன்ம உணர்வில் கரைந்து சாட்சியாக  இருந்தார்...சித்தராயினும் சாதகரைப் போன்று பாவித்துக் கொண்டார்...  அவர் எளிமையாகவும், தாழ்மையாகவும், அகங்காரமற்றும் இருந்து எல்லோரையும் மகிழ்வித்தார்....இவ்வாறாக பல்வேறான உயரியத் தன்மைகளைப் பெற்று  வாழ்ந்தார் நமது சாயீபாபா...சீரடி மண் சாயீபாபாவின் திருவடிகளால் புண்ணியத்  தலமாக  அசாதாரண முக்கியத்துவம் பெற்றது.  

சீரடியில் உள்ள புற்களும், அரும்புகளும், கற்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைகள்....  ஏனெனில், அவைகள் எளிதாக சாயீயின் திருவடிகளை முத்தமிட முடியும்...திருவடித் தூளிகளை தமது தலையில் ஏற்றிக்கொள்ள முடியும்...நமது அடியவர்களுக்கு சீரடி மற்றுமொரு பண்டாரீபுரம், ஜகந்நாதம், த்வாரகை, காசி, ராமேஸ்வரம், பத்ரிநாத், கேதாரம், நாசிக், த்ரயம்பகேஸ்வரம், உஜ்ஜயினி, மகாகாளேஸ்வர் அல்லது மஹாபலேஸ்வர கோகர்ணம் போன்று உயர்ந்த தன்மையாகியது சீரடி....சீரடியில் சாயீபாபாவுடன் தொடர்புக் கொள்வதே நமது வேதமும், தந்திரமும் ஆகும்....இது  இவ்வுலக உணர்வைத் தணித்து, தன்னுணர்வை எளிதில் வழங்குகிறது...நம்மை நாமே உயர்ந்த நிலையை அடையச்செய்ய கூடிய உயர்ந்த சுய விழிப்புணர்வு நமக்குள் தோன்றுகிறது.... 

🔥சீரடி பகவானின் தரிசன மகிமையும், பாபாவைத் தரிசனம் செய்வதால் அடையப் போகும் உயரியத் தன்மைகள் என்ன என்பதன் விளக்கத்தைப் பற்றி இங்கே காண்போம்....🔥

சாயீபாபாவின் தரிசனமே நமது யோகசாதனம்... அவருடன் பேசுவது நமது பாவங்களைக் கழித்துறச்  செய்யும்....அவரின் திருவடிகளுக்கு நறுமண எண்ணெய் தேய்ப்பதே நமது திருவேணிப் பிரயாகை நீராடல்...அவரின் திருவடித் தீர்த்தத்தை அருந்துவதனால் நமது ஆசைகள் அற்றுவிடும்.. அவரின் ஆணையே வேதம்... அவர் உதியையும் (திருநீற்றுச்சாம்பல்), பிரசாதத்தையும் உண்ணலே எல்லாவற்றையும் தூய்மையாக்கும்...  நமக்கு ஆறுதல் அளித்த அவரே நமது கிருஷ்ணர், ராமர், அவரே நமது பரப்பிரம்மம் (பரிபூரணத்துவம்)...அவர் தாமே மாறுபட்ட இருவினைகளுக்கு அப்பாற்பட்டவராய்,  தாழ்த்தப்படாமலும், உயர்த்தப்படாமலும் இருந்தார்....எப்போதும் ஆன்மாவில் சத்து - சித்து - ஆனந்தமாகக் கவரப்பட்டார்...அதாவது சச்சிதானந்த மூர்த்தியாய்  விளங்கினார்... அவரின் இருப்பிடம் சீரடியானாலும், பகவானின் பேராற்றல் அண்ட சராசரத்திலும்  வியாப்பித்து இருந்தது. எல்லைகளால் பகவானை வரையறுக்க முடியாது....அனைத்தும் கடந்தவர்..

இவ்வாறாகத் திக்கெட்டும்  சாயீயின் புகழ் பரவி எல்லாப் பகுதிகளிலிருந்தும் அடியவர் திருக்கூட்டம் அவரின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காக வந்தது....  அவருடைய தரிசனம் ஒன்றினாலேயே மக்களின் மனம் சுத்தமாக இருப்பினும், இல்லாவிட்டாலும் கணத்தில் அமைதியடையும்.  பண்டரீபுர விட்டல் ரகுமாயீயை சேவித்த அதே ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அவர்கள் பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது...

🔥கௌலிபுவாவின் அனுபவ விளக்கவுரை... மற்றும் பண்டரிபுர விட்டல் பிரசன்னமாதல் பற்றிய உரை..🔥

ஏறக்குறைய தொண்ணூற்றைந்து வயதுடைய கௌலிபுவா என்னும் ஒரு பக்தர், பண்டரீபுரத்துக்கு வருடந்தோறும் சென்று வருபவர்...  அவர் பண்டரீபுரத்தில் எட்டு மாதங்கள் தங்கினார்... கங்கைக்கரையில் ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை வரை நான்கு மாதங்கள் தங்கினார்...  மூட்டைகளைச் சுமப்பதற்காக ஒரு கழுதையைத் தன்னுடனும், ஒரு சீடனைத் துணைவனாகவும் வைத்திருந்தார்...ஒவ்வோர் ஆண்டும் தனது பண்டரீபுர விஜயத்தைச் செய்துவிட்டு, சீரடிக்கு தான் மிகவும் அன்பு செலுத்திய சாயீபாபாவை தரிசிக்க  வருவார்...அவர் பாபாவை உற்றுநோக்கி இவ்வாறாகக் கூறுவது வழக்கம்.. "இவரே ஏழைகளிடத்தும், தீனர்களிடத்தும் கருணை காட்டும் கடவுளான பண்டரிநாத விட்டலின் அவதாரமாவார்...கௌலிபுவா, விட்டலின்  அடியவர்..பண்டரிக்கு அநேகமுறை விஜயம் செய்தார்...சாயீபாபா பண்டரிநாதரே என்பதைப் பிரகடனம் செய்தார்....

இறைவனது நாமத்தை நினைத்துக் கொண்டிருத்தலிலும், பாடுதலிலும் சாயீபாபா மிகவும் விருப்பமுள்ளவர்...அவர் எப்போதும் 'அல்லாஹ் மாலிக்' (இறைவனே எஜமான்) என்றார்...தனது முன்னிலையில் மற்றவர்களை கடவுளின்  நாமத்தை இரவும், பகலும் தொடர்ந்து ஏழு நாட்கள் பாடும்படி செய்தார்...இதற்கு நாம சப்தாஹம் என்று பெயர்....ஒருமுறை அவர் தாசகணு மஹராஜை நாம சப்தாகம் செய்யும்படி கோரினார் ...ஏழாவது நாளின் முடிவில் விட்டல் பிரசன்னமாவதற்கு உறுதியளித்தால் தான் சப்தாகம் செய்வதாக அவர் கூறினார்.. அதற்கு பாபா தமது நெஞ்சின்மேல் கைவைத்து நிச்சயம் விட்டல் பிரசன்னம்  ஆவார் என்று உறுதியளித்து... "ஆனால் அந்த பக்தன் ஊக்கமுடையவனாகவும், பக்தியுடையவனாகவும் இருக்கவேண்டும்" என்று கூறினார்.. டாகூர்நாத்தின் டங்கபுரி (தகூர்), விட்டலின் பண்டரி, ரஞ்சோடின் (கிருஷ்ணனின்) துவாரகை எல்லாம் இங்கே (சீரடியில்) இருக்கின்றன.  துவாரகையைப் பார்க்க எவரும் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை....இவ்வாறாக அன்பாலும், பக்தியாலும் பக்தன் பொங்கிக் கொண்டிருக்கும் போதுதான் விட்டல் தாமே இங்கு (சீரடியில்) பிரசன்னமாவார்...

சப்தாகம்  பூர்த்தியானதும் விட்டல் கீழ்கண்ட விதமாகப் பிரசன்னமாகவே செய்தார்....  வழக்கம் போல குளித்து முடித்தபின் காகா சாஹேப் தீஷித் தியானத்தில் அமர்ந்திருந்தார்...  அவர் ஒரு காட்சியில் விட்டலைக் கண்டார்...  மத்தியானம் பாபாவின் தரிசனத்துக்காகச் சென்றபோது பாபா ஐயமற அவரை நோக்கி, "விட்டல் பாடீல் வந்தாரா..?  நீர் அவரைக் கண்டீரா..?  அவர் விளையாட்டுப் பிள்ளை போன்றவர்....அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்...இல்லாவிடில் நீர் சிறிதே கவனக் குறைவாக இருப்பினும் தப்பித்துவிடுவார்", எனக் கூறினார்...இது காலையில் நிகழ்ந்தது.  மத்தியானம் மற்றுமொரு விட்டல் தரிசனம்....  வெளியிலிருந்து ஒரு ஹக்கர் (பொருட்களை கையில் எடுத்துச்சென்று வீதியில் விற்பவர்) 25 அல்லது 30 விட்டோபா படங்களை விற்றுக் கொண்டு வந்தான்...அப்படம் காகா சாஹேபின் காட்சியில் தோன்றிய உருவத்துடன் ஒத்து இருந்தது..?  இதைக் கண்டும், பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்ததும், காகா சாஹேப் தீஷித் ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியுற்றார்...ஒரு படத்தை வாங்கி தனது பூஜை அறையில் வழிபாட்டுக்காக வைத்தார்.

🔥பகவந்த்ராவ் ஹுர்சாகரின் அனுபவ உரையைப் பற்றி இங்கு பார்ப்போம்....🔥

பகவந்த்ராவ் ஹுர்சாகரின் கதை.., பாபா விட்டல் வழிபாட்டில் எவ்வளவு ஆர்வமுள்ளவராக இருந்தார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  பகவந்த்ராவின் தந்தையார் விட்டோபாவின் உருவம் பக்தர்.  பண்டரீபுரத்த்துக்கு வருடாந்திரப் பயணம் செய்யும் பழக்கமுடையவர்.  தமது வீட்டிலும் விட்டோபாவின் உருவம் வைத்து அவர் வழிபட்டார்.  அவர் இறந்தபின் அவரது மகன் வருடாந்திரப் பயணம், வழிபாடு, சிரார்த்தம் முதலியவை அனைத்தையும் நிறுத்திவிட்டார்.  பகவந்த்ராவ்  சீரடிக்கு வந்தபோது, பாபா அவரது தந்தையை நினைவு கூர்ந்து கூறியதாவது, "அவரது தந்தை எனது சிநேகிதன்.  எனவே நான் அவரை இங்கு இழுத்தேன்.  அவர் நைவேத்யம் படைக்காது விட்டலையும், என்னையும் பட்டினி போட்டார்.  எனவே அவரை நான் இங்கு கொணர்ந்தேன்.  அவருடன் வாதாடி வழிபாடு செய்ய வைப்பேன்" என்று  கூறுகின்றார்..

🔥தாசகணுவின் பிரயாகைக் குளியல்  பற்றிய அனுபவ  விளக்கத்தைப் பற்றி இங்கே காண்போம்...🔥

கங்கையும், யமுனையும் சந்திக்கும் இடங்களிலுள்ள பிரயாகை என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது மிகவும் பாக்கியமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்...ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் குறிப்பிட்ட காலங்களில் புண்ணிய ஸ்நானத்திற்காக அவ்விடம் செல்கிறார்கள்.  ஒருமுறை தாசகணு, தான் ஸ்நானம் செய்வதற்காக பிரயாகை போகவேண்டுமென்று நினைத்தார்... பாபாவிடம் அங்ஙனமே செய்வதற்கு அனுமதி வேண்டிவந்தார்... பாபா அவருக்கு கூறிய பதில், "அவ்வளவு தூரம் போகவேண்டிய அவசியமில்லை...

நமது பிரயாகை இங்கேயே இருக்கிறது.  என்னை நம்பு" என்றார்.  அப்போது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்..!  தாஸ்கணு தனது தலையை பாபாவின் அடிகளில் வைத்ததும் கங்கை, யமுனை ஆறுகளின் புனிதநீர் பாபாவின் இரண்டு காற்கட்டை விரல்களிலிருந்து சீராக வெளிப்பட்டது.....  இவ்வாச்சரியத்தைக் கண்ணுற்ற தாசகணு, அன்பும்  ஆழ்ந்த மரியாதைக் கலந்த  உணர்ச்சியால் பெரிதும் கவரப்பட்டார்.  அவர் கண்கள் நீரால் நிறைந்தன.  அந்தரங்கத்தில் அவர் உணர்ச்சியால் உந்தப்பட்டார்.  அவருடைய பேச்சு, பாபாவின் புகழையும் அவரின் லீலைகளையும் குறிப்பிடும் கவிதையாகப் பொங்கி வெளிப்பட்டது...  

🔥சீரடி பகவான் இயல் வாழ்க்கையின் மூல சூட்சமத்தைப் பற்றிய அறிமுக விளக்கவுரை🔥

சாயீபாபாவின் பெற்றோர், பிறந்த இடம் இவற்றைப்பற்றி ஒருவருக்கும் தெரியாது...  பல விசாரணைகள் செய்யப்பட்டன...பாபாவிடமும், மற்றவர்களிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன..ஆனால் திருப்தியான பதிலோ செய்திகளோ கிடைக்கவில்லை.  வழக்கத்தில் இவைகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது...சாதாரண மனிதர்களையொப்ப நாமதேவர், கபீர் முதலியோர் பிறக்கவில்லை.. .அவர்கள் சிசுக்களாக, முத்துக்களின் தாயினிடத்தில் (ஆற்றில்) காணப்பட்டார்கள்.  நாமதேவ், கோணாயியால் பிம்ராதி ஆற்றிலும் - கபீல், தமால் என்பவரால் பாகீரதி ஆற்றிலும் கண்டெடுக்கப்பட்டார்கள்....சாயீபாபாவின் விஷயமும் அதையொத்ததாகும்.  பக்தர்களுக்காக ஒரு வேப்பமரத்தடியில் 16 வயது இளையனாகத் தாமே முதலில் தோன்றினார்.  அப்போதே பிரம்மஞானத்தால் நிரம்பியவராகக் காணப்பட்டார்.  கனவிலும் இவ்வுலகப் பொருட்களின் ஆசை அவர்க்கு இல்லை.  மாயையை அவர் உதைத்துத் தள்ளினார்.  முக்தி அவர்தம் காலடியில் பணி செய்தது.. சீரடியைச் சேர்ந்தவரும் நாநாசோப்தாரின் தாயாருமாகிய ஒரு பாட்டி அவரைக் கீழ்கண்டவிதமாக வர்ணிக்கிறார்.

அழகும், சுறுசுறுப்பும், மிகுந்த சுந்தரமும் உடைய இவ்விளைஞன் முதலில் வேப்பமரத்தின் அடியில் ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு காணப்பட்டான்.  அக்கிராமத்து மக்கள், இத்தகைய இளம் வயது உடையவன் வெப்பத்தையோ, குளிரையோ பொருட்படுத்தாது...அத்தகைய கடினப் பயிற்சி பழகுவதைக் கண்ணுற்று ஆச்சரியத்தால் தாக்கப்பட்டனர்...பகலில் ஒருவருடனும் பழகுவதில்லை..இரவில் ஒருவருக்கும் அஞ்சுவதில்லை...இவ்விளைஞன் எங்கிருந்து வந்தான் என்று மக்கள் ஆச்சர்யப்பட்டுக் கேட்டுக்கொண்டனர்....ஒரு  சாதாரண கவனிப்பதன் மூலமாகவே  அவன்மீது எல்லோரும் அன்பு கொள்ளும் அளவிற்க்கு அவனுடைய உருவாம்சங்களெல்லாம் அத்தகைய சுந்தரம் பொருந்தியதாக இருந்தது... அவன் ஒருவர் வீட்டிற்கும் செல்வதில்லை.  எப்போதும் வேப்பமரத்தடியே உட்கார்ந்திருந்தான்..வெளித்தோற்றத்திற்கு இளைஞனாகக் காணப்பட்டான்...ஆயினும் அவன் செய்கைகள் உண்மையிலேயே அவன் ஒரு பரமாத்மா என்பதை வெளியிட்டன....அவன் வேண்டுதல், வேண்டாமையின் பருப்பொருளாகவும் அனைவருக்கும் ஓர் மர்மமாகவும் இருந்தான்...ஒருநாள் கண்டோபா கடவுள் ஒரு அடியவனிடம் "சாமி" பிடித்தது.  ஜனங்கள் அவரை, "தெய்வமே இவ்விளைஞனின் தந்தை யார்...?  அவன் எப்போது வந்தான் என்பதை நீர் தயவுசெய்து விசாரியும்" எனக் கேட்கத் துவங்கினர்....

கண்டோபா அவர்களை ஒரு மண்வெட்டி கொணரச் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்டச் சொன்னார்....அங்ஙனமே தோண்டப்பட்டபோது செங்கற்கள் காணப்பட்டன...அதற்கடியில் சமதளகல் ஒன்றும் இருந்தது... இந்தக்கல் அப்புறப்படுத்தப்பட்டதும் ஒரு நிலக்கதவு தெரிந்தது...அதில் நான்கு சம (ஐந்துமுக விளக்குகள்) எரிந்துக் கொண்டிருந்தன....அது ஒரு நிலவறைக்கு அழைத்துச் சென்றது.  அதில் ஜபமாலைகள், அவற்றை வைத்து ஜபம் செய்யும் பசுமுக உருவப் பைகள், மரப்பலகைகள் முதலியவை காணப்பட்டன...கண்டோபா கடவுள் கூறியதாவது, "இவ்விளைஞன் இங்கு பன்னிரெண்டு ஆண்டுகளாகப் பயிற்சி செய்தான்..பிறகு ஜனங்கள் அவ்விளைஞனிடம் இதைப்பற்றிக் கேட்கத் துவங்கினர்..அவன் அவர்களை திசைதிருப்பி, அது தன்னுடைய குருவின் இடம் (குருஸ்தான்) என்றும், அவருடைய புனிதமான 'வாதன்' என்றும் அதை நன்றாகப் பாதுகாக்கும் படியும் வேண்டிக் கொண்டான்....ஜனங்கள் அப்போது கதவை முன்பிருந்தபடியே மூடிவிட்டனர்...அரசமரமும், அத்திமரமும் புனிதமாய் இருப்பதுபோல் பாபா வேப்பமரத்தையும்,  அதே அளவில் புனிதமாகக் கருதி, அதையே பெரிதும் விரும்பினார்... மகல்சாபதியும் மற்ற அடியவர்களும், இவ்விடத்தைப்  பாபாவின் குருநாதர் சமாதியடைந்த இடமாகக் கருதி சாஷ்டாங்க சரணம் செய்தனர்...

🔥வாதா என்ற புனித கட்டிடம் புகழ்பெறுவதற்கு காரணமாக இருந்த சிறப்புக்கள் என்ன என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்.....🔥

வேப்பமரம் இருக்குமிடமும், அதைச் சுற்றியுள்ள இடமும் ஹரிவிநாயக் சாதே அவர்களால் வாங்கப்பட்டு சாதேயின் வாதா என்ற பெயரில் ஒரு பெரிய கட்டிடம் எழுப்பப்பட்டது. அங்கு திரண்ட புனித யாத்ரீகர்களுக்கு அது ஒன்றே தங்கும் இடமாய் இருந்தது... தங்கும் இடமும் படிக்கடுகளுடன் அமைக்கப்பட்டது.  படிக்கட்டுகளின் அடியில் ஒரு இருப்பிடம் இருக்கிறது... பக்தர்கள் அம்மேடையில் வடக்கு நோக்கி அமர்கிறார்கள்....வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மாலைநேரங்களில் அங்கு வாசனைப் பொருட்களை எரிப்பவர்கள் கடவுள் கிருபையால் மகிழ்ச்சியுடன் இருப்பர்.  இந்த வாதா பழமையானது.  உதிர்ந்துகொட்டும் தன்மை உடையதாகவும், பழுதுபார்க்க வேண்டியதாகவும் இருந்தது...அதற்கு தேவையாயிருந்த பழுதுபார்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாறுபாடுகள் எல்லாம் சமஸ்தானத்தால் செய்யப்பட்டன...

சில ஆண்டுகளுக்குப்பின் தீஷித் என்ற பம்பாய் வக்கீல் இங்கிலாந்து சென்றிருந்தார்.. அங்கு நேரிட்ட ஒரு விபத்தில் தனது காலை முறித்துக்கொண்டார்.  இக்காயம் எந்த விதத்திலும் குணப்படும் வழியைக் காணவில்லை.... நானா சாஹேப் சாந்தோர்கர், சாயீபாபாவிடம் முயற்சிக்கும்படி அறிவுறுத்தினார்.... எனவே 1909 ஆம் ஆண்டில் சாயீபாபாவைக் கண்டு தனது கால் ஊனத்தைவிட, தனது மன ஊனத்தைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்.... சாயீபாபாவின் தரிசனத்தால் மகிச்சியுற்று சீரடியிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.... எனவே தனக்காகவும், அடியவர்களுக்காகவும் ஒரு வாதாவை எழுப்பினார்.  10.02.1910   அன்று அக்கட்டிடத்திற்கு அஸ்திவாரம் இடப்பட்டது...

(I)  தாதா சாஹேப் கபர்டே தனது வீடு திரும்புவதத்க் அனுமதி அளிக்கப்பட்டார்.

(II) சாவடியில் இரவு ஆரத்தி தொடங்கியது.  இந்த வாதா கட்டி முடிக்கப்பட்டு 1911- ஆம் ஆண்டில்  ராமநவமி தினத்தில் உரிய மரியாதைகளுடனும், சம்பிதாயங்களுடனும் பிரவேசம் செய்யப்பட்டது.

நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற லட்சாதிபதியான பூட்டி அவர்களால் மற்றொரு வாதா அல்லது அரண்மனை மாளிகையும் எழுப்பப்பட்டது....  ஏராளமாக பணம் இக்கட்டிடத்திற்கு செலவிடப்பட்டது.. ஏனெனில், சாயீபாபாவின் உடல் இவ்விடத்தில்தான் அடக்கும் செய்யப்பட்டு இருக்கிறது... இது தற்போது சமாதி கோவில் (சமாதிமந்திர்) என வழங்கப்படுகிறது.  இவ்விடத்தில் பாபா தண்ணீர்விட்டு கவனித்து வந்த ஓர் பூந்தோட்டம் இருந்தது.  முன்னர் ஒன்றுமே  இல்லாத இடத்தில் மூன்று வாதாக்கள் எழும்பின.  இவை எல்லாவற்றிலும் ஆரம்பகாலத்தில் அனைவருக்கும் சாதேவின் வாதாவே நிரம்பப் பயன்பட்டது....  

வாமன் தாத்யாவின் உதவியுடன் சாயீபாபா கவனித்த தோட்டத்தைப் பற்றிய குறிப்புப் பற்றியும்...

சாயீபாபா சீரடியில் தற்காலிகமாக இல்லாதிருந்து, மீண்டும்  சாந்த்பாடீலின் கல்யாண ஊர்வலத்துடன் மீண்டும் வருகைப் புரிந்ததைப் பற்றியும் .... 

தேவிதாஸ், ஜானகிதாஸ், கங்காகீர் இவர்களின் பழக்கம்....மொஹிதின் தம்போலியுடன் பாபாவின் மல்யுத்தப் போட்டிப் பற்றியும்.... 

மசூதியின் இருப்பிடம் பற்றியும், டேங்க்லே மற்ற அடியவர்களின் அன்பு,  மற்றும்  பிற விஷயங்களைப் பற்றி  அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக.... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும் .....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...