ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 22, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பத்து..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏼 அத்தியாயம்:: பத்து(10)🙏🏼

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது....

ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவான வழியாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்  சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....  

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்....அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....

🙏அத்தியாயம் ::பத்து 🙏

🙏முன்னுரை..🙏

சாயீபகவான் சாட்சியாக எதிலும் பற்றற்று இயல் வாழ்க்கையை, எவ்வாறு சீரடியில்  அமைத்துக்கொண்டார் என்பதன் விளக்கவுரை...

சீரடி பகவான் அறிதுயில் (உறங்குதல்) கொள்வதில் இருக்கின்ற மூல சூட்சமங்களைப் பற்றிய விளக்கவுரை...

சத்குருநாதர்  சீரடி பகவான் தன்னை தரிசிக்க வந்த பக்தர்களிடம், எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக்  கொண்டார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..

பாபாவின் சீரடி வாசமும், பிறந்த ஆண்டு பற்றி அனுமான கூற்றின் மூலமாக வெளிவந்த தகவலைப்  பற்றிய விளக்கவுரை....

சீரடி பகவான் அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இணைத்து, அனைத்து  பண்டிகைகளைக் பேதமில்லாமல் கொண்டாடி  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..

சீரடி பகவான்,  இயல்வாழ்க்கையில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பது பற்றியும்,  மேலும் தன்னை நாடி வந்த பக்தர்களை , எவ்வாறு உயர்ந்த நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரை...

சீரடி பகவான் எவ்வாறு தாய்மையுணர்வு,  எளிமை, பணிவு மற்றும் சகிப்புத் தன்மையுடன் தான் வாழ்ந்து,  பக்தர்களை விழிப்புணர்வுடன் உற்று நோக்கி  உயரிய நிலையை அடையச் செய்ததைப் பற்றி விளக்கம்....

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே பார்க்கலாம்...

🔥முதலில் சாயீபகவான் சாட்சியாக எதிலும் பற்றற்று இயல் வாழ்க்கையை, எவ்வாறு சீரடியில்  அமைத்துக்கொண்டார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

ஆத்மார்த்தமான, தூய்மையான, நிலைமாறாத அன்பால் பகவானைப் பூஜித்து, பிணைத்துக் கொண்டு  சரணாகதி அடைய வேண்டும்..... எப்போதும் பகவானை உள்ளத்தில் நிறுத்தி வழிபட வேண்டும்.. ஏனெனில் பகவான்  அனைவருக்கும் நன்மை செய்யும் விதமாக ,பக்தர்களின் உயரிய அன்பால்  கவரப்பட்டு, பக்தனின் ஆத்மாவிலேயே உறைந்து இருக்கின்றார்..

நாம்  வாழ்க்கையில் கடைத்தேற்றம் அடைய  பகவான் நாமத்தை உச்சரித்து, பாதகமலத்தில்   சரணாகதி அடைவது  மட்டுமே..சாதனைகளில்  இதுதான் மிகமிக எளியதும், சிறந்ததுமான சாதனையாகும்..ஏனெனில் அது எவ்விதச் செலவையும் உள்ளடக்காதது.  இந்த  ஒரு சிறு முயற்சி  மிகப்பெறிய உயரியத் தன்மையைக் கொணர்கிறது..நமது புலன்கள் எல்லாம் நல்ல முறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், இந்த சாதனையைப் பழகவேண்டும்.  மற்ற எல்லாத் தேவைகளும் வெற்றுத் தோற்றமே...குருவே ஒரே கடவுள்.  சத்குருவின் புனிதத் திருவடிகளில் நம்மை முழுவதும் ஒப்படைத்தோமேயானால்,பகவான் நம் அனைவரையும் சத்தியப் பாதையில் வழிநடத்த ஏதுவான  வழியாக அமையும்...பகவானுக்கு  சிறப்பாகச் சேவை செய்வோமேயானால், நாம் நமது சம்சார பற்றிலிருந்து  விடுபடுகிறோம்.. உயர்ந்த தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை...

சீரடி பகவானை  நாம் சத்குருவாக ஏற்றுக் கொண்டு, அனைத்தையும் பகவான் பாதகமலத்தில் ஒப்படைத்து விட்டால், நாம் அனைவருக்கும் இக, ஜெக வழிக் காட்டியாக இருந்து, நம்மை சத்தியப் பாதையை நோக்கி முன்னேற வைப்பார்...இதனால்  நமது அனைத்துத் துன்பங்கள், துயரங்கள்,  கவலைகள் சூழ்ந்துள்ள  வாழ்க்கைக்  கடலை எளிதாகக் கடந்து செல்லலாம்...ஆற்றையும், கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை நம்பியிருப்பதைப் போன்றே, இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில், நமது சத்குருவின்  மீது திடமான நம்பிக்கை  அவசியம் வைக்க வேண்டும்...நாம் வைக்கின்ற  நம்பிக்கையும், விசுவாசத்தைப் பொருத்தே   பகவான் நமக்காக செயல்படுகின்ற  வழியாக அமைகின்றது..

🔥சீரடி பகவான் அறி துயில் (உறங்குதல்) கொள்வதில் இருக்கின்ற மூல சூட்சமங்களைப் பற்றிய விளக்கவுரை...🔥

பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார் என்பதைக் காண்போம்...நான்கு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப் டேங்க்லே கொணர்ந்தார்...அதனைத் தரையில் போட்டு அதன்மீது உறங்குவதற்குப் பதிலாக, மசூதியின் உத்தரங்களில் இற்றுப்போன கந்தல் துணிகளால் அதை ஒரு ஊஞ்சல்போல் கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார்... எப்படி பாபாவின் உடலை அது தங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, தனியாக ஊஞ்சலை மட்டும்  தாங்குவதே  பிரச்சனையாகவுள்ள அளவுக்கு மெல்லியதாகவும், இற்றுப்போயும் அக்கந்தல் துணி இருந்தது... ஆனால் பாபாவின் லீலையால் மட்டுமே அக்கந்தல் துணி பாபாவின் கனத்துடனும், பலகையையும் தாங்கவே செய்தது... பலகையின் நான்கு மூலைகளிலும், மூலைக்கொரு மண்விளக்கு வீதம் ஏற்றி, இரவு முழுவதும் எரிந்துக் கொண்டிருக்கும்படியாக வைப்பார்...

இப்பலகையின் மீது  பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுக் கொண்டிருப்பதையோ கண்ணுறும் தரிசனமானது தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரியதொன்றாகும்...!  அதில் பாபா எங்ஙனம் ஏறி இறங்கினார் என்பது அனைவருக்கும் வியப்பை விளைவிப்பதாய் இருந்தது.  இதனை அறியும் ஆர்வத்துடன் பாபா ஏறுவதையும், இறங்குவதையும் காண்பதற்காகப் பல கவனமுள்ள பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தப் போதிலும் ஒருவரும் அதனைக் காண்பதில் வெற்றிப் பெறவில்லை...  இவ்விசித்திரமான அருஞ்செயலைக் காண்பதற்காக கூட்டம் அதிரிக்கவே, ஒருநாள் பாபா பலகையைத் துண்டுத் துண்டாக உடைத்து எறிந்துவிட்டார்... எட்டுவிதமான மகாசித்திகளும் (அஷ்டமா சித்திகள்) பாபாவின் ஆணையில் இருந்தன..அவர் அவைகளை ஒருபோதும் பயிற்சிக்கவோ அவைகளுக்காக ஏங்கவோ இல்லை...அவைகள் பாபாவின் முழுமையினால் தாமாகவே அவரை வந்தெய்தின.... 

🔥சத்குருநாதர்  சீரடி பகவான் தன்னை தரிசிக்க வந்த  பக்தர்களிடம் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..🔥

ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப் போல் பாபா தோற்றமளித்தாலும், அனைவரின் இதயத்திலும் அவர் வாழ்வார்.  அந்தரங்கமாக அவர் பந்தமற்றவராகவும், புறப்பார்வையால் நோக்கினால்  அக்கறையற்றவராக இருந்தாலும், ஆழ்நிலையில்  பொதுமக்களின் நலத்தை விரும்பினார்...அகத்திலே மிகவும் ஆர்வமற்றவராக இருப்பினும், புறத்தில் தமது பக்தர்களுக்காக ஆசைகள் நிரம்பப்பெற்றவராக இருந்தார்...உள்ளே சாந்தத்தின் இருப்பிடமாக அவர் இருப்பினும், வெளியில் இருப்புக் கொள்ளாதவராய் இருந்தார்..அந்தரங்கமாய் பரமானந்த நிலையை எய்தியவராய் அவர் இருந்தார்...பகிரங்கமாய்  கோப ஆவேசம் உடையவர்  போன்று நடந்துக்கொண்டார்.  அந்தரங்கமாய் அவர் அத்வைதத்தை விரும்பினார்...பகிரங்கமாய் உலகோடு கட்டுப்பட்டவராய் இருந்தார்... சில நேரங்களில் அனைவரையும் பாசம் ததும்ப நோக்கினார்.. சில சந்தர்ப்பங்களில் பக்தர்களின் மீது கற்களை விட்டெறிந்தார்...சிலசமயம் அவர்களைக் கடிந்துக்கொண்டார்...சில சந்தர்ப்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார்... ஆனால்  அகத்தில் அமைதியாகவும், பதட்டமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், சமநிலையுள்ளவராகவும் இருந்தார்.. ஆத்மாவிலேயே உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன் லயமாக ஆனார்.. தமது பக்தர்களுக்காகச் செய்யவேண்டியவற்றை நன்கு செய்து முடித்தார்.  எப்போதும் அவர் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.  ஒருபோதும் பிரயாணம் செய்யவில்லை...

பகவான் தன் கரங்களில் தண்டம்  வைத்திருந்தார். (சந்நியாசிகள், துறவின் அடையாளமாகத் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய நீளமான மூங்கில் கோல்) .. சாந்தமாகவும், எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருந்தார்..செல்வத்தையும், புகழையும் அவர் இலட்சியம் செய்யாது, பிக்ஷை எடுத்தே வாழ்ந்தார்... இத்தகைய வாழ்க்கையையே அவர் விரும்பி  நடத்தினார்... 'அல்லா மாலிக்'..இறைவனே எஜமான் என்று அவர் எப்போதும் கூறிக் கொண்டிருந்தார்.  அடியவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஏராளமானதும், தடையற்றதுமாகும்... ஆத்மஞானச் சுரங்கமாகவும், பரமானந்தம் முழுமையும் நிரம்பப் பெற்றவராகவும் இருந்தார்....

சாயீபாபாவின் ரூபமானது தெய்வீகத் தன்மையுடன் இருந்தது... அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகு பாடில்லாத, புல்-பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும் அரவணைக்கும் ஏகதத்துவமே சாயீபாபாவாக அவதரித்தது....  உண்மையில் தகைமையும், நல்ல அதிஷ்டமும் பெற்ற பெற்ற மக்கள் சாயீபாபா என்ற பொக்கிஷப் புதையலைப் பெற்றனர்.  உண்மையான மதிப்பை அறியாதவர்கள், அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப் பிறவியாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்...?அவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்...                          

🔥பாபாவின் சீரடி வாசமும், பிறந்த ஆண்டு பற்றிய அனுமான கூற்றின் மூலமாக வெளிவந்தத் தகவலைப்  பற்றிய விளக்கவுரை.....🔥

சாயீபாபாவின் சரியான பிறந்த நாளையும், அவரது பெற்றோரையும் ஒருவரும் அறியார்கள்..அவரது சீரடி வாசத்தில் இருந்து அதை ஏறக்குறையத் தீர்மானிக்கலாம்.  அவர் பதினாறு வயதுப் பாலகனாக இருக்கும்போது முதலில் சீரடிக்குக்கு  வருகைப் புரிந்தார்... மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்தார்... பின்னர் திடீரென்று சிலகாலம் மறைந்து விட்டார்...  சிறிது காலத்திற்குப் பின் நைஜாம் ஓளரங்கபாத்துக்கு அருகில் இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார்...மீண்டும் சீரடிக்கு சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் திரும்பினார்...பின்னர் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் அவர் சீரடியில் வாழ்ந்தார்.... அதற்குப் பின்னர் 1918..ஆம் ஆண்டில் மகாசமாதி அடைந்தார்...  இதில் இருந்து பாபாவின் பிறந்த வருடம் ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம் என்று கூற இயலும்...

🔥சீரடி பகவான் அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இணைத்து, அனைத்து  பண்டிகைகளைக் பேதமில்லாமல் கொண்டாடி  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வைப்  பற்றிய விளக்கவுரை..🔥

பசுக்களையும், அந்தணர்களையும், யவனர்களிடமிருந்து (மொஹலாயர்களிடமிருந்து)  காப்பாற்றுதல் என்னும் தாம் மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார்.. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இரு வகுப்பினர்களுக்குள்ளும் மீண்டும் (இந்து - முஸ்லிம்கள்) வேற்றுமை அதிகரித்தது...அந்தப் பாதாளப் பள்ளத்தினை இணைக்கும் பாலமாக சாயீபகவான் திகழ்ந்து, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்..

பகவானின் நிரந்தரமான உபதேசத்தின் உட்கருத்து இவ்வாறனதாகும்.. "ராமரும் (இந்துக்களின் தெய்வம்) , ரஹீமும் (முஸ்லிம்களின் தெய்வம்)  மூலம்  ஒன்றே ஒன்றுதான்...அவர்களுக்குள் எள்ளளவும் வேற்றுமை இல்லை...பின்னர் ஏன் அடியவர்கள் சச்சரவு புரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்..?  கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இரு வகுப்பினரும் ஒன்றாயிணைந்து விவேகத்துடன் நடந்துக் கொள்ளுங்கள்...இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்பெறுவீர்கள்...போராடி வாதாடுதல் நன்றன்று...எனவே விவாதிக்க வேண்டாம்.  மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம்.  எப்போதும் உங்களது அக்கறையினையும், நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக என்று உபதேசம் செய்தார் பகவான்...

கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்... யோகம், தியாகம், தவம், ஞானம் என்பன கடவுளையறியும் நெறிகள்...இந்த வழிகளில் ஏதேனும்  ஒன்றின் மூலம் நீங்கள் இதில் வெற்றிபெற இயலாவிடின், உங்கள் பிறப்பு வீணேயாகும்.  யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்குச் செயவாரேயாகில், அதற்க்காகப் பழிக்குப் பழி வாங்காதீர்கள்.  நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால், பிறருக்குச் சிறிது நன்மையைச் செய்வீராக..!"  இது அனைவருக்கும் சாயீபாபா அளித்த உபதேசத்தின் சுருக்கம்.  இது லௌகிக, ஆன்மிக விஷயங்கள் இரண்டிலுமே நலம் பயப்பதாகும்...

🔥சீரடி பகவான்,  இயல்வாழ்க்கையில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பது பற்றியும்,  மேலும் தன்னை நாடி வந்த பக்தர்களை , எவ்வாறு உயர்ந்த நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரையை இங்கே..🔥

ஏராளமான குருக்கள் இருக்கின்றனர்...தங்கள் கரங்களில் ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம் வீடுதோறும் சென்று ஆத்மீகத்தைப் படாடோபம் செய்துக்கொள்ளும் குருமார்கள் நிறைய உண்டு...அவர்கள் மந்திரங்களைத் தமது சீடர்களின் காதில் ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பர்.. தமது சீடர்களுக்கு கடவுள் பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வர்.. ஆனால் அவர்களே இறையனுபவம் அற்றவராக இருப்பர்...ஆனால் சாயீபாபா தமது தகைமையையும், (கடவுள்பற்று), மெய்யுணர்வையும் காண்பிப்பதற்கு எவ்வித சிறிய முயற்சியையும் எடுக்கவேயில்லை.  அடியவர்களிடம் பெருமளவு அன்புக்  கொண்டிருந்தார்...இரண்டு விதமான குருமார்கள்  இருக்கின்றனர்....

(1)நியத்- நியமிக்கப்பட்டவர்கள்..

(2)அநியத்..நியமிக்கப்படாதவர்கள்..

பொதுவாக, பின்னவர்கள் தங்கள் உபதேசங்களால் நம்மிடத்தில் உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர்.  நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர். நம்மை வீடுபேற்றை அடையும் பாதையில் செல்லத் தூண்டுகின்றனர்...இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை (பேத உணர்வை) அழித்து, 'நீயே அது...!'என்று உணரச் செய்து, நம்மை ஏகத்வத்தில் ஸ்தாபிக்கின்றனர்...பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும் பல திறன்மிகுந்த  குருக்கள் இருக்கின்றனர்... ஆனால் நம்மை நமது இயற்கையில் (ஆத்மாவில்) நிலைப்படுத்தி உலகவாழ்வெனும் சாகரத்துக்கு அப்பால் நம்மைச் சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்...சாயீபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார்...அவருடைய பெருமையை விவரிக்க இயலாது...யாரேனும் பாபாவின் தரிசனத்தைப் பெறச்சென்றால், கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின் ஒவ்வொரு விவரத்தையும் உரைப்பார்... எல்லா ஜீவராசிகளிடமும் அவர் தெய்வீகத்தைக் கண்டார்.  நண்பர்களும், பகைவர்களும் அவருக்கு ஒன்றே....அவாவற்றவராகவும், சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த பாபா, தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார்... சுபிக்ஷசத்திலும்,  எதிரிடையான சூழ்நிலையிலும் அவர் ஒரே மாதிரியாய் இருந்தார்...எப்போதும், எவ்வித ஐயமும் அவரைத் தீண்டவில்லை..இவ்வுடம்பில் அவர் இயங்கினாரெனினும் எள்ளளவும் தமது தேகத்நில்  பற்றற்றவராக சாட்சியாக  இருந்தார்...உடலுருக்கொண்டு அவர் தோற்றமளித்தாலும் உண்மையில் அருவமானவர்...அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்....  

அத்தகைய சாயீயை தங்கள் கடவுளாக வழிபட்ட சீரடி மக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்...அவர்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும், பழக்கடையிலும், வயலிலும் மற்றபிற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் சாயை நினைவு கூர்ந்தார்கள்..அவர்தம் புகழைப் பாடினார்கள்...சாயீயைத் தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத் தெரியாது...சீரடியில் வசித்த பெண்களின் அன்பின் இனிமையை எங்ஙனம் விவரிக்கமுடியும்..! ஒன்றும்  அறியாதவர்களாக இருப்பினும், அவர்களின் தூயஅன்பு எளிய கிராமியமொழியில் பாபாவின் புகழை கவிதையாகவும், தெம்மாங்குப் பாடலாகவும் பாட  உணர்வூட்டியது.. எழுத்தறிவு அவர்களிடம் இல்லையாயினும் உண்மைக் கவித்துவத்தை அவர்களின் எளிமையான பாடல்களில் தெளிவாக உணரமுடியும்...படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது... அப்பாடல்கள் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடே..  சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால் அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்....இந்த கிராமியப் பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும் அவசியமான ஒன்று....பாபாவின் விருப்பத்தால் அதிஷ்டமுடைய பக்தர் எவரேனும் இப்பணியை மேற்கொண்டு சாயீலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்...

🔥சீரடி பகவான் எவ்வாறு தாய்மையுணர்வு,  எளிமை, பணிவு மற்றும் சகிப்புத் தன்மையுடன் தான் வாழ்ந்து, பக்தர்களை விழிப்புணர்வுடன் உற்று நோக்கி உயரிய நிலையை அடையச் செய்ததைப் பற்றி விளக்கம்....🔥

பரமாத்மா அல்லது கடவுள் ஆறு  குணாதிசயங்களை உடையவராக ககூறப்படுகிறது...அதாவது புகழ், செல்வம், பற்றின்மை, ஞானம், பேராற்றல், வள்ளன்மை ஆகியவையாகும்...பாபா மேற்க்கூறிய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தில் உடையவராக  விளங்கினார்.இவ்வுடம்பில் அடியவர்களுக்காக அவதரித்தார்...அவரது அருளும், அன்பும் அதிசயிக்கத் தக்கவை.  ஏனெனில் தமது அடியவர்களைத் தம்மிடம் தாய்மையுணர்வுடன் ஈர்த்துக் கொண்டார் பகவான்...இல்லாவிடில் யார்தான் அவரை அறிந்திருக்க இயலும்!  அவர் தமது பக்தர்களின் பொருட்டாக வாக்கின் தெய்வம் (சரஸ்வதிதேவி) கூட உரைக்கத் துணியாத அத்தகைய சொற்களை அவர் கூறினார்...அதற்கு இதோ ஓர் உதாரணம், மிகவும் எளிமையுடன் அவர் கூறியது பின்வருமாறு...

"நான் அடிமைகளுள் அடிமை.  உங்கள்ளுக்குக் கட்டுப்பட்டவன்.  உங்களது தரிசனத்திலே திருப்தியடைகிறேன்...தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்...நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு....இவ்வாறாக  என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக் கருதுகிறேன்"...எத்தகைய பணிவுடைமை...?இதைப் பிரசுரிப்பதன் மூலம் சாயீக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும் நினைப்பாராகில், அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம்.  இதற்குப் பிராயச்சித்தமாக பாபாவின் நாமத்தைப் பாடி ஜபிப்போமாக..!

பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர்போல் தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ, அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.  அவர் எதனையும் ஆவலுடன் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.  பார்த்தார் எனினும், பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை.  காம உணர்வுகளைப் பற்றிக் கருதும்கால் அவர் ஹனுமானைப் போன்ற பூரண பிரம்மச்சாரியாவார் என்பதாலும் பற்றற்றவராக இருந்தார்...அவரே தூய உணர்வுகளின் இருப்பிடமாகவும் , ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.  சுருக்கமாக அவர் அவாவற்றவர், கட்டற்றவர், முழு நிறைவானவர்.  இக்கூற்றைச் சித்தரிக்கும் வகையில் ஒரு அதிசய நிகழ்ச்சியைக் கூறலாம்.....  

சீரடியில் நானாவலி என்ற பெயரில் தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன் ஒருவன் இருந்தான்.  அவன் பாபாவின் வேலைகளையும், காரியங்களையும் கவனித்துவந்தான்.  ஒருமுறை அவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, தான் அதில் உட்கார வேண்டியிருப்பதால் பாபாவை எழுந்திருக்கும்படி கூறினான்... பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம் அமர்ந்திருந்த ஆசனத்தைக் காலி செய்தார்...அதில் அவன் அமர்ந்துகொண்டான்....சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்னர் அவன் எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளக் கூறினான்...பாபா ஆசனத்தில் அமர்ந்தார்...பிறகு அவன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றுவிட்டான்....  

தன் பக்தன்  அதிகாரம் செலுத்தப்பட்டதிலும், தான்  வெளியேற்றப்படதிலும், பாபா எள்ளளவும் வருத்தம் அடையவில்லை... இந்த நானாவலி, பாபாவை மிகவும் நேசித்தார்...பாபா மகாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள் தாமும் சமாதி அடைந்தான்....உயரிய  ஞான மார்க்கத்தை  அடைய மிகவும் எளியவழி என்னவென்றால் ...முனிவர்களுடைய கதைகளைக் கேட்பதும், அவர்களின் சத்சங்கத்தில் இருப்பதே...புறத்தில் சாயீபாபா சாதாரண மனிதர் போன்று நடித்தாலும், அவரது செய்கைகள் அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும், திறமையையும் காண்பித்தன...அவர் எதைச் செய்தபோதிலும் அவைகள் அடியவர்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன... தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர் வகுத்துரைக்கவில்லை... அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை.. எல்லாவித புத்திசாலித் தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் 'சாயி சாயி' என்று ஞாபக மூட்டிக்கொள்ளும்படி பக்தர்களிடம்  கூறினார்...இதைச் செய்வீர்களானால் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார்... ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும், யாகங்களும், பராயணங்களும், அஷ்டாங்க யோகங்களும் அந்தணர்களால் மட்டுமே இயலுவதாகும்..  மற்றைய வகுப்பினருக்கு அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை...மனதில்  எண்ணமின்றி அது ஒரு நிமிடமும் இருக்கமுடியாது..புலன் உணர்விற்குச் சார்பான பொருளை மனதிற்கு நீங்கள் அளித்தால் அதைப்பற்றி நினைக்கும்..அதற்குப் பதிலாக சத்குருவை அளித்தால் அது குருவைப்பற்றி எண்ணமிடும்...அனைத்தும் நம்மிடமே ...

நீங்கள் மிக்க கவனத்துடன் சாயீயின் பெருமையையும், பேராற்றலையும் கேட்டீர்கள்...  இதுவே சாயீயை இயற்கையாக நினைவூட்டிக் கொள்ளுதலும், வழிபடுவதும், கீர்த்தனை செய்வதும் ஆகும்..  மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக் கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல.  இக்கதைகள் சம்சாரமென்னும் (உலக வாழ்க்கை) பயத்தை அழித்து, உங்களை ஆத்மீகப் பாதையில் அழைத்துச் செல்கின்றன.  எனவே இக்கதைகளைக் கவனத்துடன் கேளுங்கள்.  அவைகளைத் தியானித்து  ஜீரணித்துக்கொள்ளுங்கள் இம்முறை பின்பற்றப்பட்டால் அந்தணர்கள் மட்டுமன்று பெண்ணினமும், கீழ்குலத்தோரும் தூய்மை அடைந்து புனிதமடைவர்....  

நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்...  ஆனால் உங்களது மனத்தை சாயீக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிட்டால், உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.  இதுவே மிகவும் எளிமையான வழியாகும்... எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை...?  காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை...கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது....  

மகான்களின்  கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் சத்சங்கதைப் பெறுதலைப் போன்றதாகும்... முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது.நமது உடல் உணர்வையும், அகங்காரத்தையும் அகற்றி, பிறப்பு - இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது.  இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது.  புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செயாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது.  நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களேயானால், இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மைப் பத்திரமாக இட்டுச் செல்வார்கள்...

இக்காரணத்துக்காகவே மகான்கள் இவ்வுலகில் அவதரிக்கின்றார்கள்.  உலகத்தின் பாவங்களை அடித்துச் செல்லும் கங்கை, கோதாவாரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனித ஆறுகள்கூட முனிவர்கள் ஸ்நானத்திற்காகத் தங்களிடம் வரவேண்டுமென்றும், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகின்றன.முனிவரின் பேராற்றல் அத்தகையது... முந்தைய பிறவிகளில் நாம் செய்த நற்கருமங்களின் சேமிப்புக் குவியல்களால் நாம் சாயீபாபாவினுடைய திருவடிகளை அடையப்பெற்றோம்.  சாயீயின் ரூப தியானத்துடன், இந்த அத்தியாயத்தை நாம் முடிக்கிறோம்...அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயீ பகவான், மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு 'உதீ 'யை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக் கருத்திற்கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கின்றார்..  இவ்வுலகை வெறுமையாய்க் கருதி பரமானந்தத்திலேயே எப்போதும் திளைத்துக் கொண்டிருக்கும் அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவோம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🏼🙏🏼🙏🏼



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...