ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம்:: முப்பத்தைந்து (35)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...
ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்..இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு : சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்.. மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, ஶ்ரீசீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் ::முப்பத்தைந்து(35)🙏
🙏முன்னுரை..🙏
குருவிற்கு ஏன் தக்ஷிணை அளிக்க வேண்டும் என்பதன் விளக்கமும், மற்றும் அவ்வாறு தக்ஷிணை வழங்குவதில் இருக்கும் மூல சூட்சமம் என்ன என்பதைப் பற்றிய விளக்கவுரை....
ஆத்மார்த்தமாக அன்புடன் அளிக்கப்பட்ட தக்ஷிணையை மட்டும், எவ்வாறு பாபா தன் பக்தர்களிடம் பெற்றுக்கொண்டார் என்பதன் விளக்கவுரையும், மற்றும் தக்ஷிணை வழங்க மனமில்லையென்றால் தக்ஷிணையை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதைப் பற்றியும் அனுபவ விளக்கவுரை...
எங்கும் நிறைந்த தன்னுடைய பேராற்றலாலும், பேரறிவாளும் சாய் பகவான், தன்னை நாடி வந்த டக்கர் என்ற பக்தரின் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு உபதேசித்து அருளாசி வழங்கி உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன் அனுபவ விளக்கவுரை....
தீயக் கனவுக் காட்சியின் காரணமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பக்தர் ,எவ்வாறு பாபாவின் ஆசிப்பெற்ற உதியால் குணப்படுத்தப்பட்டார் என்பதன் அனுபவ உரை.....
பாபாவின் ஆத்மார்த்தமான உயரிய பக்தர் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்பவர், எவ்வாறு பாபாவிடம் தன்னிடமுள்ள அனைத்தும் ஒப்படைத்து சரணாகதி அடைந்து சேவை செய்தார் என்பதன் விளக்கவுரை...
பாபாவின் பேராற்றலும் , பேரருளும் நிறைந்த உதி என்ற விபூதியினால், எவ்வாறு உணவுப் பற்றாக்குறை நீங்கி அள்ள அள்ளக் குறையாமல் அன்னத்தை அளித்து விருந்து அளிப்பவரின் மனக்குறையைத் தீர்த்தார் என்பதன் விளக்கவுரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்..
🔥 முதலில் குருவிற்கு ஏன் தக்ஷிணை அளிக்க வேண்டும் என்பதன் விளக்கமும், மற்றும் அவ்வாறு தக்ஷிணை வழங்குவதில் இருக்கும் மூல சூட்சமம் என்ன என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥
நம் சத்குருநாதார் சீரடி பாபா வாழ்ந்த காலத்தில் பூஜைக்குப்பின் தக்ஷிணை அளிப்பது என்பது நியமமாக கடைப்பிடிக்கப்பட்டது...கல்ப விருக்க்ஷமாக , காமதேனுவாக குபேர பகவானாக வீற்றிருக்கும் போது தக்ஷிணை ஏன் அளிக்கப்பட்டது என்றும், அவர் ஏன் அனுமதித்தார் என்பதும் பலருக்கும் கேள்வி எழலாம்...எவருடைய அருகில் அஷ்டசித்திகளும் காத்துக்கொண்டு இருக்கின்றனவோ ,எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக் கொண்டு சேவகம் செய்ய காத்து இருக்கின்றனவே .அவருக்கு ஏன் தக்ஷிணை என்றும் நாம் நினைக்கலாம்..
இவ்வுலக வாழ்வில் அனைத்து இன்ப துன்பங்களையும் உதறியவரும்,தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாதவரும்,வைரமும் கற்களும் சமமாக பாவித்த பகவான் தக்ஷிணையை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பது அனைவருக்கும் புதிராக இருக்கின்றது அல்லவா..கேட்டதை அருளும் பாபா தக்ஷிணையை பெற்றுக் கொண்டது ஏன் என்றால், தன்னுடைய பக்தர்கள் அனைவரும், நான் என்கின்ற அகந்தை, அகங்காரம் அற்று, உயரியப் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே...பலரிடம் தக்ஷிணை அதிகமாக கேட்டு வற்புருத்தியதால் அவர்கள் ஏழைகளிடம் யாசகம் பெற்று தக்ஷிணை அளிக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஆளானார்கள் .இதன் மூலமாக அவர்களுடைய கர்வமும், நான் என்கின்ற பாவமும் நீக்கப்பெற்று அவர்கள் மேன்மை நிலையை அடைந்தார்கள்..
அனைவரையும் சமமாக நேசிக்க கற்றுக் கொண்டார்கள்..சாஸ்திர விதியின்படி எந்த பூஜையும் , பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் சமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது.. இதை நித்திய வழிபாடு செய்தவர்கள் உணர்ந்து இருந்தனர்...பாத பூஜை செய்யும்போதும் குருபூஜை செய்யும்போதும் தக்ஷிணை அளிக்கப்பட்டது தக்ஷிணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றார்கள்.
பொருளை தக்ஷிணையாக கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தையும் , பொன்னை தக்ஷிணையாக கொடுப்பவர்கள் மனத்தூய்மையும் அடைகிறார்கள்..அக்ஷதை சமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது...மலர்களும்,தாம்பூலமும் சமர்ப்பணம் செய்வதால் செல்வத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருகின்றன...அதுபோல தக்ஷிணை அளிப்பது நிறைந்த செல்வத்தை தருகின்றன. குரு பூஜை செய்யும் போதும் பாத பூஜை செய்யும் போதும் தக்ஷிணை அளிப்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது...
தக்ஷிணை அளிப்பதால் தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரும் மனத்தூய்மை அடையவேண்டும் என்று பகவான் விரும்பினார். யாகத்தால், தவத்தால், தானத்தால் என்னும் தெளிவான சொற்களால் தக்ஷிணை அளிப்பது ஒரு சாதனை யுக்தி என்று ஆத்ம ஞானத்தை நாடுபவர்களுக்கு வேதம் சொல்கின்றது. பிரஜாபதியே தம் சிருக்ஷ்டியான தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், மனிதர்களுக்கும் குருகுலவாசம் முடிந்த பின்னர் உபதேசம் கேட்கும் போது * த * என்ற ஒரு எழுத்தை அளித்துவிட்டு இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டு உபதேசத்தை மனத்தில் பதிய வைத்தார்... தேவர்கள் * த -* வை அடக்கத்துடன் வாழுங்கள் என்று புரிந்து கொண்டனர்..அசுரர்கள் அதே *த* வை தயை காட்டுங்கள் என்று புரிந்து கொண்டனர்...மனிதர்கள் *த* வை தானம் செய்யுங்கள் என்று புரிந்து கொண்டனர்... சாய்மாதா தன் குழந்தைகளிடம் அவர்கள் நன்மைக்காக *த* என்னும் தன்மையில் புலனடக்கத்துடன் வாழுங்கள், தயை காட்டுங்கள், தானம் செய்யுங்கள் என்று கூறினார்.
குருராயர் இந்த ஒர் எழுத்து மந்திரத்தை தம் சிஷ்யர்கள் மூன்று தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே உபயோகித்தார்...பரம தயாளரான சமர்த்த சாயீ தம்முடைய பக்தர்களின் நலனுக்காகவே தக்ஷிணை கேட்டு வாங்கினார்..தன் குழந்தைகள் அனைவரும் நான் என்கின்ற அகந்தை நீங்கி நாம் என்ற உணர்வை எடுக்க வேண்டும் என்ற படிப்பிணையை அறிவுருத்திக் கொண்டேயிருந்தார்..வேத வசனத்தின் படியும் தஷிணை கொடுக்கப்படாமல் குருபூஜை நிறைவு பெறாது என்பதனை சுட்டிக் காண்பித்தார்...பொதுவாகவே உலகியல் நன்மைகளை விரும்பினாலும், ஆன்மீக முன்னேற்றத்தை அடைய விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் குருமார்களுக்கு பாகுபாடின்றி தக்ஷிணை அளிக்க வேண்டும்...இன்றும் பகவானுக்கு பூஜை முடிந்த பிறகு நிறைவாக தக்ஷிணையாக இரண்டு ரூபாய், ஆறு ரூபாய், ஒன்பது ரூபாய் மற்றும் பதினொரு ரூபாய் இப்படி தக்ஷிணையை பகவான் பாதத்தில் சமர்பிக்கின்றனர்.தக்ஷிணை இல்லாவிட்டாலும் கூட பகவானுக்கு ஆத்மார்த்த நன்றிகளை கூறி பாத சமர்ப்பணம் செய்யுங்கள்..
🔥ஆத்மார்த்தமாக அன்புடன் அளிக்கப்பட்ட தக்ஷிணையை மட்டும், எவ்வாறு பாபா தன் பக்தர்களிடம் பெற்றுக்கொண்டார் என்பதன் விளக்கவுரையும், மற்றும் தக்ஷிணை வழங்க மனமில்லையென்றால் தக்ஷிணையை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதைப் பற்றியும் அனுபவ விளக்கவுரை இங்கே...🔥.
காகா மகாஜனியின் நண்பரொருவர் கடவுளை உருவமற்ற நிலையில் வழிபடுபவர்..உருவ ஆராதனைக்கு எதிர்ப்பாளர்.. வேடிக்கையாக அவர் சீரடிக்கு காகா மகாஜனியுடன் இரண்டு நிபந்தனைகளின் பேரில் வந்தார்..அந்த நிபந்தனை என்னவென்றால், தாம் சத்குருவின் முன் பணியவோ, தக்ஷிணை கேட்டால் கொடுக்கவோ இயலாது...காகா இந்த நிபந்தனைகளை ஒத்துக்கொண்டார்... அவ்விருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயை விட்டுப் புறப்பட்டு சீரடிக்கு அடுத்தநாள் சென்றனர்.
மசூதிப்படிகளில் அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரைத் தூரத்திலேயே பார்த்துக் கீழ்கண்ட இனிமையான சொற்களால் அழைத்தார்.. "காம் யாவேன் ஜி" அதாவது தமிழில் ஏன் வந்தீர் ஐயா...! என்று கூறினார்...இச்சொற்களை பாபா பேசியக் குரல் புதிய விதமாக இருந்தது.. பாபாவை தரிசிக்க வந்திருந்த அந்நண்பனின் தகப்பனார் குரலைப் போலவே அச்சாக இருந்தது...அது மறைந்த தனது தந்தையைப் பற்றி பக்தருக்கு நினைவூட்டியதால் சந்தோஷத்தால் பேரானந்த நிலையை அடைந்தார்...பாபாவின் குரலுக்குத்தான் எத்தகைய வியத்தகு சக்தி என்று ஒரு கணம் திகைத்து ஆச்சரியப்பட்டு "இது எனது தந்தையின் குரல்தான் என்பதில் ஐயமில்லை" என்று கூறிவிட்டு, உடனே மேலே சென்று பாபாவின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினார்..பின்னர் பாபா இரண்டுமுறை தஷிணை கேட்டார். காலை ஒருமுறையும், அவர்கள் விடைபெறும்போது மாலை ஒருமுறையும்...ஆனால் அதை காகாவிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொண்டார்...அவரது நண்பரைக் கேட்கவில்லை...நண்பர் காகாவிடம் கிசுகிசுத்தார்.. "இருமுறை பாபா உம்மிடமிருந்து தக்ஷிணை கேட்டார். நான் உம்முடனே இருந்தும் அவர் ஏன் என்னைப் புறக்கணிக்க வேண்டும்...?" என்றார்..அதற்கு காகா "பாபாவையே கேளும்" என்றார்...
பாபா, காகாவிடம் உம் நண்பர் என்ன கூறுகின்றார் என்று கேட்டார்.. அப்போது அந்த நண்பர் தாம் ஏதும் தக்ஷிணை கொடுக்கலாமா என்று கேட்டார் என்று பதில் அளித்தார் காகா.. பாபாவும் "உமக்குக் தக்ஷிணை வழங்க மனமில்லை.. எனவே உம்மைக் கேட்கவில்லை, இப்போது பிரியப்பட்டால் தக்ஷிணை அளிக்கலாம் " என்று பதிலளித்தார்..அவர் காகா அளித்த அதே தொகையான பதினேழு ரூபாயை தஷிணையாக அளித்தார்.. பின்னர் வந்திருந்த காகாவின் நண்பரிடம், பாபா பின்வரும் மொழிகளை உரைத்தார்.. "தேலியின் ( அதாவது நான் என்கின்ற கோட்டையின் சுவராகிய வேற்றுமை உணர்வு) சுவற்றை இடித்தால் தான் நாம் ஒருவரை ஒருவர் முகத்திற்கு முகம் பார்க்கலாம், சந்திக்கலாம்", நான் உம்மிடம் வரலாம், உன்னை உன்னுள் உருவேற்றிக் கடைத்தேற்றலாம்... பின்னர் பாபா, அவர்கள் புறப்படுவதற்கு அனுமதியளித்தார். வானிலை மப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தபோதும், பாபா அவர்களுக்கு பத்திரமான பிரயாணத்திற்கு உறுதி அளித்தார்.. இருவரும் சௌக்கியமாக பம்பாய் வந்தடைந்தனர்... அவர்கள் வீட்டுக்குச்சென்று வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்தபோது இரண்டு பக்ஷிகள் தரையில் விழுந்து இறந்து கிடப்பதையும், ஒன்று அப்போதுதான் ஜன்னல் வழியே பறந்து சென்றதையும் கண்டனர். ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால் இரண்டு பக்ஷிகளும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவைகள் தங்களது விதியை எய்தின என்றும், மூன்றாவது பக்ஷியைக் காக்கவே பாபா தம்மை அனுப்பி இருப்பதாகவும் அவர் நினைத்தார்...
🔥எங்கும் நிறைந்த தன்னுடைய பேராற்றலாலும், பேரறிவாளும் சாய் பகவான், தன்னை நாடி வந்த டக்கர் என்ற பக்தரின் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு உபதேசித்து அருளாசி வழங்கி உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன் அனுபவ விளக்கவுரை இங்கே...🔥
டக்கர் தரம்ஸி ஜேடாபாஜி என்ற பம்பாய் வக்கீலின் கம்பெனியில் , காகா என்ற பெயர்கொண்ட பாபாவை வழிபடும் பக்தர் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.. முதலாளியும், மேலாளரும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தனர். காகா அடிக்கடி சீரடி போய்க் கொண்டிருப்பதும் அங்கு சில நாட்கள் தங்கி சேவை செய்வதும், பாபா அனுமதியளித்தப் பிறகு திரும்புவதும் டக்கருக்குத் தெரியும்.. டக்கர் என்பவர் பாபாவை தரிசிப்பது மட்டுமல்லாது சோதிப்பதற்காகவுமே, காகாவுடன் ஷிம்கா விடுமுறையின்போது சீரடி செல்வதற்கு முடிவுசெய்தார்.. காகா உடனே திரும்புவது நிச்சயமில்லை என்பதால், அவர் தன்னுடன் துணையாக வேறொருவரையும் அழைத்துக்கொண்டார். மூவரும் புறப்பட்டனர். காகா இரண்டு சேர் காய்ந்த திராட்சையை பாபாவுக்கு அன்பளிப்பாக வாங்கினார்.
அவர்கள் உரிய தருணத்தில் சீரடிக்குப் போய் மசூதிக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகச் சென்றனர்..பாபா சாஹேப் தர்கட் அங்கு இருந்தார்...டக்கர் அவரை ஏன் இவ்விடம் வந்தீர்கள் என்று விசாரித்தார்.. அதற்கு தர்கட் கூறிய பதில் இங்கே..
தர்கட் : பாபாவை நேடியாக தரிசிக்க இங்கு வந்தேன் என்றார்..
டக்கர் : ஏதாவது அற்புதங்கள் இங்கு நிகழ்கின்றனவா...?
தர்கட் : எனது நோக்கம் அதுவல்ல (அற்புதத்தைப் பார்த்தல்)..ஆனால் பக்தர்களின் ஆர்வமிக்க பிரார்த்தனைகள் இவ்விடத்தில் நிறைவேற்றப்படுகின்றன..
பின்னர் காகா பாபாவின்முன் விழுந்து நமஸ்கரித்து திராட்சையைச் சமர்ப்பித்தார்.. பாபா அவைகளை வினியோகிக்கக் கட்டளையிட்டார்...டக்கருக்கும் சில கிடைத்தது...அவருக்குத் திராட்சை பிடிக்கவில்லை...மேலும் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் அவைகளைச் சாப்பிடவேண்டாம் என்று மருத்துவர்கள் டக்கருக்கு கூறியிருந்தனர்..எனவே பாபா அளித்த காய்ந்த திராட்சையைப் பெற விரும்பவில்லை.ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை...சம்பிரதாயத்துக்காக அவைகளை வாயிலிட்டுக் கொண்டார்..ஆனால் விதைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை..மசூதித் தரையில் போடுவதற்கும் அவரால் இயலவில்லை.. எனவே அவரது விருப்பத்துக்கு மாறாக அவைகளைத் தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார்.
பாபா ஒரு ஞானியாயிருந்தால் திராட்சையின் மீது தமக்குள்ள வெறுப்பை அவர் எங்ஙனம் அறியாமலிருந்து அதை உண்ணக்கூறி அவரை வற்புறுத்த முடியும் என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டார்... இவ்வெண்ணம் அவர் மனதில் எழும்பியதும், பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளைக் கொடுத்தார்...அதை அவரால் உண்ண இயலாமல் கைகளில் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பாபா அதை உண்ணும்படி அவரை அறிவுருத்தினார்.. அவரும் கீழ்ப்படிந்தார்...அவரது ஆச்சரியத்திற்கேற்ப அவைகளெல்லாம் விதையற்ற திரட்சைகளாயிருந்தன... அற்புதங்களை அவர் காண விரும்பினார்... இதோ ஒன்று...! பாபா, தனது எண்ணத்தை அறிந்து அவரது விருப்பத்திற்கேற்ப விதையுள்ள திராட்சைகளை விதையற்றவைகளாக மாற்றிவிட்டார் என்பதை அவர் அறிவார்...
எத்தகைய வியத்தகு சக்தி,..! மேலும் சோதிக்க விரும்பி பக்கத்திலிருந்து தர்கட்டை அவர் எவ்வகைத் திராட்சை வைத்திருக்கிறார் எனக் கேட்டார்..தர்கட் "விதையுள்ள திராட்சை" என்றார்.. டக்கருக்கு இதைக்கேட்டு இன்னும் அதிக வியப்பாயிற்று... தமது வளர்ந்துவரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பாபா ஒரு உண்மையான ஞானியானால், திராட்சை காகாவுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டுமென நினைத்தார்... இவ்வெண்ணத்தையும் படித்தறிந்த பாபா, காகாவிலிருந்து தொடங்கி வினியோகம் செய்யப்பட வேண்டுமென ஆணையிட்டார். இந்த நிரூபணங்களெல்லாம் தக்கருக்குப் போதுமானவைகளாய் இருந்தன...பின்னர் ஷாமா, டக்கரை காகாவின் எஜமானர் என்று பாபாவிடம் அறிமுகப்படுத்தினார்.
பாபா :: காகாவின் எஜமானராக இவர் எங்ஙனம் இருக்க முடியும்...? அவருக்கு முழுமையும் வேறொரு எஜமானர் இருக்கிறார்... காகா இப்பதிலைப் பாராட்டினார். தனது தீர்மானத்தை மறந்துவிட்டு டக்கர் பாபாவை வணங்கிய பின்னர் வாதாவுக்குத் திரும்பினார்.
மத்தியான ஆரத்தி முடிந்ததும் அவர்களெல்லாம் புறப்படுவதற்கு பாபாவின் அனுமதி பெறுவதற்காக மசூதிக்குச் சென்றனர். ஷாமா அவர்களுக்காகப் பேசினார். பின்னர் பாபா இவ்விதமாக உரைத்தார். நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான்...அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியை வாய்க்கப் பெற்றிருந்தான். மனோ வேதனைகளிலிருந்து விடுபட்டவனாக இருந்தான்.. எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான்...சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான். அவனது மனம் ஒரு உறுதிப்பாட்டையே அறிந்ததில்லை..தற்போது அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன்...அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் (அதாவது குறிக்கோள்) மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்ற வேண்டும்...? அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" என்று கூறினேன்...உடனே டக்கர் அப்பொருத்தமான வர்ணனை தமக்குரியதேஎன அறிந்தார்...காக்காவும் தம்முடன் திரும்ப வேண்டுமென அவர் நினைத்தார்.. காகா அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்கப்படுவார் என்று ஒருவரும் எண்ணவில்லை...பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்தறிந்து காகாவை அவருடைய எஜமானர் டக்கருடன் திரும்ப அனுமதியளித்தார்... மற்றொருவரின் மனதில் இருக்கும் எண்ணத்தையறியும் பாபாவின் திறமைக்கு மேலுமொரு நிரூபணம் அவருக்குக் கிடைத்தது...
பின்னர் பாபா, காகாவிடமிருந்து ரூ.15 தஷிணையாகக் கேட்டுப்பெற்றார்..அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார். "எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால், அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது. சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தஷிணை பெறுவதில்லை.. .யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கின்றாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன்... யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள்....தர்மத்தைச் செயல்படுத்துவதில் செல்வம் ஒருவழியாக இருக்கவேண்டும். இது சுய இன்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது வீணாக்கப்படுகிறது...
நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது..எனவே பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலே... தக்ஷிணை வழங்குவதால் மூலம் வைராக்கியத் தன்மை மேம்படுகின்றது.. (பற்றின்மை) அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது. ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்"..இம்மொழிகளைக் கேட்டுத் தமது தீர்மானத்தை மறந்தவராய் டக்கர் தாமாகவே ரூ.15ஐ பாபாவின் கைகளில் வழங்கினார்...அவரது எல்லா ஐயங்களும் தீர்க்கப்பட்டு பலவற்றைக் கற்றுக்கொண்டார். ஆதலால் சீரடிக்குத் தாம் வந்தது நன்மையானது என்று அவர் எண்ணினார்.
இத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் பாபாவின் திறமை தனித்தன்மை வாய்ந்தது. இவைகள் யாவற்றையும் அவர் செய்தபோதும் மொத்தத்தில் இவைகளின் மேல் சாராதவராகவே இருந்தார். யாராவது அவரை வணங்குவதோ, அல்லது வணங்காமலிருப்பதோ, அவருக்குத் தக்ஷிணை கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ, இவைகள் எல்லாம் அவருக்கு ஒன்றே... அவர் ஒருவரையும் அவமதிக்கவில்லை. தாம் வணங்கப்படுவதால் அவர் மகிழ்ச்சியடைந்ததில்லை. அன்றி தாம் மதிக்கப்படாததால் பாபா துன்புற்றதுமில்லை... மாறுபட்ட இருமைகளை (சுகம், துக்கம் போன்றவற்றை) அவர் கடந்து நின்றார்...
🔥தீயக் கனவுக் காட்சியின் காரணமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பக்தர் ,எவ்வாறு பாபாவின் ஆசிப்பெற்ற உதியால் குணப்படுத்தப்பட்டார் என்பதன் அனுபவ உரை.இங்கே..🔥
பாந்த்ராவில் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நெடுநாள் தூக்கமின்மை நோயால் அல்லலுற்றார்.. அவர் படுக்கையில் படுத்தவுடனே அவரது இறந்துபோன தந்தையார் கனவில் தோன்றி அவரைக் கடுமையாகத் திட்டினார்.. இது அவரது தூக்கத்தைக் கலைத்து இரவு முழுவதும் அவரை இருப்புக் கொள்ளாமல் செய்தது. ஒவ்வொரு நாள் இரவும் இது நடந்தது..அம்மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. ஒருநாள் பாபாவின் பக்தர் ஒருவரிடம் இவ்விஷயத்தைப் பற்றிக் கூறி கலந்தாலோசித்தார். சக்தி வாய்ந்த பல தீர்க்க முடியாத வியாதிகளை கணம் நேரத்தில் போக்குகின்ற பாபாவின் உதி ஒன்றேப் போதுமானது என்று கூறினார்..
மேலும் அவருக்குச் சிறிது உதி கொடுத்து அவர் படுக்கைக்குப் போகும் முன்னர், அதைச் சிறிது நெற்றியிலிட்டுக் கொள்ளும்படியும், அவ்வுதிப் பொட்டலத்தை தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளும் படியும் கூறினார்.. இதனைக் கடைப்பிடித்தவுடன் உடனே மாற்றம் கிடைத்தது.. அவரது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் அவருக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டது. முன்னர் போல் எவ்விதத் தொந்தரவும் இல்லை...இந்தச் சிகிச்சையையே அவர் தொடர்ந்து பின்பற்றி எப்போதும் சாயீயையே நினைவு கூர்ந்தார். பின்னர் சாயீபாபாவின் படம் ஒன்றை பெற்று, தனது தலையணைக்கு அருகில் அதைத் தொங்கவிட்டு அதனை தினந்தோறும் வழிபடத் தொடங்கி வியாழக்கிழமைகளில் பூமாலை, நிவேதனம் முதலியவற்றைச் சமர்ப்பித்தார்... முமுவதும் கனவுத் தொந்தரவிலிருந்து விடுதலை அடைந்தார்...
🔥பாபாவின் ஆத்மார்த்தமான உயரிய பக்தர் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்பவர், எவ்வாறு பாபாவிடம் தன்னிடமுள்ள அனைத்தும் ஒப்படைத்து சரணாகதி அடைந்து சேவை செய்தார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥
இம்மனிதர் பாபாவின் ஒரு பெரும் பக்தர்... மிகமிகச் சிறப்பான பற்றற்ற பணியைப் பாபாவுக்கு அவர் செய்தார்... ஒவ்வொரு நாளும் சீரடியில் பாபா தமது தினசரி நியமமாக பக்தர்கள் நடந்து வரும் தெருக்கள், பாதைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தமாக்கினார். அவருக்குப் பின்னர், இப்பணியானது ராதாகிருஷ்ணமாயீ என்ற அம்மையாரின் மூலமாகவும், அதற்குப்பின் அப்துல் என்ற பக்தர் மூலமாக இப்பணி சிறப்புடன் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பாலாஜி கோதுமை அறுவடை செய்தபோது அனைத்தையும் பாபாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பித்துவிடுவார்... மீதமாக பாபா எதைக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக் கொண்டு தமது குடும்ப சம்ரக்ஷணத்தை செய்தார்...இந்நடைமுறையானது நெவாஸ்கரால் பல ஆண்டுகள் செய்யப்பட்டு அவருக்குப்பின் அவரது மகனாலும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...
🔥பாபாவின் பேராற்றலும் , பேரருளும் நிறைந்த உதி என்ற விபூதியினால், எவ்வாறு உணவுப் பற்றாக்குறை நீங்கி அள்ள அள்ளக் குறையாமல் அன்னத்தை அளித்து விருந்து அளிப்பவரின் மனக்குறையைத் தீர்த்தார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥
ஒருமுறை பாலாஜியின் திவசத்தின்போது சில விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.. ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்குபேர் வந்துவிட்டனர்... பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள். குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தாள்.அவளது மாமியார் "பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல, சாயீயினுடையது.... ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப் போட்டு ஒரு துணியால் மூடி அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு!.. சாயீ நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித் தேற்றினாள்..அவள் கூறியபடியே செய்தாள். தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள்... "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கிக் காண்கிறான்" என்னும் மொழி இவ்விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.
என்னுடைய நண்பரும் பாபாவின் ஆத்மார்த்தமான பக்தருமான B.A.Soukul (First Class Sub-Magistrate) இதைப்போன்ற ஒரு விஷயத்தை என்னிடம் அறிவித்தார்...1943-ஆம் ஆண்டு மாசி மாதம், அகமத்நகர் ஜில்லாவிலுள்ள கர்ஜத்தில் பூஜைத் திருவிழாவும், பொதுஜன விருந்தும் நடந்தது...ஆனால் நிகழ்ச்சிக்கு, விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல் ஐந்து மடங்குபேர் வந்துவிட்டனர்... அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது... பாபாவின் அருளால் அனைவரும் வியக்கும் வண்ணம் எவ்வித உணவுக்குறைவும் உணரப்படவில்லை...
🔥அனைத்து உயிரினங்களிலும் பாபா நீக்கமற நிறைந்து இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டதால், பாம்பையே பாபாவாகப் பாவித்து போற்றிய பாலாஜி என்ற பக்தரின் குடும்பத்திற்கு எவ்வாறு ஆசி வழங்கினார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥
ஒருமுறை சீரடியைச் சேர்ந்த ரகு பாடீல் என்பவர், நெவாசைச் சேர்ந்த பாலாஜி பாடீல் என்பவரை தொடர்புக் கொண்டார்.. அன்று மாலை மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு உள் நுழைவதைக் கண்டார்... எல்லா மாடுகளும் பீதியடைந்து நகரத் தொடங்கின...வீட்டினரும் திகிலடைந்தனர்.. ஆனால் பாலாஜி தனது வீட்டில் சாயீயே பாம்பாகத் தோன்றியிருக்கிறார் என எண்ணினார். துளிகூட பயப்படாமல் ஒரு கிண்ணத்தில் பாலை கொண்டுவந்து பாம்பின் முன்வைத்து, "பாபா...! ஏன் சீறி சப்தப்படுத்துகிறீர்கள்.? ஏன் எங்களைப் பயமுறுத்த விரும்புகிறீர்கள்..? இந்தக் கிண்ணத்திலுள்ள பாலை அமைதியான மனதுடன் அருந்துங்கள்" என்று கூறிக்கொண்டே அதனருகில் குழப்பமுறாமல் அமர்ந்தார்.மற்றவர்கள் பீதியடைந்தனர்...என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை...சிறிது நேரத்தில் பாம்பு தானாகவே மறைந்து போய்விட்டது.. யாருக்கும் அது எங்கு சென்றதெனத் தெரியாது...மாட்டுத் தொழுவத்தில் தேடியும் அது காணப்படவில்லை.
பாலாஜிக்கு இரண்டு மனைவிகளும், சில குழந்தைகளும் இருந்தனர்.அவர்கள் அனைவரும் சில சமயம் நெவாஸில் இருந்து பாபாவின் தரிசனத்துக்காக சீரடிக்கு வருவர்...அப்போது பாபா சேலையும் மற்ற உடைகளும் வாங்கி அவைகளைத் தமது ஆசியுடன் அவர்களுக்கு அளிப்பார்.....
(** கோயம்புத்தூரில் இதே மாதிரியாக 1943 தை 7ஆம் தேதி வியாழன் மாலை 3:30 மணிக்கு பாபா பாம்பாகத் தோன்றிய விவரம் சாயிசுதா சஞ்சிகையில் (தொகுப்பு 3 , எண் 7&8 , ஜனவரி 1943 , பக்கம் 26) பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு அப்பாம்பு பஜனையைக் கேட்டது. மலரையும், பாலையும் ஏற்றுக்கொண்டது... ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது...போட்டோ எடுப்பதற்காக பாபாவின் படம் அதன் அருகில் வைக்கப்பட்டது....படமும், பாம்பும் புகைப்படப் பதிவில் மிகச்சிறப்பாக பதிந்திருக்கிறது. விவரங்களுக்கும், புகைப்படத்திற்கும் வாசகர்கள் மேற்குறித்த சாயிசுதாவை காண்க.)
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏
ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக