ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம் ::முப்பத்தெட்டு(38)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு : சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் முப்பத்தெட்டு(38)🙏
🙏முன்னுரை..🙏
சத்குருநாதர் சீரடி பாபாவின், திருவடிகளை சரணாகதியடைந்து வணங்கிப் போற்றுதலைப் பற்றிய உரை....
சீரடி பாபா அன்னதானம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பையும், நற்பலன்களையும் உலகத்தினருக்கு எடுத்துக்கூறி, அதற்கு எடுத்துக்காட்டாக தன் கரங்களினாலேயே ஹண்டி என்ற பெரியப் பாத்திரத்தில் அன்னத்தைச் சமைத்து, மிகுந்த தாய்மையுணர்வுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எவ்வாறு அன்னதானம் வழங்கினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை....
குருபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தாதா கேல்கரிடம், பாபா தன்மீது வைத்திருந்த குருபக்தியை சோதிக்கும் விதமாக என்ன வாக்குருதிகளை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..
தன் பக்தர்கள் பேதமின்றி, பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தன்னை எந்த இனம் மற்றும் மதம் சார்ந்த எவ்வித ஒப்பிடுதலும், அடையாளமும் இல்லாமல், எவ்வாறு சாட்சியாக வாழ்ந்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை..
எம்மதமும் சம்மதம் என்று போதித்து, அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளையும் ஒருசேர நடத்தி, அதனை நிரூபிக்கும் வகையில், தன்னை தரிசனம் செய்ய வந்து நானா சாஹேப் என்ற ஆத்மார்த்தமான பக்தரிடம் , எவ்வாறு அவர் தரசிக்காமல் வந்த தெய்வத்தைப் பற்றி சூட்சமமாக உணர்த்தி உபதேசம் செய்ததைப் பற்றிய அனுபவ உரை..
பக்தர்களுடைய அனைத்து நிவேதனமும் ஒன்றாக கலந்து கதம்பக் கூட்டாக சேர்த்து, எவ்வாறு பாபாவின் ஆசியால் புனிதமாக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது என்பதன் அனுபவ உரை...
பாபாவின் திருக்கரத்தால் வழங்கப்பட்ட மோரை குடித்து மகிழ்ந்த ஹேமாட்பந்த், புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை இயற்றி பக்தர்கள் அனைவரும் கடைத்தேற்றம் அடைய காரணமாக இருந்தார் என்பதை உணர்வதற்கான சிறிய குறிப்புரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...
🔥 முதலில் சத்குருநாதர் சீரடி பாபாவின், திருவடிகளை சரணாகதியடைந்து வணங்கிப் போற்றுதலைப் பற்றிய உரை....🔥
ஓ..! புனிதமான சத்குரு சாயீநாதரே உங்களின் பாதக் கமலத்தில் வீழ்ந்து பணிந்து சரணாகதி அடைகின்றோம்..சித்தர்கள் அனைவருக்கும் அதிபதியாக விளங்கும் சித்தாஸ்ரமரே உன்னை பணிந்து வணங்குகின்றோம்.. உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியை நல்கி அடியவர்களின் நலன்களை நிறைவேற்றி தங்களின் திருவடிகளைச் சரணடைந்தவர்களின் பேரிடர்களைப் போக்குபவருமான தங்களை சிரம் தாழ்த்தி கரம் குவித்து வணங்குகின்றோம்.. மிகுந்த தாராள குணமுடையவராகவும், தங்களைச் சரணடைவோர்களின் பாதுகாவலராகவும், ரட்சகராகவும் விளங்கும் தாங்கள், மக்களுக்காக இரங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே அவதரித்திருக்கிறீர்கள்...
தூய ஆன்மாவின் சாராம்சமான சாறு, பிரம்மாவின் அச்சில் ஊற்றப்பட்டு, இதிலிருந்து ஞானிகளுக்குள் எல்லாம் மணிமகுடமாக சாயீ அவதரித்து விளங்குகின்றார்.. இந்த சாயீநாதர் ஆத்மராமனே ஆவார்...தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடமாக இருக்கின்றார்... வாழ்க்கையின் அனைத்துக் குறிக்கோளையும் தாமே அவர் எய்தியதோடு நில்லாது, தமது அடியவர்களைப் பற்றற்றவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் ஆக்கினார்.. எதிலும் பற்றில்லாமல் சாட்சியாக வாழ்ந்து தம் பக்தர்கள் அனைவருக்கும் பாடசாலையாக தன்னை உருமாற்றிக்கொண்டு, தன் இயல்நிலை வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.. எம்மதமும் சம்மதம் என்ற போதனையை போதித்தது மட்டுமில்லாமல், தானும் அவ்வாறே வாழ்ந்து, அனைத்து மனித உயிர்களையும் பேதமின்றி தாய்மையுணர்வுடன் நடத்தினார்....
🔥சீரடி பாபா அன்னதானம் வழங்குவதன் சிறப்பையும், நற்பலன்களையும் உலகத்தினருக்கு எடுத்துக்கூறி , அதற்கு எடுத்துக்காட்டாக தன் கரங்களினாலேயே ஹண்டி என்ற பெரியப் பாத்திரத்தில் அன்னத்தைச் சமைத்து, மிகுந்த தாய்மையுணர்வுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எவ்வாறு அன்னதானம் வழங்கினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை.🔥.
நமது சாஸ்திரங்களில், வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு சாதனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தவம்...கிருதயுகத்துக்கும்,
ஞானம்...திரேதாயுகத்துக்கும்,
யக்ஞம்... த்வாபரயுகத்துக்கும்,
தானம்.. கலியுகத்துக்கும்
சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன... தானங்கள் அனைவற்றிலும் அன்னதானமே சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. மத்தியான நேரத்தில் நமக்கு உணவு கிடைக்காதபோது நாம் மிகவும் குழப்பமடைகின்றோம்..அதைப்போன்ற சூழ்நிலைகளில் மற்ற ஜீவராசிகளும் அங்ஙனமே உணர்கின்றன. இதையறிந்து எளியவர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் உணவளிப்பவரே மிகச்சிறந்த கொடையாளி..அல்லது தர்மவான்... "உணவே பிரம்மம் எனப்படுகின்றது... உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன.பிறந்த பின்னும், உணவாலேயே உயிர் வாழ்கின்றன...அழிந்த பின்னும் உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றன" என்கிறது தைத்திரீய உபநிஷதம்...
விருந்தாளி ஒருவர் நம் இல்லத்திற்கு வர நேர்ந்தால் அவருக்கு உணவளித்து வரவேற்று உபசரிப்பது ஒரு சிறந்த கடமையாகக் கருதப்படுகின்றது... செல்வம், சொத்து, உடை முதலான மற்றவித தானங்கள் செய்வதற்கு விவேகம் தேவைப்படுகின்றது... ஆனால் உணவின் விஷயத்தில் அத்தகைய யோசனைகள் எதுவும் தேவையில்லை... மத்தியான நேரத்தில் யார் வேண்டுமானாலும் நமது இல்லத்திற்கு வரட்டும். நம்மால் முடிந்தளவு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும்...அதிலும் முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்களான ஆண்டிகள், முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்பட வேண்டும்...முதலில் குறிப்பிட்டோருக்கு உணவளிப்பதால் உண்டாகும் புண்ணியம் பின்னால் குறிப்பிட்டவர்களுக்கு அளிப்பதைவிட மிகவும் சிறப்பானது.... தானத்தில் அன்னதானமே சிறந்தது...
அன்னதானம் இல்லாத மற்ற தானங்களெல்லாம், நிலவற்ற நஷத்திரங்கள் போன்றும், பதக்கமற்ற அட்டிகை போன்றும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும், தாமரையற்ற குளத்தைப் போன்றும், பக்தியற்ற பஜனையைப் போன்றும், குங்குமமற்ற சுமங்கலியைப் போன்றும், இனிமையான சாரீரமில்லாத பாடலைப் போன்றும், உப்பற்ற தயிரைப் போன்றே இருக்கின்றது...வரண் என்கின்ற பருப்பு சூப் மற்ற பதார்த்தங்களையும் விடச் சிறந்திருப்பதைப் போன்று, மற்ற அனைத்து புண்ணியங்களையும் விட அன்னதானமே சிறந்திருக்கின்றது. இப்போது பாபா எங்ஙனம் தானே உணவு சமைத்து, அதை தன்னுடைய புனிதக் கரங்களினால் வினியோகித்தார் என்பதைக் காண்போம்....
பாபாவுக்காக சிறிதளவே உணவு தேவைப்பட்டது என்றும், அவருக்குத் தேவையானதும் சில வீடுகளில் பிக்ஷையெடுத்துப் பெறப்பட்டது என்பதும், முன்பே எடுத்துக் கூறினோம்...ஆயின் அனைவருக்கும் உணவளிக்க வேண்டுமென்று பகவான் தீர்மானித்ததால், பாபா தானாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றார்... இந்த விஷயத்தில் பாபா யாரையும் சார்ந்திருக்கவோ, தொல்லைப்படுத்தவோ இல்லை...முதலில் கடைவீதிக்குச் சென்று சமைப்பதற்குத் தேவையான அனைத்து பொருட்கள் எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்குகிறார்.. கோதுமை அரைத்தலையும் தாமே செய்கின்றார்...
மசூதிக்கு முன்னாலுள்ள திறந்தவெளியில், ஒரு பெரிய அடுப்பை வைத்து நெருப்பை மூட்டி அதற்குமேல் ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை சரியான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கின்றார்..இரண்டு விதமான ஹண்டிகள் இருந்தன... ஒன்று சிறியது.. மற்றொன்று பெரியது.. சிறியப் பாத்திரத்தில் ஐம்பது பேருக்கு உணவளிக்க ஏற்றது..பெறியதில் நூறுப் பேருக்கான உணவை தயார் செய்யலாம்..சில சமயம் பாபா மிட்டா சாவல் என்னும் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்தார்... மற்றும் சில சமயங்களில் அனைத்து கலந்த புலவு என்ற உணவை மாமிசத்துடன் சமைத்தார்... சில சமயங்களில் கொதித்துக் கொண்டிருக்கும் வரண் என்னும் சூப்பில், கோதுமை மாவை சிறு உருண்டைகளாகவோ, அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்கவிட்டார்...வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போட்டார்... உணவை மிகவும் சுவையானதாக்க அவர் எல்லாச் சிரமங்களையும் எடுத்துக்கொண்டார்... ஜவ்வாரி (கேழ்வரகு) மாவைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு அதைத் தயிருடன் கலந்து அம்பீல் (கூழ்) தயார் செய்தார்... உணவுடன் இந்த அம்பீலை ஒரே மாதிரியாக விநியோகித்தார்... உணவு ஒழுங்காக வேகிறதா என்பதைச் சரிபார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டுக் கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும், பக்கங்களிலும் கலக்கிவிடுகிறார்.
கை வெந்ததற்கான எந்த அடையாளத்தையோ, முகத்தில் பயத்தின் எவ்விதச் சாயலையோ காணமுடிவதில்லை...சமையல் முடிந்ததும், பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டுவந்து உரியமுறையில் மௌல்வியைக்கொண்டு புனிதமாக்கினார்...முதல் உணவின் ஒரு பகுதியை மகல்சாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் அனுப்பிவிட்டு மிச்சத்தை எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் உளம் நிறையும் வண்ணம் தமது கரங்களினால் பரிமாறினார்... பாபா தாமே சமைத்த உணவை, தமது கரங்களினால் பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.. அதிர்ஷ்டசாலிகள்.. இத்தருணத்தில் ஒரு சிலர் சந்தேகத்துடன் ஆராயலாம்.. பாபா காய்கறிகளையும், அசைவ உணவையும் பிரசாதமாக தமது அடியவர்களுக்கு ஒரே மாதிரியாகவா வழங்கினார்? விடை வெளிப்படையானதும், எளிதானதுமாகும்... அசைவ உணவை உண்பவர்களுக்கு ஹண்டியிலிருந்து பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது...அசைவ உணவு சாப்பிடும் பழக்கமில்லாதவர்கள், எவரையும் அதைத்தொட அனுமதிப்பதில்லை. இவ்வுணவை விசேஷமாக அனுசரிக்க அவர் அவர்களிடம் எவ்வித விருப்பத்தையோ, ஆவலையோ தூண்டிவிட்டதில்லை..
🔥குருபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தாதா கேல்கரிடம், பாபா தன்மீது வைத்திருந்த குருபக்தியை சோதிக்கும் விதமாக , என்ன வாக்குருதிகளை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..🔥
குருவே பிரசாதமாக எதையாவது அளிக்கும்போது, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா, இல்லையா என்று எண்ணுபவன் நரகத்தை அடைகின்றான் என்னும் ஒரு கொள்கை நன்றாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. இந்தக் கொள்கையை எந்த ஒரு சீடனும் எவ்விதம் மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிய சில நேரங்களில் பாபா சோதனைகள் நடத்துவார்... உதாரணமாக பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேல்கரிடம் சில ரூபாய்கள் கொடுத்து, அவரையே நேராக கொரலாவுக்குச் சென்று அங்கிருந்து மாமிசம் வாங்கிவரும்படி கூறினார்...இந்த தாதா கேல்கர் ஒரு வைதீக பிராமணர்...எல்லா வைதீகச் சம்பிரதாயங்களையும் வாழ்க்கையில் அனுசரித்தவர்.. செல்வம், தானியங்கள், உடை முதலியவைகளை சத்குருவிற்குச் சமர்ப்பிப்பதெல்லாம் போதாதென்றும், முழுநிறை நம்பிக்கையுடன் கீழ்ப்படிதலும்,குருவின் உத்தரவுகளை சரி நுட்பமாக நிறைவேற்றுதலுமே, சத்குருவை மிகவும் மகிழ்விக்கும் உண்மையான தக்ஷிணையாகும் என்பதை தாதா கேல்கர் அறிவார்.
எனவே தாதா கேல்கர் உடைகளை உடுத்திக் கொண்டு அவ்விடத்திற்குப் புறப்பட்டார்...பிறகு பாபா அவரைக் கூப்பிட்டு "நீயே போகாதே... யாரையாவது அனுப்பு" என்று கூறினார்... இதன் பேரில் தாதா, தமது வேலையாள் பாண்டுவை இதற்காக அனுப்பினார்... பாபா அவரையும் திரும்பி வருமாறு கூறி, அதையும் ரத்து செய்துவிட்டார்... மற்றொரு சந்தர்ப்பத்தின்போது 'புலவ்' என்னும் மாமிசக்கறியில் உப்பு சரியாக இருக்கிறதா என்பதைச் சற்று சுவைத்துப் பார்க்கும்படி பாபா தாதாவைக் கேட்டார். பின்னர் சாதாரணமாகவும், முறைக்காகவும் அது சரியாக இருக்கின்றது என்று கூறினார்...அதற்கு பாபா, நீ அதைக் கண்ணால் பார்த்ததோ, நாவால் சுவைத்ததோ கிடையாது...பின்னர் அது சுவையாய் இருக்கிறது என்று எப்படி உன்னால் உரைக்கமுடியும்...பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார் என்று கூறிக்கொண்டே, பாபா அவரது கையைப் பிடித்து பானைக்குள் அழுத்தி, "கையை முன்னால் நீட்டி கரண்டியை எடுத்து, வைதீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பதறாமல், கொஞ்சம் எடுத்து சாப்பாட்டில் போட்டுக்கொள்" என்றார்.
தாய்க்கு குழந்தையிடம் ஒரு உண்மையான அன்பின் அலை தோன்றும்போது, அதைக் கிள்ளிவிட்டு அழத் தொடங்கியதும் தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்... அவ்வாறே பாபா உண்மையான தாய் என்ற முறையில் தாதா கேல்கரை இவ்விதமாகக் கிள்ளிவிட்டார். உண்மையில் எந்த ஞானியோ அல்லது குருவோ தடுக்கப்பட்ட உணவைத் தமது வைதீகச் சீடனை உண்ணும்படி வற்புறுத்தி அதன்மூலம் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்ளமாட்டார்...இந்த ஹண்டி விவகாரம் 1910ஆம் ஆண்டுவரை சிலகாலம் நடந்தது... பிறகு நின்றுவிட்டது...முன்னரே கூறியதைப் போன்று தாஸ்கணு என்பவர், பாபாவின் புகழை பம்பாய் மாகாணமெங்கிலும் தம் கீர்த்தனைகளால் பரப்பினார்... அப்பகுதியிலிருந்து சீரடிக்கு மக்கள் திரளாக வந்து கூடத்தொடங்கினர்.. சீரடி சில நாட்களுக்குள்ளாகவே ஒரு புனித ஷேத்திரம் ஆகிவிட்டது...பக்தர்கள் வெகுமதி அளிப்பதற்காக பல்வேறு பொருட்களைக் கொணர்ந்தனர்... வெவ்வேறு உணவு வகைகளை நிவேதனமாகச் சமர்ப்பித்தனர்...அவர்கள் அவ்வாறு அளித்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் பக்கிரிகளும், ஆண்டிகளும் வயிறு புடைக்க உண்டுவிட்டப் பின்பும் மீதி இருக்கும் அளவு இருந்தது...மேலும் உள்ளூரில் இருந்த கோவில்களின் மீதும், தெய்வங்களின் மீதும் பாபாவுக்கு எத்தகைய மரியாதையும், ஆர்வமும் இருந்தது என்பதை விளக்கும் நானா சாஹேப் சாந்தோர்கரின் அனுபவ உரையை கீழே காண்போம்..
🔥தன் பக்தர்கள் பேதமின்றி, பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தன்னை எந்த இனம் மற்றும் மதம் சார்ந்த எவ்வித ஒப்பிடுதலும், அடையாளமும் இல்லாமல், எவ்வாறு சாட்சியாக வாழ்ந்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே...🔥
சிலர் தங்களுக்கே உரியமுறையில் அனுமானித்துக் கொண்டும், யூகித்துக் கொண்டும் சாயீ ஒரு பிராமணர் என்றும், சிலர் அவர் ஒரு முகம்மதியர் என்றும் கூறினர்... உண்மையில் அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல...எப்போது எந்த சாதியில் பிறந்தார் என்பதையும், மேலும் அவரது இனம், மொழி,மதம் பெற்றோர் யார் என்பதையும் ஒருவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.
முன்பே அத்தியாயம் ஏழில் உள்ள பாபாவின் சொந்த கூற்றுப்படி, அவர் பிராமணர் என்றாலும் பரமாத்மாவிடம் தன்னை முழுவதும் சரணாகதிசெய்து, அகங்காரத்தையும், தேகம் மற்றும் உணர்வின் மீதுள்ள பற்றுக்களை ஒழித்து, பரமாத்மாவுடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம், மொழி, இனம், என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை...பின்னர் அவர் எவ்வாறு ஒரு பிராமணராகவோ, முகம்மதியராகவோ இருக்கமுடியும்? அவர் ஒரு முகம்மதியர் என்றால், மசூதியில் அணையாமல் எப்போதும் துனியை எப்பொழுதும் எவ்வாறு எரியவைத்துக் கொண்டிருக்க முடியும்? மேலும் மசூதியில் துளசி பிருந்தாவனம் எவ்வாறு இருக்க முடியும்..?சங்கோசை, மணி ஓசை, இன்னிசைக்கருவிகள் ஆகியவைகளை அனுமதிக்க முடியும்..? மேலும் பாபா இந்து வழிப்பாட்டு முறைகளின் அனைத்து சாஸ்த்திர சம்பிராதயங்களையும், அம்சம்களையும் எங்ஙனம் நடத்தியிருக்க முடியும்..? அவர் ஒரு முகம்மதியராக இருந்தால், அவர் காதுகள் குத்தப்பட்டிருக்குமா..? ஹிந்து கோவில்களைச் செப்பனிடத் தம் கையில் இருந்த பணத்தை அவர் செலவு செய்திருக்க முடியுமா..? மாறுபாடாக ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் மதியாமல் இருப்பதை அவர் சிறிதும் சகிப்பதில்லை...
🔥எம்மதமும் சம்மதம் என்று போதித்து, அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளையும் ஒருசேர நடத்தி, அதனை நிரூபிக்கும் வகையில், தன்னை தரிசனம் செய்ய வந்து நானா சாஹேப் என்ற ஆத்மார்த்தமான பக்தரிடம் , எவ்வாறு அவர் தரசிக்காமல் வந்த தெய்வத்தைப் பற்றி சூட்சமமாக உணர்த்தி உபதேசம் செய்ததைப் பற்றிய அனுபவ உரை..🔥.
ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கர் பினிவாலே என்ற தனது ஷட்டகருடன் சீரடிக்கு வருகைப் புரிந்தார்...அவர்கள் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாபா திடீரென்று நானா சாஹேபின் மீது கோபம் அடைந்தார்... "நீ இவ்வளவு காலம் எனது கூட்டுறவில் இருக்கிறாய்...எங்ஙனம் நீ இவ்விதம் நடந்துக் கொள்கிறாய்..?" என்று சாஹேப்பிடம் கேட்டார்... முதலில் நானா சாஹேப்பிற்கு ஒன்றும் புரியவில்லை... தாழ்மையுடன் விளக்கும்படி கேட்டுக்கொண்டார்... பாபா அவரை கோபர்காவன் எப்போது வந்தாரென்றும், அங்கிருந்து சீரடிக்கு எங்ஙனம் வந்தாரென்பதையும் கேட்டார்...உடனே நானா சாஹேப் தன் தவறைப் புரிந்துக் கொண்டார்...அ வர் சீரடிக்கு வரும்போதெல்லாம் கோபர்காவனில் இருக்கின்ற கோதாவரிக் கரையிலுள்ள தத்தரின் கோவிலை வழிபட்டு வருவது வழக்கம்... ஆனால் இம்முறை தத்தரின் பக்தரான தனது உறவினரையும், அக்கோவிலுக்குப் போகாமல் தடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு சீரடிக்கு நேரடியாக வந்துவிட்டார். இக்குற்றத்தை எல்லாம் அவர் பாபாவிடம் ஒப்புக்கொண்டு, கோதாவரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரியமுள் அவர் பாதத்தில் குத்தி விட்டதனால், அது அவருக்கு மிகுதியான தொல்லையைக் கொடுத்தது என்று கூறினார். பாபா அது அவருக்கு லேசான தண்டனை என்று கூறி எதிகாலத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கூறினார்.
🔥பக்தர்களுடைய அனைத்து நிவேதனமும் ஒன்றாக கலந்து கதம்பக் கூட்டாக சேர்த்து, எவ்வாறு பாபாவின் ஆசியால் புனிதமாக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது என்பதன் அனுபவ உரை.🔥
நிவேதனம் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் நிகழ்விற்குத் திரும்புவோம்...ஆரத்தி நிகழ்ச்சி முடிந்த பின்னர் பாபா, அனைவருக்கும் உதியை வழங்கி, ஆசீர்வாதம் செய்து அனைவரையும் அனுப்பிய பிறகு, உள்ளே சென்று, நிம்பாரில் தமது முதுகைச் சாய்த்துக் கொண்டு இரண்டு வரிசையுள்ள பந்தியுடன் அமர்ந்திருப்பார்... நிவேதனம் கொண்டு வந்த பக்தர்கள் பூரி, மாண்டி, போளி, பாஸந்தி, சன்ஸா, சோறு முதலியவை உள்ள தங்களது உணவுப் பதார்த்தங்களை ஆவலுடன் உள்ளே அனுப்புவார்கள்.
பாபாவினால் புனிதமாக்கப்பட்ட உணவின் பிரசாதத்திற்காக வெளியே காத்துக் கொண்டிருப்பார்கள்...எல்லா உணவுகளும் கதம்பக் கூட்டாகக் கலக்கப்பட்டு பாபாவின் முன் வைக்கப்படும்....அதை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்து புனிதப்படுத்துவார்...பாபாவின் கரங்களினால் ஆசிர்வதிக்கப்பட்ட கதம்ப உணவை, வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு, மீதம் உள்ளே பாபா நடுநாயகமாக அமர்ந்திருக்கும் மக்களுக்குப் பரிமாறப்படும்...இரண்டு வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களும் வயிறார உண்பார்கள்.. புனிதமாக்கப்பட்ட உணவை உள்ளே அமர்ந்திருக்கும் அனைவருக்கும், ஒவ்வொருவரின் தேவையை அறிந்து கவனித்துப் பரிமாறும்படி நானா சாஹேப் நிமொண்கரையும், ஷாமாவையும் பாபா தினந்தோறும் கேட்டுக்கொள்வார்...அவர்கள் இதை மிகவும் ஜாக்கிரதையாகவும், பிரியத்துடனும் செய்வார்கள்....இவ்வாறு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கவள உணவும் அடியவர்களுக்குப் போஷாக்கையும், திருப்தியையும் தந்தது. எத்தகைய இனிமையான, விருப்பமான, புனிதமாக்கப்பட்ட உணவு அது..! எப்போதும் புனிதமானது, தெய்வீகமானது.
🔥பாபாவின் திருக்கரத்தால் வழங்கப்பட்ட மோரை குடித்து மகிழ்ந்த ஹேமாட்பந்த், புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை இயற்றி பக்தர்கள் அனைவரும் கடைத்தேற்றம் அடைய காரணமாக இருந்தார் என்பதை உணர்வதற்கான சிறிய குறிப்புரை..🔥.
ஒருமுறை மதியம் நேர உணவருந்தும் நேரத்தின் போது, ஹேமாட்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார்.. அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் வழங்கினார்..அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது... ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக மோரை அருந்தினார்..மிகவும் சுவையாக இருந்தது.. ஆனால் அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு.... இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார்... அப்போது ஹேமாட்பந்த் அதை முழுக்கவும் பருகினார்... பாபாவின் கூற்று தீர்க்க தரிசனமானது என்று பின்னாளில் உணர்ந்துக் கொண்டார்..ஏனெனில் பாபா அதன் பிறகு விரைவில் மகாசமாதியடைந்தார்...
இப்போது பக்தர்கள் அனைவரும் ஹேமாட்பந்திற்கு நன்றி செலுத்த வேண்டும்.. அவர் பாபா வழங்கிய மோரை அருந்தினார்... அதனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு சாய்சரித்திரம் என்கின்ற அமிர்தத்தை நமக்கு வழங்கினார்.. ஆகவே ஹேமாட்பந்த் நமக்கு வழங்குகின்ற சாய்சரித்திரம் என்ற புனித வேத அமிர்தத்தை நாம் அனைவரும் பாராயணம் செய்வோம். அதனால் திருப்தியடைந்து மகிழ்வோம்... உயரிய நிலையை அடைவோம். பாபாவின் பாதக் கமலத்தில் ஆத்மார்த்தமாக சரணாகதி அடைவோம்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக.. அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக