ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🏼🙏🏼
🙏 ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம் ::நாற்பத்தொன்பது (49)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்... ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு:: ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்...
மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...
அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் ::நாற்பத்தொன்பது(49)🙏
🙏முன்னுரை..🙏
சத்குருவைத் தியானித்து, ஆத்மார்த்தமாக சரணாகதி அடைவதன் மூலமாக, எவ்வாறு மாயை, கர்மவினையின் தாக்கம் மற்றும் சம்சாரப் பந்தத்திலிருந்து விடுபட்டு உயரிய நிலையை அடைகின்றோம் என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரை..
எந்தவிதக் குறிக்கோளும் இன்றி தன்னை சோதிக்க வந்த பக்தர் ஹரி கானோபா என்பவரின், தொலைந்தக் காலணிகளை சிறுவன் மூலம் மீட்டுக் முகவரியைக் கூறிக் கொடுக்க வைத்த பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவைக் கண்டு வியந்து மேன்மேலும் சரணாகதி அடைந்ததைப் பற்றிய நிகழ்வின் அனுபவ விளக்கவுரை....
சோமதேவ் சுவாமி அவர்கள், பாபாவைக் காண வேண்டும் என்று ஆவலினால் சீரடிக்கு வருகைப் புரிந்தப் போது, அங்கே கொடிகள் பறப்பதைக் கண்டவுடன் ஞானி என்பவர் கொடிகள் மீது ஏன் ஆர்வம் கொள்ள வேண்டும் என்று நினைத்த காரணத்தினால், சோமதேவ் சுவாமி அவர்கள் பகவானை சந்தித்த போது, பாபா சுவாமி மீது முதலில் கோபம் கொண்டு, பிறகு ,ஆசி வழங்கியதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..
நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தர், பாபாவை தரிசிக்க வந்த பெண்மணியின் அபூர்வ அழகினால் பாதிக்கப்பட்டு நிலைக் குலைந்து போனதைத் கண்ட பாபா, உள்ளம் தூய்மையாகவும், கெட்ட எண்ணமும் இல்லையென்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று அறிவுரைக்கூறி, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை ...
மேற்க்கண்ட தலைப்புக்களைப் பற்றிய விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...
🔥சத்குருவைத் தியானித்து, ஆத்மார்த்தமாக சரணாகதி அடைவதன் மூலமாக, எவ்வாறு மாயை, கர்மவினையின் தாக்கம் மற்றும் சம்சாரப் பந்தத்திலிருந்து விடுபட்டு உயரிய நிலையை அடைகின்றோம் என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥
வேதங்களும், புராணங்களும் கூட பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது...அவ்வாறென்றால் ஏதுமறியாதவர்களாகிய நாம், எங்ஙனம் நமது சத்குரு சாயீபாபாவைப் பற்றிய சிறப்பு இயல்புகளையும், அருட்செயல்களையும், பாபாவின் ஏகத்தன்மைகளையும் விவரிக்க இயலும்.? இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகின்றோம்.. உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும்..ஆனால் நம் சத்குருநாதர் பாபாவின் உயரிய நல்ல பண்புகளும், மிகுந்த தாய்மையுணர்வும், பேதமின்றி அனைத்து பக்தர்களையும் நேசிக்கும் பாங்கும், நம்முடைய மௌன விரதத்தை மறக்கச்செய்து நாவால் ஏதாவது உரைக்குமாறு ஊக்குவிக்கின்றன... நண்பர்கள், உறவினர்கள் போன்றோர்கள் நம்மோடு இருந்து உண்ணவில்லை என்றால், நல்ல ருசியான உணவுக்கூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை...ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உணவை உண்டால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன. சாயீ லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயீ லீலாம்ருதமும் இது போன்றதே...இந்த சாயீன் அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ண முடியாது..அனைத்து சாயீன் அடியவர்களும் ஒன்றுச்சேர்ந்து, எவ்வளவு சாயீன் அமிர்தத்தைப் போன்ற உபதேச அமுத மொழிகளையும், லீலைகளையும் பருக முடியுமோ, அவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொண்டால் எளிதில் உயரிய நிலையை அடைய ஏதுவாக இருக்கும்..
இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும், தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும், பாபாவின் அனுக்கிரகம் ஆசியும் இருப்பதால் மட்டுமே என்பதே உண்மை....சத்குருவிடம் பரிபூரண சரணாகதி அடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது தலையாயக் கடமை என்றுக் கூறலாம்... க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும் விட தவமிருத்தல் நல்லது..மேலும் தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம்...
இவையனைத்தையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது..ஆகவே சாயீயின் நாமத்தை ஸ்மரணம் செய்து, அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக..மாயை, கர்மவினையின் தாக்கம், மற்றும் சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை என்று அறிவீர்களாக.. மேலே கூறியவாறு நமது கடமையைச் சரிவர செய்தோமேயானால் சாயீநாதர் நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர் ஆவார்... இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்...
🔥எந்தவிதக் குறிக்கோளும் இன்றி தன்னை சோதிக்க வந்த பக்தர் ஹரி கானோபா என்பவரின், தொலைந்தக் காலணிகளை சிறுவன் மூலம் மீட்டுக் முகவரியைக் கூறிக் கொடுக்க வைத்த பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவைக் கண்டு வியந்து மேன்மேலும் சரணாகதி அடைந்ததைப் பற்றிய நிகழ்வின் அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்🔥
பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபா புரிந்த லீலைகளைப் பற்றி கேள்வியுற்றார்.. அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை..அவர் பாபாவைத் தாமே சோதிக்க விரும்பினார்...எனவே சில பம்பாய் நண்பர்களுடன் சீரடிக்கு வந்தார்... ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார். பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துப்பணிய எண்ணினார்..இருப்பினும் தமது புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை..எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று காலணிகளை கழட்டி வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்...பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதீயும், பிரசாதமும் பெற்றுக் கொண்டு திரும்பினார்..அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார்..அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.. ஆகவே தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துப் போய்த் திரும்பினார்..
குளித்து வழிப்பட்டு நிவேதனம் சமர்ப்பித்து விட்டு, உணவுக்காக அமர்ந்தார்..ஆயினும் நீண்ட நேரம் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை...உணவை முடித்துக் கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.அவனது கையில் ஒரு கோல் இருந்தது..அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன....கை கழுவ வெளியே வந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், 'ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா..!' ('க' என்பவரின் புதல்வரான ஹரியே..! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே..!) என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும், அவர் 'க'வின் அதாவது கானோபா புதல்வர்தானா என்றும், ஜரிகை தலைப்பாகை அணிபவர் தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை உரியவரிடம் கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் கூறினான்....இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார்...அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார்...தனது பெயர் ஹரி என்றும், தாம் 'க'வின் அதாவது கானோபாவின் புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்....
உடனே சிறுவன் திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.. தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது..எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம்...ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக சீரடிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக் கூடும் என மனதில் நினைத்து ஒரு கணம் வியந்தார்..வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி, பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தார்..இந்நிழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார்...அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்...
🔥சோமதேவ் சுவாமி அவர்கள், பாபாவைக் காண வேண்டும் என்று ஆவலினால் சீரடிக்கு வருகைப் புரிந்தப் போது, அங்கே கொடிகள் பறப்பதைக் கண்டவுடன் ஞானி என்பவர் கொடிகள் மீது ஏன் ஆர்வம் கொள்ள வேண்டும் என்று கருதியதன் காரணமாக, சோமதேவ் சுவாமி அவர்கள் பகவானை சந்தித்த போது, பாபா சுவாமி மீது முதலில் கோபம் கொண்டு, பிறகு ஆசி வழங்கியதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥
பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள்..காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார்..1906-ஆம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார்...இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக் கொண்டனர்..ஐந்தாண்டுகளுக்குப் பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார்..பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்..
சீரடிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆவல் எழுந்தது.. பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, சீரடிக்குக் கிளம்பினார்.. மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக் கொண்டு சீரடிக்குச் சென்றார்...சீரடிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார்... வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம்.. ஆயின் இப்புறச் சின்னங்கள் ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா. ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில் அது வேறு விதமாய் இருந்தது...கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்.? இது துறவையா உணர்த்துகிறது...? இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்...
இவ்வாறாக அவர் தமது சீரடி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார்..அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும். கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது, சீரடியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்கள் அனைத்தையும் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைக் குலையும்" என்றார்கள்... இதைக்கேட்டு ஸ்வாமி மேலும், குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு போன்ற படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, (அனேகரைக் கண்டிருக்கிறேன்)...அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிச் செல்வதே எனக்கு நன்று" என்றுரைத்தார்.. இதைக் கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார்...உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்...
பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், நாம் தரிசனம் செய்யப்போகும் சாதுவாகிய பாபா எவ்வித கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர்...அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர்..முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து, சீரடிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர்.... பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க, குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின. "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகின்றதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுக் கூர்ந்தார்... பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும்....நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ. இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை. மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்...? இது துறவின் அறிகுறியா...? இங்கே கணமேனும் இருக்காதே" என்றார். ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்..
பாபா தன் எங்கும் நிறைந்த பேரறிவால் தமது உள்ளத்தில் இருப்பதை அறிந்துப் பேசுகின்றார் என்று உணர்ந்தார்....எத்தகைய நிறைப் பேரறிவுடையவர் அவர்! தாம் ஞானமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார்...சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார்...தான் மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்...? அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து, இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேற வேண்டுமென நினைத்தார்... பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே. பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு, பாபாவின் மீது முற்றிலும் பற்று உறுதியுள்ள அடியவராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது...
🔥நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தர், பாபாவை தரிசிக்க வந்த பெண்மணியின் அபூர்வ அழகினால் பாதிக்கப்பட்டு நிலைக் குலைந்து போனதைத் கண்ட பாபா, உள்ளம் தூய்மையாகவும், கெட்ட எண்ணமும் இல்லையென்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று அறிவுரைக்கூறி, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை ...🔥
நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமாட்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கின்றார்...ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மகல்சாபதி மற்றவருடன் அமர்ந்திருக்கையில், பீஜாப்பூரிலிருந்து ஒரு முகமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார்...கோஷா (பர்தா) அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பெண்களைக் காண நேரலாம் என்றுக் கருதி வேறிடம் சற்று நேரம் போய்விட விரும்பினார். ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார்.. அந்தப் பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர்... பாபாவின் பாதங்களை வணங்குவதற்காக, அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார்...அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பகவான் அவரை நோக்கி, நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய்..புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும்.. நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம்...கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார்..அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்...இவ்வாறு இருந்தால் மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும்...முன் கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும்...உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்தில் எவ்வகையிலும், எவ்விதக் கஷ்டமும் இல்லை... நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்..? கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்..?" என்றார்.
ஷாமா அவ்விடத்தில் இருந்தார்...பாபா கூறியதன் பொருளை அவரால் உணர்ந்துக் கொள்ள இயலவில்லை.. எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார்...நானா கூறுகின்றார்..நான் இங்கு பகவானை தரிசிக்க வந்த அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கம் அடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து, அதைப்பற்றி என்ன அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார்..மேலும் பாபா அறிவுருத்தியதைப் நானா இவ்வாறாக மேலும் விளக்கினார். ."அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது...அதைத் தான்தோன்றித் தன்மையுடன் போக அனுமதிக்கக் கூடாது... உணர்வுகள் குழப்பமுறலாம்..ஆயினும் மனதை விழிப்புணர்வுடன் கவனித்துக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும்... பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது....
விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன..ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது...பொருமையான, படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிக்காண இயலும்... உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது...ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது. தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே...பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும்..வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை...கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது.. பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும்... இவ்வாறாக அனைத்து உணர்வுகளும் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டு விடும்... இவ்வாறாக பயிற்சி மேற்க்கொண்டால், அனைத்து வித பொருள் மற்றும் தேகம் சார்ந்ததை அனுபவிப்பதில் கூட நீங்கள் இறைவனைப் பற்றி ஞாபகப்படுத்தப் படுவீர்கள்...வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித் தொடர அனுமதிக்கப்பட்டு, அவைகள்பால் பற்றுக் கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது....புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது.. .விவேகம் என்னும் சாரதியைக் கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம்... அத்தகையதொரு சாரதியின் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்த பாபாவின் திருவடிகளை எய்துவோம்" என்றார்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக