ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, மே 21, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் ஒன்பது

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏼அத்தியாயம்::ஒன்பது(9)🙏🏼

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன்  புனித வேதநூல் என்பது  சாய் சத்சரித்திரம் என்பதாகும்..பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்..வேதப்  பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்.... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🙏🏼🙏🏼

🙏🏼அத்தியாயம்.:ஒன்பது(9)🙏🏼

🙏முன்னுரை...🙏

பகவானை காண வரும் பக்தர்கள், விடைபெறும் போது  பாபாவின் ஆணையை  எவ்வாறு பின்பற்றி நடந்தனர்..அவ்வாறு பகவானின் ஆணைக்கு கீழ்ப்படியாது போனவர்கள் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிட்டது என்பதன் விளக்கவுரை ..

பகவான் மதுகரீ பிக்ஷை எடுத்ததன் மூல சூட்சம விளக்கம்..மற்றும் பகவானுக்கு பிக்ஷை வழங்கியவர்கள் , எவ்வாறு துன்பத்துயரங்கள் நீங்கப் பெற்று பேறுபெற்றவர்கள் ஆனார்கள் என்பதைப் பற்றிய  விளக்கவுரை....

ஆத்மார்த்தமான  உயரியப் பக்தர் தர்கட்  குடும்பத்தில் பகவானை எவ்வாறு பூஜித்த விதமும்,  பகவான்  அப்பூஜையை  ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளிக்காமல் விடுத்த நிவேதனத்தை அறிவுருத்தி பெற்றுக்கொண்டதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே பார்க்கலாம்...

🔥முதலில் பகவானை காண வரும் பக்தர்கள், விடைபெறும் போது  பாபாவின் ஆணையை  எவ்வாறு பின்பற்றி நடந்தனர்...அவ்வாறு பகவானின் ஆணைக்குக் கீழ்ப்படியாது போனவர்கள் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிட்டது என்பதன் விளக்கவுரை.. 🔥

சீரடி  புனித யாத்திரையின் ஒரு சிறப்பான வினோதம் என்னவென்றால் எவரும் சீரடியை விட்டு பாபாவின் அனுமதியின்றி அவர்கள்  இருப்பிடத்திற்கு  செல்லமுடியாது.. அப்படிச் செல்வாரேயானால், அவர் சொல்லற்கரிய தொல்லைகளை வரவேற்கிறார்...ஆனால் எவரேனும் சீரடியைவிட்டு  வெளியேறிச் செல்லும்படி பாபாவால் கேட்டுக் கொள்ளப்பட்டால் அவர் அங்கு அதற்குமேல் தங்கியிருக்கமுடியாது...பக்தர்கள் பாபாவிடம் சென்று வந்தனம் செய்து விடைபெற்றுச் செல்லும்போது பகவான்  சில யோசனைகளை அல்லது குறிப்புக்களை வழங்குவார்... இந்த யோசனைகளை பின்பற்றப்பட வேண்டும்.. இவ்வாறு பகவான் ஆணையை பின்பற்றாமல் இருந்தால்,  ஏதாவது ஒரு விதத்தில் இடர்பாடுகளும், தொந்தரவுகளும்  நேரிடும்.. இதைப்பற்றிய அனுபவங்களைப் பற்றி கீழேப் பார்ப்போம்....  

தாத்யா கோதே பாடீல், ஒருமுறை கோபர்காவன் கடைவீதிக்குக் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார்...அவர் மசூதிக்கு  அவசரமாகத் திரும்பிவந்து  பாபாவை வணங்கி, தான் கோபர்காவன் கடைவீதிக்குச் செல்லப் போவதாகக் கூறினார்...பாபாவோ, "அவசரப்படாதே...சிறிது தாமதித்துக் கடைவீதிக்குச் செல், கிராமத்தை விட்டு வெளியே செல்லாதே" என்று அறிவுருத்தி இருக்கின்றார்...ஆனால்  அவருடைய வேகத்தைக் கண்ட பாபா,ஷாமாவையாவது (மாதவராவ் தேஷ்பாண்டே) உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார்... இந்த உத்தரவை  பொருட்படுத்தாது தாத்யா கோதே, உடனே குதிரை வண்டியை ஓட்டிச் சென்றார்....இரண்டு குதிரைகளில், ரூ.300 விலையுள்ள குதிரை மிகவும் சுறுசுறுப்பாகவும், இருப்புக் கொள்ளாமலும் இருந்தது...சாவ்லிவிஹீர்  என்ற கிராமத்தைத் தாண்டியப் பிறகு குதிரைகள்  தாறுமாறாக ஓடத் தொடங்கியது...  இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டுக் கீழே விழுந்துவிட்டது.. தாத்யா அதிகமாகக் காயப்படவில்லை..  ஆனால் சாயீபாபாவின் உத்தரவை நினைவிலுருத்திக்  கொண்டார்...மற்றொரு சந்தர்ப்பத்தில் கோல்ஹார் கிராமத்துக்குச் செல்லும்போது, பாபாவின் நெறிமுறையை மதிக்காமல் குதிரை வண்டியில் சென்றபோது அதுவும் இதே கதிக்கு இலக்காகியது...  

மேற்கூறிய  நிகழ்வைப் போன்றே ஐரோப்பிய பெருந்தகை ஒருவர்,சீரடிக்கு ஒருமுறை ஏதோ ஒரு குறிக்கோளுடன், நானா சாஹேப்பின் அறிமுகக் குறிப்புடன் வந்தார்...ஒரு கூடாரத்தில் சௌகரியமாகத் தங்கவைக்கப்பட்டார்.. அவர் பாபாவின் முன் மண்டியிட்டு பாபாவின் கையை முத்தமிட விரும்பினார்...எனவே அவர் மூன்றுமுறை மசூதிக்குள் நுழைய முயன்றார்....ஆனால் அவர் அப்படிச் செய்வதை பாபா தடுத்துவிட்டார்..கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து, பாபாவின் தரிசனத்தைச் செய்யும்படி கேட்கப்பட்டார்...தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழாத ஐரோப்பியர், சீரடியைவிட்டு உடனே புறப்பட விரும்பி  பாபாவிடம் விடைப் பெறுவதற்காக வந்தார்.. பாபா அவரை அடுத்தநாள் போகும்படியும், அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார்...மற்ற பக்தர்களும்  அவரை பாபாவின் அறிவுரையின் படியே செல்லுமாறு  வேண்டிக் கொண்டனர்..

இவற்றையெல்லாம் செவிமடுக்காது, அவர் ஒரு குதிரை வண்டியில் சீரடியைவிட்டுப் புறப்பட்டார்...முதலில் குதிரைகள் ஒழுங்காக ஓடின...ஆனால்  சாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியதும், எதிரில் ஒரு சைக்கிள் வந்தது... இதைக்கண்டு குதிரைகள் மிரண்டு வேகமாக ஓடின...  குதிரைவண்டி தலைகீழாகக் கவிழ்ந்து, அந்தப்  ஐரோப்பியப் பக்தர்   கீழே விழுந்து சிறிது தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார்...உடனேயே அவர் காப்பாற்றப்பட்டார்  என்றாலும், தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்காக கோபர்காவன் மருத்துவமனைக்குச் சென்று படுக்க வேண்டியதாயிற்று.. இத்தகைய அனுபவங்கள் கணக்கில் அடங்கா என்றே கூறலாம்...பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள், ஏதோ ஒரு விதத்தில் இடர்பாடுகளையும், விபத்தையும் சந்திக்க நேரிட்டது...பகவான் ஆணைகளுக்கு  கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர்..இதனை அனைத்து பக்தர்களும் பின்பற்றக் கற்றுக்கொண்டார்கள்...

🔥பகவான் மதுகரீ பிக்ஷை எடுத்ததன் மூல சூட்சம விளக்கம்..மற்றும் பகவானுக்கு பிக்ஷை வழங்கியவர்கள் , எவ்வாறு துன்பத்துயரங்கள் நீங்கப் பெற்று பேறுபெற்றவர்கள் ஆனார்கள் என்பதைப் பற்றிய  விளக்கவுரையை  இங்கே காண்போம்....🔥

சீரடி பகவானுடைய  காலடியில் அனைத்தும் இருந்தாலும், உலகத்தை ஆளுகின்ற பேராற்றலாகவும் , கடவுளின் அவதார புருஷராக  இருப்பினும்,  தமது வாழ்நாள் முழுவதும் பகவான் பிக்ஷையெடுக்கும் வழக்கத்தைப் ஏன் மேற்கொண்டவராய் இருத்தல் வேண்டும்...? என்னும் கேள்வி சிலரது உள்ளத்தில் எழக்கூடும்...  இக்கேள்விக்கான  மூல சூட்சம பதிலைப் பார்ப்போம்..  

முதலாவதாக , பிக்ஷையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மனித உயிர்கள்  யார் என்று உற்று நோக்கினால், வம்சாவிருத்தி, செல்வம், புகழ்  என்கின்ற  இம்மூன்று முக்கிய ஆசைகளையும் துறந்து,  பற்றில்லாத் தன்மையுடன் துறவை மேற்க்கொள்பவர்கள்  பிக்ஷையெடுத்து வாழத் தகுதியுடையோர்கள்  என்று நமது சாஸ்த்திரங்கள் அறிவுருத்துகின்றன...இவர்கள் சமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து இல்லத்தில் உண்ண முடியாது. அவர்களுக்கு  உணவை அளிக்க வேண்டிய கடமை இல்லறத்தாரின் தோள்களில் விழுகிறது...

சாய்பகவான்  இல்லறத்தாருமல்ல.. வானப்பிரஸ்தருமல்ல...அவர் பிரம்மச்சர்யம் அனுஷ்டித்த சாட்சியாக, எதிலும் பற்றில்லாத  ஒரு உயரிய மகான் ஆவர்..அதாவது சிறுபருவம் முதற்க்கொண்டே  பகவான்,எதிலும்  பற்றில்லாமல் ஆழ்ந்த தியானத்தில் தனித்திருந்தார்.. இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும்,  தாமே பிரபஞ்ச ஆதாரமும், அழிவற்ற பிரம்மமுமாகிய வாசுதேவனாகவும்  பகவான் இருக்கின்றார்..ஆகவே  பகவானுக்கு இறந்து  உண்ணும் அதாவது பிக்ஷை எடுக்கும்  வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

இரண்டாவதாக,  கீழ்க்கண்ட நிலையின்படி ஐந்து பாவங்களை இல்லறத்தார்கள் உணவை சமைக்கும்  போது  தன்னை  அறியாமலே செய்து விடுகின்றனர்.. அதாவது... 

1..கண்டணீ-- பொடியாக்குதல் 

2. பேஷணீ -- அரைத்தல்  

3. உதக்கும்பி--பானைகளைக் கழுவுதல் 

4. மார்ஜனீ -- பெருக்கிச் சுத்தப்படுத்துதல்

5. சுள்ளீ  - அடுப்பு பற்றவைத்தல்...

மேற்கண்ட செயல்முறைகளில் மூலமாக  ஏராளமான சிறிய கிருமிகளையும், ஜந்துக்களையும் கொல்வதற்கு ஏதுவாகிறது.இவ்வாறாக இல்லறத்தார்கள்  ஓரளவு பாவத்தைச் செய்தவர்கள் ஆகின்றார்கள்.  இப்பாவத்துக்குப் பரிகாரமாக நமது சாத்திரங்கள் ஆறுவகையான தியாகங்களைச் செய்ய அறிவுருத்துகின்றனர்..

அது என்னவென்றால்...

1.  பிரம்மயக்ஞம்.. என்பது  பிரம்மதுக்குச் சமர்ப்பித்தல்

2.  வேத அத்யயனம்.. என்பது  வேத பராயணம்.

3.  பித்ரு யக்ஞம்..  என்பது  மூதாதையர்களுக்குச் சமர்ப்பித்தல்.

4.  தேவ யக்ஞம் -என்பது  தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்..

5.  பூத யக்ஞம்--என்பது  ஜந்துக்களுக்குச் சமர்ப்பித்தல்.. 

6.  மனுஷ்ய அதிதி யக்ஞம்-- என்பது மனிதர்களுக்கும்,அழைக்கப்படாத விருந்தாளிகளுக்கும் சமர்ப்பித்தல்..

சாஸ்திரப்படி இந்தத் தியாகங்களை முறையாக அனுசரித்தால் மனத்தூய்மை பெற்று, ஞானமும், தன்னையுணர்தலையும் பெற உதவும்... பகவான்  வீட்டுக்கு வீடு சென்று பிக்ஷை எடுத்ததன்  மூலம், இல்லறத்தார்க்கு அவர்களின் புனிதக்கடமையை ஞாபகப்படுத்தினார்....  பாபாவால் தங்கள் வீட்டிலேயே இவ்வாறு  பாடம் கற்பிக்கப்பட்டவர்கள் பேறுபெற்ற மனிதர்கள்  ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

மேலும் கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில் "அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம், அல்லது நீரை சமர்ப்பிக்கிறாரோ, அந்தத் தூய்மையான தன்னடக்கமுடைய அன்புக் காணிக்கையானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக்கொள்ளபடுகிறது" என்று கூறியிருக்கின்றார்...

🔥ஆத்மார்த்தமான உயரிய  பக்தரான  தர்கட்  என்பவர்,அவருடைய  குடும்பத்தில் எவ்வாறு  பகவானை பூஜித்தனர்  என்ற விளக்கமும், மற்றும்   பகவான்  அப்பூஜையை  ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளிக்காமல் விடுத்த நிவேதனத்தை அறிவுருத்தி பெற்றுக்கொண்டதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

சாய்பாபாவின் விஷயத்தில் ஓர் பக்தர் உண்மையிலேயே எதையாவது  ஒன்றை சமர்ப்பிக்க ஆவலுடன் காத்திருந்து , பின்னால் அதையே சமர்ப்பிக்க பக்தர்  மறந்துவிட்டார் என்றால், பாபா அவருக்கு அல்லது அவரது நண்பருக்கு அந்தக் காணிக்கை மற்றும் நிவேதனத்தினை  ஞாபகப்படுத்தி, பக்தரை  அளிக்கச்செய்து, அதை பகவான்  ஏற்றுக் கொண்டு பக்தரை ஆசீர்வதிக்கிறார்...
இதுபோன்ற சில நிகழ்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றது...பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம் என்னும்  தர்கட் என்பவர்  சாய்பாபாவின் ஓர் உறுதியான பற்றுள்ள  பக்தர் ஆவார்.. அவருடைய மனைவியும், மகனும் சாய்பாபாவிடம்  சற்று ஆழமாக  அன்பு செலுத்தினர்...ஒருமுறை திருமதி தர்கட்டும், அவர்களது மகனும்  மே மாத  விடுமுறைக்கு சீரடிக்குப் போவது எனத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் மகன் போக விரும்பவில்லை..காரணம் அவன் பாந்த்ரா வீட்டைவிட்டுப் போவானாகில், வீட்டில் சாய்பாபாவின் பூஜை முறையாகக் கவனிக்கப்படமாட்டாது என்று அவன் கருதியதன் காரணமே....ஏனெனில், அவனது தகப்பனார் பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவராதலால் சாய்பாபாவின் பெரிய படத்திற்குப்  பூஜை செய்வதை அவர் இலட்சியம் செய்யமாட்டார் என்று அவன் கருதினான்...  எனினும் தனது மகன் செய்வதைப் போன்று அதே விதமாக, தான் பூஜா கர்மங்களைச் செய்வதாக அவர் உறுதியாக வாக்களித்தப் பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும், மகனும் சீரடிக்குப் புறப்பட்டனர்... 

அடுத்த நாள் (சனிக்கிழமை) தர்கட் அதிகாலையில் எழுந்திருந்து பூஜை செய்வதற்கு முன் நீராடிவிட்டுப் பூஜை அறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பாபா, எனது மகன் செய்த அதே மாதிரியாக நான் பூஜை செய்யப்போகிறேன்.  ஆனால் தயவுசெய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்", என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுகளை நிவேதனமாக  சமர்ப்பித்தார்..  அக்கற்கண்டு பகல் உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது....அந்த நாள் மாலையும், அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் எல்லாம் நலமாகவே நடந்தேறின.. தொடர்ந்து வேலை நாளான திங்கட்கிழமையும் நன்றாகவே கழிந்தது.  தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப் பூஜை செய்தறியாத தர்கட் தன மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம் மிகவும் திருப்திகரமான முறையிலேயே நடந்தேறிக் கொண்டிருப்பதில் தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார்...அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல் காலையில் பூஜை நிகழ்த்தியபின் தனது வேலைக்குச் சென்றார்... மதியம் வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டு பிரசாதம் இல்லாததைக் கண்டார்.  அவர் தமது சமையல்காரனை விசாரித்ததில், காலையில் எவ்வித நிவேதனத்தை பகவானுக்கு  அளிக்க வில்லை என்று அறிந்தார்.. பூஜையின் நிவேதனம் வழங்க  அவர் அடியோடு மறந்துவிட்டிருந்தார்.  இதுகுறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து பூஜையறையில் விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம் தெரிவித்து, அதே நேரத்தில் இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில் வழிகாட்டாததற்காக பாபாவை அவர் கடிந்துகொண்டார்..பின்பு தனது மகனுக்கு உண்மைகளைக் கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் பாதத்தடியில் வைத்து புறக்கணிப்பிற்காகத் தம்மைப் பொறுத்தருள  வேண்டுமாறு எழுதியிருந்தார்.  செவ்வாய்க் கிழமை மதியத்தில் பாந்த்ராவில் இது நிகழ்ந்தது.... 

ஏறக்குறைய இதே நேரத்தில் சீரடியில் மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச் சிறிது முன்பாக பகவான்,  திருமதி தர்கட்டை நோக்கி, "அம்மா, பாந்த்ராவில் உள்ள உனது வீட்டிற்கு ஏதேனும் உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன்.  கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.  எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ் (தர்கட்), நான் உண்பதற்கு ஏதும் விட்டு வைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்தேன்.  எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்", என்று கூறினார்... அப்பெண்மணிக்கு  இது ஒன்றும்  புரியவில்லை..  அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில் பூஜையில்  ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும் புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின் அனுமதியை வேண்டினான்..பாபா இதை மறுத்தார்...எனினும் அங்கேயே அப்பையனைப் பூஜைசெய்ய அனுமதித்தார்....

அப்போது சீரடியில் நிகழ்ந்த விபரங்களையெல்லாம் பற்றி பையன், தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி, வீட்டில் பூஜையை அலட்சியம் செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான்...இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று தாண்டிப்போய் இருவருக்குமே அடுத்தநாள் கிடைத்தன.  இது ஓர் அற்புதமல்லவா...? தற்போது திருமதி தர்கட் அளித்த நிவேதனத்தை பகவான் எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்... அவள் மூன்று பொருட்களைச் சமர்ப்பித்தாள்... அதாவது,

 (1) பரீத் என்பது  கத்தரிக்காய் தயிர் பச்சடி....

 (2) காச்சர்யா என்பது  முழு கத்தரிக்காய் பொரியல்...

(3) பேடா என்பது  பால் கேக்....  இவற்றை பாபா எங்கனம் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.

ஒருமுறை பாபாவின்  பக்தரான, பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் சீரடிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார்.. பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம், திருமதி தர்கட் சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து, சீரடியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும், மற்றதில் காச்சர்யாவும் செய்து, பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள்...  சீரடியை அடைந்தபின்னர், திருமதி புரந்தரே தனது பரீத்துடன் மசூதிக்குச் சென்ற அதே தருணத்தில், பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்து கொண்டிருந்தார்.  பாபா, பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார்.  எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்....

ராதாகிருஷ்ணமாயீக்கு, பாபா காச்சர்யாக்கள் வேண்டுகிறார் என்ற செய்தி அனுப்பப்பட்டது.  அது கத்தரிக்காய் சீசன் இல்லையாதலால் அவள் குழப்பமடைந்தாள்.  கத்தரிக்காயை எப்படிப் பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை.  பரீத்தை யார் கொண்டுவந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது.  காச்சர்யாவைப் பற்றிய பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர்....  எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்....

1915ஆம் வருடம் மார்கழி மாதத்தில் கோவிந்த் பாலாராம் மாநகர் என்பவன் தனது தந்தையின் திவசங்களையெல்லாம் செய்வதற்காக, சீரடிக்குச் செல்ல விரும்பினான்.  புறப்படுவதற்குமுன் திருமதி தர்கட்டைப் பார்க்க வந்தான்..அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட் நினைத்தாள்.  வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நிவேதனமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை.. பையன் கோவிந்த் மிகவும் துயர் கொண்ட நிலையில் இருந்தான்... எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அவனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள்.. பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்...  

கோவிந்த் சீரடிக்குச் சென்று பாபாவைக் கண்டான்... ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.  பாபா பொறுத்திருந்தார்.  மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டுசெல்லாமல் வெறுங்கையுடன் சென்றான்... பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய், "எனக்கு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்", என்று கேட்டார்..  "ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது. மீண்டும் பாபா அவனைக் கேட்டார். அதே பதில்தான் அளிக்கப்பட்டது.  பின்னர் பாபா, "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா..?", என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார்.  உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது.  வெட்கமடைந்து பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு,  தான் இருந்த இடத்திற்கு ஓடிப்போய் பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் கொடுத்தான்....கையில் அதைப் பெற்றவுடனேயே, பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார்.  இவ்வாறாகத் திருமதி தர்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  "மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்" (கீதை அத். 4, ஸ்லோகம் 11) என்பது இந்நிகழ்ச்சியால் நிரூபிக்கப்பட்டது... 

ஒருமுறை திருமதி தர்கட் சீரடியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார்.  மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது.  திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது...பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாய்பாபா அவளிடம், "அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன.  இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக...இது உன்னை நன்னிலையில் வைக்கும்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன்.  என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாயாக....

முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்தப்பின் நீ உண்பாயாக...  இதை நன்றாகக் கவனித்துக்கொள்", என்று கூறினார்...முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை...எனவே அவள், "எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்...?  நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்", எனக் கூறினாள்...இதற்கு பாபா, "அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன்...நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்... உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும்.  இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.  நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன்...என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்.. எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்", என்று கூறினார்.  இவ்வமிர்தத்தினை போன்ற  நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது...

கடவுளை எல்லாப் படைப்புயிர்களிலும் காண்பாயாக' என்பதே இவ்வத்தியாயத்தின் நீதியாகும்... உபநிஷதங்கள், பகவத்கீதை, பாகவதம் இவைகளெல்லாம் ஜீவராசிகள் அனைத்திலும் கடவுள் அல்லது தெய்வீகத்தைக் காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன... இவ்வத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்ட நிகழ்சியாலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும், உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருவது என்று சாய்பாபா விளக்கிக் காட்டியிருக்கிறார்... இவ்வாறாக சாய்பாபா உபநிஷத்தின் விரிவுரையாளராக அல்லது சத்குருவாக இருந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼  

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம் ..🙏🙏


1 கருத்து:

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...