ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், ஜூன் 02, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்து மூன்று(23)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு..🙏🏼🙏🏻🙏🏻

🙏 அத்தியாயம்::- இருபத்து மூன்று(23)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது.... 

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய  ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...  

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க் கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேதப்பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேதப்  பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.. அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏அத்தியாயம் ::- இருபத்து மூன்று(23)🙏

🙏முன்னுரை....🙏

குருபக்தியும், குருவிடம் சரணாகதிஅடைதலுமே ஆத்ம மறுமலர்ச்சிப்  பெருவதற்கான ஒரே வழி என்பதன் மூல சூட்சம விளக்கவுரை....

தன்னை  தரிசிக்க வந்த யோக சாதகருக்கு, பகவான் உரைத்த ஞான  உபதேசம் என்ன என்பதன் விளக்கவுரை..

சீரடி பகவான் தன்னுடைய  உயரிய பக்தன் மாதவராவ் தேஷ்பாண்டே என்ற ஷாமாவை எவ்வாறு பாம்புக் கடியிலிருந்து குணமாக்கினார் என்பதன் அனுபவ உரை...

சீரடி பகவான் எவ்வாறு காலரா வியாதியைப் போக்கி சீரடி மக்களைக் காப்பாற்றினார் என்பதன் விளக்கவுரை...

சிறந்த குருபக்தியின் எடுத்துக்காட்டாக , தன் குரு கூறியச் செயலை சத்திய பிரமாணமாக  ஏற்று பின்பற்றிய  காகா சாஹேப் அவர்களின் வாழ்வில் நடந்த  அனுபவ விளக்கம்..

குருவின் கட்டளைகளை வேதவாக்காக எண்ணி பின்பற்றும் பக்தர்களை மூன்றுவித நிலைகளில் ஹேமாட்பந்த் பிரிக்கின்றார் .இதனைப் பற்றிய குறிப்புரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில் குருபக்தியும், குருவிடம்  சரணாகதி அடைதலுமே  ஆத்ம மறுமலர்ச்சிப் பெருவதற்கான ஒரே வழி என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்....🔥

உண்மையிலேயே இந்த ஜீவன்  அதாவது மனித ஆத்மாவானது  தாமசம்,  சத்துவம், ராஜஸம் என்ற மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது...ஆனால் மனிதன் மாயையால் மறைக்கப்பட்டுத் தனது இயற்ப்பண்பான சச்சிதானந்தப் பெரு நிலையை மறந்து தானே செய்விப்பவனும், அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறாக முடிவற்ற இடர்ப்பாடுகளில் தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்கின்றான்..அதிலிருந்து  விடுவித்துக் கொள்ளும் வழியும் தனிமனித உயிர்களுக்குப்  புலப்படவில்லை....குருவின் பாதங்களில் செலுத்தும் அன்பான பக்தியும், சரணாகதியுமே விடுதலை அடைவதற்கான ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது...சீரடி சாய்பகவான்  மகத்தான, சக்திவாய்ந்த, விழிப்புணர்வுடன் கூடிய  தாய்மையுணர்வு கொண்ட உயரிய பேராற்றல்...தம் அடியவர்களை பேதமின்றி அரவணைத்து, ஆசிர்வதித்து  வேண்டியதை அளித்து  மகிழ்வித்தார்...அவர்களைத் தாமாகவே உயர்ந்த சத்திய நெறிமுறைகளுடன் வாழ வழிக் காட்டியாக இருந்தார்..

முன்னரே குறிப்பிட்ட காரணங்களால் சாயீபாபாவை நாம்  இறை  அவதாரமாகவே கருதுகின்றோம்...ஆனால் தான் கடவுளின் பணிவுள்ள ஒரு சேவகன் என்றே அவர் எப்போதும் கூறினார்...அவர் தாமே ஓர் இறை  அவதாரமாக இருந்த  போதும் கூட எங்ஙனம் திருப்தியான வகையில் மக்கள் நடந்துக் கொள்ளவேண்டும், வாழ்க்கையில் தனிமனித உயிர்கள்  தாங்கள் தங்கள், பணித்துறை இடத்திற்கேற்ற வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப  கடமைகளைச் செய்யவேண்டும் என்று வழி காண்பித்தார்....பதவான்  ஒருபோதும் எந்த வகையிலும் மற்றவர்களைப் போட்டியிட்டு மேம்படும் முயற்சிகளைக் கொண்டதில்லை. அல்லது தமக்காக ஏதேனும் செய்யும்படி பக்தர்களைக்  கேட்டதில்லை.இவ்வுலகின் அசையும், அசையாப் பொருட்கள் யாவற்றிலும் கடவுளைக் கண்ட பாபாவிற்கு  பணிவுடைமையே மிகவும் பொருத்தமான ஒன்றாகும்..ஒருவரையும் பகவான்  புறந்தள்ளியதில்லை அல்லது மதிக்காமலோ, அரவணைக்காமலோ  இருந்ததில்லை... நாராயணனை (கடவுளை) சர்வ ஜீவராசிகளிடமும் கண்டார்...*நான் கடவுள்* என்று ஒருபோதும் அவர் கூறியதில்லை... ஆனால் தான் ஒரு பணிவுள்ள சேவகன் என்றும், எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார்... *அல்லா மாலிக்'*  இறைவனே எஜமான் என்று எப்போதும் உச்சரிப்பார்....

பொதுவாக மகான்கள் மற்றும் சித்தர்கள் போன்றோர்,  அறியாமையிலும், மாயையிலும் சிக்கிக்கொண்ட  ஆன்மாக்களை விடுவிப்பதற்காகக் கடவுள் அருளால் அவர்கள் இவ்வுலகத்தில் தங்களை அவதரித்துக் கொள்கிறார்கள்....நல்வினைகளின் சேமிப்பு ஏதேனும் நமது கணக்கில் இருக்குமானால் மகான்களின் வாழ்க்கை வரலாறு ,அவர்கள் புரிந்த அற்புதங்கள், லீலைகளைக்  கேட்பதற்கு நமக்கு ஓர் ஆர்வம் அல்லது சுவாரசியம் ஏற்படுகின்றது...இவ்வாறு அல்லாவிடில் கேட்பதற்கு ஆர்வம் எழாது...மேலும் இந்த அத்தியாயத்தின் முக்கிய விளக்கவுரைகளை இங்கே காண்போம்...

🔥தன்னை தரிசிக்க வந்த யோக சாதகருக்கு பகவான் உரைத்த ஞான உபதேசம் என்ன என்பதன் விளக்கத்தை இங்கு காண்போம்..🔥

நானா சாஹேப் சாந்தோர்கருடன் ஒருமுறை சீரடிக்கு ஒரு யோகப் பயிற்சியாளர் (யோகா சாதகர்) வரும்படி நேரிட்டது...பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் உள்ளிட்ட எல்லா யோகப் புத்தகங்களையும் அவர் கற்றிருந்தார்.. எனினும் யோகத்தில் நடைமுறை அனுபவம் ஏதும் அவருக்கு இல்லை..தமது மனதை ஒருமுகப்படுத்தி குவிக்கவும், சமாதி நிலையை ஒரு சிறிதுநேரம் எய்தவும் அவரால் முடியவில்லை.. சாயீபாபா தம்பால் மகிழ்ச்சி அடைந்தாரென்றால், நீண்டநேரம் சமாதி நிலையை எய்துவதற்கு அவர் தமக்கு வழிகாட்டுவார் என்று நினைத்தார்...உள்ளத்தில் இக்குறிக்கோளுடன் அந்த யோக சாதகர்  சீரடிக்கு வந்தார்...மசூதிக்கு அவர் சென்றபோது பகவான்  ரொட்டியை வெங்காயத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்... இதைக் கண்ணுற்ற அவருக்கு மனதில் ஓர் எண்ணம் எழுந்தது.. "மட்கிப்போன ரொட்டியுடன் பச்சை வெங்காயத்தை உண்டுக் கொண்டிருக்கும் இம்மனிதர், எங்ஙனம் எனது தொல்லைகளுக்கு தீர்வைக் காண்பித்து ஆசி வழங்க முடியும் என்று நினைத்தார்.. 

சாய்பகவான் யோக சாதகரின்  உள்ளத்தைப் படித்தறிந்து நானா சாஹேப்பை நோக்கிக் கூறினார், "ஓ..! நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ணவேண்டும்..மற்ற ஒருவரும் அங்ஙனம் செய்யக்கூடாது"...இக்குறிப்பைக் கேட்ட யோக சாதகர்  ஆச்சரியத்தால் செயலிழந்தார்...பின்னர் பூரணசரணாகதியுடன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்துப் பணிந்தார்... தூய, திறந்த உள்ளத்துடன் தனது தொல்லைகளைக்  கேட்டு பாபாவிடமிருந்து அவைகளுக்கு விடையும் பெற்றார்...இவ்வாறாகத் திருப்தியும், மகிழ்ச்சியும் அடையப்பெற்று பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் யோக சாதகர்  சீரடியை விட்டுச்சென்றார்....

🔥சீரடிபகவான் தன்னுடைய உயரிய பக்தன் மாதவராவ் தேஷ்பாண்டே என்கிற  ஷாமாவை, எவ்வாறு  விஷப் பாம்புக்கடி தாக்கத்திலிருந்து காப்பாற்றி ஆசி வழங்கினார் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

இக்கதையைத் தொடங்கும் முன்பாக ஹேமாட்பந்த், ஜீவனைக் கிளிக்கு உவமானமாக  ஒப்பிடலாம் என்றும், ஒன்று உடம்பினுள்ளும் மற்றொன்று கூண்டினுள்ளுமாக இரண்டுமே கட்டுண்டிருக்கின்றன என்றும், கட்டுண்டுக் கிடக்கும் அவைகளது தற்போதைய நிலையே அவைகளுக்கு ஏற்ற நன்மையானது என்று அவைகள் கருதுவதாகவும் கூறுகிறார்....  உதவியாளர் ஒருவர் அதாவது குரு வரும்போது கடவுளருளால் அவைகளின் கண்ணைத் திறந்து, அவைகளின் கட்டுக்களினின்று அவைகளை விடுவிக்கும்போது மட்டுமே அவைகளின் கண்கள், இன்னும் பெரியதும் சிறந்ததுமான வாழ்க்கைக்குத் திறந்து விடப்படுகிறது...இத்துடன் அவர்கள் முன்னைய வரையறையை உடைய வாழ்க்கையை ஒப்பிட்டால் அது சூன்யமே ஆகும்....இப்போது  விளக்கவுரைக்கு வருவோம்..

ஒருமுறை ஷாமாவை நச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது... அவரது கையிலுள்ள சுண்டு விரலில் கடிபட்டு விஷம் உடம்பு முழுக்கப் பரவத்தொடங்கியது.  ஷாமாவும் தாம் இறந்துவிடுவோமேன்று என்று எண்ணுமளவிற்கு வலியும் அவ்வளவு தீவிரமாக இருந்தது....அந்த மாதியான விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி அனுப்பப்படும் விட்டோபா கடவுளிடம் அவரது நண்பர்கள் அவரை எடுத்துச் செல்ல விரும்பினர்...ஆனால் ஷாமா, மசூதிக்குத் தமது விட்டோபாவிடம் (சாயீபாபா) ஓடிவந்தார்...மாதவராவைப் பார்த்ததும், பாபா திட்டவும், கண்டிக்கவும் தொடங்கினார்...அவர் மூர்க்கமடைந்து "ஓ! இழிந்த பதுர்த்யா...! (பூசாரியே) மேலே ஏறாதே.  அங்ஙனம் ஏறினாயோ ஜாக்கிரதை" என்று கர்ஜித்தார்.  பின்பு "போ, அப்பாலே போ! கீழிறங்கு" என்றார்.  இங்ஙனம் பாபா சீற்றத்தினால் கூறிய வார்த்தையைப் பார்த்து ஷாமா பெரிதும் குழப்பமடைந்து ஏமாற்றமடைந்தார்...அவர் மசூதியே தமது வீடு என்றும், சாயீபாபாவே தமது ஒரே அடைக்கலம் என்றும் எண்ணியிருந்தார் இதுவரை..ஆனால் இங்ஙனம்  பாபாவால் விரட்டப்பட்டால் அவர் எங்கே செல்வார்...?  உயிர் வாழ்வதின் நம்பிக்கை அனைத்தையும் இழந்து அமைதியாய் இருந்தார்... சிறிது நேரத்திற்குப் பின் பாபா சாதாரணமாகவும், அமைதியாகவும் ஆனார்... அப்போது ஷாமா மேலே சென்று அவர் அருகில் அமர்ந்தார்...

பின்னர் பாபா அவரிடம், "பயப்படாதே, எள்ளளவும் கவலைப்படாதே...!  கருணையுள்ள பக்கிரி உன்னைக் காப்பாற்றுவார்.. போய் வீட்டில் அமைதியாக அமர்ந்திரு...வெளியில் செல்லாதே.. என்னை நம்பு..பயப்படாமல் இரு, கவலைப்படாதே" என்று கூறினார்.. பின்னர் ஷாமா வீட்டிற்கு அனுப்பப்பட்டார்...அதன் பின்னர் ஷாமா எதை விரும்புகின்றாரோ, அதை உண்ண வேண்டுமென்றும், வீட்டில் நடையுடையாக இருக்கவேண்டும் என்றும், ஆனால் படுத்து உறங்கவே கூடாது என்ற குறிப்புக்களுடன் தாத்யா பாடீலையும், காகா சாஹேப் தீஷித்தையும் ஷாமாவுடன்  பாபா அனுப்பினார்.இவ்வுரைகள் பின்பற்றப்பட்டன என்றும், சிறிது நேரத்தில் ஷாமா குணப்படுத்தப்பட்டார் என்றும் கூறவும் வேண்டுமா...! விரைவில் குணமானார் ஷாமா.... இது சம்பந்தமாக நினைவில் வைக்க வேண்டியது  ஒன்றுதான்... பாபாவின் மொழிகள்  அதாவது போ, அப்பாலே ஓடு!, 'கீழிறங்கு' என்னும் ஐந்தெழுத்து மந்திரம்  மேலெழுந்தவாரியாக அது காணப்பட்டாற்போல் ஷாமாவை நோக்கிக் கூறப்பட்டதல்ல..அவை ஷாமாவின் உடலினுள் புகுந்து இரத்த ஓட்டத்துடன் கலக்க வேண்டாமென்று பாம்புக்கும், அதன் விஷத்துக்கும் இடப்பட்ட நேரடிக் கட்டளைகளாகும்...

மந்திர சாஸ்திரத்தில், நல்லறிவுத் திறமுடைய பிறர்களைப் போன்று எவ்வித மந்திர உச்சாடனமிடப்பட்ட அரிசியையோ, தண்ணீரையோ உபயோகிக்க வேண்டியிருந்ததில்லை...பகவானின்  சொற்களே ஷாமாவின் உயிரைக் காப்பதில் மிகச்சிறந்த பயனுள்ளதாக  இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது....இக்கதைகள் அனைத்தும்  கேட்கும் அனைவரும்  சாயீபாபாவின் பாதங்களில் உறுதியான நம்பிக்கை அடையப் பெறுவார்கள் என்பது உறுதியாகின்றது.... மாயை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு பாபாவின் பாதக்கமலத்தில் சரணாகதி அடைவதும்....அவரின்  உபதேச மொழிகளைப் பின்பற்றுவதுமே மிகச் சிறந்த வழியாகும் என்பது இங்கே புலனாகின்றது....

🔥சீரடிபகவான் எவ்வாறு காலரா வியாதியைப் போக்கி சீரடி மக்களை பேராபத்திலிருந்து காப்பாற்றினார் என்பதன் விளக்கவுரையை  இங்கே காண்போம்....🔥

ஒருமுறை சீரடியில் காலரா நச்சுத்தன்மை மிகுந்து தாண்டவமாடியது...ஊர்க்காரர்கள் மிகவும் பயந்து புறத்தேயுள்ள மக்கள் தொடர்புகள்  அனைத்தையும்  நிறுத்திக் கொண்டனர்....பஞ்சாயத்தார் கூடி தொற்றுவியாதி தடுப்புக்கும், வியாதியை ஒழிக்கவும்  இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர்.  அவைகளாவன..

1. எவ்வித எரிபொருள் (விறகு) வண்டியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது...

2. அங்கு ஒரு ஆடு கூட கொல்லப்படக்கூடாது.

எவரேனும், இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் கிராமப் பஞ்சாயத்தார்களாலும், அதிகாரிகளாலும் அபராதம் விதிக்கப்படுவர் என்று அறிவித்தனர்.. இவைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று பாபா அறிந்தவராதலால் காலராக் கட்டளைகளை சிறிதளவும் இலட்சியம் செய்யவில்லை...இக்கட்டளைகள் அமலில் இருக்கும்போது ஒரு எரிபொருள் வண்டி அங்கு வந்து கிராமத்திற்குள் நுழைய விரும்பியது.... கிராமத்தில் எரிபொருள் பஞ்சம் இருந்தது எல்லோருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் மக்கள் எரிபொருள் வண்டியை விரட்ட ஆரம்பித்தனர்....பாபாவிற்கு நடந்த நிகழ்வைப்பற்றி  தெரியவந்தது...பகவான்  அவ்விடத்திற்குச் சென்று வண்டிக்காரனை மசூதிக்கு ஓட்டிவரும்படி கூறினார்....பாபாவின் இந்தச்  செய்கைகளுக்கு மறுப்புத் தெரிவிக்க  ஒருவருக்கும் குரல் எழுப்பத் தைரியம் இல்லை. தமது துனிக்கு  விறகுத்  தேவைப்பட்டது... எனவே அதை அவர் வாங்கினார்....

அக்னிஹோத்ரி தனது புனித நெருப்பை தன் வாழ்நாள் முழுவதும் எரியவிடுவது போன்றே பாபா தமது துனியை இரவும், பகலும் எரியவிட்டார்...இதற்காக அவர் எப்போதும் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்தார்.... பாபாவின்  வீடான மசூதி அனைவருக்கும் தடைகளற்றும், திறந்து வைக்கப்பட்டும் இருந்தது...அதற்குப் பூட்டோ, சாவியோ கிடையாது...அங்கிருந்து சில ஏழை மக்கள் தங்கள் உபயோகத்திற்காக விறகை எடுத்துக்கொண்டு சென்றனர்...பாபா இதைக்கண்டு ஒன்றும் கூறவில்லை... பிரபஞ்சமனைத்திலும் ஆதி மூல பேராற்றல்  வியாபித்திருந்ததை அவர் கண்டார்..எனவே எவருடனும் அவர் பகையோ, கெட்ட எண்ணமோ கொண்டதில்லை. முழுவதுமாகத் துறந்தவராயினும் மக்களுக்கு ஒரு முன்.உதாரணமாக இருக்கும் பொருட்டு அவர் இல்லறத்தார் போன்று வாழ்ந்தார்....

🔥சிறந்த குருபக்தியின் எடுத்துக்காட்டாக, தன் குரு கூறியச் செயலை சத்திய பிரமாணமாக ஏற்று பின்பற்றிய பக்தர் காகா சாஹேப் அவர்களின் வாழ்வில் நடந்த அனுபவ விளக்கம் இங்கே.🔥

இரண்டாவது காலரா கட்டளை பாபாவினால் எங்ஙனம் செயல்படுத்தப்பட்டது என்பதைத் தற்போது காண்போம். கட்டளை அமுலில் இருக்கையில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டுவந்தார்...அது பலவீனமாயும், மூப்புடனும் இறக்கபோகும் தருவாயிலும் இருந்தது...  இத்தருணத்தில் மாலிகானைச் சேர்ந்த பக்கீர் பீர் முஹமது என்ற படேபாபா அருகில் இருந்தார்...சாயீபாபா அவரை அதை ஒரே வெட்டில் வெட்டிப் பலியிட்டுச் சமர்ப்பிக்கும்படி கேட்டார்.. இந்த படேபாபா என்றப் பக்தர்  சாயீ பாபாவால் மிகவும்  மதிக்கப்பட்டவர். சாயீபாபாவின் வலதுப் புறத்திலேயே அவர் எப்போதும் அமர்ந்திருந்தார்...ஹூக்காவை அவர் முதலில் குடித்தபின்பு தான், அது பாபாவுக்கும் பிறருக்கும் அளிக்கப்படும்.  மத்தியான உணவுவேளையின் போது கறிவகைகள் எல்லா பரிமாறப்பட்டப் பின்பு பாபா, படேபாபாவை மரியாதையுடன் கூப்பிட்டுத் தமது இடப்பக்கத்தில் அமர்த்திய பின்பு எல்லோரும் உண்டனர்....தக்ஷிணையாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்தும் பகவான்  அவருக்கு தினசரி ரூ.50 அளித்து வந்தார்...அவர் போகும்போது பாபாவும் நூறு அடி தூரம்வரை அவருடன் கூடச் செல்வாராம்...பாபாவிடம் அவருக்கிருந்த பிணைப்பு  அத்தகையது...ஆட்டை வெட்டும்படி பாபா அவரிடம் கேட்டபோது அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.. "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்படவேண்டும்..?" என்று அவர் கேட்டார்..பின்னர் பாபா ஷாமாவை அதனைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டார்.  ராதாகிருஷ்ணமாயீடம் சென்று கத்தி ஒன்றை அவளிடமிருந்து வாங்கிவந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார்... கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த ராதாகிருஷ்ணமாயீ அதைத் திருப்பி எடுத்துக்கொண்டாள்....

பின்னர் ஷாமா மற்றொரு கத்தியைப் பெறுவதற்காகச் சென்று உடனே திரும்பி வராமல் காகா சாஹேப் தீக்ஷித் வாதாவில் தங்கிவிட்டார்.  அப்போது காகா சாஹேப்பின் முறை வந்தது....அவர் 'நல்ல தங்கம்' தான் என்பதில் ஐயமில்லை என்றாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தியை வாங்கி வந்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார். அவர் சாதேவின் வாதாவுக்குச் சென்று ஒரு கத்தியுடன் திரும்பிவந்தார். பாபா ஏவியதும் கொல்லுவதற்குத் தயாராக அவர் இருந்தார்.  தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்குத் தமது வாழ்க்கையில் கொலையைப் பற்றியே தெரியாது...ஹிம்சைச் செயலுக்கு முற்றும் அவர் எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டார்...   

முகம்மதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், இந்த தூய பிராமணர் அதைக் கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...  தன் வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு கையைக் கத்தியுடன் தூக்கிக்கொண்டு பாபாவின் முடிவான அனுமதிக் குறிப்புக்காக அவரைப் பார்த்தார்.  பாபா "என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய், உம்..! வெட்டு" என்றார்...பின்னர் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பகவான், "நிறுத்து, நீ எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்...!  பிராமணனாயிருந்துக் கொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.  காகா சாஹேப் கீழ்ப்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார்.  "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும்.  எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது.  எப்போதும் தங்களையே நினைவு கூர்கின்றோம்.... தங்கள் ரூபத்தைத் தியானிக்கின்றோம்.... இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகின்றோம்....  கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை...  நிகழ்வுகளுக்கான எந்தக்  காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை... ஆனால் குருவின் கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுடன் கீழ்ப்படிந்து உறுதிப்பாட்டுடன், ஒழுங்கான பணிவினக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்....பின்னர் பாபா, காகா சாஹேப்பிடம் தாமே பலியிடுதலையும், வெட்டும் வேலையையும் செய்துவிடுவதாகக் கூறினார்... பக்கீர்கள் அமரும் தகியா என்னும் இடத்தில் ஆட்டை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.. பின்னர் ஆடு அவ்விடத்துக்குக் கொண்டுசெல்லப் படுகையில் வழியிலேயே இறந்து விழுந்தது.

🔥குருவின் கட்டளைகளை வேதவாக்காக எண்ணி பின்பற்றும் பக்தர்களை மூன்று வித நிலைகளில் ஹேமாட்பந்த் பிரிக்கின்றார்.. இதனைப் பற்றியக் குறிப்புரை இங்கே ...🔥

ஹேமத்பந்த் அடியவர்களைப் பாகுபடுத்துவதுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்....மூன்று விதமானவர்கள் இருப்பதாக ஆசிரியர் ஹேமாட்பந்த்   கூறுகிறார்...

     (1)  முதல் தரமான பக்தர்கள்  சிறந்தவர்கள்

     (2)  இரண்டாம் தரமான பக்தர்கள்  நடுவானவர்கள்

     (3)  மூன்றாம் தரமான பக்தர்கள்       சாதாரணமானவர்கள்...

இதில் முதல் தரமானவர்கள் குரு என்ன விரும்புகிறார் என்பதை ஊகித்தறிந்து அதை உடனே நிறைவேற்றி அவர்களிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல் அவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்.....

இரண்டாம் தரமானவர்கள் தங்களது குருவின் கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும் தாமதமின்றிக் கேட்டு  கீழ்ப்படிகின்றார்கள்..

மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுக் கொண்டும், ஒவ்வொரு படியிலும் தவறு செய்துகொண்டும் இருக்கிறார்கள்... 

அறிவுக்கூர்மையைப் பின்னனியாகக்கொண்ட உறுதியான நம்பிக்கையையும், திடமான  விசுவாசத்தையும்  சீடர்கள் பெற்றிருக்க வேண்டும்... பொறுமையும், நம்பிக்கையும் இவைகளுடன் சேருமானால் ஆன்மீக இலட்சியம் தொலைவில் இல்லை...மூச்சுக் கட்டுப்பாடு (உள் மூச்சு - வெளி மூச்சு) அல்லது ஹடயோகம் அல்லது பிற கடினப் பயிற்ச்சிகள் தேவையே இல்லை...  மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களை அடியவர்கள் பெறுவார்களேயானால் இன்னும் அதிகமான உயரிய  செயல் திட்டங்களுக்கு பக்தர்கள்  தயாராகின்றார்கள்...அதன்  பின்னர் குருமார்கள் ஆன்மீக பாதையின் முழுநிறைவுக்கு அவர்களை வழிநடத்துகின்றார்கள்...அடுத்த அத்தியாயத்தில் நாம் பாபாவின் விறுவிறுப்பான நகைச்சுவையையும், தமாஷையும் காண்போம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏   

ஸ்ரீ சாயீயைப்  பணிக ..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்.. 🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...