ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், ஜூன் 03, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்து நான்கு(24)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🙏🙏

🙏🏻 அத்தியாயம்::- இருபத்து நான்கு(24)🙏🏻

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும்,பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்.....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது.. ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🏻

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்   சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.🔥

🙏ஸ்ரீ சாயி சத்சரித்திரம்:🙏

🙏அத்தியாயம்::- இருபத்து நான்கு..(24)🙏

🙏🏻முன்னுரை...🙏🏻  

குருவின் பாதங்களை வணங்கி  சரணாகதி அடைவதனால் ஏற்படும் நன்மைகளும், பகவான், நகைச்சுவை உரையாடல் மூலமாகவே  ஏன் நிவேதனம்  செய்ய வேண்டும் என்பதன்  மூல சூட்சம உரையும் , உண்ணும் போது  அருகில் உள்ளவர்களுக்கு  சிறிதளவு அளித்து விட்டு உண்ண வேண்டும்  என்று ஹேமாட்பந்திடம்  கூறியதன் அனுபவ விளக்கவுரை.... 

சுதாமருக்கும்  கிருஷ்ணருக்கும் இடையேயான சூட்சம உரையாடலைப் பற்றிய  அனுபவ விளக்கவுரை...

அண்ணா சிஞ்சணீகருக்கும், மௌஷிபாயீக்கும் இடையே நடந்த உரையாடலின் விளக்கவுரை...

பக்தர்களின்பால் பகவான் கொண்ட இணக்கத்தைப் பற்றிய உரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை  ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில் குருவின் பாதங்களை வணங்கி  சரணாகதி அடைவதனால் ஏற்படும் நன்மைகளும், பகவான், நகைச்சுவை உரையாடல் மூலமாகவே ஏன் நிவேதனம் செய்ய வேண்டும் என்பதன்  மூல சூட்சம உரையும், உண்ணும் போது  அருகில் உள்ளவர்களுக்கு  சிறிதளவு அளித்து விட்டு உண்ண வேண்டும் ஹேமாட்பந்திடம் நகைச்சுவையாக   கூறியதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

சத்குருவின் பாதங்களில் நம் அகங்காரத்தை விடுத்து சரணாகதி  அடைந்து,  அனைத்து இயல் வாழ்வியல் இயக்கச் செயல்பாடுகளையும்  சமர்ப்பித்தாலன்றி, நமது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது கடினம்....அகங்காரத்தை ஒழித்தால் நமது வெற்றி உறுதியளிக்கப்படுகிறது... சாயீபகவானை உள்ளார்ந்த பக்தியுடன் திடமான விசுவாசம் கொண்டு  வணங்குவதால், இகபர சௌபாக்கியம் இரண்டுமே கிடைக்கிறது....நமது வாழ்வில்  உண்மையான மற்றும்  நிலையான  அமைதியும், பேர் மகிழ்ச்சியும் அடைகிறோம்...எனவே எவரொருவர் சத்குருவின் ஆசியையும், அனுக்கிரகத்தையும், சுபிட்சத்தையும் பெற விரும்புகின்றாரோ, அவர் சாயீபாபாவின் லீலைகளையும், கதைகளையும் பக்தியுடன் அகந்தையின்றி கேட்கவேண்டும்..அவைகளைத் தியானம் செய்யவேண்டும்..மேற்க்கண்டவற்றை எவர்  கடைப்பிடிக்கின்றார்களோ அவர்கள்  தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்கள்...

பொதுவாக அனைவரும் நகைச்சுவையான உரையாடலையும், வேடிக்கையையும் விரும்புவார்கள்...ஆனால் தங்களைப் பொருளாக வைத்து தமாஷ் செய்யப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை..ஆனால் பாபாவின் வழியோ விசித்திரமானது...பகவான் நகைச்சுவையுடன் வெகு இயல்பாக  அபிநயத்துடன் கூறும்போதும், அதனை கேட்கும் போதும் பக்தர்களுக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், அறிவுரை தருவதாகவும் இருக்கின்றன...எனவே கேலிக்கு பக்தர்கள்  இலக்காயினும் அதனை யாரும்  பொருட்படுத்துவதில்லை.  ஹேமாட்பந்த் தனது சொந்த அனுபவத்திலேயே கீழே குறிப்பிடுகின்றார்....

சீரடியில் ஞாயிறுதோறும் சந்தை நடைபெறும்.  அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் அங்குவந்து தெருவில் பந்தல் கடைகளைப் போட்டு தங்களது பொருட்களையெல்லாம்  விற்பனை செய்வர்....ஒவ்வொரு மாலையும் மசூதியில்  ஏறக்குறைய அதிகமானோர்கள் வருவார்கள்..ஆனால் ஞாயிறு மாலையோ மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடிவிடும்..அத்தகைய ஒரு ஞாயிற்றுக் கிழமையின்போது ஹேமாட்பந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து பாபாவின் கால்களை நீவிப் பிடித்துக்கொண்டும், கடவுள் பெயரை உச்சரித்துக்  கொண்டும் இருந்தார்.ஷாமா பாபாவின் இடப்பக்கத்திலும், வாமன்ராவ் வலப்பக்கத்திலும் இருந்தனர்....அப்போது பாபா சிரித்துக்கொண்டே அண்ணா சாஹேப்பிடம், "பாரும் உமது கோட்டின் கை மடிப்பில் தானியங்கள் இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே அவர் கோட்டு மடிப்பைத் தொட்டு அங்கு தானியங்கள் இருப்பதைக் கண்டார்...  ஹேமாட்பந்த் விஷயம் என்னவென்று அறிவதற்காகத் தனது இடது முழங்கையை நீட்டினார்..அப்போது அனைவரின் ஆச்சரியத்திற்கேற்ப சில பருப்பு மணிகள் கீழே உருண்டோடி சுற்றி உட்கார்ந்திருந்தவர்களால் பொறுக்கியெடுக்கப்பட்டன  இந்நிகழ்ச்சியே தமாஷிற்கான விஷயமாக ஆனது...அங்கிருந்த அனைவரும் எங்ஙனம் தானியம் கோட்டு மடிப்புக்குள் சென்று அவ்வளவு நேரமும் அங்கேயே இருந்தன என்று யூகிக்க இயலவில்லை..  ஒருவரும் இவ்விஷயத்தில் திருப்தியான பதிலை அளிக்க இயலாத இவ்வினோதத்தைப்  பார்த்துக்  கொண்டிருக்கையில் பாபா கூறினார்.."இந்த ஆளுக்கு அண்ணா சாஹேப்பை சுட்டிக் காண்பித்து தனியாகத் தின்னும் பழக்கம் இருக்கிறது.. இன்றைக்குச் சந்தை நாளாகையால் பருப்பு மணிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தார்...அவர் பழக்கம் எனக்குத் தெரியும்...அதற்கு இதுவே சாட்சி, இவ்விஷயத்தில் வேறென்ன ஆச்சரியமிருக்கிறது...?"

ஹேமத்பந்த் கூறுகின்றார் பகவானிடம்::: பாபா பொருட்களைத் தனியாகத் தின்று நானறியேன்.  பின்னர் என்மீது இந்தக் கெட்ட வழக்கத்தை ஏன் சுமத்துகிறீர்கள்...?  சீரடி சந்தையையே நான் இன்னும் பார்த்தது இல்லை...இன்றைக்கு, சந்தைக்கு நான் போகவே இல்லை...பின்னர் எங்ஙனம் நான் பருப்பு மணிகள் வாங்கியிருக்க முடியும்...?  அவைகளை வாங்காதபோது எப்படி நான் உண்ணமுடியும்..?  எனதருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் நான் ஒருபோதும் எதையும் சாப்பிடுவதில்லையே..!

பாபா ::-  அருகிலிருப்பவர்களுக்கு நீர் கொடுப்பது உண்மைதான்...ஆனால் ஒருவரும் அருகில் இல்லையென்றால் நீரோ, நானோ என்னசெய்யமுடியும்...?  ஆனால் நீர் உண்ணும் முன் என்னை நினைவு கொள்கிறீரா...?  எப்போதும் நான் உம்முடன் இருக்கவில்லையா...?  பின்பு நீர் உண்ணும் முன்பாக எதையேனும் எனக்கு அளிக்கிறீரா...?

இந்நிகழ்ச்சியின் வாயிலாக பாபா நமக்கு என்ன போதிக்கிறார் என்பதைக் கவனத்துடன் நினைவில் வைப்போமாக!  புலன்கள் தரும் தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் அவைகளின் பலன்களை அனுபவித்து விடுகின்றன என பாபா அறிவுறுத்தியுள்ளார்.  முதலில் எதனை செய்ய முற்பட்டாலும் அல்லது உண்பதற்கு முற்பட்டாலும்,  பாபாவை தியானித்து நினைவில் கொள்ள வேண்டும்.... அதுவே உன் மனதில் நிலைக் கொண்டுள்ள அவருக்கு நிவேதனம் செய்யும் உன்னத முறையாகிறது...புலன்கள் முதலியன தங்கள் தேவைகளை அடையாமல் இருக்க இயலாது...ஆனால் எதனையும்  முதலில் குருவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டால் அவைகளின் மீதுள்ள பற்று இயற்கையாகவே மறைந்துவிடுகிறது...இவ்விதமாக ஆசை, கோபம், வெறுப்பு முதலியவை பற்றிய நமது எல்லா எண்ணங்களும் முதலில் குருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரை நோக்கிச் செலுத்தும் பயிற்சியானது அளிக்கப்பட்டால் எல்லாவித எண்ணங்களையும் களைவதற்குக் சத்குரு  உதவிசெய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.... .பொருட்களை அனுபவிக்கும் முன் பாபா அருகில்  இருந்து  உங்களைக்  கவனிப்பதாகவோ, அல்லது உங்கள் உடன் இருப்பதாக  நினைத்துக் கொண்டால், அப்பொருள்  அனுபவிக்கத்தக்கதா அல்லது தேவையில்லையா என்ற கேள்வி உடனே எழும்...பின் அனுபவிக்கத் தகாதவை எல்லாம் நம்மால் ஒதுக்கப்பட்டு, நமது தீய பண்புகள் அல்லது செயல்கள் நம்மைவிட்டு மறைகின்றன...நம்மிடம் உயர்ந்த  பண்பும் வளர்கிறது....பின்னர் குருவிடம் மேன்மேலும் தூய்மையான  அன்பு வளர்ந்து தூய ஞானம் துளிர்க்கிறது. ...

இந்த ஞானம் வளரும்போது, 'நான்', 'எனது' என்ற எண்ணம் அழிந்து நமது அறிவு ஆன்ம உணர்வுடன் கலக்கிறது.  பின்னர் நாம் பேரின்பத்தையும், திருப்தியையும் பெறுகிறோம்.  குருவுக்கும், திருவிற்கும்  பேதமில்லை...  அவர்களுள் பேதம் காண்பவன் கடவுளை எவ்விடத்தும் காண்பதில்லை.... எனவே பேத மனப்பான்மையை ஒழித்துக் குருவையும், திருவையும் ஒன்றாகக் கருதவேண்டும்...எனவே எண்ண மாறுபாடுகளை நீக்கி குருவைக் கடவுளாக வழிபடவேண்டும்.  இவ்வாறு நமது குருவுக்குப் பணிவிடை செய்தோமேயானால் சத்குரு  முழுவதும்  மகிழ்வடைந்து நமது சித்தத்தைத்  தூய்மைப்படுத்தி நம்மை நாமே அறியும் உணர்வையளிக்கிறார்.  இரத்தினச் சுருக்கமாக, முதலில் குருவை நினைக்காமல் நாம் எப்பொருட்களையும் புலன்கள் வழி அனுபவிக்கக்கூடாது...

இவ்விதமாகப் பயிற்சியளிக்கப்பட்டால், நம் மனம் பாபாவால் நிறைந்து, பாபாவின் உருவம் தியானத்தில்  விரைவில் வியாப்பிக்கும்..பாபாவின் சகுணரூபம் எப்போதும் நம் கண்முன் இருக்கும்....பிறகு பக்தி, பற்றின்மை, முக்தி யாவும் நம்முடையதேயாம்.  இங்கனமாக நமது மனக்கண்ணில் பாபாவின் ரூபம் நிலைப்படுத்தப்பட்டால், பசி,  தாகத்தையும், இச்சம்சார வாழ்க்கையையும் மறந்துவிடுகிறோம்... உலக போகங்களில் நமக்கிருக்கும் அதீத பற்று  மறைந்துவிடும்.  நமது மனம் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையும்...

🔥சுதாமருக்கும்  கிருஷ்ணருக்கும் இடையேயான சூட்சம உரையாடலைப் பற்றிய  அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமாட்பந்த் அதே மாதிரியான சுதாமரின் கதையை நினைவுக்கூர்கிறார்...அதே தத்துவத்தை இக்கதையும் விளக்குவதால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணரும், அவரது அண்ணனான பலராமரும் சுதாமர் என்ற தோழருடன் அவர்களது குரு சாந்தீபனி முனிவரின் ஆச்சிரமத்தில் வசித்து வந்தனர்.  ஒருமுறை  கிருஷ்ணரும், பலராமரும் காட்டிற்கு விறகு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டனர்..பின்னர் சாந்தீபனியின் மனைவி அதேபோல் சுதாமரையும் மூவருக்குமான கடலைப் பருப்புகளுடன் காட்டுக்கு அனுப்பினாள்..கிருஷ்ணர், சுதாமரைக் காட்டில்  கண்டபோது அவரிடம், "தாதா, நான் தாகமாயிருப்பதால் எனக்கு தண்ணீர் வேண்டும்" என்றார்...அதற்கு சுதாமர் "வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது.  சிறிதுநேரம் இளைப்பாறுவது நல்லது" என்றார்...அவர் தன்னிடம் கடலை இருப்பதாகவோ, அதைச் சிறிது அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றோ கூறவில்லை...  கிருஷ்ணர் களைப்பாயிருந்தமையால் சுதாமரின் மடியில் தலைவைத்துப் படுத்துக் குறட்டைவிட்டார்...  இதைக்கண்டு சுதாமர் தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத் தொடங்கினார்...கிருஷ்ணர் திடீரெனக் கேட்டார், "தாதா என்ன சாப்பிடுகிறாய்...? சப்தம் எங்கிருந்து வருகிறது...?"அதற்கு சுதாமர், "சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது...?  நான் குளிரால் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன்.  எனது பற்கள் தாளம் அடித்துக்கொண்டு இருக்கின்றன..விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் கூட என்னால் திருத்தமாகப் பராயணம் செய்யமுடியவில்லை" என்றார்....

இதைக்கேட்ட சர்வவியாபியான கிருஷ்ணர், "மற்றவர்களது பொருட்களை உண்ணும் ஒரு மனிதனைக் கனவில் கண்டேன்...அதைப்பற்றிக் கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில், 'என்ன...? மண்ணா தின்பதற்கு உள்ளது..!' எனக் கேட்டான்.  அதற்கு மற்றொருவன் 'அது அங்ஙனமே இருக்கட்டும்' என்றான்.... தாதா இது ஒரு கனவுதான்.  நீ எதையும் எனக்கில்லாமல் உண்ணமாட்டாய் என்று எனக்குத் தெரியும்.  ஆயினும் கனவில் கண்ட ஞாபகத்தில் நீ என்ன உண்கிறாய் என்று நான் கேட்டேன்...?"  என்றார்....சர்வவியாபியான கிருஷ்ணரைப் பற்றியும், அவர்தம் லீலையைப் பற்றியும், சுதாமர்  அறிந்திருப்பாராயின் அவர் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கமாட்டார்...  எனவே தன் செய்கைக்காக அவர் வருந்த வேண்டியதாயிற்று....அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரானபோதும் தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில் கழிக்க வேண்டியதாயிற்று....

ஆனால் பின்னர் அவர் கிருஷ்ணருக்குத் தன் மனைவியின் சொந்த உழைப்பால் ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன் நகரத்தை அளித்தார்... மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணாது தனியாக உண்போர்  இக்கதையை நினைவில் வைக்கவேண்டும்.கடவுளுக்கு முதலில் சமர்ப்பித்து அவைகள் அவரால் திருப்தியடையப் பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று  இங்கு  கூறப்படுகின்றது...பாபாவும் நமக்கு அதையே அவர்தம் ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில் கற்பித்திருக்கிறார்....

🔥அண்ணா சிஞ்சணீகருக்கும், மௌஷிபாயீக்கும் இடையே நடந்த உரையாடலின் விளக்கவுரை இங்கே......🔥

ஹேமத்பந்த் இப்போது சமாதானம் நிலைநாட்டுவோரின் பாகத்தை பாபா ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார்.  தாமோதர் கனஷ்யாம் பாபரே என அழைக்கப்பட்ட அண்ணா சிஞ்சணீகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார்...அவர் எளிமையானவர், முரடர், நேர்மையானவர்.அவர் எவரையும் இலட்சியம் செய்யமாட்டார்...எப்போதும் கர்வமின்றிப் பேசி எல்லாவற்றையும்  நடத்தினார்... வெளிப்படையாகக் கடுமையாகவும், வசப்படாதவராகவும் இருந்தபோதும், அவர் நட்பண்புடையவராகவும் கள்ளமின்றியுமிருந்தார்.  எனவே சாயீபாபா அவரை நேசித்தார்... இவர் பின்னர் தனது சொத்துக்கள் யாவற்றையும் சீரடி சாயிபாபா சமஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்....

ஒருநாள், ஒவ்வொருவரும் ஒரு வழியில்  பாபாவிற்கு சேவை செய்வதைப் போன்று, அண்ணாவும் தலைகுனிந்து நின்றுகொண்டு கைப்பிடியில் இருந்து இடது கைக்கு நீவிக்கொண்டிருந்தார்.  அம்மா என்று பாபாவாலும் மௌஷிபாயீ  என்று பிறராலும் அழைக்கப்பட்ட வயதான  விதவைப் பெண் வேணுபாஜி கௌஜல்கி வலது புறத்தில் அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள்... மௌஷிபாயீ தூய உள்ளத்துடன் கூடிய முதியவள்...அவள் தன் இரு கைவிரல்களையும் கோர்த்துக் கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாக பதித்துப் பிசைந்தாள்..அடிவயிறே தட்டையாகி விடும்படியான வேகத்துடன் சேவை செய்துக் கொண்டிருந்தாள்.  பாபா இப்படியும் அப்படியும் புரண்டுக் கொண்டிருந்தார்.  மற்றொரு புறமிருந்த அண்ணா நிதானத்துடன் இருந்தார்...ஆனால் மௌஷிபாயீன் அசைவுகளுடன் அவளது முகமும் அசைந்தது...  ஒருதரம் அவளது முகம் அண்ணாவின் முகத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது. வேடிக்கையான பண்புடைய அவள், "ஓ! இந்த அண்ணா ஒரு கெட்டவன்..அவன் என்னை முத்தமிட விரும்புகிறான்... தலை நரைக்கும் வயதாகியும் முத்தமிடுவதற்கு அவன் வெட்கப்படவில்லை" என்றாள்....இச்சொற்கள் அண்ணாவை சற்று கோபப்படச்  செய்தன....  முஷ்டியை மடக்கிவிட்டுக்கொண்டு அவர் "நான் ஒரு கெட்ட கிழவன் என்றா கூறுகிறாய்...?  நான் அவ்வளவு முட்டாளா..?  நீயே சண்டையை ஆரம்பித்தாய், என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்...?" என்றார்....அங்கிருந்த அனைவரும் அவர்களுக்கிடையே நடைபெறும் விஷயங்களை ரசித்துக்கொண்டிருந்தனர்.  அவர்கள் இருவரையுமே பாபா சமமாக நேசித்தார்.  சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார்...அன்புடன் பகவான்  கூறினார்.  "அண்ணா, ஏன் அனாவசியமாக இக்கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்...?  தாய் முத்தமிடும்போது உள்ள நெறியின்மை அல்லது தீங்குதான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.?" என்றார்... பாபாவின் இம்மொழிகளைக் கெட்ட இருவரும் திருப்தியடைந்தனர்....  எல்லோரும் மன மகிழ்வுடன் தங்கள் உளம் நிறைவடையும்வரை சிரித்தனர்....

🔥பக்தர்களின்பால் பகவான் கொண்ட இணக்கத்தைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥.

பாபாவின் அடியவர்கள் அவரவர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச் சேவைசெய்ய அவர் அனுமதித்திருந்தார். இதில் பிறர் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.  உதாரணமாக இதே மௌஷிபாயீ  மற்றொரு சந்தர்ப்பத்தில் பாபாவின் அடிவயிற்றைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  அவள் உபயோகித்த கடுமையையும், வேகத்தையும் கண்டு மற்ற அடியவர்களெல்லாம் மனந்தளர்ந்து கவலை கொண்டவரானார்கள்.  அவர்கள் "ஓ..! அம்மா இன்னும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்படு.  இல்லாவிடில் பாபாவின் இரத்தக்குழாய், நரம்பு இவைளை உடைத்துவிடுவாய்" என்று அவளிடம் கூறினார்கள். 

இதன் பேரில் பாபா உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தார்...தமது சட்காவைத் தரையில் ஓங்கி அடித்தார்...அவர் கோபாவேசம் அடைந்தார்..  அவரது கண்கள் நெருப்புத் துண்டம் போலாயின...  ஒருவருக்கும் அவர் முன் நிற்கவோ, பேசவோ தைரியம் இல்லை..  பின்னர் அவர் சட்காவின் ஒரு முனையைத் தன் இரு கைகளாலும் எடுத்துக்கொண்டு, வயிற்றிலுள்ள தொப்புளில் குச்சியின் ஒரு நுனியை அமுக்கினார்....மற்றொரு நுனியைக் கம்பத்தில் பொருத்தவைத்து அழுத்த இரண்டு - மூன்றடி நாலமுள்ள சட்கா முழுவதும் அடிவயிற்றுக்குள் சென்றுவிட்ட மாதிரியாகத் தோன்றியது பகவானின் இந்தச் செயல்....இன்னும் சிறிது நேரத்தில் அடிவயிறு கிழிந்துவிடுமென்று மக்கள் பயந்தனர்.. தூண் உறுதியானது.  அசையாதது.  பாபா அதனருகில் மிகமிக நெருக்கமாகப் போகத் தொடங்கித் தூணைப் பலமாக அணைத்தார்.  எந்த வினாடியிலும் வயிறுகிழியுமென எதிர்பார்க்கப்பட்டது.  அவர்கள் எல்லாம் பீதியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தாலும், வியப்பாலும் ஊமையாகி நின்றனர்...

பாபா தமது அடியவனுக்காகவே இவ்விதம் கஷ்டப்பட்டார்.  மற்ற அடியவர்கள் மௌஷிபாயீடம் அவளது சேவையில் இன்னும் நிதானமாக இருக்கும்படியும் பாபாவுக்கு எவ்வித வலியையோ, தொல்லையையோ உண்டாக்கவேண்டாம் என்றும் குறிக்கவே விரும்பினர்....நல்லெண்ணத்துடனே அவர்கள் இதைச் செய்தனர்...ஆனால் பாபா இதைக்கூடப் பொறுக்கவில்லை... தங்களது நல்லெண்ண முயற்சியினால் பெருந்துன்பம் விளைவிக்கும் இத்திடீர் விளைவைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.  காத்திருந்து பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்யமுடியவில்லை....அதிஷ்டவசமாக பாபாவின் ஆவேசம் சீக்கிரம் குளிர்ந்தது...அவர் குச்சியை விட்டுவிட்டுத் தன் இடத்தினுள் வந்து அமர்ந்தார்.. இதிலிருந்து அடியவர்கள் மற்றவர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பியவண்ணமே பாபாவுக்கு அவர்கள் சேவைசெய்ய விட்டுவிட வேண்டுமென்கிற பாடத்தைத் தெரிந்துகொண்டனர்...ஏனெனில் அவர்கள் செய்யும் சேவைகளின் மதிப்பையும், தகுதியையும் பாபாவே அளக்க வல்லமையுடையவராய் இருக்கிறார்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏

ஸ்ரீ சாயீயை பணிக ...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏🙏


https://youtu.be/mU3Aq5FLDOE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...