ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, ஜூன் 05, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தாறு(26

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🏻

🙏🏼 அத்தியாயம்:.இருபத்தாறு(26)🙏🏼

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது..ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீ சாய்  சத்சரித்திர வேதப்பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏அத்தியாயம்:::. இருபத்தாறு(26 )🙏

🙏முன்னுரை...🙏

சத்குருநாதர் சீரடி பாபாவின்  பாதகமலத்தில் சரணாகதியடைந்து, எவ்வாறு அனைத்து விதமான மாயை சுழற்சியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது என்பதைப் பற்றிய குறிப்புரை..

சத்குருநாதர் சீரடி  பகவானை எவ்வாறு மானசீகமான முறையில் வழிபாடு செய்து அகண்டப்  பிரார்த்தனையை மேற்க்கொள்வது என்பதைப் பற்றிய விளக்கவுரை....

சீரடி பாபா தன்னை நாடி வந்த பகத் பந்த் என்ற பக்தரை,  எவ்வாறு  தாய்மையுணர்வுடன்  ஆசிர்வதித்து வலிப்பு நோயிலிருந்து குணப்படுத்தினார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை...

சீரடி பாபா எவ்வாறு ஹரிச்சந்திர பிதலேவின் குடும்பத்தை ஆசிர்வதித்து , அவர் மகனின் காக்காய் வலிப்பு நோயைக்   குணப்படுத்தினார் என்பதைப் பற்றியும்,  மற்றும்  பாபா, எவ்வாறு  பிதலேவிற்கு மூன்று ரூபாயை வழங்கி, அக்குடும்பத்தை ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரை... 

சீரடி பாபா தன்னைக் காண வந்த  ஆம்ப்டேகர் என்ற பக்தரின் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கு  எவ்வாறு   உபதேச மொழிகளின் மூலமாக  அனுக்கிரகம் செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்...

🔥முதலில் சத்குருநாதர் சீரடி பாபாவின்  பாதகமலத்தில் சரணாகதியடைந்து, எவ்வாறு அனைத்து விதமான மாயை சுழற்சியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது என்பதைப் பற்றிய குறிப்புரையை இங்கு காண்போம்..🔥

இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் யாவும் மாயையின் விளையாட்டே என்பது குறிப்பிடத்தக்கது...கடவுளின் ஆக்கும் ஆற்றலே  ஆதி மாயை..மாயை என்பது  உண்மையில் இருப்பவை அல்ல...உண்மையான பரப்பிரம்மமே நிச்சயமாக இருக்கிறது... இருளின் காரணமாக ஒரு கயிற்றையோ அல்லது  மாலையையோ பாம்பாக நாம் எண்ணிக்கொள்வதைப் போலவே, புறத்தோற்றத்தை மட்டுமே நாம் காண்கிறோம்.. .காணக்கூடிய பொருட்களிலெல்லாம் உள்ளுறைந்து கிடக்கும் மெய்ப்பொருளை நாம் காண்பதே இல்லை...

நமது அறிவுக் கண்களை சத்குரு மட்டுமே திறந்துவிடுகிறார். பொருட்கள் அனைத்தும்  அவைகளின் தோற்றத்தில் காணப்படுவது போல் பாராமல்,  உண்மையான ஒளியில் அவைகளைக் காணுமாறு நம்மை ஊக்குவிக்கின்றார்... எனவே நாம் சத்குருவை வணங்கி, உண்மையான காட்சியை அதாவது கடவுள் காட்சியை நமக்கருள வேண்டி பிரார்த்தனை மேற்க்கொள்வோம்...

🔥சத்குருநாதர் சீரடி  பகவானை, எவ்வாறு மானசீகமான முறையில் வழிபாடு செய்து அகண்டப் பிரார்த்தனையை மேற்க்கொள்வது என்பதைப் பற்றிய  ஹேமாட்பந்தின்  விளக்கவுரை இங்கே....🔥

ஒரு நூதன வழிபாட்டை ஹேமாட்பந்த் நமக்கு எடுத்துரைக்கின்றார்..சத்குருவின் பாதாம் புயத்தைக் கழுவும் நன்னீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை, நம்பிக்கை என்னும் உடையை அவர் மேனிக்கு உடுத்தி, நமது எட்டு விதமான சாத்வீக உணர்ச்சிகள் என்னும் அஷ்ட கமலங்களையும், 'ஒருமைப்பாட்டுடன் கூடிய  மனம்' என்னும் கனியை சத்குருநாதருக்கு  சமர்ப்பிப்போம்...பக்தி என்னும் நறுமணப் பொடியை சத்குருவின் சிரத்தில் இட்டு, அனைத்துப் பற்றுக்களையும்  துறக்க  அதனை சத்குருவின் தேகத்தில்  உடையாக  அணிவித்து  நமது தலையை சத்குருவின்  பாத கமலத்தில் வைப்போம்....

இத்தகைய எல்லா அணிமனிகளாலும் சத்குருவை அலங்கரித்துவிட்டு, நமதனைத்தையும் அவரிடம் சமர்ப்பித்து விடுவோம்.. உஷ்ணத்தைப் போக்குவதற்குப் பக்தி என்னும் சாமரம் கொண்டு வீசுவோம்... இத்தகைய பேரானந்த வழிபாட்டுக்குப் பின் அவரை இங்ஙனம் வேண்டுவோம்..இப்போது சத்குருவை நோக்கி "எங்களது புத்தியை  அந்தர்முகமாக திசை திருப்பிவிடுங்கள்.. நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி, ஆத்மமலர்ச்சி அடையக் கூடிய வகையில் எங்களை  இவ்விதமாக ஊக்குவியுங்கள்.. ஆன்மாவையும், உடலையும் (உடலுணர்வு, மற்றும் அகங்காரம்) உம்மிடம் ஒப்புவித்தோம்... எங்களுடைய கண்களைத் தங்களது ஆக்குங்கள்...அதன்மூலம் நாங்கள் இன்பத் துன்பங்களையே உணராதிருப்போம்.. தங்கள் சங்கல்பத்தின்படியும், விருப்பத்தின்படியும்  எங்களது மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள் சத்குருநாதா....தங்கள் பாதாம்புஜத்தில் எங்களது மனம் ஆறுதல் பெறட்டும்."..இப்போது இந்த அத்தியாயத்தின் கதைகளுக்கு வருவோம்...

🔥சீரடி பாபா தன்னை நாடி வந்த பகத் பந்த் என்ற பக்தரை, எவ்வாறு  தாய்மையுணர்வுடன் ஆசிர்வதித்து வலிப்பு நோயிலிருந்து குணப்படுத்தினார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

சத்குருவின் மற்றொரு சீடரான பகத் பந்த் என்பவர் சீரடிக்கு வரும் நல்லதிர்ஷ்டம் பெறநேர்ந்தது..அவருக்கு சீரடிக்குச் செல்லும் ஆவல் இல்லை..ஆயின் மனிதன் ஒரு விதமாக எண்ணக் கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுகிறார்...அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துக் கொண்டிருக்கும் போது சீரடிக்குப் போய்க் கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும் காண நேர்ந்தது...அவர்கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர்..அவரால் இயலாதென்று சொல்ல முடியவில்லை..அவர்கள் எல்லோரும் பம்பாயில் இறங்கினர்...பகத் பந்த் மட்டும்  விராலில் இறங்கினார்..பின்னர் பகத்பந்த் சீரடி விஜயத்திற்காகத் தனது சத்குருவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் அக்கோஷ்டியுடன் சீரடிக்குப் புறப்பட்டார்...எல்லோரும் மறுநாள் சீரடியை அடைந்து மசூதிக்குச் சுமார் பதினொரு   மணிக்குச் சென்றனர்...பாபாவின் வழிபாட்டிற்காகக் குழுமியுள்ள பக்தர்கள் வந்துக்கொண்டும், போய்க்கொண்டும் இருப்பதைக் கண்ட அவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தனர்....ஆனால் பகத்  பந்த் திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக் கீழே சாய்ந்தார்..அவர்கள் எல்லோரும் பீதியடைந்தனர்...எனினும் அவரைத் திரும்ப உணர்வுக்குக் கொண்டுவர தங்களால் இயன்றதைச் செய்தனர்...

சீரடி பாபாவின் அருளாலும், அவர் தலைமீது தெளிக்கப்பட்ட புனித நீராலும் பிரக்ஞைக்கு  வந்து, அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் எழுந்து உட்கார்ந்தார்.... மற்றொரு குருவின் சீடர் தான்  பகத் பந்த்   என்று  அறிந்துகொண்ட சர்வாந்தர்யாமியான பாபா, அஞ்சாமலிருக்கும்படி பகத்பந்திற்கு  அறிவுருத்தி, அவரது சொந்தக் குருவின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த கீழ்க்கண்டவாறு அவரிடம் கூறினார். "வருவது வரட்டும், விட்டு விடாதே.  உனது ஆதாரத்தையே அதாவது  குருவையே உறுதியாகப் பற்றிக்கொண்டு எப்போதும் நீர்  நிதானத்துடனும், சதாகாலமும் அவருடன் ஒன்றியும் இருப்பாய்"...என்று ஏகத்தன்மையுடன் ஆசி வழங்கினார் பாபா... இம்மொழிகளின் குறிப்பை பந்த் உடனே அறிந்துக் கொண்டார்..இவ்விதமாக அவர் சத்குருவை நினைவுக் கூர்ந்தார்.  பாபாவின் இந்த அன்பை அவர்தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை....

🔥சீரடி பாபா எவ்வாறு   ஹரிச்சந்திர  பிதலேவின் குடும்பத்தை ஆசிர்வதித்து , அவர் மகனின் காக்காய் வலிப்பு நோயைக்   குணப்படுத்தினார் என்பதைப் பற்றியும்,  மற்றும்  பாபா, எவ்வாறு  பிதலேவிற்கு   மூன்று ரூபாயை வழங்கி,அக்குடும்பத்தை ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரை இங்கே... 🔥

பம்பாயில் ஹரிச்சந்திர பிதலே என்னும் பெயருள்ள மனிதர் ஒருவர் இருந்தார்...  காக்காய் வலிப்பால் அவதியுறும் ஒரு மகன் அவருக்கு இருந்தான்...பல அலோபதி ஆயுர்வேத வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமேதும் ஏற்படவில்லை.. ஒரே ஒரு வழிதான் பாக்கி இருந்தது.  அதாவது ஞானிகளிடம் அடைக்கலம் புகுவதால் நோயின் தாக்கம் குறையலாம் என்ற நம்பிக்கை மட்டும் பிதலேவிற்கு இருந்தது... தாஸ்கணு என்ற பக்தர்  தமது மிகச்சிறந்த, அற்புதமான கீர்த்தனைகளால் பம்பாய் மற்றும்  ராஜஸ்தானி போன்ற இடங்களில் பாபாவின் புகழைப் பரவச் செய்தார் என்று முன்னரே  அத்தியாயம்  பதினைந்தில் கூறப்பட்டுள்ளது..முன்னரே   ஹரிச்சந்திர பிதலே இக்கீர்த்தனைகள் சிலவற்றை 1910..ஆம் ஆண்டில்  கேட்டார்.... அதிலிருந்து மற்றவர்கள் மூலமாகவும் பாபா தமது ஸ்பரிசத்தாலும், வெறும் சக்தியுடன் கூடிய  பார்வையாலும் மட்டுமே அனேக தீர்க்க முடியாத வியாதிகளைக் குணப்படுத்தியிருப்பதாக பிதலே  அறிந்திருந்தார்...அதனால் சாயீபாபாவைக் காண பிதலே  மனதில் ஆர்வம் எழுந்தது... எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, வெகுமதிகளையும், பழக்கூடைகளையும் எடுத்துக்கொண்டு, பிதலே குடும்பத்துடன் சீரடிக்கு வந்து சேர்ந்தார்.. 

பின்னர் அனைவருடன்  மசூதிக்குச் சென்று பாபாவின்முன் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு தனது நோயாளிப் புதல்வனைப் பாபாவின் பாதங்களில் வைத்தார்... பாபா அக்குழந்தையைக்  கண்ட அத்தருணத்திலேயே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது...கண்களைச் சுற்றிக்கொண்டு அப்புதல்வன் உணர்வற்றுக் கீழே விழுந்தான்...அவனது வாயில்  நுரைத்தள்ளி, உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது...உயிரை விட்டுவிட்டான் போல் தோன்றியது... இதைக் கண்டு பெற்றோர் மிகவும் படப்படப்புடன்  உணர்ச்சி வசப்பட்டனர்.. பையனுக்கு அடிக்கடி வலிப்பு வருமாயினும் தற்போது  இந்த வலிப்பு நீண்டதாகத் தோன்றியது.தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிட்டாள்...கொள்ளைக்காரனுக்குப் பயந்து ஒரு வீட்டில் ஒளிந்த ஒருவன் மீது அவ்வீடு சரிந்து விழுந்துவிட்டதைப் போலவும், புலிக்குப் பயந்து ஓடிய பசு ஒன்று கசாப்புக் கடைக்காரன் கையில் அகப்பட்டுக் கொண்டதைப் போலவும், வெப்பம் தாங்காது ஒரு மரத்தடியில் ஒதுங்கிய ஒரு வழிப்போக்கன் மீது அம்மரமே சாய்ந்து விழுந்துவிட்டதைப் போன்றும், பக்தியுள்ள ஒருவன் கோவிலுக்கு வழிபடச் சென்றபோது அக்கோவிலே அவன்மீது இடிந்து விழுந்துவிட்டதைப் போன்றும் தனது நிலையிருப்பதாகக் கூறி அவள் ஓலமிடத் தொடங்கினாள்.பின் பாபா அவளை நோக்கி, "இம்மாதிரி ஓலமிடாதே.. கொஞ்சம் பொறுமையுடன்  அமைதியாய் இருப்பாயாக.  உமது  இருப்பிடத்திற்கு உமது மகனை  எடுத்துச் செல்...அரைமணி நேரத்தில் அவன் சுவாதீனத்துக்கு வருவான்" என்று கூறித் தோற்றினார்.  பாபா கூறியபடியே அவர்கள் செய்தனர்.  பாபாவின் மொழிகள் உண்மையானதைக் கண்டனர்...வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே பையன் குணமடைந்தான்....பிதலேயின் குடும்பத்தினர்  அனைவரும் மிகவும் மகிழ்வோடு ஆச்சரியம் அடைந்தனர்.  அவர்கள் ஐயம் அழிந்தது...பின் ஹரிச்சந்திர பிதலே தனது  மனைவியுடன் பாபாவைக் காணவந்தார்...பகவான் முன் மிகப்பணிவாகவும், மரியாதையாகவும் வீழ்ந்து நமஸ்கரித்து விட்டு பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறே, மனதில் பாபாவின் உதவிக்கு நன்றி செலுத்தினார்..பாபா புன்சிரிப்புடன், "உமது எல்லா எண்ணங்களும், சந்தேகங்களும், கருத்துக்களும்  இப்போது சாந்தப்படுத்தப்பட்டனவா.? நம்பிக்கையும், பொறுமையும் உடையோரையே ஹரி காப்பாற்றுகிறார்" என்றார்  பாபா...

ஹரிச்சந்திர  பிதலே வசதியுள்ள பணக்கார மனிதர்... பெருமளவில் அவர் இனிப்புக்களை விநியோகித்து பாபாவுக்கு மிகச்சிறந்த பழங்களையும், வெற்றிலை பாக்கையும் அளித்தார்....பிதலேயின் மனைவி மிகச்சிறந்த பண்புடையவள்... எளிமை, அன்பு, நம்பிக்கை உடையவள்...தூணுக்கு அருகில் அமர்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய பாபாவையே உற்றுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்...அவளது நட்பும், அன்பும், கருணையும் கொண்டக்  குணத்தைக் கண்டு பாபா மிகவும் சந்தோஷமடைந்தார்...முழு மனதோடும், முழு ஆத்மாவோடும் தம்மிடம் சரணடைந்து வழிபடுவோர்பால் ஞானிகளும், கடவுளரும் சார்ந்திருக்கின்றனர் அன்றோ..!  பாபாவின் சந்நிதானத்தில் சில இன்பமான நாட்களைக் கழித்த பின்னர் அக்குடும்பத்தினர் புறப்படுவதற்குப் பாபாவின் அனுமதியைப் பெற மசூதிக்கு வந்திருந்தனர். உதீயையும், ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு பாபா அளித்த பின்பு பிதலேயை அருகே அழைத்தார்.  "பாபு நான் உனக்கு முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறேன்.  இப்போது மூன்று ரூபாய் தருகிறேன்.... இதை உனது பூஜை அறையில் வைத்துக்கொள்வீராக..நீர் நன்மையடைவாய்" என்று கூறி ஆசி வழங்கினார்..இவைகளைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர்முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, அவரது ஆசீர்வாதத்துக்காக வேண்டி நின்றார்....  சீரடிக்கு இதுவே தமது முதல் விஜயமாதலால் பாபா தாம் முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியது தமக்கு விளங்கவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது...இப்புதிர் விடுபடுவதற்கு அவர் ஆவலாய் இருந்தார்.  ஆனால் பாபா மெளனமாக இருந்துவிட்டார்....

பிதலே பம்பாய்க்குத் திரும்பியபின் தனது தாயாருக்கு சீரடியில் நடந்த எல்லாவற்றையும், பாபா தனக்கு  முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொன்ன கூற்றையும்  கூறினார்...அந்தத் தாயாருக்கும்  அப்புதிர் புரியவில்லை.. ஆனால் இதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபின், நினைவுக்கு வந்த ஒரு பழைய சம்பவம் அப்புதிரை விடுவித்தது.  "உனது மகனோடு இப்போது நீ சாயிபாபாவைப் பார்க்கச் சென்றதுபோல், பல ஆண்டுகளுக்கு முன் உனது தந்தையும் உன்னை அக்கல்கோட்டுக்கு அப்பெருமானின் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றார்.....  அப்பெருமான்கூட ஒரு சித்தர், பரிபூரண யோகி, சர்வவியாபி, தாராள மனதுடையவர்.  உனது தந்தை தூயவர், பக்தியுடையவர்...அவரது வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது...அவர் உனது தந்தைக்கு இரண்டு ரூபாய்களைப் பூஜையறையில் வைத்து வழிபடுவதற்காக அளித்தார்.  உனது தந்தை, தான் சாகும்வரை அதை முறைப்படி வழிபட்டு வந்தார்.  ஆனால் அதற்குப்பின் வழிபாடு புறக்கணிக்கப்பட்டு அந்த ரூபாய்கள் தொலைந்து போயின...சில ஆண்டுகளுக்குப் பின் அவற்றின் நினைப்பும் மறந்துபோயின. தற்போது நீ அதிஷ்டசாலியாக இருந்ததால், சாயீபாபாவின் ரூபத்தில் அக்கல்கோட் மஹராஜ் உனது கடமைகள், வழிபாடு இவற்றை நினைவூட்டவும், அபாயங்களை அகற்றிவிடவும் தோன்றியிருந்தார்...இனிமேலாவது ஜாக்கிரதையாக எல்லா ஐயங்களையும், கெட்ட எண்ணங்களையும் அகற்றிவிடு...உனது மூதாதையர் வழிநின்று நன்றாக நடந்துகொள்.... குடும்ப தெய்வங்களையும், காசுகளையும் வணங்கி, நன்றாக  ஞானிகளின் ஆசிகளில் பெருமைகொள்.  உனது பக்தி உணர்ச்சிக்கு சமர்த்த சாயீ அன்புடன் புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார்... உனது நன்மைக்காக இதைப் பயிர் செய்வாய்" என்று கூறினாள் பதலேவின் தாயார்...தாயாரின் இம்மொழிகளைக் கேட்டு பிதலே மிகவும் ஆச்சரியப்பட்டார்.  பாபாவின் சர்வவியாபித்துவத்  தன்மையை அவர் அறிந்து உணர  தலைப்பட்டு, அதில் உறுதியானார்... பாபாவின் தரிசனத்தின் மகிமையையும், முக்கியத்துவத்தையும் அவர் அறிந்தார்.  அதிலிருந்து அவர் குணத்தைப் பற்றி சர்வ ஜாக்கிரதை உடையவரானார்....

🔥சீரடி பாபா தன்னைக் காண வந்த  ஆம்ப்டேகர் என்ற பக்தரின் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கு  எவ்வாறு   உபதேச மொழிகளின் மூலமாக  அனுக்கிரகம் செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரை இங்கே...🔥

புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் ஆம்ப்டேகர் என்பவர் பாபாவின் பக்தர்...அவர் பத்து ஆண்டுகளுக்கு தாணே ஜில்லாவிலும், பின் ஜவ்கர் ஜில்லாவிலும் எக்ஸெய்ஸ் டிபார்ட்மென்டில் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார்...வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர் முயற்சித்தார்...ஆனால் முடியவில்லை... மற்ற கேடுகளால் அவர் தாக்கப்பட்டு அவரது நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துக் கொண்டே வந்தது...இதே நிலைமையில் சீரடிக்கு ஒவ்வோர் ஆண்டும் சென்று தனது கவலைகளை பாபாவின்முன் சமர்ப்பிப்பதுமாக ஏழாண்டுகள் கழித்தார்....  1916..ஆம் ஆண்டில் அவரது நிலைமை மோசமாகி, சீரடியிலேயே தற்கொலை செய்துகொள்வது எனத் தீர்மானித்தார்....எனவே தன் மனைவியுடன் சீரடிக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்..  ஒருநாள் தீஷித் வாதாவின் முன்னால் உள்ள மாட்டு வண்டியில் அமர்ந்துக் கொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் குதித்துத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் தீர்மானித்துவிட்டார்...அவர் ஒரு மாதிரியாக எண்ண, பாபா வேறொருவிதமாக வழிக் காண்பித்தார்...இந்த இடத்துக்குச் சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டல் முதலாளியும், பாபாவின் அடியவருமான சகுண் என்பவர் வெளியே வந்து அவரிடம், "அக்கல்கோட் மஹராஜின் இச்சரிதத்தை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா....?" என்று கேட்டார்..ஆம்ப்டேகர் அவரிடமிருந்து அந்நூலை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்... எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாகக் கீழ்கண்ட ஒரு கதையை அவர் படிக்கத் தொடங்கினார்...

அக்கல்கோட் மஹராஜின் அடியவன் ஒருவன் தீர்க்கப்பட முடியாத ஒரு வியாதியால் மிகவும் அல்லலுற்றுக் கொண்டிருந்தான்..அந்த வேதனையை மேற்கொண்டு தாங்க முடியாமற் போகவே அவன் மனம் உடைந்து தனது தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் குதித்துவிட்டான்...உடனே மஹாராஜ் அங்குவந்து அவனைத் தன் கரங்களாலேயே வெளியே எடுத்து, "நல்லதோ, கெட்டதோ உன் முந்தைய கர்மத்தின் பயனை நீ அடைந்தாக வேண்டும்.  அந்த கர்மவினைகள் அனுபவித்தலில்  பூரண எய்தவில்லையானால் தற்கொலை உனக்கு உதவியளிக்காது..மீண்டும் ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தையே அடைய வேண்டும்.. எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப் பதிலாக ஏன் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து, முந்தைய கர்மத்தின் பலன்களை எல்லாம் முழுவதுமாக தீர்த்துவிடக்கூடாது...?" என்றார்....

இந்தப் பொருத்தமான, தக்க சமயத்தில் கிடைத்த கதையைப் படித்துவிட்டு ஆம்ப்டேகர் மிகவும் ஆச்சரியப்பட்டார்....உள்ளம் உருகினார்.  பாபாவின் குறிப்பை இக்கதையின் மூலம் அவர் பெற்றிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்.  பாபாவின் சர்வ வியாபித்துவத்தையும், தயாள குணத்தையும் கண்டு, பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, பாபாவின் பெரும்  ஆத்ம பக்தராகிவிட்டார்...அவர் தந்தையார் அக்கல்கோட் மஹராஜின் பக்தராக இருந்தவர்... சாயீபாபா ஆம்ப்டேகரையும், அவர் தந்தையார் சென்ற அடிச்சுவட்டிலேயே சென்று அவரின் குருவிடம்  பக்தி பூண்டவராகத் தொடர்ந்திருக்கும்படி அறிவுருத்தினார்..பின்னர் பாபாவின் ஆசீர்வாதத்தைப்  பெற்றார்...அவரின் எதிர்காலம் சிறப்புறத் தொடங்கியது...பின்னர் ஜோதிடம் படித்து, அதில் திறமை பெற்றுத் தனது செல்வத்தைப் பெருக்கினார்... போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால் இயன்று, தனது பிற்கால வாழ்வை சௌகரியமாகவும், வசதியாகவும் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஸ்ரீ சாயீயைப்  பணிக.... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏


https://youtu.be/67fo8-7J12c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...