ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼
🙏 அத்தியாயம் ::- இருபத்தைந்து (25)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சீரடி சாய்பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது. ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....
இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥
🔥குறிப்பு..ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்.. ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்..மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்..மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.... 🔥
🙏அத்தியாயம்::-இருபத்தைந்து(25)🙏
🙏முன்னுரை...🙏
சீரடி பாபாவிடம் எவ்வாறு முழுமையாக சரணாகதி அடைந்து, பாபாவின் அனுக்கிரக ஆசியைப் பெறுதல் பற்றிய குறிப்புரை மற்றும் பாபா எவ்வாறு ஹேமாட்பந்தின் சாய் சத்சரித்திரம் எழுதும் ஆவலைத் தீர்த்து குறிப்புக்களை கொடுத்து வழிக்காட்டினார் என்பதன் குறிப்புரை...
தன்னுடைய வியாபாரத்திற்காக ஆசிப் பெற வந்த தாமு அண்ணா என்ற பக்தரை, எவ்வாறு பகவான் அவரின் வியாபார நோக்கத்தில் இருக்கின்ற எதிர்மறையான போக்கைக் கண்டித்து வியாபாரம் செய்வதற்கு தடைவிதித்ததைப் பற்றிய விளக்கவுரை..
சீரடி பாபா எவ்வாறு தாமு அண்ணாவின் குழந்தையின்மையை போக்க மாம்பழக்கனிகளை அளித்து ஆசிர்வதித்து ஆம்ரலீலையை நடத்தினார் என்பதன் அனுபவ உரை...
சீரடி பகவான் தன் பக்தர்களுக்காக உரைத்த உபதேச சூட்சம அருள்மொழிகள் இங்கே.
ஶ்ரீசாய் சத்சரித்திர நூலாசிரியர் ஹேமாட்பந்த் , சீரடி பாபாவிடம் பக்தர்களுக்காக செய்த பிரார்த்தனை படிவத்தின் குறிப்புரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கே கீழே காண்போம்....
🔥 முதலில் சீரடி பாபாவிடம் எவ்வாறு முழுமையாக சரணாகதி அடைந்து, அவரின் அனுக்கிரக ஆசியைப் பெறுதல் பற்றிய குறிப்புரை மற்றும் பாபா எவ்வாறு ஹேமாட்பந்தின் சாய் சத்சரித்திரம் எழுதும் ஆவலைத் தீர்த்து குறிப்புக்களை கொடுத்து வழிக்காட்டினார் என்பதன் குறிப்புரையை இங்கே காண்போம்..🔥
கருணைக் கடலும், ஈசுவர அவதாரமும், பரப்பிரம்மமும் மாபெரும் யோகீஸ்வரனும் ஆகிய சாயிபாபாவுக்கு நமது அஷ்ட அங்கங்களாலும் நமஸ்கரித்துவிட்டு நாம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். ஞானிகளின் முடிமணியாகவும், எல்லாப் புனிதப் பொருட்களின் இருப்பிடமாகவும், நமது ஆத்ம ராமனேயனாகவும், பக்தர்களுக்கு ஒரு வல்லமை வாய்ந்த அடைக்கலமாகவும், இகஜெக வழிக்காட்டியாகவும், மிகுந்த விழிப்புணர்வுடன் பக்தர்களை உற்றுநோக்கி வழிக்காட்டும் சத்குருவாக விளங்கும் சாயிபாபாவின் பாதகமலத்தில் சரணாகதி அடைகின்றோம்.. வாழ்க்கையின் இலட்சியம், குறிக்கோள் இவற்றை எய்திய சத்குருநாதரை வீழ்ந்து வணங்குவோம்....
சாய்பாபா எப்போதுமே கருணை நிறைந்தவராகவும், தாய்மையுணர்வுடனும் இருக்கிறார்...சத்குருவிடம் முழுமனதுடனான, நிலைமாறாத, தூய்மையான ஆழமான பக்தியை நாம் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்....உறுதியான நம்பிக்கையும், விசுவாசத்துடன் கூடிய பக்தியும் ஒரு பக்தனானவன் பெறும்போது, அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன... சாய்பாபாவின் வாழ்க்கையையும், லீலைகளையும் எழுதவேண்டுமென்ற ஆர்வம் ஹேமாட்பந்தின் உள்ளத்தில் எழுந்தபோது, அதை உடனே அவரைக் கொண்டு எழுதிமுடிக்கச் செய்தார் பகவான்...மேலும் பாபா தன்னைப் பற்றிய முக்கியக் குறிப்புகள், உவமான விளக்கங்கள்,உபதேசங்கள், மறை ஞான விளக்கங்கள், லீலைகள், அனுபவங்கள், அற்புதங்கள் இவைகளை குறிப்பெடுத்துக் கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டபோது, ஹேமாட்பந்த் மேன்மேலும் எழுதும் சக்தியும், புரிந்துக் கொண்டு எழுதக்கூடிய உணர்வும் ஊட்டப்பெற்றார்...பகவானின் ஆசியானது ஹேமாட்பந்தின் அறிவுக் கூர்மையை அதிகரித்து, வேலையை மேற்கொண்டு முடிப்பதற்கு வேண்டிய உறுதியையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் பெற்றது....
ஹேமாட் கூறுகின்றார்....ஶ்ரீ சாய் சத்சரித்திரம் எழுதும் இப்பணியை மேற்கொள்ளத் தாம் தகுதியுடையவரல்ல என்றும், ஆனால் பாபாவின் அருள் நிறைந்த ஆசீர்வாதங்களும், ஊக்கமுமே மேற்கொண்ட பணியை சம்பூர்ணமாக செயல்பட என்றும் அவர் கூறினார். எனவே சாய் சத்சரித்திரம் என்ற இக்கிணற்றிலிருந்து அல்லது நீர்த்தேக்கத்திலிருந்து, அல்லது சோமகாந்தக் கல்லிலிருந்து சாயி லீலைகள் என்ற ரூபத்தில் அமிர்தம் ஊறி வருகிறது... படிப்போர் அதை மனதாறப் பருகுகிறார்கள்..சத்குரு சாய்பாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழுமனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும், துன்பத் துயரங்களும், பலப்பிறவி கர்மவினைகளும் துடைக்கப்பட்டு, அவனது வாழ்க்கை பாபாவால் கவனிக்கப்படுகின்றது...அகமத்நகரிலிருந்து வியாபாரத்திற்காக பகவானிடம் ஆசிப்பெற வந்த தாமு அண்ணாவின் அனுபவ விளக்கவுரையைப் பற்றி விளக்கமாகக் கீழே தரப்படுகின்றது...
🔥தன்னுடைய வியாபாரத்திற்காக ஆசிப் பெற வந்த தாமு அண்ணா என்ற பக்தரை, எவ்வாறு பகவான் அவரின் வியாபார நோக்கத்தில் இருக்கின்ற எதிர்மறையான போக்கைக் கண்டித்து வியாபாரம் செய்வதற்கு தடைவிதித்ததைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்..🔥
ஆறாவது அத்தியாயத்தில் சீரடியில் ராமநவமித் திருவிழா சம்பந்தமாக தாமு அண்ணாவைப் பற்றி முன்னரே கூறப்பட்டிருப்பதை பக்தர்கள் கவனித்திருப்பீர்கள்...ஏறக்குறைய 1895 ஆம் ஆண்டில் ராமநவமி உற்சவக் கொண்டாட்டம் துவக்கப்பட்டபோது அவர் சீரடிக்குச் சென்றார்.... அதிலிருந்து ஒவ்வொரு வருட விழாவின் போதும் அவர் அலங்காரக் கொடியை ஏற்பாடு செய்துவந்தார். அவ்விழாவுக்கு வரும் ஏழைகளுக்கும், பக்கிர்களுக்கும் அன்னதானம் செய்தார்....
ஒருமுறை தாமு அண்ணா பாபாவிடம் கடிதம் மூலம் தொடர்புக் கொண்டார்... தானும் தன் நண்பரும் சேர்ந்து வியாபாரம் மேற்க்கொள்ளப் போவதாகவும் , கூட்டாகச் சேர்ந்து பஞ்சு பேர வியாபாரம் செய்யவேண்டுமென்றும், அது பல இலட்சங்களை இலாபமாகக் கொணரும் என்றும் எழுதியிருந்தார்...(ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம் 1936 ஆம் ஆண்டில் தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய் விவகாரம் கூட்டாளி இல்லாமல் தரகர் ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும், தாமு அண்ணா மட்டும் இலாபம் பெறுவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.) மேலும் வியாபாரம் நன்றாயிருக்கிறது என்றும், எவ்வித அபாயமுமில்லை என்றும் வாய்ப்பு தவற விட்டு விடக்கூடாது என்றும் தரகர் எழுதியிருப்பதாக தாமு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்...இந்த கடிதத்தை எழுதிவிட்டு பாபாவின் அனுமதிக்காக காத்திருந்தார்....
தாமு அண்ணா மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தார்...இந்த வியாபார விவகாரத்தில் தாமு அண்ணாவால் உடனே முடிவெடுக்க முடியவில்லை....இதைப்பற்றி தாமு சிந்தித்துக் கொண்டே இருந்தார்... எல்லாத் தகவல்களையும்,வியாபார நோக்கத்தையும் முழுமையாக எழுதி ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தாமு... இதுகுறித்து பாபாவைக் கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும் வேண்டிக் கொண்டிருந்தார்...அடுத்தநாள் கடிதம் ஷாமாவுக்குக் கிடைத்தது...மத்தியானம் மசூதிக்கு வந்து, அதை பாபாவின் முன் வைத்தார்....ஷாமாவை விஷயம் என்னவென்று கேட்டு, கடிதம் எதைப்பற்றியது என்று வினவினார் பகவான் ..அதற்கு ஷாமா கூறுகின்றார்...
ஷாமா : வியாபார விஷயங்கள் பற்றி அகமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா தங்களைக் கேட்க விரும்புகிறார்...
பாபா : அவன் என்ன எழுதுகிறான்... என்ன திட்டம் போடுகிறான்...? கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தைப் பிடிக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது...கடிதத்தைப் படி...
ஷாமா : தாங்கள் இப்போது கூறியதைத் தான் இக்கடிதம் கூறுகிறது.ஓ...! தேவா, நீங்கள் இங்கே அமைதியாகவும்,சாந்தமாகவும், அடக்கமாகவும் அமர்ந்துக் கொண்டு பக்தர்களைக் குழம்பச்செய்து அவர்கள் அமைதியற்றுத் தவிக்கும்போது சிலரைக் கடிதம் மூலமாகவும், சிலரை நேரடியாகவும் இங்கு இழுக்கிறீர்கள். கடிதத்தில் அடங்கியுள்ள விஷயம் தங்களுக்கு தெரியுமென்றால் பின் என்னை ஏன் படிக்கும்படி சொல்லி வற்புறுத்துகிறீர்கள்..? என்று கேட்கின்றார் ஷாமா....
பாபா : ஓ...! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான் ஏதாவது பேசுவேன். அதை யார் நம்புவார்கள்..?
பின் ஷாமா அக்கடிதத்தை வாசித்தார்..... பாபா அதைக் கவனத்துடன் கேட்டு உணர்ச்சியுடன் கூறினார், "சேட்டுக்கு (தாமு அண்ணாவுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது...அவனது வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை. இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து, இலட்சங்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்படி பதில் எழுது."
தாமு அண்ணா ஆவலுடன் காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்...அதைப்படித்துவிட்டு இலட்சரூபாய்களை இலாபமாகப் பெறவிருந்த அவரின் ஆர்வமும், நம்பிக்கையும் தரைமட்டமாக்கப்பட்டத்தை தாமு அறிந்தார். பாபாவைக் கலந்தாலோசித்ததில் தாம் தவறு செய்துவிட்டதாகக் கருதினார்...ஆனால் பதிலில் ஷாமா கூறுகின்றார் தாமுவிடம்..நீங்கள் பகவானை பார்ப்பதற்கும், கடிதம் மூலம் கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும்,ஆகவே சீரடிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும், பாபாவைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததார்...
ஆகவே தாமே சீரடிக்குச் சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப் பற்றிக் கேட்பதே சரியானது என்று நினைத்தார்...எனவே தாமு அண்ணா சீரடிக்குச் சென்று பாபாவைக் கண்டு, வீழ்ந்து பணிந்து அவரது கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். விவகாரத்தைப் பற்றி வெளிப்படையாகக் கேட்க அவருக்குத் தைரியமில்லை... பாபாவுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தால் நலமாயிருக்கும் என அவர் எண்ணினார்....
பாபா இந்த வியாபாரத்தில் தமக்கு உதவி செய்தால் அவருக்குக் கொஞ்சம் பங்கையோ, இலாபத்தையோ அளிக்கலாம் என மனதில் நினைத்தார் தாமு...தாமு அண்ணா தன் மனதில் இரகசியமாக இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தார்..ஆனால் பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை....நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக இருந்தது. குழந்தை இனிப்பை விரும்புகிறது. ஆனால் தாய் அதற்குக் கசப்பான மாத்திரைகளைப் புகட்டுகிறாள்..முன்னது அதன் தேக நிலைக்குக் கேடு செய்கிறது..பின்னது நலப்படுத்துகிறது. சிசுவின் நலன்கருதியே தாய் கசப்பான மாத்திரையை அதற்குச் சமாதானம் செய்து புகட்டுகிறாள்....அவ்வாறு மிகுந்த தாய்மையுணர்வுடன் பாபாவும், பக்தர்களின் நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவர் என்பதால், தாமு அண்ணாவின் மனதில் இருப்பதை அறிந்து, "பாபு, அம்மாதிரியான உலக விவகாரத்திலெல்லாம் (இலாபப் பங்கு) நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை" என்றார். பாபாவின் சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
மேலும் தாமு அண்ணா தானிய வியாபாரம் செய்வதற்கு பாபாவிடம் அனுமதி கேட்டார்... மேலும் அவர் தானியம், அரிசி, கோதுமை, பலசரக்குச் சாமான்கள் போன்றவற்றை வியாபாரம் செய்யலாம் என நினைத்தார்...பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்து "ரூபாய்க்கு ஐந்து சேர் என வாங்கி ஏழு சேர் என விற்பாய்" எனக் கூறினார். எனவே இந்த வியாபாரமும் கைவிடப்பட்டது...தானிய விலையேற்றம் சிலநாள் வரை இருந்தது.. பாபாவின் தீர்க்கத் தரிசனம் பொய்யாகி விடும்போல் தோன்றியது தாமுவிற்கு.... ஆனால் ஓரிரண்டு மாதங்களில் எங்கும் மழை பெய்து, விலைகளெல்லாம் திடீரென இறங்கி நஷ்டத்தை நோக்கி சென்றது...எனவே தானியத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் பெரும் நஷ்டம் அடைந்தனர்...
இவ்விதியிலிருந்து தாமு அண்ணா பாபாவால் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. மற்றொரு வியாபாரியுடன் தரகர் நடத்திய பஞ்சு வியாபாரமும் பயங்கரமான நஷ்டம் அடைந்ததெனக் கூறத் தேவையில்லை..பஞ்சு, தானியம் என்ற இரண்டு வியாபாரங்களிலும் உள்ள பலத்த நஷ்டத்தில் இருந்து தன்னைக் காப்பற்றியதைக் கண்ட தாமு அண்ணாவின் நம்பிக்கை தீவிரமாக பலமடைந்து, பாபாவின் உண்மை பக்தராக இன்றுவரை கூட இருந்து வருகிறார்.....
🔥சீரடி பாபா எவ்வாறு தாமு அண்ணாவின் குழந்தையின்மையை போக்க மாம்பழக் கனிகளை அளித்து ஆசிர்வதித்து ஆம்ரலீலையை நடத்தினார் என்பதன் அனுபவ உரையை இங்கு காண்போம்...🔥
ஒருமுறை முன்னூறு நல்ல மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டி சீரடிக்கு வந்தது..அது கோவாவிலிருந்து ராலே என்ற மாம்லதரால் பாபாவுக்காக ஷாமாவின் பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது...அது திறக்கப்பட்டதும் எல்லா மாம்பழங்களும் நன்றாக இருந்தன.. அவைகளில் நான்கை மட்டும் தமது கோலம்பாவில் வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம் ஒப்படைத்தார்..."இந்த நான்கு மாம்பழமும் தாமு அண்ணாவுக்காக வழங்க இருக்கின்றது...ஆகவே , அவைகள் இங்கேயே இருக்கட்டும்" என்றார் பாபா...இந்த தாமு அண்ணாவுக்கு இரண்டு மனைவிகள்... தாமுவுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை... பல ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்தும் , தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றதனால் ஒரு பாபக்கிரகம் தன்னுடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்து கொண்டார். ஆனால் பாபாவிடம் தாமுவுக்கு பெரும் நம்பிக்கை உண்டு....மாம்பழம் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், பாபாவை வணங்க தாமு அவர்கள் சீரடிக்குச் சென்றபோது, மற்றவர்களெல்லாம் அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும், அவை தாம்யாவினுடையதே என்றார் பகவான்.... யாரைச் சேரவேண்டுமோ அவர் அதை "உண்டு மரிக்கவேண்டும்" என பாபா கூறினார்.....
பகவான் கூறிய இவ்வார்த்தைகளை முதலில் தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார். ..ஆனால் மகல்சாபதி பாபாவின் வார்த்தையின் சூட்சமத்தை விளக்கினார்.. இறப்பது என்பது 'நான்' என்ற அகங்காரம் இறப்பது ஆகும்...அது பாபாவின் திருவடிகளருகில் நிகழ்வது ஓர் ஆசியேயாகும்.. உடனே தாமு அண்ணா மனம் தெளிந்து தாம் பழத்தை வாங்கிச் சாப்பிடுவதாகக் கேட்டுக் கொண்டார்...ஆனால் பாபா அவரிடம், "நீயே உண்டுவிடாதே...உனது இளைய மனைவிக்குக் கொடுப்பீராக...இந்த ஆம்ரலீலா என்கின்ற மாம்பழ அற்புதம் அவளுக்கு நான்கு மகன்களையும், நான்கு மகள்களையும் கொடுக்கும்" என்று காலப்போக்கில் வாக்குருதி அளித்தார்...பாபாவின் வாக்கே சத்திய மொழிகளாயின...ஜோதிடர்களின் வாக்கு அல்ல என்றும் அறியப்பட்டது..
🔥சீரடி பகவான் தன் பக்தர்களுக்காக உரைத்த உபதேச சூட்சம அருள்மொழிகள் இங்கே.🔥
பாபாவின் வாய்மொழி கூற்றுக்கள், வாக்குருதிகள் அனைத்தும் சத்திய வேத வாக்காகவும், திறமும், பெருமையும் அவர் வாழ்நாளில் நிரூபனமாயிற்றென்றால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!..பகவான் வாழ்ந்தபோது என்ன வாக்குருதிகளை பக்தர்களுக்கு அளித்தாரோ,அவர் சாமதியடைந்த பின்னும் அது மாதிரியே நிகழ்ந்தன. "நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள்....எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும்.. நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என்னுடைய சமாதியும் பேசும், ஒவ்வொருவருடன் கூடவே சென்று தொடர்புக் கொள்ளும்...நான் உங்களிடத்தில் இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள்... ஆனால் அதற்கு என்னையே எப்போதும் நீங்கள் நினைவு கூறுங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள்...முழுமையாக அனைத்தையும் ஒப்படைத்து நான் என்ற அகந்தையின்றி பொருமையுடனும், விசுவாசத்துடனும் காத்திருப்பீராக... அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்று பகவான் உபதேசித்தார்..
🔥ஶ்ரீசாய் சத்சரித்திர நூலாசிரியர் ஹேமாட்பந்த், சீரடி பாபாவிடம் பக்தர்களுக்காக செய்த பிரார்த்தனை படிவத்தின் குறிப்புரையை இங்கே காண்போம் ...🔥
இவ்வத்தியாயத்தை ஹேமாட்பந்த் பிரார்த்தனையுடன் முடிக்கின்றார்..."ஓ..! சாயீ சத்குருவே, பக்தர்களின் கற்பகதருவே!..நாங்கள் வேண்டுகிறோம்....தங்கள் பாதக்கமலத்தில் சரணாகதி அடையாமலோ, மறக்கவோ, உங்களின் பேராற்றலை உணராமலோ இருந்து விடக்கூடாது... இச்சம்சார வாழ்க்கையில் பிறப்பு, இறப்புகளால் நாங்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றோம்... இந்த மாயை நிறைந்த சூழலலிருந்து எங்களை இப்போது காத்து விடுவித்தருளும்..எங்களது புலன்கள் ஆசைகளைத் தேடி ஓடுவதிலிருந்து தடுத்தருளி அந்தர்முக ஆத்மதரிசனத்தைப் பெறத் திருப்பிவிடுங்கள்...புலன்களும், மனதும் இப்படி வெளியில் ஓடித்திரியும் இயல்பைத் தடுக்காவிடில், தடை செய்யப்படாதவரை, தன்னை உணரும் நல்வாய்ப்பே கிடையாது. சொந்த பந்த உறவுகள் யாவரும் இறுதியில் நமக்கு உதவுவது கிடையாது...
தாங்கள் மட்டுமே எங்களுக்கு முக்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பீர்கள்..ஆகவே சத்குருவே.. எங்களது விவாதம் செய்கின்ற பண்பையும், மற்ற பல கெடுதலான விஷயங்களையும் அறவே அழித்துவிடுங்கள். தங்களது திரு நாமத்தை உச்சரிப்பதில் எங்களின் நாவுக்கு ஒரு பேராவல் ஏற்படட்டும்... எங்களின் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் விலக்கி, எங்களது வீடு, உடல் இவைகளைப் பற்றிய உணர்வை மறக்கச்செய்து, மேலும் எங்களது 'நான்' என்ற அகங்காரத்தை அழித்துவிடுங்கள் சத்குருவே...எப்போதும் தங்களின் நாமத்தை நினைவுகூர்ந்து மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடச் செய்யுங்கள்....
எங்களது மனச்சலனங்களை அடக்கி அமைதி, சாந்தம் இவைகளை எங்களுக்கு அருளுங்கள்... தாங்கள் எங்களைச் சற்றே அரவணைத்தால், எங்கள் அறியாமை இருள் மறைந்து உங்கள் ஒளிபெற்ற மகிழ்வுடன் வாழ்வோம்...தங்களது ஆசியினாலும், நல்லருளினாலும், எங்களது முந்தைய நல்வினைகளாலும் தங்களது லீலாம்ருதத்தை பருகச்செய்து ஆழ்ந்த துயிலிலிருந்து எங்களை எழுப்பிவிட்டீர்கள்".. நாங்கள் அனைவரும் என்றென்றும் உங்களின் பாதகமலத்தில் சரண்புகுகின்றோம் சத்குருநாதா..எங்கள் அனைவரையும் காத்தருள்வீராக...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻
ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏻🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக