ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ🙏🙏
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🙏🏼🙏🏼
🙏 ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம்:: முப்பது(30)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்.....ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது..ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....
ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.. அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்....சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.🙏
🙏அத்தியாயம்:: முப்பது(30)🙏
🙏முன்னுரை..🙏
ஶ்ரீசீரடி சாய்பாபா தன்னை நாடி வந்து தம்மிடம் சரணாகதி அடைந்த அனைத்து மனித உயிர்களையும் , மிகுந்த தாய்மையுணர்வுடன் சத்திய உபதேச நெறிமுறைகளைக் கற்பித்து, ஒவ்வொருவரும் தன்னைத் தானே பண்படுத்திக் கொண்டு, எவ்வாறு கடைத்தேற்றம் அடைய வைத்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை...
காகாஜி வைத்யா என்பவரின் கனவில் சப்தசிருங்கி தேவி தோன்றி, சீரடி பாபாவை தரிசிக்கும்படி கூறியதன் மூல சூட்சமம் என்ன என்பதன் விளக்கவுரை...
ஷாமா என்ற பக்தர், வணியில் இருக்கின்ற தேவி சப்தசிருங்கியின் ஆலயத்திற்கு, ஏன் வருகைப் புரிந்தார் என்பதன் விளக்கமும்.... மேலும் காகாஜி என்ற பக்தரின், சீரடி செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை எங்ஙனம் ஷாமா பூர்த்திச் செய்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை...
ரஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்ற பக்தரின் கனவில் பாபா தோன்றி சீரடி வருமாறு உணர்த்தியதைப் பற்றிய அனுபவ உரை....
பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால் என்ற பக்தரின் கனவில் தோன்றிய பாபா சீரடி வருமாறு அறிவுருத்தியதைப் பற்றிய குறிப்புரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்..
🔥முதலில் ஶ்ரீசீரடி சாய்பாபா தன்னை நாடி வந்து தம்மிடம் சரணாகதி அடைந்த அனைத்து மனித உயிர்களையும் , மிகுந்த தாய்மையுணர்வுடன் சத்திய உபதேச நெறிமுறைகளைக் கற்பித்து, ஒவ்வொருவரும் தன்னைத் தானே பண்படுத்திக் கொண்டு, எவ்வாறு கடைத்தேற்றம் அடைய வைத்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை இங்கே ...🔥
கருணையின் இருப்பிடமாம் சீரடி சாயீநாதர், தம் அடியவர்களிடம் அளவில்லா தாய்மையுணர்வும், பாசமும், நேசமும் காட்டி அவருடைய வெறும் தரிசனத்தாலேயே இச்சம்சார வாழ்க்கையில் உள்ள பயத்தைப் போக்குகிறார்.. ஒவ்வொருவரின் பெருங்கேடுகளை அழிக்கிறார்..அவர் முதலில் அருவமாய் இருந்தார்..ஆயின் தம் அடியவர்களின் பக்தியின் பொருட்டு ஓர் உருவத்தை எடுக்க வேண்டியவரானார்..ஞானிகளின் வருகையின் காரணம் அடியவர்களுக்கு 'விடுதலை',' தன்னையறிதல்' ஆகியவற்றை அளித்து ஆத்ம மறுமலர்ச்சி அளிப்பதேயாகும்...எவர், அவர்தம் பாதார விந்தங்களில் சரணாகதி அடைகின்றார்களோ, அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது.. பாபாவின் பாதார விந்தங்களை நினைத்துக் கொண்டு புனிதக்ஷேத்திரங்கள் இருந்தும் வருகைப் புரிந்து அவர்தம் சன்னிதானத்தில் வேதங்களை ஓதுகின்றார்கள்....காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கின்றார்கள்...பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் 'பக்தி' என்றால் என்ன என்பதை அறியோம். ஆனால் மற்ற அனைவராலும் கைவிட்ட போதிலும் சாய்நாதர் நம்மைக் கைவிடமாட்டார் என்பதை உணர வேண்டும். எந்த மனித உயிரை பாபா ஆசீர்வதிக்கின்றாரோ, அவர்கள் எல்லையற்ற வலிமைபெற்று, மெய் மற்றும் பொய் ஆகிய தன்மைகளை பகுத்துணரும் ஞானம் எய்துகிறார்கள் என்பதே உண்மை....
தம் அடியவர்களின் ஆசையை சாய்பாபா முழுமையாக அறிந்து, அவைகளை நிறைவேற்றுகின்றார்.. எனவே அவர்கள் விரும்பியதைப் பெற்று நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்...எனவே சீரடி பாபாவை பிரார்த்திக்கின்றோம்...அவர்முன் வீழ்ந்து வணங்குகின்றோம்...நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக் கொண்டு கவலைகளினின்றும் நம்மை பாபா விடுவிக்கின்றார்..பெருந்துயரங்களால் அவதியுற்றுக் கொண்டிருப்பவன் சாயீயை விடாமல் நினைத்துத் தியானிக்கிறான்.அவரது அருளாலே அவன் மனம் அமைதியடைகிறது..
இந்த சாயீநாதர் கருணைக்கடல்.... தம்மீது பாபா கருணை பொழிந்ததன் விளைவே இந்த சத்சரித்திரம் எழுதக் காரணம் என்கிறார் ஹேமாட்பந்த்.அல்லாவிடில் எமக்கு என்ன தகுதி இருக்கிறது..! யார்தான் இவ்வேலையை மேற்க்கொள்ள இயலும்..! ஆனால் சாயீபாபா எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதால், யான் எவ்வித பாரத்தையும் உணரவில்லை என்று ஆசிரியர் ஹேமாட்பந்த் கூறுகிறார்...மேலும் இது குறித்து யான் எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.. என்னின் எண்ணங்களையும்,உணர்வுகளையும் உணர்வூட்ட ஆற்றல் மிக்க ஞான ஒளியாகிய பாபா இருக்கும்போது யான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆனேன்...ஏன் எவ்விதக் கவலையும் கொள்ள வேண்டும் என்று என்னுள் எழுந்தது என்று கூறுகிறார் ஆசிரியர்.. மேலும் ஹேமாட்பந்த் கூறுகிறார், இது என்னுடைய முன்வினைப் புண்ணிய வசத்தால் ஸ்ரீசாய் பாபா அவர்கள், இச்சேவைக்குத் தம்மை ஆட்படுத்தி, ஆசீர்வதித்த அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார், சத்சரித்திர ஆசிரியர் ஹேமாட்பந்த் அவர்கள்..
கீழே நீங்கள் அனைவரும் பாராயணம் செய்யும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்களின் அனுபவ விளக்கவுரைகள்..இது புனிதமான அமுதமுமாகும்.. இதைப் பருகுபவர்கள் சாயீயின் பெருமையையும், அவர்தம் எங்கும்நிறை தன்மையையும் உணர்வார்கள்... விவாதிக்க, விமர்சிக்க விரும்புவோர், இந்த அனுபவ உரைகளைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலாபலனைக் கோட்டை விட்டவராவீர்கள்..இங்கு தேவையாய் உள்ளது விவாதமல்ல...அளவற்ற அன்பும், பக்தியுமேயாகும்....நான் என்ற அகந்தையின்றி கற்றறிந்தோர், குருவின் மீது அதீத பக்தியுடையோர், சத்குரு மீது உண்மையுடன் நம்பிக்கை கொண்டுள்ளோர் மட்டுமின்றி ஞானிகளின் சேவகர் என்று தம்மைக் கருதுவோர்களும் இந்த அனுபவ விளக்கவுரைகளை விரும்பிப் பாராயணம் செய்து தம்மை உயர்த்திக்கொள்வர் என்பதே உண்மை..மற்றவர்கள் அவைகளைக் கற்பனைக் கதைகள் என்றுக் கொள்வர்....சாயீயின் அதிர்ஷ்டம் வாய்ந்த அடியார்கள் சாயீ சத்சரித்திரத்தை கற்பகதருவாகக் கருதுவர்... இந்த சாயீ லீலைகளின் அமிர்தத்தைப் பருகுவது அறியாமையில் மூழ்கியுள்ள ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும்... இல்லறத்தார்க்கு மன நிறைவை அளிக்கும். இலட்சியவாதிகளுக்குச் சாதனை கைகூடும்.. இப்போது கீழ்வரும் ஒவ்வொரு பக்தர்களின் ஆத்மார்த்தமான அனுபவ உரைகளை பற்றிக் கவனிப்போம்.....
🔥காகாஜி வைத்யா என்பவரின் கனவில் சப்தசிருங்கி தேவி தோன்றி, சீரடி பாபாவை தரிசிக்கும்படி கூறியதன் மூல சூட்சமம் என்ன என்பதன் விளக்கவுரை இங்கே...🔥
நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணி என்கின்ற இடத்தில் காகாஜி வைத்யா என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் அங்கே சப்தசிருங்கிதேவி உபாசகர்...சாதகமற்ற சூழ்நிலைகளாலும், துயரங்களாலும் அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார்... இத்தகைய சூழ்நிலையில் ஒருநாள் மாலை சப்தசிருங்கி தேவியின் கோவிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும் பக்திபூர்வமாக, மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்...தேவி அவரது பக்தியால் மிகவும் மகிழ்ந்து, அதேநாள் இரவு கனவில் தோன்றி காகாஜி வைத்யாவிடம் கூறினாள், " சீரடியில் வாசம் செய்யும் பாபாவை தரிசிப்பாயாக" அதற்குப் பின் உன் மனம் முழுஅமைதியடையும்" என்று தேவி அறிவுருத்தினாள்..இந்த பாபா யார் என்று அவளிடமிருந்து அறிவதில் காகாஜி வைத்யா ஆர்வமுற்றார்...ஆனால் எவ்வித விளக்கமும் பெறும் முன்னரே தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார்..தேவி, காணுமாறு உணர்த்திய பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார் காகாஜி வைத்யா...
சிறிது நேர எண்ணிப் பார்த்தப் பின்பு இந்த பாபா திரயம்பகேஸ்வராக இருக்க வேண்டும் என முடிவு எடுத்தார் வைத்யா..எனவே அவர் திரயம்பகேஸ்வரர் ஆலயத்திற்குச் (நாசிக் ஜில்லா) சென்றார்...அங்கு பத்து நாட்கள் தங்கினார்... அவ்வமயம் தினந்தோறும் அதிகாலை குளித்து, 'ஸ்ரீருத்ரம்' ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களையும் செய்தார் வைத்யா... இவைகள் எல்லாம் செய்தும் கூட முன்போலவே வைத்யா சலனமுற்றவராகவே இருந்தார்..பின்னர் அவர் தமது இருப்பிடத்திற்குச் சென்று மீண்டும் இரங்கத்தக்க நிலையில் வேண்டினார்... அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, "நீ ஏன் திரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்..? நான் பாபா என்று கூறியது சீரடியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயீயை" என்றாள் தேவி....எப்போது சீரடிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் இப்போதைய கேள்வியாக இருந்தது... ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். உண்மையில் 'ஸந்த்'தும் (ஞானி), 'அனந்த்'தும் (கடவுள்) ஒருவரே. எள்ளளவும் அவர்களிடையே வேறுபாடு இல்லை...ஒரு ஞானியைப் பார்க்க வேண்டும் ஒருவர் நினைத்தால் அது வெறும் டம்பமேயாகும்...ஞானியின் அருளின்றி, அனுமதியின்றி எவரும் அவரை அணுகித் தரிசிக்க இயலுமா..? மரத்தின் இலைகூட அவன் ஆணையின்றி அசைவதில்லை...ஒரு ஞானியைத் தரிசிக்க வேண்டும் என்று எந்தப் பக்தன் அதீத கவலையுள்ளவனாக இருக்கின்றானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றானோ, அவ்வளவு விரைவில் மனநிறைவு அடையும் வண்ணம் பக்தர்களின் எண்ணம் நிறை வேற்றப்படும் என்பதே சத்தியம்..
🔥ஷாமா என்ற பக்தர், வணியில் இருக்கின்ற தேவி சப்தசிருங்கியின் ஆலயத்திற்கு, ஏன் வருகைப் புரிந்தார் என்பதன் விளக்கமும்..... மேலும் காகாஜி என்ற பக்தரின், சீரடி செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை எங்ஙனம் ஷாமா பூர்த்திச் செய்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே....🔥
சீரடிக்கு பயணம் மேற்க்கொள்ளும் விஷயத்தைப் பற்றி காகாஜி நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை அழைத்துச் செல்ல ஒருவர், அவர் இருப்பிடத்திற்கே வந்தார்...அவர் வேறு யாருமல்ல...பாபாவின் மிக்க நெருங்கிய உயரிய அடியவரான ஷாமாவே ஆவார்...இத்தருணத்தில் பக்தர் ஷாமா வணிக்கு எங்ஙனம் வந்தார் என்பதைப் பற்றிய அனுபவத்தை தற்போது பார்ப்போம்... ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்...அவரது தாயார் அவர்களின் குல தெய்வமான வணியில் உள்ள சப்தசிருங்கி தேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டாள்... தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள்..அத்தருணத்தில் அந்தத் தாயார்...தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள். இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன...அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்துக் கூறி அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள்...சில நாட்களுக்குப் பின்னர் ஷாமா இந்த இரண்டு வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார். இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்தன...
இத்தருணத்தில் ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் சீரடிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார் ஸ்ரீமான் புட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின...அனைவரும் மகிழ்ந்தனர்... ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார்.. அப்போது அவரது தாயார், தனது வேண்டுதல்களை ஷாமாவின் சகோதரரிடமும் தான் மரணப்படுக்கையில் இருக்கும் போது கூறியதை நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தேவி மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார் ஜோதிடர். பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவரும் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார்...மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் ஆபத்தானது என எண்ணி ஒரு பொற்க் கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கக் கூறினார்கள்...
பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து, அவர் முன்னர் இரண்டு வெள்ளி ஸ்தனங்களையும் வைத்து ஏற்றுக்கொண்டு தம்மை வேண்டுதல்களினின்று விடுவிக்கும் படி (ஏனெனில், பாபாவே ஷாமாவுக்கு சப்தசிருங்கி தெய்வம்) வேண்டிக் கொண்டார்..சப்தசிருங்கி கோவிலுக்கு ஷாமாவையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் சுயமாக சமர்ப்பிக்கும் படியும் பாபா வற்புறுத்தினார்... பாபாவின் அனுமதியையும், உதீயையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார்... அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார்...காகாஜி வைத்யா அப்போதுதான் பாபாவை தரிசனம் செய்ய கவலையுள்ளவராக இருந்தார்.. .அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார்...எத்தகைய வியத்தகு ஒற்றுமை இது..!
காகாஜி வைத்யா, ஷாமாவை யார் என்றும், எப்போது நீங்கள் வந்தீர்கள் என்று நலம் விசாரித்தார்...அவர் சீரடியிலிருந்து தான் வந்திருக்கின்றார் என்றறிந்தவுடன் உடனே அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.... பாபாவின் அன்பால் அவர் அந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தார்...பின்னர் அவர்கள் இருவரும் சாயீன் லீலைகளைப் பற்றிப் பேசினார்கள்...ஷாமா தன்னுடைய வேண்டுதல்களை நிறைவேற்றியப் பின்னர் இருவரும் சீரடிக்குப் புறப்பட்டனர்..காகாஜி மசூதிக்குச் சென்று பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார்...உடனே அவர் கண்கள் குளமாயின... அவர் அமைதியுற்றார்.சப்த சிருங்கதேவி, தனக்கு அறிவுருத்திய காட்சியின்படியே பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாகவும், அடக்கமாகவும் ஆயிற்று..தமது மனதில் காகாஜி கீழ்கண்டவாறு எண்ண ஆரம்பித்தார், "என்ன வியத்தகு சக்தி இது..! பாபா ஒன்றும் பேசவில்லை... எவ்விதக் கேள்வி பதிலும் இல்லை..ஆசீர்வதிக்கவில்லை..வெறும் தரிசனம் ஒன்றே இவ்விதமாக மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது.... எனவே அமைதியின்மை அவரது வெறும் தரிசனத்தாலேயே மறைந்து 'இன்ப உணர்வு' காகாஜிக்கு வந்திருக்கிறது.
இதுவே 'தரிசனத்தின் சூட்சம மகிமை ' எனப்படுவதாகும்..அவரது பார்வை சாயீயின் பாதங்களில் நிலைகொண்டது..அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலவில்லை. பாபாவின் உபதேசங்களையும், லீலைகளையும் கேட்டு கரைகாணா மகிழ்ச்சியடைந்தார்...பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார்... கலப்பற்ற நீடித்த இன்பத்தை அவர் பெற்றார்.. அங்கு காகாஜி பன்னிரெண்டு நாட்கள் தங்கி இருந்தார்...பாபாவிடம் விடைபெற்று உதி, ஆசீர்வாதம் இவைகளுடன் வீடு திரும்பினார்....
🔥ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்ற பக்தரின் கனவில் பாபா தோன்றி சீரடி வருமாறு உணர்த்தியதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥
அதிகாலை நேரங்களில் நாம் காணும் கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று கூறப்படுகின்றது...ஆனால் பாபாவின் கனவுக் காட்சிகளுக்கு எவ்விதக்கால நியதியில்லை.அதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்குங்கால்..ஒருநாள் மாலை பாபா, காகா சாஹேப் தீஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச் சென்று, தாம் நெடுநாள் குஷால்சந்தை பார்க்காத காரணத்தால் அவரை சீரடிக்கு அழைத்து வருமாறு கூறினார்..அங்ஙனமே காகா சாஹேப் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின் செய்தியைத் தெரிவித்தார்..அதைக்கேட்டு குஷால்சந்த் ஆச்சரியமடைந்தார்....அன்று மதியம் உண்டபின் சிறுதுயில் கொண்டிருந்த போது, குஷால்சந்தின் கனவில் சீரடி பாபா தோன்றி உடனே சீரடிக்கு வரும்படி கூறினார். பக்கத்தில் தமது குதிரை இல்லாததால், தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும் படியாக அனுப்பியிருந்தார்...அவருடைய மகன் கிராம எல்லைக்குப் போய்க்கொண்டிருந்த போது தீஷித்தின் வண்டி எதிரே வந்தது...தீஷித் குஷால்சந்தை அழைத்துவரவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார்....பின் இருவரும் சீரடி திரும்பினர். குஷால்சந்த் பாபாவைக் கண்டார்..அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்..பாபாவின் இந்த லீலையைக் கண்டு குஷால்சந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்...
🔥பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால் என்ற பக்தரின் கனவில் தோன்றிய பாபா சீரடி வருமாறு அறிவுருத்தியதைப் பற்றிய குறிப்புரை இங்கு காண்போம்....🔥
பம்பாயைச் சேர்ந்த ராம்லால் என்ற பஞ்சாபி பிராமணர் ஒரு கனவுக்காட்சி கண்டார். அந்தக் கனவுக் காட்சியில் பாபா தோன்றி சீரடிக்கு வரும்படி அறிவுருத்தி இருக்கின்றார்.... காட்சியில் அவர் ஒரு மகான் போன்றத் தோற்றத்தில் காட்சிக் கொடுத்து இருக்கின்றார். ஆனால் அவர் எங்கிருப்பார் என ராம்லால் அறியவில்லை..பாபாவைச் சென்று பார்க்க எண்ணினார். ஆனால் பாபா எங்கு இருக்கின்றார் என்ற விலாசத்தை வைத்திருக்கவில்லை...ஆகவே என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை... ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான்..இந்த விஷயத்தில் அதுவே நடந்தது...அதேநாள் மாலை, வீதிகளில் மெதுவாக நடந்துக் கொண்டிருக்கும் போது பாபாவின் ஒரு படத்தை ஒரு கடையில் அவர் கண்டார்...அவர் கனவில் கண்ட மகானின் உருவ அம்சங்கள் இங்கு கண்ட இப்படத்துடன் மிகப்பொருத்தமாக இருந்தது...விசாரித்ததில் அவர் சீரடியைச் சேர்ந்த சாயிபாபா எனத் தெரிந்துகொண்டார்...சீரடிக்கு உடனே செல்ல ஆயத்தமானார்..தனது இறுதிக் காலம்வரை அங்கேயே தங்கினார். தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா சீரடிக்குத் தமது அடியவர்களைத் தானே வரவழைக்கின்றார்... பாபா நினைத்தால் மட்டுமே சீரடி சென்று தரிசனம் செய்ய முடியும் என்பது பலருடைய அனுபவமாக இருக்கின்றது...தன்னை நாடி வந்த ஒவ்வொரு பக்தர்களின் ஆத்மார்த்த, லௌகீகத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார் சீரடி பகவான்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக