ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏻
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🙏🏻🙏🏻
🙏 அத்தியாயம் ::முப்பத்தொன்று (31)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்....சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..
🙏அத்தியாயம் ::முப்பத்தொன்று(31)🙏
🙏முன்னுரை..🙏
ஒவ்வொருவரும் வாழ்நாட்களில் கடைநிலை வரை, ஏன் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை...
சந்நியாசி விஜயானந்தின் முக்காலத்தையும் உணர்ந்த சீரடி சாய்பாபா, எவ்வாறு உபதேசம் செய்து உயரிய நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் அனுபவ உரை...
சீரடி பாபா, தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தன் பாலாராம் மான்கர் என்பவருக்கு,, எவ்வாறு பிரசன்னக்காட்சியின் மூலம் உபதேசங்களைப் போதித்து உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன் அனுபவ விளக்கவுரை..
தாத்யா சாஹேப் நூல்கர் என்ற அடியவர், எவ்வாறு பாபாவின் பேரன்பாலும், உபதேச மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு பாபாவிற்கு சேவை செய்தார் என்பதன் அனுபவ உரை...
மேகா எவ்வாறு சீரடி பாபாவின் ஆசிர்வாதத்தோடு இறைவனடி சேர்ந்தார் என்பதன் குறிப்புரை..
சீரடி பாபாவின் பேராசியால் புலி எவ்வாறு உயிர்நீத்து நற்கதி அடைந்தது என்பதன் குறிப்புரை..
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...
🔥முதலில் ஒவ்வொருவரும் வாழ்நாட்களில் கடைநிலை வரை, ஏன் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்..🔥
ஒவ்வொரு மனித உயிர்களின் மரணத் தறுவாயில் ஒருவருக்குள் உள்ள ஆசை அல்லது எண்ணம் அவரவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது..கிருஷ்ணர் கீதையில் உபதேசிக்கின்றார்.. "எவன் என்னை முடியுந்தறுவாயில் எண்ணுகின்றானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான்" , அத்தருணத்தில் வேறெதையும் பற்றி எண்ணுபவன் அவன் விரும்பியபடியே செல்கிறான்" என்று கூறுகிறார்...நமது கடை நிலைத் தறுவாயில் ஒரு குறிப்பிட்ட நல்லெண்ணத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்க முடியாது..இல்லை என்பதைவிடப் பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் அதாவது ஒருவித பயம் அச்சத்தில் நாம் நம்மை மறக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன...ஆகவே நாம் வாழும் வாழ்நாட்களில் தினமுமே இறை நாமத்தை உச்சரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், நம்முடைய உயிர் பிரிமும் தருணத்தில் தானாகவே நமது நாவானது இறைநாமத்தை ஜெபிக்கின்ற நிலையை நாம் அடைந்து விடுவோம்...இவ்வாறாக நாம் விரும்புகிற புனித நினைவுகளை நம் மனதில் நிலைப்படுத்த நிலையான பயிற்சி அவசியம்... எனவே இறுதிநேரம் வரும்போது குழப்பம் அடையாமல் இருப்பதற்காக, எப்போதும் இறைவனை நினைவுக் கூர்ந்து இறை நாமத்தைச் சதாகாலம் உச்சரிக்குமாறு எல்லா ஞானிகளும் போதிக்கிறார்கள். அடியவர்கள் தம்மைத்தாமே முழுமையாக ஞானிகளிடம் அர்ப்பணித்து சரணாகதி அடைகின்றார்கள்... சர்வமும் அறிந்த ஞானிகள் தன்னிடம் சரணாகதி அடைந்த பக்தர்களை கடைசிக் காலத்தில் வழிநடத்தி உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்... இம்மாதிரியான சில நிகழ்சிகள் பின்வருமாறு காணலாம்....
🔥சந்நியாசி விஜயானந்தின் முக்காலத்தையும் உணர்ந்த சீரடி சாய்பாபா, எவ்வாறு உபதேசம் செய்து உயரிய நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் அனுபவ உரை இங்கே...🔥
சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்ற ஞானி மானஸரோவருக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார்...வழியில் பாபாவின் புகழைக் கேள்வியுற்று சீரடியில் தங்கினார்...அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் சுவாமியைச் சந்தித்தார்...மானஸரோவர் பயணத்தைப்பற்றி அந்த சுவாமியிடம் விசாரித்தார். கங்கோத்ரிக்கு மேல் மானஸரோவர் ஐந்நூறு மைல் உயரத்திலுள்ளது என்றும், ஏராளமான பனி, ஐம்பது காத தூரத்திற்கு ஒருமுறை மொழிமாற்றம், வழியில் யாத்ரீகர்களுக்கு ஏராளமாக தொல்லை கொடுக்கும் பூட்டான் மக்களின் சந்தேக குணங்கள் போன்ற யாத்திரையிலுள்ள கடினமான சூழலை விவரித்தார் சோமதேவ்..இதைச் செவிமடுத்த துறவி மனந்தளர்வுற்றார்...தமது விஜயத்தை இரத்துச் செய்தார்..அவர் பாபாவிடம் சென்று சாஷ்டாங்கமாகப் பணிந்தபோது பாபா கோபாவேஷம் அடைந்து கூறினார், "அந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள், அவரின் நட்பு பயனற்றது" என்றார்...
பாபாவின் குணத்தை அத்துறவி விஜயானந்த் அறியார்..ஆயினும் அங்கு அமர்ந்து அங்கே நடந்துக் கொண்டிருந்த நிகழ்சிகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்..அது காலை நேரமாதலாள் மசூதியில் கூட்டம் அதிகமாய் இருந்தது...பாபா பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டார்..சிலர் அவரின் கால்களைக் கழுவிக் கொண்டிருந்தனர். சிலர் அவர் கால் கட்டைவிரலினின்று புனிதநீரை எடுத்து மனநிறைவுடன் குடித்துக். கொண்டிருந்தனர்... சிலர் சந்தனம் பூசினர்...சிலர் அவர்தம் புனிதமேனிக்கு நறுமணம் தடவினர்...குலம், ஆசாரம் இவற்றை மறந்து அனைவரும் வழிபாடு செய்தனர்..பாபா அத்துறவியின் மேல் கோபம் கொண்டவராய் இருந்தாலும், அவர் பாபாவின்பால் பேரன்பு நிரம்பியவராய் மசூதியைவிட்டுப் போகவில்லை..சீரடியில் அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்..
அப்போது சென்னையிலிருந்து அவருடைய தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது...அவர் மிகவும் மனம் தளர்ந்து, தமது தாயார் அருகில் செல்ல விரும்பினார்..ஆனால் அவரால் பாபாவின் அனுமதியின்றிச் செல்ல முடியாது..எனவே தமது கரத்தில் கடிதத்துடன் சென்று பாபாவிடம் தாம் வீடு திரும்ப அனுமதி கேட்டார்... வருங்காலத்தை அறிந்த எங்கும்நிறைந்த பேரறிவாளர் பாபா அவரிடம் "உன்னுடைய தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானாய்..? சொந்தபந்தங்களும், ஆபாசங்களும் காவி உடைக்கு ஒத்துவராது.. உன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் சில நாட்கள் காத்திரு.வாதாவில் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள்.. உனது கதவுகளை நன்றாகத் தாழிடு... அதிக ஜாக்கிரதையாக இரு...திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவர். செல்வமும், சுபிட்சமும் நிலையற்றவை.. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை, மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்றுக்கள் அனைத்தையும் விடுத்து விட்டு உனது கடைமையைச் செய்வீராக..
இவ்வாறாக எவரொருவர் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகின்றாரோ, அவர்கள் தொல்லைகள் யாவினின்றும் விடுபட்டு 'பேரானந்தப் பெருநிலை' எய்துகின்றார்கள்...எவரொருவர் அன்புடனும், வைராக்கியத்துடனும் இடைவிடாது இறைவனை நினைத்துத் தியானிக்கின்றாரோ, பரமாத்மா அவனுக்கு ஓடிச்சென்று உதவி புரிகின்றார்...உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம்..எனவே நீ இங்கு வந்துள்ளாய்...இப்போது நான் சொல்வதைக் கவனி...உனது அந்திம வாழ்க்கையை உணர்.. ஆசைகளற்று நாளைமுதல் பாகவதத்தைப் பாராயணம் செய்யத் தொடங்குவீராக... மூன்றுமுறை சப்தாஹம் செய்..அதாவது பக்தி பூர்வமாக மூன்றுவாரம் மூன்று முறை பாராயணம் செய்வீராக...பரமாத்மா உன்னிடம் மகிழ்வெய்தி உனது தேவையற்ற கவலைகளை அழிப்பார்....உனது துயர் நிலை மறைந்து நீ அமைதியுறுவாய்" என்று கூறினார் பாபா.. அவரது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாபா இந்த உபதேசத்தை வழங்கினார்.. மரணத் தெய்வமான எமனை மகிழ்விக்கும் 'ராம விஜயம்' படிக்கும்படிக் கூறினார்...அடுத்தநாள் காலை குளித்து மற்ற தூய சம்பிரதாயங்களைச் செய்த பிறகு லெண்டித் தோட்டத்திலுள்ள ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று பாகவதம் படிக்கத் தொடங்கினார் விஜயானந்த்...இரண்டு முறை பாகவதப் பாராயணம் செய்தார்...அதன் பின்னர் மிகவும் சோர்வடைந்தார்... வாதாவிற்குத் திரும்பினார்...இரண்டு நாட்கள் தமது இருப்பிடத்தில் தங்கினார்.மூறாவது நாள் 'பக்கீர் பாபா' என்ற படேபாபாவின் மடியில் உயிர் துறந்தார்..பாபா, அவரது உடலை ஒருநாள் ஒரு நல்ல காரணம் கருதி பாதுகாக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்...பின்னர் காவல் துறையினர் உரிய விசாரணை செய்து, உடலை அடக்கம் செய்யும்படி அனுமதி அளித்தனர்... உரிய இடத்தில் தக்க மரியாதையுடன் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.. இவ்விதமாக பாபா துறவிக்கு உபதேசம் அளித்து நற்கதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
🔥சீரடி பாபா, தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தன் பாலாராம் மான்கர் என்பவருக்கு,, எவ்வாறு பிரசன்னக்காட்சியின் மூலம் உபதேசங்களைப் போதித்து உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன் அனுபவ விளக்கவுரை இங்கே....🔥
பாலாராம் மான்கர் என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர், தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார்.. வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டைத் துறந்து சீரடி சென்று பாபாவுடன் வாழ்ந்து வந்தார்.. பாபா அவர்தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார்..ஆகவே மான்ருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி அறிவுருத்தினார்...மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துச் சென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய் இருந்தார்... ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கை முறையைக் கொடுத்துள்ளதாக உறுதிகூறி மான்கரைத் தேற்றினார் பாபா...ஒரு நாளைக்கு மூன்றுமுறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பாபாவின் சொற்களை வேதவாக்காக எண்ணி மச்சிந்த்ரகட்டுக்குச் சென்றார் மான்கர்...இயற்கைக் காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாந்த மனநிலையுடன், பாபா அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார்..சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக் காட்சி அவருக்கு ஏற்பட்டது. அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதி நிலையில் அல்லது தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள். ஆனால் மான்கரைப் பொறுத்தவரையில் , தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அவ்வித உயரிய நிலையைப் பெற்றார்...பாபா தாமே அவர்முன் தோன்றினார்..மான்கர் பாபாவைப் பார்த்தது மட்டுமல்லாது, தான் ஏன் இங்கு மச்சிந்த்ரகட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறேன் என்றும் கேட்டார்....
பாபா பதில் அளிக்கையில், "சீரடியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன..ஆகவே உனது நிலையற்ற மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உன்னை இங்கு அனுப்பினேன் என்றார் பாபா...மேலும் நான் சீரடியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய்... பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம் ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய்...இப்போது நீ கண்ணார சீரடியில் கண்ட அதே மனிதர் தானா இவர் என்று தீர்மானித்துக் கொள். இந்த காரணத்திற்காகத் தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்" என்று கூறினார் பாபா... குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் மான்கர் மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார்...புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார்..ஆனால் அவர் நுழைவுச் சீட்டுப் பெறும் அலுவலகத்திற்கு சென்றபோது மிகவும் கூட்டமாக இருப்பதைக் கண்டார்... விரைவில் அவரால் நுழைவுச் சீட்டைப் பெற முடியவில்லை..
அப்போது தனது இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில் வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்..?" எனக் கேட்டார். மான்கர், "தாதருக்கு" என்று பதிலளித்தார்.அவர், "தயவுசெய்து என்னுடைய தாதர் நுழைவுச்சீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.... இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர் பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று கூறினார்...மான்கர் நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்...பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார். மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை..இரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்படும் வரை மான்கர் அவருக்காகக் காத்திருந்தார்..ஆனால் அவர் வருவதற்கான எவ்வித தடயமும் காணவில்லை...இது மான்கர் விநோதமாகப் பெற்ற இரண்டாவது அனுபவ காட்சியாகும்...மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்று, பிறகு மீண்டும் சீரடிக்குத் திரும்பி பாபாவிற்கு சேவை செய்து வந்தார்... அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார்... பாபாவின் முன்னிலையிலேயே, அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும் அனுபவத்தைப் பெற்றார்...
🔥தாத்யா சாஹேப் நூல்கர் என்ற அடியவர், எவ்வாறு பாபாவின் பேரன்பாலும், உபதேச மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு பாபாவிற்கு சேவை செய்தார் என்பதன் அனுபவ உரை இங்கு காண்போம்...🔥
தாத்யா சாஹேப் குறித்து, சீரடியில் உயிர் நீத்தார் என்று மட்டுமே ஹேமாட்பந்த் குறிப்பிட்டுள்ளார். சாயீலீலா சஞ்சிகையில் அவரைப்பற்றி வெளியானதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது...1909-ஆம் ஆண்டு நானா சாஹேப் அங்கு மம்லதராக இருக்கும்போது பண்டரீபுரத்தில் தாத்யா சாஹேப் ஒரு சப்-ஜட்ஜாக இருந்தார்....இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினர்...தாத்யா சாஹேப் ஞானிகளை நம்புவதில்லை...ஆனால் நானா சாஹேப் அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தார்.. சாயீபாபாவின் லீலைகளை நானா சாஹேப் அவருக்குக் கூறினார்..சீரடிக்குச் சென்று சாயீபாபாவைப் பார்க்க அவரை வற்புறுத்தினார்...முடிவாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் சீரடிக்குப் போகச் சம்மதித்தார்.அவை என்னவென்றால்..
(1) ஒரு பிராமண சமையற்காரர் அவருக்குக் கிடைக்கவேண்டும் என்பது...
(2) அன்பளிப்பிற்காக நல்ல நாக்பூர் ஆரஞ்சுப் பழங்களைப் பெறவேண்டும்...
இவ்விரண்டு நிபந்தனைகளும் தெய்வாதீனமாக நிறைவேறின...நானா சாஹேப்பிடம் சேவைக்காக ஒரு பிராமணர் வந்தார்..அவர் தாத்யா சாஹேப்பிடம் அனுப்பப்பட்டார்....தாத்யா சாஹேப் நூறு அழகிய ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய பார்சலைப் பெற்றார்..அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தாத்யா சாஹேப் சீரடிக்குப் போக வேண்டியதாயிற்று...முதலில் பாபா அவரிடம் மிகவும் கோபாவேஷம் அடைந்தார்...ஆனால் படிப்படியாக தாத்யா சாஹேப் தமது அனுபவங்களால் பாபா கடவுள் அவதாரமே என்று உறுதி பெற்றார்...பாபாவிடம் அத்தகைய அன்பு பூண்டு தான் இறக்கும் வரையில் அங்கேயே தங்கினார்..அவருடைய முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் புனித வேதங்கள் படிக்கப்பட்டன. இறக்கும் தறுவாயில் பாபாவின் பாததீர்த்தம் கொண்டுவரப்பட்டு குடிப்பதற்காக அவருக்கு வழங்கப்பட்டது..பாபா அவருடைய மரணத்தைக் கேள்விப்பட்டு, "ஓ..! தாத்யா, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்..அவர் மீண்டும் பிறக்கமாட்டார்" என்றார்...
🔥மேகா எவ்வாறு சீரடி பாபாவின் ஆசிர்வாதத்தோடு இறைவனடி சேர்ந்தார் என்பதன் அனுபவ உரை இங்கே...🔥
மேகாவைப் பற்றிய அனுபவ உரையை முன்பே 28.. ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது. மேகா இறந்தபின்பு கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்...பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல்மீது பொழிந்தார்.. சடங்குகள் செய்யப்பட்ட பிறகு சாதாரண மனிதர்களைப் போன்று பாபாவின் கண்களினின்றும் நீர் வழிந்தது.. பெருந் துக்கத்தாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டார்...பின்னர் அவரது உடம்பை மலரால் மூடி நெருங்கிய உறவினரைப் போல் அழுதபின்பு பாபா மசூதிக்குத் திரும்பினார்..மனிதர்களுக்குப் பல ஞானிகள் சத்கதி அளிப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், சாயிபாபாவின் ஆசிர்வாதத்துடன் இறைவனடிச் சேர்வது என்பது ஒப்புவமையற்றது.
🔥சீரடி பாபாவின் பேராசியால் புலி எவ்வாறு உயிர்நீத்து நற்கதி அடைந்தது என்பதன் குறிப்புரை இங்கே....🔥
பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்குமுன் சீரடியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது...ஒரு கிராமப்புற வண்டி வந்து மசூதிக்கு முன்னால் நின்றது...அந்தப் புலியின் முகம் வண்டியின் பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது...அது ஏதோவொரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது..அதனுடைய காவலாளர்களான மூன்று தெர்வஷிகள் அதை ஊர் ஊராக எடுத்துச் சென்று காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர்..அதுவே அவர்களின் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தது... அந்தப் புலி அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளினின்று அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட பலவித சிகிச்சைமுறைகளும் பலனற்றதாய்விட்டன....
அப்போது அவர்கள் பாபாவின் புகழைக் கேள்வியுற்று மிருகத்துடன் அவரைப் பார்க்க வந்தனர். தங்கள் கைகளில் சங்கிலியுடன் அதை அவர்கள் கீழிறக்கி, கதவருகில் அதை நிற்கும்படி செய்தனர்..அது இயற்கையிலேயே குரூரமானது...அத்துடன் நோய்வாய்ப்பட்டது... எனவே அது இருப்புக் கொள்ளாமல் இருந்தது... மக்கள் அதை பயத்துடனும், வியப்புடனும் பார்க்கத் துவங்கினர்...தெர்வஷிகள் உள்ளேசென்று புலியைப் பற்றிய அனைத்தையும் பாபாவுக்குக் கூறி, அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர்...புலி படிகளை நெருங்கியதும் பாபாவின் ஒளியினால் அதிர்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது..பாபாவும், புலியும் சந்தித்துக் கொண்டபோது, அது படியேறி பாபாவைப் பாசத்துடன் உற்று நோக்கியது... தனது வாலில் உள்ள மயிர்க்கொத்தை அசைத்து அதை மூன்றுமுறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்தது..புலி இறந்தது கண்டு தெர்வஷிகள் முதலில் பெருந்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர்..ஆனால் பக்குவமடைந்த எண்ணத்திற்குப்பின், அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பினர்...புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்ததால் அது தனது முடிவை நெருங்கிகொண்டிருந்தது என்றும், அது மிகுந்த தகைமை உடையதாய் இருந்ததால் பாபாவின் பாதாரவிந்தகளில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள்..அது அவர்களின் கடனாளி.. கடன் தீர்ந்ததும் விடுதலையடைந்து தன் முடிவை சாயீயின் சரண கமலங்களில் சமர்ப்பித்தது. (சீரடியில் மஹாதேவ் மந்திரின் எதிரில் இந்தப் புலியின் சமாதி உள்ளது) ஏதேனும் ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்ததாகி விடுகிறது...அத்தகைய ஜந்துக்களைப் பொறுத்தவரை, அவைகள் புண்ணியசாலிகளாக இருந்தாலன்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்சிகரமான முடிவை எய்தவியலும்..? என்பதனை நாம் அனைவரும் சிந்தித்துப் பார்த்து ஆத்மார்த்தமான தூய்மையான அன்புடன் சத்குருநாதரை சரணாகதி அடைவோமாக....
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக