ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், ஜூன் 22, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் (43)மற்றும் (44)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம்::நாற்பத்து மூன்று மற்றும் நாற்பத்து நான்கு...(43)மற்றும் (44)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்.. நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை,  மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம்::நாற்பத்து மூன்று மற்றும் நாற்பத்து நான்கு..(43) மற்றும்  (44)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பாபா தான் சமாதி அடைவதை சூட்சமமாக தெரிந்துக்கொண்டு,  எவ்வாறு தன்னுடைய இயல் வாழ்க்கையின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார் என்பதன் விளக்கமும், பகவான் சமாதி அடைந்த தினத்தில் நடந்த நிகழ்வைப் பற்றிய விளக்கவுரைகள்...

பாபாவின்  பூதவுடல் எவ்வாறு, எங்கே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி முக்கியமானவர்கள் கலந்து ஆலோசித்த நிகழ்வைப்  பற்றிய விளக்கவுரையும் மற்றும்  முடிவாக  முரளீதரனின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட  வாதாவில் மத்திய இடத்தில் பாபா அடக்கம் செய்யப்பட்டு, சமாதி மந்திராக போற்றப்பட்டதன் நிகழ்வைப் பற்றிய விளக்கவுரை...

பாபா தனது ஆயுட்கால நண்பனைப் போன்று பாவித்து,  தியானித்த செங்கல் உடைதல் என்ற நிகழ்வைப் பற்றிய விளக்கவுரை... 

சீரடி பாபா தன்னுடைய உயரிய பக்தன் பகத் மகல்சாபதியிடம் எனது உடலை மூன்று நாள் பாதுகாப்பாயாக என்று அறிவுருத்தி,தேகத்தை உதறி எழுபத்திரெண்டு நேரம்  சமாதி அடைந்த நிகழ்வைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரை...

சீரடி பாபா,தன்னை நாடி வந்த பக்தன் பாபு சாஹேப் ஜோக்கின் துறவு மேற்க்கொள்ள வேண்டும் என்ற  பிரார்த்தனையை ஏற்று, எவ்வாறு  உபதேச மொழிகளை அறிவுருத்தி உயரிய வழியைக் காட்டினார் என்பதன் விளக்கவுரை..

சீரடி பாபா தன்னை நாடி வந்த பக்தர்களை  தாய்மையுணர்வுடன் அரவணைத்து, எவ்வாறு உபதேச மொழிகளை உபதேசித்து  நல்வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரை..

யார் இந்த  ""நான்"" என்பதன் பற்றிய மூல சூட்சம விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் சீரடி பாபா தான் சமாதி அடைவதை சூட்சமமாக தெரிந்துக் கொண்டு,  எவ்வாறு தன்னுடைய இயல் வாழ்க்கையின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார் என்பதன் விளக்கமும், பகவான் சமாதி அடைந்த தினத்தில் நடந்த நிகழ்வைப் பற்றிய விளக்கவுரையை  இங்கே காண்போம்...🔥

குறிப்பு...அத்தியாயம் நாற்பத்து மூன்று (43)  மற்றும் நாற்பத்து நான்கு  (44)  இல், சீரடி பாபா மகாசமாதியடையும் நிகழ்ச்சிப்  பற்றியே குறிப்பிடுவதால், இரண்டு அத்தியாயங்களின் உள்ள நிகழ்வின் விளக்கவுரைகளும்  ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன....

ஒவ்வொரு மனித உயிரும்  மரணத்தறுவாயில் இருக்கும்போது அவனது உயிர் பிரியும் தருணம்  இயற்கையாகவும், எளிதாகவும் இருக்கும் பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து அவன் மனதை மீட்டு ஆன்மிக விஷயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் எண்ணத்துடன் சில மத சம்பந்தமான நூல்கள் பராயணம் செய்யப்படுவது இந்துக்களிடையே உள்ள பொதுவான வழக்கமாகும்...ஒரு அந்தண ரிஷியின் புதல்வனால், பரீக்ஷித்து மஹாராஜன் சாபமிடப்பட்டு மரணத்தறுவாயில் இருந்த நாட்களில்,  மாபெரும் ரிஷியான சுகர் புகழ்பெற்ற பாகவதப் புராணத்தை (சப்தாஹம்) அவருக்கு விளக்கினார்....இப்பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இன்னும் பல புனித நூல்களும் மரணத்தறுவாயில் இருப்பவர்களிடம் வாசிக்கப்படுகிறது....அனைத்தையும் கடந்த நிலையில் இருப்பவருமான,  கடவுளின் அவதாரப் புருஷராகிய  பாபாவிற்கு  எதுவும் தேவை இருக்கவில்லை...ஆனால், மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டாக  பாராயணப்  வழக்கத்தை  பகவான் ஏற்றுக் கொண்டார்.. 

எங்கும் நிறைந்த  பேரறிவால் விரைவில் தான் காலமடையப் போவதை சூட்சமமாக  அறிந்த பகவான், வஸே என்றப் பக்தரை  தம்மிடம் ராமவிஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார்.. வஸே வாரமொருமுறை அதைப் படித்தார்... பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி பாபா கேட்டுக்கொண்டார்..அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார்.. இவ்வாறாக பதினோரு நாட்கள் சென்றன...பின்னர் மீண்டும் மூன்று நாட்கள் படித்துக் களைப்படைந்து விட்டார்..எனவே பாபா அவரைப்போக அனுமதித்துவிட்டு தாமே அமைதியாக வீற்றிருந்தார். தமது ஆத்ம விசாரணையில்  மூழ்கியவராய் தமது கடைசி வினாடிக்காகக் காத்திருந்தார்... 

மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே தமது காலை சஞ்சாரத்தையும், பிக்ஷாதனம் பெறச்செல்லும் நியமத்தையும் அவர் நிறுத்திவிட்டு மசூதியிலேயே தங்கிவிட்டார்.. தமது இறுதி வினாடிவரை உணர்வுடன் இருந்து,  தமது அடியவர்களை மனமுடைய வேண்டாமென்று  உபதேசித்துக் கொண்டிருந்தார்..தாம் சமாதி அடையவுள்ள சரியான தருணத்தை பாபா  ஒருவருக்கும் அறிவிக்கவில்லை...மசூதியில் தினந்தோறும் அவருடன் காகா சாஹேப் தீஷித்தும், பூட்டியும் மதிய உணவு உண்டனர்..ஆனால் சமாதி அடைந்தத் தினத்தன்று அக்டோபர் பதினைந்தாம் தேதி ஆரத்திக்குப் பின்னர் பாபா அவர்களை, தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று  உணவு உட்கொள்ளுமாறு  பாபா கூறினார் என்றாலும் லக்ஷ்மிபாய் ஷிண்டே, பாகோஜி ஷிண்டே, பயாஜி கோத்யா, லக்ஷ்மண் பாலா ஷிம்பி, நானா சாஹேப் நிமோண்கர் போன்றவர்கள் அங்கேயே இருந்து கொண்டனர்.

ஷாமா கீழே படிகளில் அமர்ந்திருந்தார்...  லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு ரூ.9 ஐ  வழங்கியப் பின்பு பாபா தமக்கு மசூதியில் சௌகரியமாய் இல்லையென்றும், பூட்டியினுடைய தகடி வாதாவுக்கு (கல் கட்டிடம்) எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும், அங்கு தாம் நலமுற்று விடப் போவதாகவும் கூறினார்...  இக்கடைசி மொழிகளை உதிர்த்துவிட்டு பயாஜி கோதேயின் மேனியில் சாய்ந்துகொண்டு உயிர் நீத்தார்..அவரது மூச்சு நின்றுவிட்டதை பாகோஜி கவனித்து கீழே அமர்ந்திருந்த நானா சாஹேப் நிமொண்கரிடம் கூறினார்..நானா சாஹேப் சிறிது தண்ணீர் கொணர்ந்து பாபாவின் வாயில் ஊற்றினார்...அது வெளியே வந்துவிட்டது.

பின்னர் அவர் பலமாக "ஓ...! தேவா" என்று கதறினார்.  பாபா சிறிதே தமது கண்களைத் திறந்து "ஆ...!" என்று மெல்லிய குரலில் கூறுவதைப் போன்றிருந்தது...ஆனால், பாபா தமது  புனித பூதவுடலை  நீத்துவிட்டார் என்பது சீக்கிரமாக நிதர்சனமாயிற்று...பாபா காலமான செய்தி சீரடி கிராமத்தில் காட்டுத்தீப் போல் பரவியது...ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் மசூதிக்கு ஓடி வந்து இந்த இழப்பின் துயரைப் பல்வேறு விதங்களில் வெளியிட்டனர்.. சிலர் பலமாகக் கதறினர்..சிலர் தெருவில் உருண்டு புரண்டனர்...சிலர் மூர்ச்சயடைத்து  விழுந்தனர்.. எல்லோருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்தது.  அனைவரும் வருத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர்...

சிலர் சாயீபாபாவின் மொழிகளை நினைவூட்டிக் கொள்ள ஆரம்பித்தனர்... வரப்போகும் காலங்களில் தாம் ஒரு எட்டுவயதுப் பையனாகத் தோன்றப் போவதாக  சாயிபாபா  தம் பக்தர்களிடம் தெரிவித்ததாகச் சிலர் கூறினர்...இவைகள் ஞானியின் மொழிகள்...  எனவே, இது குறித்து யாரும் ஐயுறத் தேவையில்லை...  ஏனெனில் கிருஷ்ணாவதாரத்தில் சக்ரபாணி (மகாவிஷ்ணு) இதே காரியத்தைத்தான் நிகழ்த்தினார்...  சிறையிலிருந்த தேவகியின் முன் கிருஷ்ணர் ஒளி பொருந்திய நிறத்தினராகவும், தமது நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி எட்டுவயது  பாலகனாகவும் தோற்றமளித்தார்..அந்த அவதாரத்தின்போது கிருஷ்ணர் பூமியின் பாரத்தைக் குறைத்தார்.. இந்த அவதாரம் தமது பக்தர்களின் முன்னேற்றத்திற்கானது.. எனவே ஐயத்துக்குரிய காரணம் எங்கேயுள்ளது...?  ஞானிகளின் வழியானது,  உண்மையான அறிவால் சிந்திப்பதைக் காட்டிலும் கடந்தது...ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்கின்றது...சாயீ பாபாவுக்குத் தமது பக்தர்களுடன் உண்டான தொடர்பு இந்த ஒரு தலைமுறைக்குரியது மட்டுமன்று...அது கடந்த எழுபத்திரெண்டு  ஜென்மங்களின் தொடர்பாகும்...இத்தகைய ஜென்மப் பிணைப்புக்களை உருவாக்குவதன்  பொருட்டுத்தான்,  சாயிபகவான்  திக்விஜயம் செய்யச் சென்றுள்ளார் என்பது போல் தோன்றுகிறது...பாபா  மீண்டும் விரைவில் திரும்பி வருவார் என்று பக்தர்கள் உறுதியான நம்பிக்கை பூண்டுள்ளனர்...

🔥பாபாவின்  பூதவுடல் எவ்வாறு, எங்கே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி முக்கியமானவர்கள் கலந்து ஆலோசித்த நிகழ்வைப்  பற்றிய விளக்கவுரையும் மற்றும்  முடிவாக  முரளீதரனின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட  வாதாவில் மத்திய இடத்தில் பாபா அடக்கம் செய்யப்பட்டு, சமாதி மந்திராக போற்றப்பட்டதன் நிகழ்வைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥 

பாபாவின் பூதவுடலை  எவ்வாறு, எங்கே  அடக்கம் செய்வது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்தது...சில முகம்மதியர்கள்  பாபாவின் உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட்டு, அதன் மேல் ஒரு சமாதி கட்டவேண்டும் என்றனர்...குஷால் சந்த்தும், அமீர் ஷக்கரும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்...ஆனால் ராமச்சந்திர பாடீல் என்னும் கிராம அதிகாரி உறுதியான,  தீர்மானமான குரலில் கிராம பரிஷத்தை நோக்கி,  "எங்களுக்கு உங்கள் கருத்து சம்மதமில்லை...வாதாவைத் தவிர வேறு எவ்விடத்திலும் பாபாவின் உடல்   நல்லடக்கம் செய்யப்படக் கூடாது" என்று கூறினார்...மக்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுக் கொண்டு முப்பத்தாறு மணிநேரம் வரை இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்...  புதன்கிழமை காலை பாபா, லக்ஷ்மண் மாமா ஜோஷியின் கனவில் தோன்றி அவரைத் தம் அருகில் அழைத்து, "சீக்கிரம் எழுந்திரு,  பாபு சாஹேப்  நான் இறந்துவிட்டதாக நினைக்கின்றார்..எனவே  பாபு சாஹேப்  எமக்கு ஆரத்தி எடுக்கவில்லை... நீ வழிபாட்டை நடத்தி காகட் (காலை) ஆரத்தி செய்" என்றார்... லக்ஷ்மண் மாமா என்பவர்,  கிராம ஜோசியரும் ஷாமாவின் தாய் மாமனுமாவார்...  அவர் ஒரு வைதீகப் பிராமணர்.. பாபாவைக் காலையில் வணங்கிய பின்னர்,  மற்ற பிற கிராம தெய்வங்களை வணங்கினார்...பாபாவிடம் அவருக்கு மிகுந்த பக்தி உண்டு... இக்கனவிற்க்குப் பின்னர் பூஜாத் திரவியங்கள் அனைத்துடனும் வந்து மௌல்விகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது , உரிய சம்பிரதாயங்களுடன் பூஜையும், காலை ஆரத்தியும் காண்பித்துச் சென்றுவிட்டார்.. பின்னர் மத்தியானம் பாபு சாஹேப் ஜோக் மற்றெல்லாருடனும் வந்து வழக்கம்போல் மத்தியான ஆரத்தியைச் செய்தார்...பாபாவின் இறுதி மொழிகளுக்கு கிராமமக்கள் உரிய மதிப்புக் கொடுத்து, அவர்தம் திருமேனியை வாதாவில் வைக்க முடிவுசெய்து, வாதாவின்  நடுப்பகுதியைத் தோண்டத் துவங்கினார்கள்...  அடுத்தநாள் மாலை ரஹாதாவிலிருந்து துணைக்காவல் துறை அதிகாரியும், மற்ற இடங்களிலிருந்து மக்களும் வந்து எல்லோரும் கலந்து பேசி அம்முடிவை ஏற்றுக் கொண்டனர்... அடுத்தநாள் காலை பம்பாயிலிருந்து அமீர்பாயும், கோபர்காவனிலிருந்து மம்லதாரும் வந்தனர்..மக்கள் கருத்து வேறுபாடு மீண்டும்  கொண்டதாகத் தோன்றியது...சிலர் அவர் உடம்பை  திறந்தவெளியில் அடக்கம் செய்வதற்கு வற்புறுத்தினர்..எனவே மம்லதார் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினார்.. அந்த வாக்கெடுப்பில் வாதாவை பகவான் சமாதி மந்திராக உபயோகப்படுத்தும் தீர்மானம், மற்றதைப் போல் இரண்டு பங்கு ஓட்டுக்கள் பெற்றதைக் கண்டார்.

ஆயினும்  கலெக்டரிடம் இதுகுறித்து குறிப்பிட விரும்பியதன் காரணமாக, காகா சாஹேப் தீஷித் அஹமத்நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.. இத்தருணத்தில் பாபாவின் அகத்தூண்டுதலால் மறுசாராரிடம் ஒரு கருத்து மாற்றம் ஏற்பட்டு, அனைவரும் எதிர்ப்பின்றி ஒரே முடிவை ஆதரித்தனர்..  புதன்கிழமை மாலை பாபாவின் திருமேனி  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வாதாவுக்கு கொண்டுவரப்பட்டு  உரிய சம்பிரதாயங்களுடன் முரளீதரின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட மத்திய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது...  உண்மையில் பாபா முரளீதர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது..எங்கே எவ்வளவு அதிகமான பக்தர்கள் மன  அமைதியும், சாந்தியும் தேடிச் சென்றார்களோ அல்லது சென்றுக்கொண்டு இருக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு  கோவிலாகவும், புனித ஆலயமாகவும் வாதா திகழத் தொடங்கியது...பாபாவின் இறுதிச் சடங்குகள் யாவும் பாலா சாஹேப் பாடேயாலும், பாபாவின் ஒரு பெரும் அடியவரான உபாஸனியாலும் நிறைவேற்றப்பட்டது.

பேராசிரியர் நார்கே அவர்கள்  கவனித்த விதமாக இந்த இடத்தில் இது குறிப்பிடப்படுகிறது...முப்பத்தாறு மணிநேரம் பாபாவின் உடல் திறந்து வைக்கப்பட்டிருந்த போதிலும், சடலம் விறைத்துப் போகாமலும், அங்கங்கள் வளைந்து கொடுக்கும் விதத்திலும் மிருதுவாக இருந்ததால் அவர் அணிந்துக் கொண்டிருந்த கஃப்னி துண்டுகளாகக் கிழிக்கபடாமல் இயல்பாக  கழற்றி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...

🔥பாபா தனது ஆயுட்கால நண்பனைப் போன்று பாவித்து, தியானித்து வந்த  செங்கல் உடைதல்  என்ற நிகழ்வைப் பற்றிய விளக்கவுரை... 🔥

பாபா சமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு  முன்பாக இச்சம்பவம் நிகழ்ந்தது.. மசூதியில் பாபா கைவைத்து அமரும் ஒரு பழைய செங்கல் இருந்தது...இரவில் அதன் மீது சாய்ந்துக் கொண்டு இருக்கையில் அமர்வார்...இது பல ஆண்டுகள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.. ஒருநாள் பாபா இல்லாத போது தரையைக் கூட்டிக் கொண்டிருந்த சிறுவன்  தனது கையில் அதை எடுத்தான்..துரதிர்ஷ்டவசமாக கைதவறிக் கீழே விழுந்து அது இரண்டாகியது...பாபா இதைத் தெரிந்துக் கொண்டதும்,  அதன் இழப்பைக் குறித்து வெகுவாகக் கவலை அடைந்து "உடைந்தது செங்கல் அல்ல...எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது...அது எனது ஆயுட்கால நண்பன்...அதன் ஸ்பரிசத்துடன் நான் எப்போதும் ஆத்மதியானம் செய்தேன்...அது என் உயிரைப்போன்று அவ்வளவு பிரியமானது..  இன்று அது என்னைவிட்டு நீங்கிவிட்டது" எனப் புலம்பி அழுதார்...செங்கல்லைப் போன்ற ஒரு ஜடப்பொருளுக்கு பாபா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க  வேண்டும்...? என்று சிலர் கேட்கலாம்...இதற்கு ஹேமாட்பந்த் கூறுகின்றார்.."ஞானிகள் இவ்வுலகில் ஆதரவற்றோரைக் காப்பது என்ற முக்கிய நோக்கத்திற்க்காகவே அவதரிக்கின்றார்கள்... அவதரித்த உருவில் மக்களுடன் கலந்து அம்மக்களைப் போலவே வெளிப்படையாகச் சிரித்தல், விளையாடுதல், அழுதல் ஆகியவற்றைச் செய்தாலும், தமக்குள்ளே அவர்கள் தமது கடமைகளையும், பிறவியெடுத்த நோக்கத்தையும் பற்றி முழுதும் விழிப்பாய் இருக்கின்றார்கள்" என பதிலளித்திருக்கிறார்... 

🔥சீரடி பாபா தன்னுடைய உயரிய பக்தன் பகத் மகல்சாபதியிடம் எனது உடலை மூன்று நாள் பாதுகாப்பாயாக என்று அறிவுருத்தி,தேகத்தை உதறி எழுபத்திரெண்டு நேரம்  சமாதி அடைந்த நிகழ்வைப் பற்றிய  மூல சூட்சம விளக்கவுரை🔥

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1886- ஆம் ஆண்டில் பாபா எல்லைக்கோட்டை (ஆயுள் என்ற எல்லை) தாண்ட முற்சித்தார்..ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார்....அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு  பாபா, தனது பிராணனை மிக உயர எடுத்துச்சென்று சமாதி நிலையை அடையத் தீர்மானித்தார்..உடனே பகத் மகல்சாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக என்று கூறினார்.... மேலும்  நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும்... நான் திரும்பவில்லை என்றால், அந்த திறந்தவெளியில் (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்...இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்.... அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின.. உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்று விட்டதைப்போல் தோன்றியது...கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக் காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம் செய்ய வந்தனர்..ஆனால் பகத் மகல்சாபதி  இதனை  ஏற்றுக் கொள்ளாமல், பாபாவின் வாக்கை வேதவாக்காக ஏற்று உடலைப் பாதுக்காத்தார்...தமது மடியிலேயே வைத்துக் கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார்...மூன்று நாட்கள் கழிந்ததும் காலை மூன்று  மணியளவில்  பாவாவின் உடலில் உயிர் இருப்பதற்கான  அறிகுறிகள் தெரிந்தன..அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது...கண்கள் திறந்தன...தனது அங்கங்களை அசைத்துக்  கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்....

இதிலிருந்து நாம் அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், உயிர் அழியாதது.. நிலையானது..தேகமே அழியக்கூடியது..ஆகவே  சாயீபாபா இத்தனை ஆண்டுகளாக உறைந்த மூன்றரை  முழ அளவான உடலைக் கொண்டவர் தானா, அதை விட்டுவிட்ட பிறகு அவர் நீங்கிவிட்டாரா, அல்லது அகத்தே உறையும் ஆத்மவடிவாக விளங்கினாரா என்று தீர்மானித்துக் கொள்ளலாம்...பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது...ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.. இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் இருக்கின்றார் சாயீ என்ற பரம்பொருள்...

இப்பரம்பொருளாகிய சாயீயே அண்ட பேரண்டங்களிலும், இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கின்றார்....குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுடம்பை எடுத்துக் கொண்டார்..தமது குறிக்கோள் நிறைவேறியதும் தமது அழியும் தேகத்தை  (வரையறையுள்ள பண்புக்கூறு) துறந்துவிட்டு தமது வரையறையற்ற பண்புக்கூற்றை அடைந்தார்.. கடவுள் தத்தர், கனகாபூரைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி போன்ற முந்தைய அவதாரங்கள் போலவே சாயீ எப்போதும் வாழ்கிறார்...அவரது மரணம் என்ற சமாதி அடைதல் என்ற நிகழ்வானது ,ஒரு புறத்தோற்றமே தவிர உயிருள்ளவற்றிலும், ஜடப்பொருட்களிலும் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தி அவைகளைக் கட்டுப்படுத்துகிறார்.. இது இயல்பானதே..இப்போதும் கூட பாபாவை முழுவதுமாக  தூய்மையான அன்புடன்  சரணாகதி அடைந்தவர்களும், அவரையே முழுமனதாக ஏற்று  பக்தியுடன்  வணங்குபவர் அனைவரும், பாபா எங்கும் நிறைந்து அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் வியாப்பித்து ஆட்சி புரிவதை அனுபவபூர்வமாக உணரலாம்...

பாபாவின் ஸ்தூல உருவத்தை நாம் தற்போது காண இயலாவிடினும், இப்போதும் கூட சீரடிக்குச் செல்வோமேயானால், மசூதியில் அவரது அழகான, தத்ரூபமான சித்திரம் காட்சியளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்...பாபாவின் புகழ்பெற்ற அடியவரும், ஓவியம் வரைவதில் திறன்மிக்க  ஷாம்ராவ் ஜெயகரால்  என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டது.. கற்பனை வளம், பக்தியுள்ள பார்வையாளருக்கு இப்படம் இன்றும் பாபாவின் தரிசனம் தரும் திருப்தியையளிக்கிறது.  பாபா இப்போது உடல் உருவில் இல்லையாயினும் அவர் அங்கும், எங்கும் இருந்து அவர் பூதவுடலுடன் இருந்த சமயம் எவ்வாறு பக்தர்களை நலமுடன் ஆராதித்து ஆசி வழங்கினாரோ, அவ்வாறே இப்போதும் அனுக்கிரகம்  செய்கின்றார்...பாபாவைப் போன்ற ஞானிகள் மனிதர்களைப் போன்று தோன்றினாலும், இறப்பதே இல்லை... உண்மையில் அவர்கள் கடவுளே ஆவர்....

🔥சீரடி பாபா,தன்னை நாடி வந்த பக்தன் பாபு சாஹேப் ஜோக்கின் துறவு மேற்க்கொள்ள வேண்டும் என்ற  பிரார்த்தனையை ஏற்று, எவ்வாறு  உபதேச மொழிகளை அறிவுருத்தி உயரிய வழியைக் காட்டினார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

ஜோகின் சந்நியாசத்தைப் பற்றிய செய்தியுடன் ஹேமாட்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கின்றார்.. புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக் என்பவரின் மாமா சகாராம் ஹரி என்ற பாபு சாஹேப் ஜோக் என்பவர் ஆவார்...அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து (P.W. துறை அதிகாரி)1909- ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதும், தமது மனைவியுடன் சீரடிக்கு வந்து வசித்து வந்தார்...அவருக்குக் குழந்தைகள் இல்லை...  கணவனும், மனைவியும் பாபாவை நேசித்தனர்.. பாபாவை வழிபடுவதிலும், அவருக்குச் சேவை செய்வதிலும் தங்கள் முழுநேரத்தையும் செலவிட்டனர்..மேகாவின் மரணத்திற்குப் பின் மசூதியிலும், சாவடியிலும் பாபாவின் மகாசமாதிவரை ஜோக் ஆரத்தி எடுத்தார்... சாதேவின் வாதாவில் ஞானேஸ்வரியையும், ஏக்நாத் பாகவதத்தையும் மக்களுக்குப் படித்து விவரிக்கும் வேலையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது...ஜோக் பல ஆண்டுகள் பாபாவிற்குச் சேவை செய்தப் பின்னர் பாபாவை நோக்கி, "நான் இத்தனை ஆண்டுகள்  தங்களுக்குச் சேவை செய்தேன்... எனது மனம் இன்னும் அமைதியும், சாந்தியும் பெறவில்லை..  ஞானிகளுடன் எனக்கு உண்டான தொடர்பு எங்ஙனம் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது...?  எப்போது என்னைத் தாங்கள் ஆசீர்வதிப்பீர்கள்...?" என்று கேட்டார்....

பக்தரின் வேண்டுகோளைச் செவிமடுத்த பாபா, "உரிய காலத்தில் உனது தீவினைகள் (அவைகளின் விளைவு அல்லது பயன்) அழிக்கப்பட்டுவிடும்...உனது நன்மை, தீமை யாவும் சாம்பலாக்கப்படும்.. எல்லாப் பற்றுக்களையும் துறந்து, அடங்காச் சிற்றின்ப அவாவையும், சுவை உணர்வையும்  விடுத்து, எல்லாத் தடைகளையும் ஒழித்துவிட்டு, முழு மனதுடன் கடவுளுக்கே சேவை செய்து பிக்ஷை  பாத்திரத்தை எப்போது நாடி அடைகின்றாயோ (சந்நியாசம் ஏற்கிறாயோ) அன்றே நான் உன்னை புனிதமடைந்தவனாக உருமாற்றுவேன்" என்றார்..  சில நாட்களுக்குப் பின் பாபாவின் மொழிகள் உண்மையாயின... அவரது மனைவி அவருக்குமுன் இயற்கை எய்தினாள்.  வேறு பற்றொன்றும்  அவருக்கு இல்லை.  அவர் சுதந்திரமானார்...இறப்பதற்கு முன் சந்நியாசம் ஏற்றார்.  வாழ்க்கையின் இலட்சியத்தை எய்தினார்...

🔥சீரடி பாபா தன்னை நாடி வந்த பக்தர்களை  தாய்மையுணர்வுடன் அரவணைத்து, எவ்வாறு உபதேச மொழிகளை உபதேசித்து  நல்வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

அன்பும், கருணையும் உள்ள சாயீபாபா பலமுறை கீழ்கண்ட இனிய மொழிகளை மசூதியில் உபதேசம் செய்திருக்கின்றார்...

"என்னை எவன் மிகவும் விரும்புகின்றானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான்...  என்னைவிட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது...எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை... இடையறாது என்னையே தியானித்து, என் நாமத்தையே அவன் ஸ்மரணம் செய்கிறான்... முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கின்றானோ, அவனுக்கு நான் கடன்பட்டதாக  உணர்கின்றேன்...அவனுக்கு விடுதலையை அதாவது தன்னையுணர்தல் என்கின்ற உயர்நிலையை  அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்...என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்திருக்கிறேன்... மேற்க்கூறிய குணங்களுடன்  என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கின்றான்...  பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு, எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தில்  அமர்ந்துக் கொண்டிருக்கின்ற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பியுங்கள்...!"..

🔥யார் இந்த  ""நான்"" என்பதன் பற்றிய மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

யார் இந்த 'நான்' என்பதன் மூல சூட்சமம் விளக்கம் என்னவென்றால்...பலமுறை சாய்பாபா யார் இந்த நான் என்பதை விளக்கியிருக்கின்றார்..  அவர் கூறினார், "நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கேயும்  வேறு  என்னைத் தேடிக் கொண்டு போகவேண்டாம்...உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும், அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது.. அது நானேயாகும்...இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும், எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக.  இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்"...

எனவே வாசகர்களுக்கு ஹேமாட்பந்த் வணக்கம் தெரிவித்துவிட்டு எல்லாத் தெய்வங்களையும், ஞானிகளையும், பக்தர்களையும் மரியாதை செய்யும்படி பணிவுடனும், அன்புடனும் வேண்டிக்கொள்கின்றார்.  "எவனொருவன் பிறர்மீது குறைகூறி குற்றங்கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்துக் காயமேற்படுத்துகின்றான்..ஆனால் எவன் கஷ்டப்பட்டுப் பொறுமையுடன், அனைத்தையும் சகிப்புத் தன்மையுடன்  ஏற்றுக் கொண்டு  இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்" என்று பாபா அடிக்கடி உபதேசம் அளித்துள்ளார்..

பாபா இவ்வாறு எல்லா ஜந்துக்களிடமும், ஜீவராசிகளிடமும் வியாபித்து அவைகள்பாலும், எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து இருக்கிறார்.. .எல்லா உயிர்களிடமிருந்தும், அன்பைத் தவிர வேறெதையும் அவர் விரும்புவதில்லை.  இத்தகைய புனிதமான அமிர்தம் எப்போதும் பாபாவின் திருவாயினின்று பெருக்கெடுத்தது... அவர்தம் புகழை அன்புடன் பாடுவோர், அதையே பக்தியுடன் கேட்போர் ஆகிய இருவரும் சாயீயிடம் ஒன்றாகிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்து பாபாவை சரணாகதி அடைவோமாக... 

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக.... அனைவருக்கும் சாந்தி, நிலவட்டும்..🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼

https://shorte.be/LP?$=468844

https://youtu.be/M9mObkJoMRE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...