ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏
குருவின் தேவையைப் பற்றி...
எனக்கும்(ஹேமட்பந்த்), பாலா சாஹேப்பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நான் ஷீர்டிக்கு வந்த தினத்தன்று நடைபெற்றது. “நம்சுதந்திரத்தை நாம் ஏன் இழக்க வேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்” என்று நான்விவாதித்தேன். “நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார்..? ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சோம்பேறியாகத் தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்..?” இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன். பாடே கர்மத்துக்காக (தலைவிதி) வாதாடிக் கூறியதாவது, “நடப்பது நடந்தே தீரும். பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்றிருக்கிறார்கள். மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறு வழியில் செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தைத் தள்ளிவிடுக. பெருமையும், அஹங்காரமும் உமக்கு உதவாது”. கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒருமணி நேரத்திற்குமேல் நடைபெற்றும் வழக்கம்போல் ஒருமுடிவும் காணப்படாது முடிவாக களைப்படைந்துவிட்டோம். நானும் மன அமைதியை இழந்தேன். வலிவான சரீர அபிமானம், அஹங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன். அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம்....
பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகா சாஹேப் தீக்ஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார். சாதே வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது..? விவாதம் எதைப் பற்றியது..? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, “ஹேமத்பந்த் என்ன கூறுகிறார்..?” இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது. சர்வ வியாபியாகவும், அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்..?
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக