ஓம் ஶ்ரீ சாலயீநாதாய நமஹ..🙏🙏
ஒருவருக்கு சொரூப ஞானம் வந்ததும் சீவனுக்கு தன்னையும் உலகையும் பற்றிய குழப்பம் நீங்கிவிடும்...ஜீவன் எனத் தன்னைப் பாவிக்கும் ஒருவன், இப்பரந்த உலகத்தில் தான் மற்ற எல்லோரையும் போல இன்னுமொருவன் என்றே நினைக்கிறான். “நான்என்று ஒருவன்” என்ற அந்த எண்ணத்தில் இருக்கும் அவனுக்கு, “தனக்கு” என்று சில பொருட்களும் சில மனிதர்களும் இருப்பதாகவும் எண்ணங்கள் வளர்கின்றன. இந்த எண்ணம் அவனுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் அவனுக்கே அது புரியாது. அவனைப் போலவே மற்றவர்களும் “தான் – தனது” என்று இருப்பதால் அவனுக்கு தனக்கு உள்ள அந்த எண்ணத்தைப் பற்றிய சந்தேகமும் வருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது உண்மை நிலையை அவன் அறியாமல் இருப்பதே. இந்த அறியாமை தான் அவனது இருள்...
வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு தனது நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, அவனை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான சூழ்நிலைகளும் அமைகின்றன. அப்போது அவனுக்குப் பொதுவாக இரண்டு வழிகளே இருக்கின்றன என்று ரமணர் சொல்வார். ஒன்று அவன் தன்னை யார் என்று கேட்டு தன் உண்மை சொரூபம் தெரிந்துகொள்வதற்கு ஞான விசாரம் செய்து தெளிவடைவது. மற்றொன்று தேர்ந்த குருவிடம் தனக்கு வழி காட்டுமாறு வேண்டி அவரைத் தஞ்சம் அடைவது. அப்படி அடைக்கலம் வேண்டிச் சென்றவனின் மனத்தை குரு நிர்மூலம் ஆக்கி அவனது உண்மை சொரூபத்தை அவனுக்குக் காட்டுவார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் அதே போலச் சொல்லி, நரேந்திரர் எப்படி தனது அகங்காரத்தை பூதாகாரமாக்கி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொண்டார் என்றும், நாக மகாஷயர் எப்படி தனது அகங்காரத்தைச் சுருக்கி தன்னை ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டார் என்றும் சொல்வார். முன்னது விசாரம் செய்து பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தான் என்று உணர்வது, பின்னது குருவே எல்லாம் என்று அடிபணிந்து தன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக்கொள்வது.
இந்த இரண்டு வழிகளில் தனக்கு ஒத்துக்கொள்ளும் வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறி தனது உண்மை சொரூபத்தை அறிபவனுக்கு, உதிக்கும் சூரியன் முன் இருள் ஓடிப்போய் திசைகள் தானே விளங்குவதுபோல, அதுவரை அவனை ஆட்கொண்டிருந்த அறியாமை தானே விலகும். எல்லாம் அப்போது ஒன்றே என்று தெரியவருவதால் “நான்-எனக்கு” என்ற எண்ணங்களும் அங்கு நிலைப்பதில்லை..
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக